தபால் அட்டைக்கடிதம்
தபால் அட்டையை மறந்து எத்தனைவருடங்கள் ஆச்சு. நாம் படிக்கும் காலத்தில் அம்மா அப்பா சகோதரர்கள் நண்பர்கள் என்று ஒளிவு மறைவு ஏதுமற்ற தூய்மையான அன்பையும், தகவலையும் மட்டும் வெளிப்படுத்தும், திறந்த உள்ளமாக எமக்குவரும். யார் வேண்டும் என்றாலும் பிரிக்காமல் வாசிக்கலாம். வாழ்த்துமடல்கூட இந்த தபாலட்டைதான். குறைகள் எதுவும் அதில் இருக்காது சுருக்கமாக சொல்லவந்த சேதியை சொல்லித்தரும் பாடமா கவும் அந்த தபால் அட்டை இருந்தது. இன்று மேடைப்பேச்சாளர்களுக்கு இந்த தபால் அட்டை பல பாடங்களைக் கற்றுக்கொடுக்கும்.
இன்று 40 வருடங்களுக்குபின் யேர்மனியில் ஒரு தபால் அட்டை எனக்கு வந்தது. பார்த்ததும் கண்கள்பனித்தன. வெளிப்படையான ஒரு வாழ்த்து அன்றுபோல் இன்றும் அந்த தபால் அட்டையில் திறந்த மனதுடன் வந்தது.
இப்படி அன்று தாய்மண்ணில் புதியதொரு வீடு (1989) என்னும் அழியாத காவியம் படைத்த மகாகவி (உருத்திரமூர்த்தி) அவர்கள் இலக்கிய நண்பர்கள்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்புவது என்றால் தபால் அட்டைக் கடிதங்கள் கவிதைகள் அனுப்புவார். தாயகத்தில் அன்று வெற்றிமணியில் அவரது கவிதைகள் நிறைய பிரசுரமாகி இருந்தன.
மகாகவியின் முதலாவது கவிதை நூல் வெளியானபோது (19.07.1955) வரதருக்கு எழுதிய தபால் அட்டைக்கடிதம் கவிதையாக.
மெச்ச என்னாலும்
முடியாது! மேய்யாக
அச்சகக் கலைக்கோர்
அழியாத- உச்சி
அமைத்தாய்! அதன் அழகை
ஆரச் சுவைக்க
இமைக்காத கண்ணா எனக்கு?
யேர்மனியில் வாழும் கலைவிளக்கு சு.பாக்கியநாதன் அவர்கள் எழுதிய ஒரு தபால் அட்டை வாழ்துக்கடிதம் கிடைத்தது. அப்போது எனக்கு மகாகவியின் இந்த தபால் அட்டைக் கவிதையை (கடிதம்) ஞாபகம் வந்தது.
இன்று புத்தகங்கள் எழுதுவதும் கவிதை படைப்பதும் அதற்கான சூழல் நன்கு அமைந்த நேரம். அன்று யேர்மனிக்கு வந்ததும் வராதுமாக சிந்திக்த்தூண்டிய யேர்மன் கலாச்சாரம் என்ற ஒரு நூலை இவரும் இவரது துணைவியார் திருமதி விக்னா பாக்கியநாதன் அவர்களும் இணைந்து படைத்தார்கள் என்றால,; அவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் வேர்கள் தாய்நாட்டில் விரிந்து செறிந்து அல்லவா இருந்துள்ளது. அதனால்தான் இப்படி ஒரு நூலை ஆக்க அன்று எண்ணம் எழுந்தது.
யாழ் பல்கலைக்கழகத்தில் 1975ம் ஆண்டு நான் களனி பல்கலைக்கழகத்தில் இருந்து யாழ் பல்கலைக்கழத்திற்கு சில கற்கை நெறிகளை கற்க
என்னையும் இன்று பிரபல ஓவியராக லண்டனில் வசிக்கும் கே.கே.ராஜா (கனகசபை கிருஷ்ணரராஜா) அவர்களையும் அனுப்பியவேளை திரு.சு.பாக்கியநாதன் அவர்களை அங்கு மாணவனாகச் சந்தித்தேன். (அப்போது எமக்கு பல உதவிகள் புரிந்த யாழ் பல்கலைக்கழகத்தின் தலைவர்,கலைப்பிடாதிபதி; அமரர் பேராசிரியர் கைலாசபதி. அவர்களை இங்கு நினைவு கூரவிரும்புகின்றேன்.)
