ஈழத்தமிழர் ஊடக வரலாற்றில் திருச்செல்வம் அவர்களுக்கு தனித்துவமான இடமுண்டு!
-தினக்குரல் பத்திரிகையின் ஞாயிறு வெளியீடு ஆசிரியர்
திரு. இராஜநாயகம் பாரதி
தாயகத்துக்கு அடுத்ததாக ஈழத் தமிழர்கள் அதிகளவுக்கு வசிக்கும் கனடாவின் ரொறன்ரோ நகரில் தமிழ் மக்கள் மத்தியில் உரையாற்றுவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்திருப்பதையிட்டு மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். அதுவும் ஊடகத்துறையில் என்னை உருவாக்கிய பத்திரிகைத்துறை ஜாம்பவான் திருச்செல்வம் அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுவதை பெருமைக்குரிய ஒரு விடயமாக நான் கருதுகின்றேன். இந்தச் சந்தர்ப்பத்தை எனக்கு ஏற்படுத்தித் தந்த ஏற்பாட்டாளர்களுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு எனது உரையைத் தொடங்குகின்றேன்.
ஈழத் தமிழர்களின் ஊடகத்துறை இன்று பரந்து விரிந்து பல புதிய பரிமாணங்களை எட்டியிருக்கின்றது. தமிழ் ஊடகத்துறையின் இந்த புதிய வளர்ச்சியை – புதிய பரிமாணங்களை கனடா வாழ் தமிழ் மக்கள் நேரடியாகவே கண்டுணர்கிறார்;கள் என்பதால் அது குறித்து நான் விபரிக்கத் தேவையில்லை. ஆனால், இவை அனைத்துக்கும் ஆணி வேராக – ஆதி மூலமாக கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் செயற்பட்ட ஊடகங்களும் ஊடகவியலாளர்களுமே இருந்துள்ளார்கள் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
இதில் திருச்செல்வம் அவர்களுக்கு ஒரு முக்கியமான, தனித்துவமான இடம் இருக்கின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை.
எஸ்தி| என அழைக்கப்படும் திருச்செல்வம் அவர்கள் முதலில் யாழ்ப்பாணத்தில் ஈழநாடு பத்திரிகையிலும், பின்னர் கொழும்பில் தினகரனிலும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் பணியாற்றி யிருந்தார். ஆனால், 1984இல் அவர் ஆரம்பித்த ஈழமுரசு மற்றும் முரசொலி பத்திரிகைகளின் மூலமாக அவர் என்ன சாதித்தார் என்பதையிட்டே நான் இன்று சில விடயங்களைச் சொல்லப்போகின்றேன்.
யாழ்ப்பாணப் பத்திரிகைகளைப் பொறுத்தவரையில் அவை எப்போதும் தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டத்தின் வெளிப்பாடாக அல்லது பிரதிபலிப்பாகவே இருந்திருக்கின்றன. 1960களில் சத்தியாக்கிரகப் போராட்டம் தீவிரமடைந்த காலகட்டத்தில்தான் ஈழநாடு பத்திரிகை ஆரம்பிக் கப்பட்டு, மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற்றது.
அகிம்சைப் போராட்டம் தோல்வியடைந்து – இளைஞர்கள் ஒரு மாற்றுவழியாக ஆயுதப் போராட்டத்தை தீவிரப்படுத்திய காலப்பகுதியில்தான் – அதாவது 1984இல் ஈழமுரசு திருச்செல்வம் அவர்களை ஸ்தாபக ஆசிரியராகக் கொண்டு யாழ்ப்பாணத்தில் வெளிவரத் தொடங்கியது. அதன் பின்னர் அவரை ஆசிரியராகக் கொண்டே 1986இல் முரசொலி ஆரம்பிக்கப்பட்டது.
ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் இது மிகவும் முக்கியமான ஒரு காலகட்டமாகும். களநிலையில் ஒரு மாற்றம் இடம்பெற்ற காலகட்டம் இது. தமிழர்களின் அரசியலில் ஒரு மாற்றம் இடம்பெற்ற காலகட்டம் இது. தலைவர்களுக்கு இளைஞர்கள் இரத்தத் திலகம் வைத்த காலகட்டம் முடிவுக்கு வந்து, இளைஞர்கள் தாமே இரத்தம் சிந்தத் தயாரான காலகட்டம். இந்த அரசியல் மாற்றம் களநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. தமிழ் மக்களுக்கு இந்தக் களநிலை மாற்றங்களைச் சொல்லக்கூடிய ஊடகங்களாக யாழ். பத்திரிகைகள் மட்டுமே இருந்தன. அதனால், அவற்றின் பொறுப்பும் அதிகமாகவே இருந்தது. இப்போது முகப்புத்தகத்தில் தகவல்களையும், கருத்துகளையும் பதிவேற்றுவதுபோல எதனையும் செய்துவிட முடியாத ஒரு காலகட்டம் அது. அதனால், பத்திரிகை ஆசிரியர்கள் கத்தி முனையில் நடப்பதுபோல மிகவும் நிதானமாகச் செற்பட வேண்டியிருந்தது. அத்துடன் ஒரு சமூகப் பொறுப்புடனும் அவர்கள் செயற்பட வேண்டியிருந்தது. அதனைவிட, அவர்களுடைய தலைக்கு மேலாக கத்தி ஒன்று எப்போதும் தொங்கிக்கொண்டேயிருக்கும். இவ்வாறான ஒரு காலகட்டத்தில்தான் திருச்செல்வம் அவர்கள் பத்திரிகை ஆசிரியராக யாழ். மண்ணில் களம் இறங்கினார்.
1980களின் ஆரம்பம் இராணுவக் கட்டுப்பாடு அதிகரிக்கத் தொடங்கிய காலம். இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பகுதியாகவே வடபகுதி அப்போது காணப்பட்டது. அந்த ஆக்கிரமிப்பின் மத்தியிலும் இரகசியமாகச் செயற்படும் இயக்கங்கள். இயக்கங்களுக்கிடையே காணப்பட்ட முரண்பாடுகள். பின்னர் சமாதானப் படையாகக் களம் இறங்கி கொடூரமான போரை நடத்திய இந்தியப் படையின் வருகை. இந்த அனைத்துத் தரப்பினரதும் அழுத்தங்கள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியில்தான் ஊடகங்கள் செயற்பட்டன.
இப்போது இருப்பதுபோல மனித உரிமைகள் அமைப்புகளின் கண்காணிப்போ, ஊடக சுதந்திரத்துக்காகக் குரல் கொடுக்கக்கூடிய அமைப்புகளின் செயற்பாடுகளோ இல்லாத ஒரு காலகட்டம் அது. பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்து செய்திகளைக் கொடுப்பதற்காக வரும் படை அதிகாரிகளும், இயக்கங்களின் பிரதிநிதிகளும் தம்மிடமிருக்கும் கைக்குண்டுகளையும், துப்பாக்கிகளையும் ஆசிரியர்களின் மேசையில் வைத்துவிட்டுத்தான் பேச ஆரம்பிக்கும் காலம் அது. அதில் மறைமுகமான ஒரு அச்சுறுத்தல் இருக்கும்.
அந்த நிலையிலும் ஊடக தர்மத்தைக் காத்து மக்களுக்குச் சரியான செய்திகளைக் கொடுக்க வேண்டும் என்பதில் திருச்செல்வம் அவர்கள் கடும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். அப்போதுதான் ஊடகத்துறையில் நுழைந்த நாம் இந்த நெருக்கடிகளையெல்லாம் அவர் எவ்வாறு சமாளிக்கின்றார் என்பதை வியப்புடன் பார்த்துக்கொண்டிருப்போம்.
984 – 1985 காலகட்டம் யாழ்ப்பாணம் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து மெல்ல மெல்ல இயக்கங்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுகொண்டிருந்த காலம். இவ்வாறு மாற்றம் நிகழும் ஒரு காலகட்டத்தில் பத்திரிகைகள் செயற்படுவது மிகவும் கடினமானது. 85ஆம் ஆண்டில் ஒரு நாள் நள்ளிரவில் ஈழமுரசு அலுவலகம் படையினரால் அதிரடியாகச் சுற்றிவளைக்கப்பட்டது.
