நீரின் தன்மையிலும் பயன்பாட்டிலும் உள்ள நுணுக்கங்கள்.
உலகின் உயிர்களுக்கெல்லாம் பசுமையானதொரு சக்தியாக உள்ளும், புறமும் பெருமளவாகப் பரந்து நிற்கின்றது நீர். “நீரின்றி அமையாது உலகு”
நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என ஐந்து பூதங்களும் உயிர் வாழ்தலுக்கு முக்கியம். இவை ஐந்துமே தமக்கேயான சூக்குமமான சக்தி ஆற்றலைக் கொண்டுள்ளன. இவற்றின் தன்மை, பயன்பாடு குறித்து பண்டைக் காலம் முதலே சித்தர்கள், ஆய்வாளர்கள் போன்றோர் தெளிவாகக் கூறி வந்துள்ளனர்.
இதில் நீரின் ஆற்றலும் அதன் பயன்பாடும் பற்றி சிறிதளவு பார்ப்போம்.
உலகின் மேற்பரப்பில் நீரானது நிலத்தோடு ஒப்பிடுகையில் ஏறக்குறைய 70மூ ஆகும். இதே விகிதத்தில் தான் ஒரு மனிதரின் உடலில் நீரின் தேவை அளவானது பார்க்கப்படுகிறது. இந்த அளவீடுகள் குழந்தைகள், கர்ப்பிணிகள், நோயாளிகள் போன்றோருக்கு வேறுபடும். உடல் உறுப்புகளின் செயல்பாட்டில் நீர் அதி முக்கிய பங்கு வகிக்கிறது. நீர் உடலிலும், நிலத்தினுள்ளும், வானில் மழை மேகங்களாகவும், காற்றினில் ஈரப்பதமாகவும் என எமக்கு உள்ளேயும், வெளியேயும் பரந்துபட்ட ஆதார சக்தியாக விளங்கி நிற்கிறது. இவற்றில் ஒரு இடத்தில் நீரின் தன்மை பாதிக்கப்பட்டாலும் அது உயிர்வாழ்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.
இவ்வளவு ஆற்றல் வாய்ந்த நீரினை பயன் தெளிந்து பயன்படுத்தினால் அதனிடமிருந்து ஏராளமான நன்மைகளைப் பெற முடியும். அப்படிப்பட்ட பயன்பாட்டு முறைகளை சித்தர்கள் உலக நன்மைக்காக வெளிப்படையாகவே கூறியுள்ளனர். பொதுவாக மனிதரை 4448 வகை யான வியாதிகள் தாக்கக் கூடும் என்று சித்த வைத்தியம் கூறுகின்றது.
இதில் பல ஆயிரம் வியாதிகளை நீர் மற்றும் சுவாசம் மூலமே உடற்சமநிலையைப் பேணி குணப்படுத்திவிட முடியும். நீரில் மிகவும் உயர்வான பிராணசக்தி இருக்கின்றது.
அது தொடுதல், உள்ளெடுத்தல் போன்ற பயன்பாடுகளில் நேரடியாகவே உடலில் தொழிற்படுகிறது. அவற்றை பயன்படுத்தும் முறைகள் பற்றியும் பார்ப்போம்.
உட்கொள்ளுதல், குளித்தல் போன்றவற்றால் அதிகப்படியான நீர் உடலோடு தொடர்புபடுகிறது. இதன் ஆற்றலை மேலும் பெற்றுக்கொள்ள இப்பயன்பாட்டு முறையிலும் சில நுணுக்கங்கள் இருக்கின்றன.
உடல் தனக்கு தேவையான பிராண சக்தியை ஆதாரமாகக் கொண்டே தொழிற்படுகிறது. அதன் செயற்பாடானது பிராண சக்தி வெகுவாக குறைந்துள்ள போது தற்காலிக ஓய்வு நிலையில் அதி குறைவாக இயங்கும். இந்த தருணத்தில் ஏதாவது முறையில் பிராணசக்தி கிடைக்கும் போது மீண்டும் வேகமாக தொழிற்படும். குறிப்பாக உடலே மருத்துவராக தொழிற்பட்டு தன்னைக் குணப்படுத்தும். அந்த பிராண சக்தி உட்கொள்ளுதல், குளித்தல் மூலம் அதிகமாகவே உடலுக்கு கிடைக்கின்றது. வெளியில் இருந்து எடுக்கப்படும் நோய் நீக்கும் மருந்துகள் உடலின் செயற்பாட்டை தூண்டுவதே அன்றி மருந்துகள் தன்னிச்சையாக செயற்பட முடியாது.
