தோல்விக்குள் ஒளிந்திருக்கும் வெற்றி

வாழ்க்கை என்பது வெற்றியும் தோல்வியும் கலந்த பயணம் என்பார்கள். இல்லை ! அது மிகப்பெரிய தவறு.
வாழ்க்கை என்பது அனுபவங்களின் பயணம். அதில் சில அனுபவங்களை வெற்றி என நாம் எடுத்துக் கொள்கிறோம், சிலவற்றை தோல்வி எனக் கருதிக் கொள்கிறோம் அவ்வளவு தான்.

எல்லா வாழ்க்கை அனுபவங்களும் தன்னுள்ளே வெற்றியையும் தோல்வியையும் பொதிந்து வைத்திருக்கின்றன. சிலருக்கு வெற்றியாய்த் தோன்றும் நிகழ்வு, சிலருக்கு தோல்வியாய்த் தெரியும். “அட நல்ல மழை பெய்யுது.. ரொம்ப மகிழ்ச்சி” என சிலர் சொல்கின்ற அதே கணத்தில், “அட, நாற்று முளைச்சு வர டைம்ல மழை பெய்யுதே, எல்லாம் வேஸ்ட் ஆயிடுமே” என சிலர் கவலைப்படுகிறார்கள். ஒரே நிகழ்வு சிலருக்கு வெற்றியின் சின்னமாகவும், சிலருக்கு தோல்வியின் அடையாளமாகவும் மாறிவிடுகிறது.

வெற்றி என்பதும், தோல்வி என்பதும் நமது எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகிறது. நமது எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஒரு விஷயம் நடந்தால் அதை நாம் வெற்றி என்கிறோம். நமது எதிர்பார்ப்புக்கு எதிராக ஒரு விஷயம் நடந்தால் அதைத் தோல்வி என முடிவு செய்து விடுகிறோம். உண்மையில் அப்படியல்ல, நாம் தோல்வி என நினைக்கின்ற அனுபவங்கள் நம்மை பல நேரங்களில் மிகப்பெரிய வெற்றிகரமான அனுபவங்களுக்குள் அழைத்துச் செல்கின்றன.

தாமஸ் ஆல்வா எடிசனைப் பற்றிச் சொல்லும் போது ஒரு விஷயத்தைக் குறிப்பிடுவார்கள். அவர் மின்விளக்கு கண்டு பிடிக்க முயன்று கொண்டிருந்த காலகட்டத்தில் சுமார் ஆயிரம் முறை தோல்வியடைந்தார். அப்போது அவரது நண்பர் அவரிடம், “அட ஆயிரம் தடவை முயற்சி செஞ்சும் சக்சஸ் ஆகலையே” என அங்கலாய்த்தார். எடிசனோ கூலாக, “யார் அப்படிச் சொன்னது ? எந்தெந்த வழிகளில் மின்விளக்கைக் கண்டுபிடிக்க முடியாது என  நான் கண்டுபிடித்திருக்கிறேனே” என்றாராம்.

ஒரு விஷயத்தை நாம் எப்படி அணுகுகிறோம் என்பதே நம்மை வெற்றிகரமாய் இயக்குகிறது. நாம் நினைத்த விஷயம் நடக்கவில்லையே என நாம் நினைக்கும் போது தோல்வியடைந்து விடுகிறோம். அடுத்த பாதையில் பயணத்தைத் தொடர்வோம் என நினைக்கும் போது வெற்றியின் சூட்சுமத்தைக் கற்றுக் கொள்கிறோம். இன்று தாமஸ் ஆல்வா எடிசனின் கண்டுபிடிப்புகளில் 1093 காப்புரிமை பெற்று அவர் பெயரைச் சொல்கின்றன. அதன் காரணம் அவரது அணுகுமுறை தான். 

நினைக்கும் விஷயம், நினைக்கும் விதத்தில், நினைக்கும் நேரத்தில் நடப்பதே வெற்றி என்பது நாம் உருவாக்கி வைத்திருக்கும் மாயையே. விதைகளை விதைக்கிறோம். சில விதைகள் ஓரிரு நாளில் முளைவிடும். ஒரு சில முளை விட சில வாரங்கள் எடுக்கும். ஒரு சில விதைகள் நட்டதையே நாம் மறந்த பின்பு தான் தரைக்கு மேலே தலை நீட்டி ஹாய் சொல்லும். அதற்காக சட்டென முளைப்பது மட்டுமே வெற்றி எனக் கொள்ள முடியுமா ? தாமதமாய்க் கிடைக்கிறது என்பதால் தோல்வி என முடிவு செய்ய முடியுமா ?

சீனாவில் ஒரு மூங்கில் மரம் உண்டு. அதை முளையாக நட்டு வைத்தால் ஒரு சின்ன வளர்ச்சி கூட இல்லாமல் இருக்கும். வாரங்கள், மாதங்கள் கணக்கல்ல, சுமார் 5 ஆண்டுகள் எந்த ஒரு சலனமும் இல்லாமல் அப்படியே நிற்கும். ஆனால் அதன்பின் சடசடவென வளர்ந்து வானத்தை எட்டிப் பிடிக்குமளவுக்கு விஸ்வரூபம் எடுக்கும். அதாவது 5ம் வகுப்பு படிக்கும் ஒரு பையன் ஒரு மரத்தை நட்டு வைத்தால், அவன் பத்தாம் வகுப்பு முடித்த பின்பு தான் வளரவே ஆரம்பிக்கும் ! அதற்காக அது தோல்வி என சொல்லி விடமுடியுமா ?

