சேரர் தலைநகரைத் தேடி!
தமிழர் வரலாறு கண்டிப்பாக மலைநாட்டையும் ஈழநாட்டையும் படிக்காமல் முழுமையடையாது ! மூவேந்தர்கள் நாம் அனைவரும் அறிந்த மூன்று மரபினர் சேரர், சோழர் மற்றும் பாண்டியர் ! இவர்களுள் சேரர்கள் இன்றைய தென்னிந்தியாவின் கேரளத்தையும் மேற்கு தமிழகத்தையும் ஆண்டுவந்தனர். சோழநாடு சோறுடைத்து என்பது போலே சேரநாடு வேழமுடைத்து என்ற பெருமையைப் பெற்றது. பல ஊர்கள் சேரர்களின் தலைநகர்களாக இருந்துவந்துள்ளன அவற்றுள் மகோதையபுரம் என்றோர் ஊர் உண்டு ! சரி அந்த தலைநகரம் இந்த 2019 எப்படி இருக்கிறதென சென்று தான் பார்ப்போமே ?
தஞ்சையை கண்டிருக்கிறோம் மதுரையை பார்த்திருக்கிறோம் எப்படி இருக்கும் மகோதையபுரம் ?
தமிழ் கூறும் நல்லுலகின் ஒரு பகுதியாகவே இருந்த மலைநாடு, பின்னர் வடமொழியின் தாக்கத்தால் திரிந்து கொடுந்தமிழாய் புழங்கி பின்னர் மலையாளாமாய் வழங்கி வருகிறது. ஆனால் கண்டிப்பாக நல்ல தமிழ்ச்சொற்கள் மலையாளத்தில் இன்றைக்கும் புழக்கத்தில் இருக்கின்றன என்றே சொல்லலாம்.
தமிழகத்திலிருந்து கொங்குநாடு வழியே கேரளத்தில் நுழைந்தால் பாலக்காடு உங்களை வரவேற்கும் அதன் பின்னர் திருச்சூர் (பழைய பெயர் திருச்சிவப்பேரூர்) இங்கிருந்து சுமார் ஒரு மணி நேரம் பயணித்தால் கடற்கரையை ஒட்டி கால்வாய்களும் தென்னை மரங்களும் சிரிக்க அழகாய் காட்சி தருகிறது கொடுங்களூர் ! இந்த கொடுங்களூரை சுற்றி மிகப்பெரியதாக அமைந்திருந்தது மகோதையபுரம் என்னும் தலைநகரம் !
ஊரின் நடுவே அமைந்திருக்கிறது பகவதி கோவில், இக்கோவிலில் உறைபவள் கண்ணகியே என்பது நம்பிக்கை. மதுரையை எரித்த கண்ணகி பின்னர் சேர நாட்டில் வந்து தெய்வமாயினாள், அங்கிருந்து பலவிடங்களுக்கும் கண்ணகி வழிபாடு பரவியது. இன்றைக்கு கண்ணகி வழிபாடு கேரளத்திலும் ஈழத்திலும் மட்டுமே சிறப்பாய் தொடர்கிறது.
கொடுங்களூரிலிருந்து தெற்கே சுமார் மூன்று கிலோமீட்டர் சென்றால் வரும் ஊரே திருவஞ்சைக்களம். சேரமன்னர்கள் கட்டி வழிபட்ட சிவாலயம் இங்குதான் அமைந்திருக்கிறது, இக்கோவில் தான் மலைநாட்டில் அமைந்த ஒரே தேவாரப் பதிகம் பெற்ற கோவில், இக்கோவிலை சுந்தரர் அழகு தமிழில் பாடியிருக்கிறார், சுந்தரருக்கும் சேரமான் பெருமாள் நாயனாருக்கும் சிலைகள் கூட இருக்கின்றன.
ஆயிரமாண்டுகட்கு முன்னர் துறைமுகமும் கோட்டை கொத்தளங்கள் கோவில்கள் என பரந்து விரிந்திருந்த மகோதையபுரம் இன்றைக்கு ஒரு சிறிய நகரம், மாவட்டத் தலைநகரம் கூட அல்ல ! பழமை மாறாமல் சில காட்டுப்பகுதிகள், தோட்டங்கள் பச்சைப் பசேலென காட்சி தரும் வயல்கள் சற்றே மனதுக்கு நிம்மதியை தருகின்றன.
ஆனால் வளர்ச்சி இவ்வூரையும் விட்டுவைக்க வில்லை
ஆங்காங்கே புது கட்டிடங்கள் வரத்தொடங்கிவிட்டன.
சரி அங்கே கோட்டை இருந்த பகுதி எங்கே என்று தேடிப் போனேன், சற்றே எனக்கு தெரிந்த மலையாளத்தில் வழி கேட்டேன். அங்கிருந்த ஒரு முதியவர் “எந்த இடத்தை தேடுகிறீர்கள் ?” என்றார். நான் “சேரமன்னர்கள் கோட்டை கட்டிடங்கள் இருந்த இடம்” என்றேன். நேரே போங்கோ இன்றைக்கு கோட்டை ஏதுமில்லை ஆனா அந்த இடம் மட்டும் இப்போ இருக்கு என்றார்.
திருவஞ்சைக்களத்துக்கு அருகிலேயே இருக்கிறது அந்த இடம், தொல்பொருள் ஆய்வாளர்கள் இங்கு தான் பல பொருட்களை கண்டெடுத்துள்ளனர். இடத்தின் பெயர் “சேரமான் பறம்பு” ஆனால் இன்றைக்கு ஒரு மைதானம். கொன்றை மரங்கள் சூழ்ந்த பறம்பில் சில சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது ஒரு நினைவுச்சின்னம் எழுப்பி இருக்கிறார்கள். சுற்றி இருக்கும் மக்கள் சொல்வது ஒரே செய்தி தான் பண்டு மன்னர்களின் கோட்டையும் கொத்தளமும் இங்கே தான் இருந்ததென்று.
அந்த இடத்திற்கு அருகே கடற்கரையும் இருக்கிறது, பண்டைய நாளில் மேற்கு உலகத்தின் யவனர்களும், உரோமையர்களும் இங்கே தான் வாணிபம் செய்திருப்பார்கள் என்று எண்ணிக்கொண்டேன் ! மொத்தத்தில் ஒரு புதிய அனுபவமாகத் தான் இருந்தது மகோதையபுரம். ஆயிரமாண்டு கதைகள் கண் முன்னே வந்து செல்லும் அஞ்சைக்களமும் மகோதைய புரமும் கொடுங்களூரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களே !
தனசேகர் பிரபாகரன்.
1,294 total views, 1 views today
2 thoughts on “சேரர் தலைநகரைத் தேடி!”