ஒரு மனிதனுக்கு எவ்வளவு தூக்கம் தேவை?
நமது வாழ்வில் முக்கிய பங்கெடுக்கும் நிகழ்வுகளில் தூக்கமும் ஒன்றாகும். இன்றைய பொழுதின் களைப்பைப் போக்கவும், அடுத்த நாள் வேலைக்கு நம்மைத் தயார் செய்யவும் தூக்கம் மிக மிக முக்கியமானது. அது உங்கள் எல்லோருக்குமே நன்றாகத் தெரியும். சிலருக்குத் தூக்கமே துக்கமாக மாறக்கூடிய அளவில் விரைவான வாழ்க்கை முறையை நாம் இப்போது மேற்கொண்டு வருகிறோம். தூக்கம் சரியான அளவில் இருந்தால் அப்படியான துக்கங்களும் நம்மை நெருங்காது, அது ஏனென்றால் நமது மனதில் ஒரு விதமான ஆழ்நிலை அமைதியைக் கொடுப்பதே அந்தத் தூக்கம் மட்டும் தான். எனவே இந்தத் தூக்கம் எவ்வளவு தேவை என்பதைத் தெரிந்தால் அதை வைத்து நம்மை நாமே சரி செய்து கொள்ளலாம் தானே? எனவே தூக்கத்தைப் பற்றி சில சுவாரசியமான விஷயங்களைத் தெரிந்துகொள்ள விரும்பினால், தொடர்ந்து படியுங்கள்.
நமது உடல் களைப்படைந்து இருப்பதற்கும், சோம்பேறியாக அன்றைய நாள் முழுவதும் இருப்பதற்கும், முதல் நாள் இரவில் அல்லது சில நாட்களாகவே நமக்குச் சரியான தூக்கம் இல்லாததே காரணம் ஆகும். எனவே ஒவ்வொரு மனிதனும் தினமும் தூங்கத் தான் வேண்டும். எனவே ஒருவர் ஒவ்வொரு நாளும் சராசரியாக எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதை அறிவதற்குப் பல ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்.
அப்படிச் செய்யப் பட்ட ஒரு ஆராய்ச்சி பற்றிக் கூறுகின்றேன், கேளுங்கள். அது என்னவென்றால்: தினமும் நான்கு மணி நேரம், ஆறு மணி நேரம் மற்றும் எட்டு மணி நேரம் என வெவ்வேறு கால அளவுகள் தூங்கும் நேரம் கொண்ட மக்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டனர். அவர்களை இரு வாரங்கள் கண்காணித்தனர். அதில் எட்டு மணி நேரம் தூங்குபவர்களின் மூளை சிறப்பாகச் செயல்படுவதாகவும், ஆறு மணி நேரம் தூங்குபவர்களின் மூளை சிறிது Alcohol உட்கொண்டவர்களின் மூளையைப் போல் செயல்படத் தொடங்கிவிடுவதாகவும், நான்கு மணி நேரம் மட்டுமே தூங்குபவர்கள் எப்போதும் சோம்பேறித்தனமாக உணர்வதாகவும் தெரிய வந்தது. இதில் மிகவும் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கிய அந்த நபர்கள், இந்த ஆய்வு மேற்கொள்ளும்போதே பல நேரங்களில் சோர்வடைந்து தூங்குவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தார்கள்.
சரியான தூக்கம் கொண்டிருந்தால் உடலும், மூளையும் சரியான ஆற்றலுடன் செயல்படும். நாம் இன்று தேவையான அளவு தூக்கத்தை மேற்கொள்ள வில்லை என்றால், அந்த தூக்க அளவு காலம், அடுத்த நாள் தூக்கத்துடன் சேர்த்துக்கொள்ளப்படும். இந்தக் கால அளவை “தூக்கநேரக் கடன்” என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். நாளுக்கு நாள் நாம் தூங்க வேண்டிய கால அளவு, அதாவது தூக்கநேரக் கடன், அதிகரித்துக் கொண்டே செல்லும்போது நமது மூளையின் செயல் வேகமும் குறைந்துவிடும். இதனால் மூளையின் வழக்கமான பல செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுவிடும். இதில் பயங்கரமான விஷயம் என்னவென்றால், இந்தப் பாதிப்புகள் நிரந்தர பாதிப்புகளாகவும் அமைந்துவிட வாய்ப்புக்கள் உள்ளன என்பது தான்.
