யார் இவள்
அடக்கமானவள் தன் அழகை அறியாதவள், சிகப்புமேனி, உயரம் அதிகம் இல்லை, சேலையையே அணிந்துகொள்வாள். யார் திட்டினாலும், வாக்குவாதம் செய்யமாட்டாள், அநீதிகளைப் பொறுத்துக்கொள்வதே அவளின் குணம். அதிகமாக படிக்கவில்லை, படித்ததையும் காட்டிக்கொள்ளமாட்டாள். அப்பாவித்தனமாக இருந்துகொள்வாள். குடும்பத்திற்கும், முக்கியமாக கணவனுக்கோ, தகப்பனுக்கோ சாதகமாக நடந்துகொள்வாள். யார் இவள்? சின்னத்திரை, வெள்ளித்திரை கதாநாயகிகள் யாவும் இவளே.
வில்லியாக வரும் பெண், தன்னைத் தனக்குப்பிடித்த முறையில் அலங்கரித்துக்கொண்டும், நினைத்ததைப் பேசிக்கொண்டும், தன் உணர்வுகளை வெளிப்படுத்த தயங்காத முறையில் காட்டப்படுவாள். தன்நிலை அறிந்தும், தன்மானம் கொண்டவளாகவும், துணிந்தே இருப்பாள். தன் மானத்துக்கு கேடு வந்தால், அதற்கு விவாதம் இல்லாமல் அடங்கமாட்டாள். இந்த நவீனயுகப் பெண்ணின் ஆழுமைகளை வெள்ளித்திரையிலும், முக்கியமாக இந்தியச் சின்னத்திரையிலும் வில்லியின் அம்சங்கள் ஆகக் கெட்ட ஆளுமைக்கூறுகள் ஆக்கப்படுகின்றன.
வில்லனின் கெட்ட அம்சங்கள், வில்லிக்கு கொடுக்கப்படுமாயின், அவை சமுதாயத்தின் கண்களில் கூடிய விரோதமான அம்சங்களாகத் தெரிகின்றன. பெண் தன்னை அழகுபடுத்தினால் தவறென்ன?
பெண் தன்னை விரும்பி அலங்கரிக்கும்போது „இவா ஆள் கனக்கா மேக்கப், சரியான ஸ்டைல்“ என்று அவளின் உள்ள அம்சங்களை அலங்காரத்துக்கு மட்டும் சமுதாயம் குறைத்து, தப்பான கணிப்பை அவளுக்கு சூட்டிவிடுகின்றன. தன் உடலும், உருவும் அழகும், அறிவும் அறிந்து அணியும் பெண்ணின் மேல் தவறான அபிப்பிராயத்தை உள்ளுணர்விடையே கொள்ள, வெள்ளித்திரையும் சின்னத்திரையும் எமக்குப் பழக்கிவிட்டன. அதைவிட, வில்லிகளின் தமிழ் உச்சரிப்பு, நடை, உடை, பாவனை ஆகியவையால் வெளிநாட்டு வாழ்க்கை முறைகளை பின்பற்றுவதாகக் காட்டி, புலம்பெயர்தமிழ் இலைஞர்கள் எமக்குள்ளே, புதியதொரு அடையாளச்சிக்கலை ஏற்படுத்துகின்றனர். இத்துடன், ஊடகங்கள் வர்ணிப்பதுபோலவே நாம் இருப்போம் என்று தாய்நாடுகளில் இருக்கும் மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.
திரையில் பெண்கள் ஒருவரை ஒருவர் ஆதரவு செய்வது மிகக்குறைவு. அப்படிச் செய்தாலும், அதில் வில்லிகளுக்கு இடையே மட்டுமே நட்பாய்த்தெரியும் உறவுமுறைகள் இருக்கும். அங்கே அவமதிப்பான கருத்துகள் பாயும். இதனால் திரையில் ஒரு தங்கையையோ, அண்ணியையோ அல்லது மாமியாரையோ கண்டால், இவர் அநீதி ஏதோ செய்யத்தான் இருக்கிறார் என்று எம்மை எண்ணவே, சின்னத்திரை தூண்டுகிறது. இங்கே பெண்களின் அவதானத்தை தன் உயர்வில் செலுத்தாமல்,
மற்றவரை வீழ்த்துவதில் செலுத்துகிறார்கள்.
பெண்னாவள் எங்கே யாரை உயர்த்தி உயரலாம்
என்றில்லாமல், எங்கே தனக்கு ஆபத்து வந்திடுமோ
என்று பயந்து அலைகிறாள். முட்டாள்த்தனமாக
பெண்கள் இக்கட்டான நிலையில் இருந்தால், கதாநாயகன்
அவளை கடைசி நொடியில் காப்பாற்றிடுவான்.
என்று ஒரு பெண், சினிமாவில், துணிந்து
ஒரு செயலைச்செய்தாலும், அது ஆபத்திலேயே
முடிகிறது.
பெண்களின் விவேகத்தைப்பற்றி ஆண் இயக்குனர்கள்
என்ன சொல்கிறார்கள்?
