நானாக நானில்லை
அக்கா என் உயிர் அக்கா! நீங்களும், நானும் ஒன்றாய் விளையாடித் திரிந்த அந்தக்காலம் மீணடும் வராதா அக்கா? சண்டை போட்டோம், கட்டிப்பிடித்துச் சிரித்தோம்,வண்ணத்துப் பூச்சிகளாய் பறந்து திரிந்தோம். எவ்வளவு இனிமையான காலங்கள்,வானவில்லின் வர்ணங்களாய் கனவுகளும், கற்பனைகளும், எல்லாம் கழிந்து போனவையாகி விட்டதே,அக்கா!நீங்களே என் உற்ற தோழனாய், இன்னுமொரு அம்மாவாய், அண்ணனாய், உடனிருந்திர்கள், ஆனாலும் உங்களுக்கும் தெரியாமல் எனக்குள் ஒரு பூகம்பம் உருவாகியது, அதை நான் உணர்ந்து கொள்ளவே எனக்குப் பலமாதப் போராட்டமானது.
உணர்ந்ததும் தடுமாறி தவித்தபோதும், உங்களோடு கூடப்பகிரமுடியாது துடித்தேன். காலக்கடிகாரம் இறக்கை கட்டிப் பறந்தது. வருடம் இரண்டை புழுவாய்த் துடித்துக்கழித்தேன். வெறுமை மட்டுமே எனக்குள். உங்களை விட்டால்,என் துன்பத்தை யாரிடம் சொல்லி ஆறுதல் தேடுவேன்,அக்கா! உடைந்து போய்விடாமல் மனதைத் திடமாக்குங்கள். நீங்கள் நிம்மதியாய் இருக்கவேண்டும்,என்பதற்காகவே,இத்தனை காலமும்,எனக்குள் நான் புதைந்து கிடந்தேன். ஆனால் இனியும் மறைக்க முடியாத நிலை வந்து விட்டது. அம்மா, எனக்குத் திருமணத்தை நிச்சயித்த பின்னும் நான் மௌனித்தால் பாவியாகி விடுவேன், என்பதால் இக்கடிதத்தில் எல்லா வற்றையும் விளக்குறேன் .
அம்மா,அப்பாவும் இல்லாமல் எங்கள் இருவரையும் வளர்ப்பதற்கு பட்ட துன்பத்தை நாமிருவருமே அறிவோம்.அம்மா என்னைத் தன் நம்பிக்கைக் கோட்டையாக,எண்ணியிருந்தார்.,அதைச்சுற்றிப் பல விதைகளையும் தூவியிருந்தார்.நானும் அத்தனையையும் விருட்சமாக்கி அம்மாவை அதன் நிழலில் ,கோட்டைக்குள் ராணியாக எந்தத் துன்பமும் இல்லாமல் பாதுகாக்க வேண்டுமென எண்ணினேன்,அத்தனையும் வெடித்துச் சிதறிய செல் துண்டுகளானது, ஆனால் நானே அவருக்கு வெடிகுண்டாவேன்.என ஒருபோதும் கனவுகூடக் காணவில்லை. அக்கா,எப்படி எங்கே தொடங்குவதென தவிக்கிறேன் அக்கா. இதை வாசித்த பின் நீங்கள் நிச்சயம் துடிப்பீர்கள்,ஆனால் உங்களைத் தயார்ப்படுத்தவும்,எனக்குத் தைரியத்திற் காகவும், நீட்டுகிறேன் அக்கா.
இரண்டு வருடங்களுக்கு முன் சிறிது சிறிதாக எனக்குள் சில மாற்றங்கள் தோன்றியபோது நான் அதைப்பெரிதாக எண்ணவில்லை,ஆனால் அவற்றை என்னால் தவிர்க்க முடியாத உணர்வுகளாய் உந்துதல் கொண்டபோது துடித்தேன்,யாரிடம் சொல்வது ,கேட்பதென எனக்கு எதுவுமே புரியவில்லை. புயலில் அகப்பட்ட படகாய்த்தடுமாறி நின்றேன்.. வீட்டில்” அம்மா என்ன பிரச்சனை எதோ பறிகொடுத்தமாதிரி இருக்கிறாய்,உனக்கும் வயது இருபத்தி ஏழாகுது. ஒரு கலியாணத்தைப் பேசி முடிச்சிட்டால் நான் நிம்மதியாய் கண் மூடுவேன்”எனச் சொல்லிப் பெண் தேடியதை நீங்களும் அறிவீர்கள். இப்போ அம்மாவின் தொந்தரவால் பல பெண்களைப் பார்த்துப் பேசுவதும்,பின் எதோ ஒரு காரணத்தைக் கூறித் தட்டிக்கழிப்பது, தொடர்வதும் நீங்கள் அறிவீர்கள்.