சராசரியாக ஏழிலிருந்து எட்டு மணி நேரம் வரை தூங்குவது தான் சிறந்தது எனக் கண்டு பிடித்துள்ளார்கள். ஏழு மணி நேரத்திற்கக் குறைவான கால அளவில் தூக்கம் கொண்டிருந்தால் அவர்களுக்கு இதய நோய்கள் வருவது, மூளைச் செயல்பாட்டில் பாதிப்பு, உடல் பருமன் அதிகரித்தல், நீரிழிவுக்கான வாய்ப்புகள் அதிகரிப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமுள்ளன. அது மட்டுமில்லாமல் விரைவில் இறப்பதற்கான வாய்ப்புகள் கூட 12 சதவீதம் வரை அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அட குறையத் தூங்கினால் தான் பிரச்சினை என்று நினைத்து விடாதீர்கள்! எட்டு மணி நேரத்திற்கு அதிகமாகத் தூங்கினாலும், இதய நோய்கள் ஏற்படுவது, உடல் பருமன் அதிகரிப்பது, நீரிழிவு நோய்க்கான வாய்ப்புகள் அதிகரித்தல் மட்டுமில்லாமல், இறப்பதற்கான வாய்ப்புகளும் 30 சதவீதமாக உயர்ந்துவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். எனவே அதிக நேர தூக்கமும் ஆபத்தானது நண்பர்களே!
ஆனால் நாம் பார்க்கும் ஒரு சிலர், இரவில் நீண்ட நேரம் முழித்துவிட்டு காலையில் விரைவாக எழுந்து சிறப்பாகச் செயல்படுவார்கள். அவர்களைப் பார்த்தால் சிலருக்குப் பொறாமைகூட வரும். இவர்களா மட்டும் ஏன் இப்படி இருக்க முடிகின்றது என்பதை அறிய வேண்டும் என்றால், அதற்கு அவர்களின் டி.என்.ஏவைத் தான் ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஏனென்றால் சிறிது காலம் தூங்கினாலும் சிறப்பாக செயல்படுபவர்களின் ஜீன்களில் அதற்குத் தகுந்த தகவமைப்பு இருக்கும். இதன் மூலம் அவர்களுக்கு மற்றவர்களைப் போல எட்டு மணி நேர தூக்கம் தேவையில்லை, அதற்குப் பதிலாக அதற்குக் குறைவான கால அளவு தூக்கமே போதும். இதைச் சோதிக்க ஆராய்ச்சியாளர்கள் ஒரு எலியின் டி.என்.ஏயை மாற்றிச் சோதித்தனர். சாதாரண எலி தூங்கும் காலத்தை விட இந்த மாற்று எலி 1.2 மணி நேரம் குறைவாகத் தூங்கியிருந்தும் எப்பொழுதும் போல் உற்சாகமாக செயல் பட்டது என்று அந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
எனவே, சரியான கால அளவில் உறங்கி எழுவது நமது இதயம், மூளை என உடலின் எல்லா பாகங்களும் சிறப்பாகச் செயலாற்ற உதவும். சரி, நண்பர்களே, கடைசியாகத் தூக்கத்தைப் பற்றி இன்னும் ஒரே ஒரு சுவாரசியமான விஷயத்தை சொல்கிறேன் கேளுங்கள். உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஒரு மனிதன், தனது வாழ்நாளில் சராசரியாக 24 ஆண்டுகள் தூங்குகிறான். நம்ப முடிகிறதா?
சரி நண்பர்களே இனி நீங்கள் கூறுங்கள். நீங்கள் தினமும் எத்தனை மணி நேரங்கள் தூங்குவீர்கள்?
— னுச.நிரோஷன்
6,542 total views, 2 views today