ஒரு சைக்கிளில் நிமிர்ந்த எழில்மிகு ஆண்மகனாக வந்திறங்கி செல்லும் போது, இவர் வருங்காலத்தில் இந்தப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராவர் என்றும், எண்ணியதுண்டு. வேட்டியுடன் பல்கலைக்கழக உணவுச்சாலையில் தேநீர் அருந்தியபடி வருங்காலத்திட்டங்கள் பற்றி அலசுவோம். அந்த நிகழ்வுகள் இன்றும் கண்முன் நிற்கிறது. எத்தனை மாணவிகள், உண்மையைச் சொல்வது என்றால் அத்தனை மாணவிகழும் அழகானவர்கள். அந்த மாணவிகளின் சேலையும், ஒப்பனையில்லாத முகத்தில் கன்னத்தில் வழியும் முத்து முத்தான வேர்வைத்துளிகளும், அதனைக் கைகுட்டையால் ஒத்தியெடுக்கும் பாங்கும். இவற்றை எல்லாம் விட வாய்திறந்தால் இதழில் விரியும் இனிய தமிழும் அவர்களுக்கு இந்த அழகைக் கொடுத்தது.
யாரோ அதற்குள் ஒரு மாணவிதான் தங்களுக்கு மனைவியாக வருவாள் என்று கனவுகாணதா மாணவர்கள் கிடையாது. ஆனால் அந்த கனவைக்கூட தன்வாழ்வில் நனவாக்கியவர் சு.பாக்கியநாதன் அவர்கள். தமிழ்ச்சங்கங்கள் நிகழ்சிகள் விழாக்கள் என்று அவர் ஒடித்திரிந்ததைப் பார்த்தால் எப்பதான் படிக்கநேரம் இருக்கு இவருக்கு, என்று எண்ணத்தோன்றும்.
அந்த ஓட்டம் இன்னும் நிற்கவில்லை. அவரை பார்த்தவர்களுக்கு நன்கு தெரியும். ஓவ்வொரு மனிதனிலும் நேர்மறையும், எதிர்மறையும், இருக்கும். நேர்மறையை பார்ப்பவன் மேலே செல்கின்றான். எதிர்மறைகளைப் பார்ப்பவன் நின்ற இடத்திலே நிற்கின்றான். இதுவும் தாய்மண்; சொல்லித்தந்த பாடம்தான்.
இவ்வளவும் திரு. சு.பாக்கிநாதன் பற்றி சொன்னதற்கு காரணம் ஒரு கடிதம் யாரிடம் இருந்து வந்தது என்பதனை வைத்தே அதன் பெருமைகள் அமையும்.. வெற்றிமணி ஆசிரியராகிய எனக்கு 13.03.2019 கையொப்பம் இட்டு எழுதிய கடிதம் இதோ…
நெடுந்தீவு முகிலன் நூல் வெளியீட்டு விழாவில் இடம்பெற்ற உங்கள் உரையில் இருந்து….
உண்மையான உழைப்பை உரியநேரத்தில்
உளம் நிறைந்து உரைத்த தங்கள் வார்த்தைகள்
எம்மைப் புளகாங்கிதம் கொள்ளவைக்கின்றது.
மனம் கொள்ளை கொள்கின்றது. மிக்க நன்றி!!
இன்று வரை தொடரும் தங்கள் இலக்கிய ,எழுத்து,பத்திரிகைப்பணி தொடர வாழ்த்துகின்றோம். உடல் தளர்ந்தாலும் உளம் தளராமல் தொடர்ந்து உழைப்பதற்கு எமது நல்லாசிகள்
இவண்
சு.பாக்கியநாதன்;
இந்த தபால் அட்டைக்கடிதம் என்னோடு அழியாது ஒரு ஆவணமாக இருக்கவேண்டும் என்பதற்காகவும்,பெருமைகள் பேசப்பட வேண்டும். கூட இருந்தவர்கள் சொல்லாவிட்டால் யார் சொல்ப்போகிறார்கள். உண்மைகள் இருந்தால் உரக்கச் சொல்லுவோம் குறைகள் இருந்தால் அவர்கள் காதோடு சொல்வோம். இதுவே நட்புக்கு அழகு சேர்க்கும்..
நன்றி:மகாகவியின் கவிதைகள் தரவுகள் தந்த ஓலை 2003, வெற்றிமணி 1971.
–மாதவி
3,201 total views, 6 views today
2 thoughts on “தபால் அட்டைக்கடிதம்”