உடல் தன் சக்திக்கான தேவைகளை உடல் மொழி மூலம் வெளிப் படுத்தும். அதில் ஒன்று தான் தாகம் எனும் உணர்வு.
நீரினை இவ்வளவு தான் அருந்த வேண்டும் என்ற அளவீடுகள் எல்லோருக்குமே ஒரேமாதிரியாக பொருந்திவிடாது. அது பருவகாலம், உடல் உழைப்பு, வாழுகின்ற தட்வெப்ப வலயம் போன்றவற்றிற்கு ஏற்ப மாறுபடும். உடல் மொழியாகிய தாகம் தான் உடலுக்கு எப்போது, எவ்வளவு நீர் தேவை என்பதை தீர்மானிக்கிறது. பசி, தாகம் போன்ற உடல் மொழிகளை அவதானித்து அவற்றிற்கு ஏற்றாற் போல் செயற்பட வேண்டும். அலட்சியம் செய்யும் போது உடலானது இந்த உணர்வுகளை வெளிப்படுத்துவதில் மந்த நிலையினை அடைந்துவிடும். நீரினை அருந்தும் போது அமர்ந்து இருந்து உறிஞ்சி உள்ளெடுக்க வேண்டும். அதேநேரம் வாய்வழியாக காற்றை உள்ளெடுப்பதை தவிர்க்க வேண்டும். சுவாசிக்க வேண்டுமாயின் இடைநிறுத்தி சுவாசித்தபின்பு மீண்டும் அருந்தலாம். குறிப்பிட்ட சில நோய்களைத் தவிர இதர நோயாளிகள் அதிகளவு நீரை உள்ளெடுப்பதால் விரைவில் குணமடைய வாய்ப்புகள் உண்டு.
நீரானது எண்ணங்களை உள்வாங்கும் ஆற்றல் உள்ளது என அறிவியல் ரீதியாகவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. நீரின் உள் அணுக் கட்டமைப்புகள் அதை அணுகியுள்ளவர்களின் எண்ணத்தின் அலைகளுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அத்தகைய தன்மையோடுதான் நீர் தொடர்புநிலைக்கு வருகின்றது. எனவே நீரை பயன்படுத்தும் முன்பு அதற்கு நல்ல அதிர்வலைகளை எம்மிலிருந்து ஏற்படுத்த வேண்டியது அவசியம். பிறர் கரங்களால் நீர் பெற்று அருந்துவதானாலும் கூட இவற்றை கருத்திற் கொண்டு நேர்மறை உணர்வோடு ஒருநிமிடமாவது கையில் வைத்திருந்து விட்டு அருந்தலாம்.
குளிக்கும் முறை பற்றி அகத்தியர் சில நுணுக்கங்களை கூறியிருக்கிறார்.