கவச காவனங்களில் வந்த படையினர் திமுதிமுவென அலுவலகத்தை சுற்றிவளைத்து உள்ளே நுழைந்தார்கள். இரவு நேரப்பணியிலிருந்த ஊழியர்கள் அனைவரும் பின்பக்க மதிலால் பாய்ந்து தப்பினார்;கள். ஆசிரியர் திருச்செல்வம் அவர்கள் தன்னைவிட உயரமான அந்த மதிலை அந்த நள்ளிரவில் எப்படித் தாவிக்குதித்தார்? அதிகாலைவரை பற்றைகளுக்குள் பதுங்கியிருந்த அவர்கள் பின்னர் படையினர் சென்றுவிட்டதை உறுதிப்படுத்திக்கொண்டு வந்து அன்றைய பத்திரிகை வேலையை முடித்து அச்சுக்கு அனுப்பினார்கள். இது உதாரணத்துக்காகச் சொன்ன ஒரு நிகழ்வு மட்டும்தான். இதுபோன்ற ஆபத்துகள் பலவற்றைச் சந்தித்துத்தான் பத்திரிகைகள் அப்போது வெளிவந்தன.
தமிழ் ஊடகத்துறை வரலாற்றிலேயே மிகவும் அச்சம் சூழ்ந்த ஆபத்தான காலகட்டம் என 1980க்குப் பிற்பட்ட காலகட்டத்தைக் குறிப்பிடலாம். முதலில் இராணுவக் கட்டுப்பாடு. பின்னர் அந்தக் கட்டுப்பாட்டை இயக்கங்கள் தம்வசப்படுத்திக்கொண்ட ஒரு கால கட்டம். பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பு தனியாக அனைத்தையும் தமது கட்டுப்பாடுக்குள் வைத்திருந்த ஒரு காலகட்டம். பின்னர் 1987, 1988, 1989இல் சமாதானப் படையாகக் களமிறங்கி கொடூரமான போர் ஒன்றை நடத்திய இந்திய படை ஆக்கிரமித்த காலப்பகுதி.
ஒரு போரின் போது முதலில் முதலில் பலியாவது உண்மை என்பார்கள். இந்தியப் படை போரை ஆரம்பிக்க முன்னரே உண்மைகளை வெளிக்கொண்டுவரக்கூடிய ஊடகங்களில்தான் கைவைத்தது. 1987 அக்;டோபர் 10இல் அவ்வாறு குண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட இரண்டு பத்திரிகைகளில் ஒன்று திருச்செல்வம் அவர்களை ஆசிரியராகக் கொண்டிருந்த முரசொலி. அதன் பின்னர் அவர் கைதாகி 3 மாதங்கள் வரையில், கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
பத்திரிகை அலுவலகங்கள் தகர்க்கப்பட்டதையோ, முரசொலி ஆசிரியர் கைதாகி தடுத்து வைக்கப்பட்டதையோ நியாயப்படுத்துவதற்கான காரணங்கள் எதுவும் இன்று வரையில் சம்பந்தப்பட்டவர்களிடம் இல்லை. இவ்வளவுக்குப் பின்னரும் விடுதலையாகி வந்தவுடன் மீண்டும் பத்திரிகையை ஆரம்பித்து நடத்துவதற்கான துணிச்சல் திருச்செல்வம் அவர்களிடமிருந்தது. அதனைவிட முக்கியமானது அவரை நம்பி மீண்டும் களத்தில் இறங்க எம்மைப்போன்ற சில இளம் ஊடகவியலாளர்கள் அப்போது தயாராக இருந்தோம். பெற்றோரின் கடும் அச்சத்துக்கு மத்தியிலும் என்னைப் போன்ற – இங்கிருக்கும் வாசகன் இரத்தினதுரையைப் போன்ற – லண்டனில் தற்போது பிரபல ஊடகம் ஒன்றில் பணிபுரியும் பிரேம் போன்ற பலர் திருச்செல்வம் அவர்கள் மீதான நம்பிக்கையில் மீண்டும் ஊடகப் பணியில் இறங்கினோம்.
