நாளை என்பதும், இல்லை என்பதும் ஒன்றே! ஒன்றே செய், நன்றே செய், அதுவும் இன்றே செய்.
அப்பாவோ அம்மாவோ அல்லது ஒரு நண்பரோ உங்களிடம் ஒரு வேலையைச் செய்யச் சொன்னால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்.
உங்களுக்கு பிடித்த வேலை என்றால் ஓம் இப்பவே செய்கிறேன் என்பீர்கள். கொஞ்சம் பிடிக்காத வேலை என்றால் நாளை செய்கிறேன் என்பீர்கள்.
இந்த வேலை இரண்டுமே நல்லவேலையாகக்கூட இருக்கலாம். ஆனால் உங்கள் மனம் அந்த வேலையை ஒரு வேலையாக மட்டும் பார்க்கும்போது நாளை என்றும். அதனை ஒரு சுகமாகப் பார்க்கும் போது இப்போதே என்றும் முடிவு எடுக்க வைக்கின்றது.
உங்களுக்கு கடினமான ஒரு வேலையாக இருந்தால் அதனை முதலில் செய்யவேண்டும். அதனை முடித்துவிட்டால் உங்கள் மனம் இலேசாகிவிடும். அதன் பின் பாடிப்பாடி உங்களுக்குப்பிடித்த வேலையைச் செய்யலாம்.
நாளை என்பதும் இல்லை என்பதும் ஒன்றே என்று நம்மூரில் ஒரு பழமொழி உண்டு, எனப் பெற்றோர்கள் சொல்வதுண்டு. இந்த அனுபவ வார்த்தைகள் உண்மையில் யதார்த்தமானவையே.
ஒரு வேலையைத் தொடங்குவதுதான் கடினம். தொடங்கிவிட்டால் பாதிவேலை முடிந்தமாதிரி. உங்களுக்கு பிடித்தவருக்கு ஒரு கடிதம் எழுதுவது என்றால் அது வேலையா? அது சுகம். பக்கம், பக்கமாக எழுதுவோம். ஆனால் ஒரு விசாவிற்கு ஒருவிண்ணப்பப்படிவம் உங்கள் பெற்றோருக்கு நிரப்ப வேண்டும் என்றால், சொல்லத்தேவை இல்லை.
எனக்கு ஆயிரம் வேலையிருக்கு இப்ப இது செய்வது கஸ்டம் என்று, சொல்லும்போதே கைத்தொலைபேசியில் விரல்கள் நோண்டும்.
அன்பு அதனை அக்கணமே காட்டி விடவேண்டும். அன்பானது பிற்போடவேண்டிய காரியமல்ல. பெற்றோரிடம் காட்டும் அன்பாக இருந்தாலும் சரி, மற்றைய மனிதருக்குக் காட்டும் அன்பாக இருந்தாலும் சரி அன்றே காட்டவேண்டும்.
பெற்றாறோர்கள் ஒரு நாள் இல்லாத சமயத்தில் தாங்க முடியாத வேதனை உண்டாகிவிடும்.
சரியான நேரத்தில் காட்டவேண்டிய அன்பினைப் பிற்போட்டுப் பின் தவிக்காதீர்கள்.
உண்மையில் உங்கள் அன்புக்கு
பாத்திரமானவர்களுக்கு உங்களால் முடிந்ததைச்
செய்வது, அவர்களுக்கு நீங்கள் செலுத்தும்
மரியாதை. அதுவே பேரன்புமாகும். இந்த அன்பை நீங்களும் சுமந்தபடி செய்வீர்களானால் நாளை என்ற சொல் மறைந்து, இன்று எனும் பூக்கள் உங்கள் முன் பூத்துக்குலுங்கும்.
மனதில் ஒன்றைச் செய்வேண்டும் என ஓர் ஆசை வந்துவிட்டால் அதனை நாளை என்று பிற்போடாமல், அதே நாளில் நிறைவேற்றி விடுங்கள். நாளை ஒருவேளை உங்களால் முடியவில்லை என்றால் மிகவும் வேதனையாக இருக்குமல்லவா?
அன்பு, பாசம், காதல், நட்பு, தொழில், கல்வி, தொண்டு, கடமை, பணி எல்லாவற்றையும் சரியான நேரத்தில் செய்ய வேண்டும். பிற்போட்டு ஏமார்ந்தும் ஏமாற்றியும் விடாதீர்கள். வேலைகளைப் பிற்போடுவதால் கடைசியில் பல வேலைகள் குவிந்து எதனைச் செய்வது என்று தெரியாது பெரும் மனவழுத்தத்திற்கு உள்ளாகிவிடுவோம். இது மாணவர்களாக இருந்தாலும் சரி, வளர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, இவை பொருந்தும். எமக்கு காரணமின்றி வரும் பல நோய்களுக்கு இந்த மன அழுத்தமே காரணம்.
தொழிலும், கல்வியும் நம் வயதும் நேரமும் ஓடுமுன் நிறைவேற்ற வேண்டியவை. கற்கவேண்டியதுக்கு வயதெல்லை இல்லை. ஆனால் சில வற்றுக்கு வயதும் அவசியம்.
தொண்டு, கடமை மற்றும் பணி என்பதும் நாம் செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வேண்டும். வரும் வாய்ப்பினைப் பின் போடவேண்டாம். இவைகளை நாம் கைவிட்டுவிட்டால் நாம் உதவ முடியவில்லை என்று பின் ஒரு நாள் வருந்துவோம்.
பொறுமை என்பது இருப்பது நன்று. ஆனால் அதுவே சோம்பல் என்று ஆகிவிடக்கூடாது.
ஆகவே நன்றே செய் அதை இன்றே செய்!
–றஜினா தருமராஜா
9,282 total views, 3 views today