உடலில் ஐந்து பூதங்களும் கலந்துள்ளன, இதன் சமநிலையில் மாற்றம் ஏற்படும்போது உடல் பாதிக்கப்படுகிறது, உடலில் இருக்கும் நெருப்பு ஆற்றல் கீழிருந்து மேல் நோக்கியே செல்லும், பொதுவாக நெருப்பின் தன்மையே மேல் நோக்கி எரிவதுதான். இந்த சூடு குளிக்கும் போது தலை பகுதி நோக்கி கடத்தப்படும். அதீத சூடு இவ்வாறு கடத்தப்படுவதனால் மூளை, கண்கள் போன்ற குளிர்ச்சியான அங்கங்கள் பாதிக்கப்பட்டுவிடும். எனவே குளிப்பதற்கு முன்னர் நீரோடு உள் உடலில் முதலில் தொடர்பு பட வேண்டும். மூன்று முறை நீரை கைகளில் எடுத்து வாயில் இட்டு கொப்பளிக்க வேண்டும், பின்னர் சிறிதளவு நீரை கையில் எடுத்து தலையில் தெளித்து அதன் பின்னர்தான் நீரை கால் முதல் மேல் நோக்கி நனைத்து வந்து, கடைசியில் தலையில் ஊற்றிக் கொள்ளல் வேண்டும். இவ்வாறு குளிக்கும் போது வாய்க்குள் நீரை அடக்கி வைத்துக் கொண்டு குளிக்க வேண்டும். இதனால் தலைக்கு ஏறுகின்ற சூடானது தலையைத் தாக்காது. வாயில் உள்ள நீரை வேண்டுமானால் இடையிடையே மாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு குளிப்பதனால் மூச்சுத்திணறல், தொடர் இருமல், ஆஸ்துமா, சுவாசப் பிரச்சனைகள், பித்த ஏற்றம், உடற்சூடு, மூலம் போன்ற பலவகையான நோய்களில் இருந்து விடுதலை பெற்றுவிடலாம். அதிக பிராண சக்தியை பெறுவதற்கு சாதாரண குளிர்நீரில் குளிப்பதே சரியானது. சிறிதளவு சூடான நீர் கூட அதிக கெடுதல் இல்லை. ஆனால் நன்கு கொதித்து ஆறிய நீர் பிராண சக்தியை இழந்த நீராகும்.
குளித்து முடிந்தவுடன் உடல் தன்னிச்சையாகவே சூட்டினை அதிகரிக்கும். முதுகுப் பாகத்தில் தான் சூட்டின் வேகம் கூடுதலாக பரவும். அங்கு வெளிப்புறத்தே நீர்த்தன்மை இருந்தால் அதீத சூட்டை உருவாக்கிவிடும் ஆதலால், குளித்து முடித்தவுடன், முதலில் முதுகு பாகத்தைத் தான் துடைக்க வேண்டும். குளிக்கும் நீரிலேயே துண்டை நனைத்துப் பிழிந்து துவட்டுவதுதான் நல்லது. உலர்ந்த துணியானது உள் சூட்டை வேகமாகப் பரவச் செய்து, பலவித உள் வலிகளை ஏற்படுத்தும்.
பிறருடன் வாய்திறந்து பேசக்கூடாத நேரங்களில் ஒன்று, குளியல் நேரம். அந்த நேரத்தில் மவுனத்தை கடைப் பிடிக்க வேண்டும்.நீரில் இறங்கி மூழ்கிக் குளிப்பதே நலம். இன்றைய சூழலில் இது சிரமம் என்பதால் மேற் சொல்லப்பட்ட விடயங்களை கடைப்பிடித்து பயனடையலாம்.
மழைநீரில் அதிகளவான பிராண சக்தி உள்ளதனால் அதில் நனைந்தால் அதிலிருந்து சக்தி பெற்று உடலானது தன்னை சுத்திகரிக்கும் வேலையைத் தொடங்கிவிடும். எனவேதான் மழை பட்டதுமே பாதிக்கப்பட்ட உடல் ஜலதோஷம், காய்ச்சல் போன்ற உடல் மொழியை வெளிப்படுத்துகிறது. அதன் பொருள் உள்ளே சுத்திகரிப்பு நிகழ்ந்து கொண்டிருக்கிறது உடலுக்கு அதிக உழைப்பு கொடுக்காமல் ஓய்வாக இரு என்பதே. அதிக பிராண சக்தி உள்ள உடல் மழையில் நனைவதால் பாதிக்கப்படுவதில்லை.
மழை நீரில் நனையும்படி நிலை உருவாகும் போது மெதுவாக தலை நிமிர்ந்து சிறிதளவு நீரை வாயில் விழும்படி ஏந்தி அருந்தி விடுங்கள். உடலிற்குள் தொடர்புபட்ட பின்னர் மழை நீரில் நனைவதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
இந்த முறையில் நீரை உபயோகிப்பதனால் புதிய பழக்கமில்லாத பகுதிகள், மற்றும் தட்வெப்பம் மாறுபட்ட தன்மையுள்ள நீர் போன்றவற்றால் எந்த பாதிப்பும் இன்றி நீர் மூலம் அதிக பயன்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
— கரிணி
885 total views, 1 views today
2 thoughts on “நீரின் தன்மையிலும் பயன்பாட்டிலும் உள்ள நுணுக்கங்கள்.”