தன்னுடன் பணி புரியும் இளம் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பில் திருச்செல்வம் அவர்கள் எப்போதும் அவதானமாகவே இருந்தார். அது எமக்குத் தெரிந்திருந்தது. ஆனால், தன்னுடைய பாதுகாப்பில் அவர் கவனமில்லாமல் இருந்துவிட்டாரோ தெரியவில்லை.
1989இல் அவர் கொடுத்த விலை மிகப்பெரியது. சொந்த உயிரைவிடவும் பெறுமதியானது. எம்மையெல்லாம் திகைக்க வைத்த அந்த கொடூரமான சம்பவத்தின் பின்னர், நாம் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன்னதாகவே அவர் கொழும்பு சென்று கனடாவுக்கு வந்துவிட்டார். உண்மையில் அந்த அதிர்ச்சியிலிருந்து நாம் மீள்வதற்கு நீண்ட காலம் சென்றது.
அவர் அமைத்துக்கொடுத்த பாதையில், அவர் கற்பித்த பாடங்களின் அடிப்படையில் நாம் மீண்டும் பத்திரிகையைக் கொண்டு நடத்த முற்பட்ட போதிலும், அதன் ஆயுள் நீண்ட காலத்துக்கு நீடிக்கவில்லை. அந்தளவுக்கு நெருக்கடிகள் தொடர்ந்தன.
திருச்செல்வம் அவர்கள் உருவாக்கிய பத்திரிகையாளர்கள் இன்று தாயகத்தில் மட்டுமன்றி புலம்பெயர்ந்த நாடுகளிலும் ஊடகத்துறையில் முக்கிய பதவிகளில் இருக்கின்றார்கள். கனடாவுக்குப் புலம்பெயர்ந்த பின்னர் அவர் உருவாக்கிய தமிழர் தகவல் மாத சஞ்சிகை இன்று 28 ஆண்டுகளைத் தாண்டி ஒரு சாதனை புரிகின்றது. கனடாவில் வெளியிடப்பட்ட முதலாவது தமிழ் இதழ் இதுவாகும். அந்த வகையில் கனடா தமிழ் ஊடகத்துறையிலும் அவர் ஒரு முன்னோடி என நிச்சயமாகக் குறிப்பிடலாம். கடந்த சில வருடங்களாக வெளிவரும் தமிழர் தகவல் சஞ்சிகையைப் பார்க்கும்போது இளைய தலைமுறையினர் பலரும் இதில் எழுதுவதைக் பார்க்க முடிந்தது. இது மகிழ்ச்சியான ஒன்;று. அதாவது, கனடாவில் அடுத்த தலைமுறைக்கும் தமிழைக்கொண்டு செல்வதில் அவரது பங்கு பிரதானமானதாக இருக்கின்றது.
கனடா வந்தபின், அவருடன் தங்கியிருக்கும் நாட்களில் பல விடயங்களை அவதானிக்க முடிந்தது. ஒரு செக்கனைக்கூட விணாக்காமல் செயற்படும் அவரது உழைப்பைக் காண முடிந்தது. எதனையும் நேர்த்தியாகச் செய்வதில் அவரது உறுதியைக் காணமுடிந்தது. எந்தப் பிரச்சனையையும் நிதானமாகக் கையாளும் அவரது அறிவு முதிர்ச்சியைக் காணமுடிந்தது. அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கின்றது. அவரது அனைத்து முயற்சிகளுக்கும் பின்னாலிருந்து ஊக்குவிப்பவராக துணை நிற்பவராக அவரது மனைவி இருக்கின்றார். கனடா வாழ் தமிழர்களுக்கு மட்டுமன்றி, அனைத்துத் தமிழ் மக்களுக்கும் திரு அவர்களின் சேவை தொடரவேண்டும். அவரது அனுபவமும் அறிவும் இளைய தலைமுறையினருக்கு சிறந்த வழிகாட்டியாக அமையும். அதற்காக அவர் இன்னும் பல காலம் உடல் நலத்துடன் வாழ பிரார்த்தித்துக்கொண்டு என்னுடைய உரையை முடித்துக்கொள்கின்றேன்.
1,925 total views, 3 views today