அம்மா எனக்கு ஒரு பெண்ணும் பிடிக்குதில்லையென, உங்களிடம் முறைப்பாடு செய்து, நான் யாரையாவது காதலிக்கிறேனா எனக் கேட்க்கும்படி உங்களிடம் கூறியதையும் நானறிவேன். அதற்கெல்லாம் தகுதி இல்லாதவனாகி விட்டேன். இப்போது நான் நானக இல்லாமல் உலவுகிறேன்.
இதை என்னால் அம்மாவிடமோ,என்வயது நண்பர்களிடமோ கூறி ஆறுதல் பெறமுடியவில்லை. என் நண்பர்கள் சில வேளைகளில் கேலி செய்யும் போது நான் உடைந்து சிதறிவிடுகிறேன், நான் என்ன தவறு செய்தேன்? கடவுளோ,என்னை தண்டித்து விட்டார். நித்தம் துடிக்கிறேன் அக்கா ! முன்னர் திரைப்படங்களில் இப்படியான காட்சிகளைக் கண்டு சும்மா நகைச் சுவைக்காகச் சேர்த்திருக்கிறார்களென எண்ணுவேன்,ஆனால் இப்படியும் ஒரு உலகம் இருக்கிறது. அது இறைவனோ,இயற்கையோ,தரும் ஆயுள் தண்டனை, என்பதை இப்போது உணர்கின்றேன். நான் இன்னும் விடயத்திற்கு வரவில்லை என நீங்கள் தவிப்பது புரிகிறது. எனக்குள் எதாவது நோய் ஏற்பட்டிருக்கிறதோ ? எனப் பதறுவதும் புரிகிறது . இல்லை அதையெல்லாம் விடக் கொடூரமான தண்டனையை நான் அனுபவிக்கிறேன் .
மற்றவரையும் ஏமாற்றவேண்டாமென,அதனால் தான் நான் வேறு நாட்டுக்கு வேலைக்காகப் போவதாக உங்களிடம் பொய் கூறினேன்.அதற்கு என்னை மன்னித்து விடுங்கள்.என்னை அறியாத,தெரியாத, புது மனிதர்களிடை நான் வாழப்போகிறேன். இது எனக்கு நான் கொடுக்கும் தண்டனையா ? மகிழ்வா ? நானறியேன்,ஆனால் நான் ஊரையும், உறவுகளையும் வீட்டு ஓடுகிறேன், என்பதே உண்மை.
இன்னும் நான் விடயத்தைக் கூறவில்லையல்லவா, அக்கா ! என்னில், எனது உடலில்,உணர்வில், பாரிய மாற்றங்கள், பெண்மைக்குரிய உணர்வுகள், ஆசைகள், மாற்றங்கள். ஆம். நான் பெண்ணாக மாறிக்கொண்டிருக்கிறேன், நம்பமுடியவில்லையா ?
அதிர்ச்சியாய் இருக்கிறதா ? அதுதான் உண்மை,தடுமாறிவிடாமல் நில்லுங்கள்.இதில் நான் செய்த தவறேதும் இல்லை அக்கா. ஆட்டுவிக் கின்றவன் கைப்பொம்மையாய் ஆடுகிறேன்.
தற்கொலை செய்யலாமா? எனப்பல தடவை எண்ணினேன். அம்மா பாவம் அவருக்கு தண்டனை தரக்கூடாதென எண்ணிக் கைவிட்டேன். நான் இப்போ பல விடயங்களைக் கூகுளில் தேடி அறிந்து கொண்டேன். :உடலில் சுரக்கும் கோமோன்கள் ஆண், பெண்ணெனும் வேறுபாட்டைத் தருகிறது, இப்போது அதில் எனக்குள் ஆணுக்கான சுரப்புகள் நிறுத்தப்பட்டு, பெண்ணுக்கான சுரப்புகள் அதிகரித்தமையின் விளைவே இது, அக்கா! உங்களைத் தேற்றி,நான் தொழிலுக்காய் வேறு நாடு போவதாய் ,அம்மாவுக்கு ஆறுதல் கூறுங்கள். ,அவரின் வயதான காலத்தில் அவருக்கு இதைத் தாங்கும் வல்லமை இல்லை. நீங்களே அவரைப் பார்த்து ஆறுதலாய் இருங்கள். விடைபெறுகிறேன் அக்கா. நான் ஒரு பெண்ணை விரும்பியிருப் பதாகவும் அவருக்காய்க் காத்திருப்பதாகவும் அம்மாவிடம் கூறியுள்ளேன், நீங்களும் அப்படியே கூறுங்கள். உலகின் ஒரு மூலையில் இறப்பு வரும்வரை வாழ்ந்து கொண்டு இருப்பேன் .
இப்படிக்கு அன்புடன்
இப்போ நான் நானகவில்லை. அப்படி என்றால் நான் வதனன் ஆ இல்லை வதனியா?
— கீதா பரமானந்தம்
681 total views, 2 views today