உதாரணமாக „படையப்பா“ எனும் திரைப்படத்தை எடுத்துக்கொள்வோம். மேற்கூறிய விடையங்கள் ஒவ்வொன்றும் இத்திரைக்கதைக்குப் பொருந்த, மேலும்: ‘பொம்பிளைனா பொறுமை வேணும் அவசரப்படக்கூடாது, அடக்கம் வேணும் ஆத்திரப்படக்கூடாது, அமைதி வேணும், அதிகாரம் பண்ணக்கூடாது, கட்டுப்பாடு வேணும், இப்படி கத்தக்கூடாது, பயபக்தியா இருக்கனும், இப்படி பஜாரித்தனம் பண்ணக்கூடாது மொத்தமா பொம்பிளைனா பொம்பிளையா இருக்கணூம்” என்று பெண்ணுக்கான இலக்ணத்தை 10 நொடிக்குள் எழுதி விடுகிறான் படையப்பன். அடக்கம், அமைதி, பயபக்தி ஆகியவை என்றும் பெண்ணுக்கே சேருமா? இல்லை ஆறறிவு கொண்ட உயிரினம் அனைத்திற்கும் சேரவேண்டியதா?
படையப்பா 99ம் ஆண்டில் ஓடிய திரைப்படம், ஆனால் இன்றும் ஆதித்யா TV தொடங்கி ZTV வரை இப்படியான திரைக்கதைகள் ஓடுகின்றன.
சினிமாவிலும் சின்னத்திரையிலும் ஆண்களால் பெண்கள் வடிவமைத்து, திரையில் நியமிக்கப்படுகின்றன. ஆண்களால், ஆண்களுக்காக எழுதப்பட்ட பெண்கற்பனைகள் கனவுக்கன்னிகளாக சமுதாயத்தின் மனங்களிலே பதிக்கப்படுகின்றன.
ஊடகவியல் தத்துவத்தில் நான் முதலில் கற்ற விதி: ஊடகங்கள் ஒரு தேசத்தினதும், காலகட்டத்தினதும், சமுதாயத்தினதும் அம்சங்களை எதிரொலிக்கும், அதே நேரத்தில் ஊடங்கள் காட்டுபவை சமுதாயத்திலும் எதிரொலிக்கும்.
ஆகவே திரையில் வருவது, தரையில் வரும். திரையில் கதாநாயகன் ஒரு பெண்ணை அவள் சம்மதம் இன்றி துரத்தித்துரத்தி வீடியோ எடுத்து „One-side love” எனும் பெயரில் பலாத்காரம் செய்ய, நிஜவாழ்வில் எல்லைகள் அறியாத ஒருவன் குளிக்கும் பெண்ணை வீடியோ எடுக்க நேரம் ஆகாது. சமுதாயம் சிந்திக்கும் முறைகளுக்கும், செயற்படும் முறைகளுக்கும் சினிமாஃஊடகங்கள் முக்கிய வழிகாட்டியாக அமைகின்றன. இதனால் ஊடகங்களுக்கு இன்றைய காலகட்டத்தில் அதிமுக்கிய சமுதாயப்பொறுப்பு உள்ளது.
படையப்பா பெண்ணின் இலக்கணத்தை நீலாம்பரியின் முகத்தில் விளாசும்போது, அவள் முகம் சுழிக்காமல் நிற்கிறாள், ஆனால் படையப்பா வின் இலக்கணத்தில் அடங்கும் வசுந்திரா, படையப்பாவின் முதுகின் பின்னே மறைகிறாள். ‘பெண்ணின் இலக்கணத்தைக்கூற நீ யார்?” என்று வசுந்திரா எண்ணவில்லை. எண்ணக்கூடாதோ?
படையப்பாவை நிற்கவைத்துப்பேசும் நீலாம்பரி ஒரு ஆணின் கையில் தனது வாழ்க்கை இருக்கக்கூடாது என்று தற்கொலை செய்கிறாள். பெண்ணுரிமைக்கு தீவிரமான எடுத்துக்காட்டை வைத்துச்செல்கிறாள் நீலாம்பரி. நீலாம்பரியின் சாவு, பெண்ணுக்கு ஆண் அடங்கினால் தான் வெற்றி என்பதை மறுத்துக்காட்டி நிற்கிறது.
‘அதிகமா ஆசைப்படுற ஆம்பிளையும் அதிகமா கோவப்பட்ற பொம்பிளையும் நல்லா வாழ்ந்ததாக சரித்திரமே கிடையாது” என்று 90ம் ஆண்டுகளில் திரையில் வந்த இந்தப் பஞ்ச் டையலாக்கை (Punch dialogue) புலம்பெயர்நாட்டில் தரையில் சென்ற வருடம் நடந்த தமிழ்பேச்சுபோட்டியில் ஒரு மாணவன் பேச நான் கண்டு தலைகவிழ்ந்தேன்.
— ராம் பரமானந்தன்
2,097 total views, 3 views today