எந்த ஒரு தோல்வியையும் உடைத்துப் பார்த்தால் வெற்றிகள் ஒளிந்திருக்கும். இந்த மூங்கில் மரம் முதல்  ஐந்து ஆண்டுகள் மண்ணுக்குள் வேர்களை பரப்பிக் கொண்டே இருந்தது. அது தான் பிற்காலத்தில் மரம் பிரம்மாண்டமாய் எடுத்து வளரும்போது தாங்கிப் பிடிக்கும் வலிமையைத் தருகிறது. எனில், தாமதம் என்பது தோல்வி அல்ல, தயாரிப்பு. தாமதமாகும் வெற்றி என்பது, அந்த வெற்றியை ஏற்றுக் கொள்ள காலம் நம்மை பக்குவப்படுத்தும் தயாரிப்புக் காலம் எனக் கொள்ளலாம்.

நதி வேகமெடுக்க வேண்டுமெனில் அருவிகள் வேண்டும். விழுந்த இடத்தில் காலொடிந்து கிடப்பதில்லை நதிகள். அருவியின் அடிவாரம் தான் அதன் விஸ்வரூபத்தின் ஆரம்பம். “நான் பாட்டுக்கு போயிட்டே இருந்தேன், அருவி வந்து அலைக்கழித்து விட்டது” என ஓரமாய் அமர்ந்து கண்ணீர் விடுவதில்லை நதி.

வாழ்க்கையை சற்றே திரும்பிப் பார்த்தால், நாம் தோல்வி என ஒரு காலத்தில் கருதிய விஷயங்கள் இன்றைக்கு நல்ல முடிவையே தந்திருப்பதை உணரலாம். தோற்றுப் போன ஒரு கல்வி, இன்னொரு துறையில் நமக்கிருந்த அபரிமிதமான அறிவை வெளிக்காட்டியிருக்கலாம். தோற்றுப் போன ஒரு காதல் இன்றைய அழகிய குடும்பத்தின் காரணமாக மாறியிருக்கலாம். தோற்றுப் போன ஒரு வேலை இன்னொரு வேலைக்காக நம்மை உருவாக்கியிருக்கலாம். எல்லாமே அனுபவங்கள். அனைத்தையும் அன்புடன் கரம் குலுக்கி வரவேற்பதில் இருக்கிறது வாழ்க்கையின் ஆனந்தம்.

நாளை என்ன நடக்கும் என்பது தெரியாததால் தான் பல விஷயங்களைத் தோல்விகளாய் நாம் கருதிக் கொள்கிறோம். அப்படித் தெரியாத நிலை தான் வாழ்க்கையை அழகாக்குகிறது, சவாலாக்குகிறது, சுவாரஸ்யமாக்குகிறது. இந்த அழகை அறிந்து கொள்ள முடியாதவர்கள் தான் சட்டென முடங்கி விடுகிறார்கள். அல்லது வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் துணிந்து விடுகிறார்கள்.

காலம் நம்மைச் செதுக்கி பாறைக்குள் ஒளிந்திருக்கும் சிலைகளை வெளிக்கொண்டு வருகிறது, காலம் நம்மை வனைந்து களிமண் நிகழ்வுகளிலிருந்து அழகிய பாண்டங்களை வெளிக்கொண்டு வருகிறது, காலம் நம்மை வார்த்தெடுத்து கூடுடைக்கும் பட்டாம் பூச்சியாய் நம்மை உருமாற்றுகிறது, காலம் நம்மை வடிவமைக்கிறது, நாம் செய்யவேண்டியதெல்லாம் அந்தக் காலத்தை தோல்வி என முடிவு செய்து தோற்றுப் போகாமல் இருப்பது தான்.

ஆன்மீகவாதிகள் இதை அழகாக எடுத்துக் கொள்வார்கள். “எது எப்போ தரணும்ன்னு கடவுளுக்குத் தெரியும். அதை அப்போ தருவாரு” என அமைதியாக சொல்லிக் கொண்டு தங்கள் வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள். உண்மை தான். சில வேண்டுதல்களை கடவுள் உடனே தருவதுண்டு. சிலவற்றுக்கு சிறிது காலம் எடுத்துக் கொள்வார். இன்னும் சிலவற்றைத் தரவே மாட்டார். எல்லாமே வெற்றி தான்.

எது நமக்குத் தேவை என்பதை நம்மை விட அதிகமாய், தெளிவாய் இறைவன் அறிகிறார். அதனால் தான் நமக்குத் தேவையானதை மட்டும் தருகிறார். பத்து வயதுப் பையன் பைக் கேட்டால் தந்தை உடனே வாங்கித் தந்துவிடுவதில்லை. அவன் அந்த பைக்கை பாதுகாப்பாய் ஒட்டும் காலம் வரை பொறுத்திருக்கிறார். தாமதம் என்பது பையனின் பார்வையில் தோல்வி, தந்தையின் பார்வையில் தயாரிப்பு. இந்த பார்வையைப் புரிந்து கொண்டால் வாழ்க்கையை மிகவும் ஆனந்த அனுபவமாக எதிர் கொள்ள முடியும்.

*
சேவியர்

2,045 total views, 9 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *