மூத்தோர் சொல்லும், முதிர் நெல்லிக்கனியும்
மனித நாகரிகம் எங்கு செல்கிறோம் என்ற நோக்கங்கள் இன்றி பல விடயங்களில் கால் போன போக்குக்கு பயணித்துக் கொண்டிருப்பதையே இன்றைய சமுதாயத்தில் காணக்கூடியதாக உள்ளது. இதனால் சலிப்போடும், மன உழைச்சலோடும் வாழ்வை கடமைக்காக வாழ்கின்ற இளையோர்களின் பரிதாப நிலையை எங்கும் அவதானிக்க முடிகிறது.
கலை, கலாச்சாரம், காதல், வீரம் என்று வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் திகட்டத் திகட்ட எம் முன்னோர்களால் எப்படி தித்திப்போடு வாழ முடிந்தது? ஒரு நாளின் இருபத்து நான்கு மணித்தியாலங்கள் எப்படி இன்றைய சமுதாயத்திற்கு மட்டும் போதாமல் இருக்கின்றது? முன்னோர் தம்மையும் பார்த்து தம் சந்ததிகளுக்கும் சேர்த்து வைத்த சொத்தில் ஒரு சிறு பகுதியைக் கூட ஏன் இன்றைய சமுதாயத்தினரால் உருவாக்க சிரமமாக உள்ளது? இவை எல்லாவற்றிற்கும் உரிய ஒரே காரணம் வாழ்வின் அத்தியாவசியங்களின் புரிதல்களில் ஏற்பட்ட மாற்றங்களேயாகும். முன்னோர்கள் தமக்கான அத்தியாவசியங்களை புரிந்து கொள்வதிலும், அவற்றிற்கு எதிரான விடயங்களிலிருந்து தப்பிப் பிழைப்பதையும் ஒவ்வொருவரும் நன்கு அறிந்து வைத்திருந்தமை மட்டுமன்றி வாழும் கலையையே பிரதான கல்வியாகவும் கொண்டிருந்தனர். அவற்றை தம் மரபுவழி சந்ததிகளுக்கு கற்றுக் கொடுப்பதையும் தலையாய கடமையாகவும் கொண்டிருந்தனர்.
இன்றும் பொதுவாக நன்கு வயதில் மூத்த ஒருவராவது கிராமத்து வீடுகளில் முதன்மை மரியாதைகளோடு நடத்தப்படுவார். அவருடைய சொல்லுக்கு மொத்தக் குடும்பமும் கட்டுப்படும். பாடசாலைக் கல்வி தவிர இவரிடமிருந்து இவரது சந்ததிகள் கற்றுக் கொள்கின்ற விடயங்களே மிக அதிகமாகவும், முழு நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் இருக்கும். மிகப்பெரிய விசக்காச்சல் பீடித்தாலும் கூட வீட்டிலே கிடைக்கும் கசாயத்தோடு அதிலிருந்து விடுதலை கிடைத்துவிடும். சாதாரண சளிக்காச்சலுக்கே இன்று மருத்துவரிடம் சென்று மணிக்கணக்கில் காத்திருக்கின்றோம். அதிக மன உளைச்சல் காரணமாக பெரியவர்களோடு நேரம் செலவழிக்க முடியாமலும், அவர்கள் ஏதாவது பேசிவிட்டால் கடும் வாக்குவாதங்களும் புரிவது மட்டுமன்றி அவர்களை பாரம் என்று ஒதுக்குகின்ற அளவுக்கு குறுகி விட்டது வாழ்வியல். களஞ்சியங்கள், தானியக்கிடங்கு, பண்டமாற்று, பலகாரம், கொண்டாட்டம் என இருந்த சமுதாயம் இன்று திண்டாட்டமான வாழ்வோடு திக்குமுக்காடுகிறது. குறுகிய காலத்திற்குள் ஏற்பட்ட மனித மேம்பாட்டு வீழ்ச்சியை தடுக்காமல் போனதற்கு காரணங்கள் சிலவற்றைத்தான் முன்வைக்க முடியும்.
