உயிர்தெழுதல்
ஒவ்வொரு ஆண்டும் தவக்காலமும், உயிர்ப்புத் திருவிழாவும் நம்மைச் சந்தித்துக் கொண்டே இருக்கின்றன. ஒரு மனமாற்றத்துக்கான தீவிர சிந்தனையுடன் நாமும் அந்த நாட்களைக் கடந்து கொண்டே இருக்கிறோம்.
கடந்த தவக்காலம் எனக்குள் என்ன மாற்றங்களை உருவாக்கியது ? கடந்த உயிர்ப்பு எனக்குள் என்னென்ன புதிய மனமாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது ? எனும் கேள்விகளை எழுப்பினால் பதில் ஒருவேளை மாபெரும் ஏமாற்றமாய் அமைந்து விடலாம். இயேசுவின் வாழ்க்கையின் ஒவ்வொரு படியும் உயிர்ப்பை நோக்கிய பயணமாகவே இருந்தது. அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு படியையும் நமது வாழ்க்கையின் பாதையாக அமைத்துக் கொண்டால் அவரது உயிர்ப்பின் அனுபவத்தில் நாமும் கலந்து கொள்ள முடியும்.
1.அர்ப்பணித்தல்
இயேசுவின் உயிர்ப்புக்கான தயாரிப்பு, அவரது பிறப்புக்கு முன்பே ஆரம்பித்தது. மண்ணுலகின் பாவங்களை மீட்க மனிதனாக பூமியில் பிறக்க வேண்டும் எனும் தந்தையின் திட்டத்துக்கு தன்னை ஒப்புக் கொடுத்ததில் அது ஆரம்பிக்கிறது. தொடக்க நூல் 3:15 க்கான விடையாக யோவான் 3:16 அமைகிறது. “உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்கிறது தொடக்க நூல் 3:15. அது தான் “தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்” எனும் (யோவான் 3:16) மீட்பின் வசனமாக புதிய ஏற்பாட்டில் நிறைவு பெறுகிறது.
2.தாழ்மை ஏற்றல்
பூமிக்கு வருகின்ற இறைமகன் தாழ்மையின் உச்சமாக, எருவின் எச்சங்களிடையே பிறக்கிறார். உயிர்ப்பின் பயணத்தில் இயேசுவின் துவக்கம் மாட்டுத் தொழுவத்தில் ஆரம்பிக்கிறது. பூமிக்கு வருவதே தாழ்மையின் உச்சமெனில், அதிலும் அடிமட்டத்தைத் தேர்ந்தெடுக்கிறார் இயேசு.
உயிர்ப்பைச் சந்திக்கவேண்டுமெனில், பணிவின் பள்ளத்தாக்கில் நாம் பயணிக்க வேண்டும். பணிவின் பள்ளத்தாக்கு இயேசுவை கொல்கொதா உச்சியில் நிறுத்தியது. தாழ்மையின் தொழுவம் அவரை உயிர்ப்பின் சிம்மாசனத்தில் அமர்த்தியது.
3.சோதனைகளை கடத்தல்
இயேசுவுக்கே சோதனைகளைத் தாண்ட வேண்டிய தேவை இருந்தது. அந்த சோதனைகளைக் கடக்க அவருக்கு தூய ஆவியின் துணை தேவைப்பட்டது. உணவுக்காகவும், பணத்துக்காகவும்,புகழுக்காகவும் அவர் சோதிக்கப்பட்டார். அடிப்படை வசதி முதல், ஆசையின் இருக்கை வரை என இந்த சோதனைகளை வரையறுக்கலாம். சோதனைகளைத் தாண்டியதால் தான் அவர் சாதனை நாயகனாகிறார்.
நமக்குள் உயிர்ப்பின் அனுபவம் நிகழவேண்டுமெனில், சோதனைகளின் போர்க்களத்தை நாம் கடந்தாகவேண்டும். சோதனைகளின் வாள்வீச்சில் பலியானால் பூமியின் களத்திலேயே புதையுண்டு விடுவோம். சோதனைகளைக் கடந்தால், சாதனைகளின் தளத்தில் நுழைவோம்.
4.மனிதம் காத்தல்
இயேசுவின் வாழ்க்கை ஏழை எளியோருக்காகவே அமைந்திருந்தது. பூமியில் பெரியவர்களாய் கருதப்பட்டவர்களை இயேசு உயரத்தில் வைக்கவில்லை. பூமியில் நிராகரிக்கப் பட்டவர்களை உயரத்தில் வைக்க அவர் தவறவும் இல்லை. ஏழை எளியவர் சார்பாக நிற்பது இறைவனின் விருப்பம் என்பதை அவர் செயலில் காட்டினார்.
உயிர்ப்பின் நிலையை எட்டவேண்டுமெனில் மனிதத்தின் சாலைகளில் பயணிக்க வேண்டும். உயிர்ப்பின் உன்னதத்தைத் தரிசிக்க வேண்டுமெனில் நிராகரிக்கப்பட்டோரின் கவலைகளில் நம்மை இணைத்துக் கொள்ளவேண்டும்.
மன்னிப்பு என்பதை வலியின் உச்சத்திலும் வழங்கக்கூடிய மனநிலையே இயேசுவின் மனநிலை. சிலுவையின் உச்சியிலும் அவர் மன்னிப்பின் வார்த்தைகளை வழங்குகிறார். மன்னிக்காதவனுக்கு விண்ணகக் கதவு திறக்காது என மன்னிப்பின் மகத்துவத்தை விளக்குகிறார்.
உயிர்ப்பு நமது வாழ்வில் நிகழவேண்டுமெனில் மன்னிக்கா மனம் மரணமடைய வேண்டும். மன்னிப்பு என்பது நான் எனும் அகந்தையை அழிக்கும் போது தான் உருவாகும். அதுவே விண்ணகத்தின் சாவியை, விரல்களில் அளிக்கும்.
இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம். இந்த உயிர்ப்பு தினம் ஒரு புதிய விடியலுக்கான முன்னுரையை எழுத இறைவனை வேண்டுவோம்.
— சேவியர்
945 total views, 1 views today
2 thoughts on “உயிர்தெழுதல்”