முக்கியமானது கற்றலில் உள்ள நவீனத்துவத்தால் மூத்தோருக்கும் இளையோருக்கும் இடையிலான இடைவெளி. பெரும்படிப்பு என்ற பெயரில் மூத்தோர்களின் புரிதல்களுக்கு அப்பால் இவை இருப்பதனால் இளையோருடனான அறிவியல், அனுபவ உரையாடல்கள், நெருக்கங்கள் வெகுவாகக் குறைந்து போனது. முன்னைய காலத்தில் எந்தவொரு கல்வியை இளையோர் கற்பினும் அதை ஓரளவிற்கேனும் இதுதான் கற்கின்றனர் என்ற புரிதலாவது மூத்தவர்களிடம் இருந்தது. இன்றைய நிலையில் தாய், தந்தையர் கூட தம் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று புரிந்து கொள்வதற்கே மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனால் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்களும் மிக அத்தியாவசிய தேவை கருதியே சுருக்கமாக இடம்பெறுகிறது. முதியவர்கள் வீட்டின் எங்கோ ஒரு மூலையில் தம் வாழ்நாளில் கழித்த காலங்களை தமக்குள் அசைபோட்டபடி வாழ நேர்கிறது.
வாழ்க்கை என்றால் என்ன? என்பதற்கு சுருக்கமாக விடை கூறவேண்டுமாயின் வாழ்க்கை என்பது “உயிர் வாழ்தல்” ஆங்கிலத்தில் “life is a fight for survival” என்று கூறுவார்கள். எந்த உயிரியும் தான் தப்பிப் பிழைப்பதையே அன்றாட செயலாகக் கொண்டுள்ளது. அதற்கு எதிரான விடயங்களோடு போராடி தனக்கானதைப் பெற்றுக் கொள்கிறது, எதிர் அழுத்தம் அதிகமாகும் போது அது புரட்சியாக மாறுகிறது. புரட்சி புதுமையை புகுத்தலாம் ஆனால் வாழ்வில் உள்ள பசுமையை அழித்துவிடக் கூடாது. இன்றைய நிலையில் வாழ்விலும், மனதிலும் வறட்சியால் வாடுபவர்களே அதிகம் எனலாம்.
வாழ்வில் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர்கள் தாம் அனுபவித்து தெளிந்ததையே மரபுவழியாக பழமொழிகள், பொன்மொழிகள் என்று தந்து விட்டுச் சென்றனர். இனிவருகின்ற சமுதாயம் அதை ஏறெடுத்துப் பார்க்குமா என்பதே பெரிய கேள்விக்குறியாக உள்ளது. ஒரு பாதையின் கடினத்தன்மையை, நெளிவு சுழிவுகளை நாமே பயணித்து படிப்படியாக அனுபவம் பெறுவதைக் காட்டிலும் அதில் பயணம் செய்தவர்கள் கூறிய அறிவுரைகளின் படி பயணிப்பது வெகுவாக சிரமங்களைக் குறைக்கும். மூத்தோர்கள் எப்போதும் நம்பிக்கை மிகுந்த அரிய புத்தகங்கள் நிறைந்த நூலகம் போன்றவர்கள். அவர்களது அறிவுரை அனுபவம் சார்ந்தது.
பழமொழிகளில் உதாரணமாக:-
அந்தி ஈசல் பூத்தால் அடை மழைக்கு அச்சாராம்.
தும்பி பறந்தால் தூரத்தில் மழை.
எறும்பு ஏறில் பெரும் புயல்.
மார்கழி மழை மண்ணுக்கு உதவாது.
தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு.
வெள்ளமே ஆனாலும் பள்ளத்தே பயிர்செய்.
காணி தேடினும் கரிசல்மண் தேடு.
களர் கெட பிரண்டையைப் புதை .
கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி கெட்டகுடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு.
நன்னிலம் கொழுஞ்சி நடுநிலம் கரந்தை கடைநிலம் எருக்கு.
களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை.
கோரையை கொல்ல கொள்ளுப்பயிர் விதை
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
கடன் இல்லாக் கஞ்சி ஒரு வயிறு போதும்.
தன் வீட்டு விளக்கென்று முத்தமிடலாமா?
இப்படியான அனுபவ அறிவுகள் மரபுவழி வந்தவை. இவற்றை எல்லாவற்றையும் தாமே உணர்ந்து அறிவதற்கு ஒருவரது ஆயுட்காலம் போதாது. வீடுகளில் வயதானவர்கள் மேற்பார்வையில் வளரும் குழந்தைகள் பொறுமை, பக்குவம், தெளிவு என மிகவும் அனுபவசாலியாக பின்னாளில் பிரகாசிப்பார்கள் என்பதே உண்மை “உனக்கு ஒன்றும் தெரியாது” என்ற ஒற்றை வரியில் பெரியவர்களை மௌனமாக்கிவிடும் இளையவர்கள் மிகப்பெரும் இலவசமான கற்றலை இழக்கின்றனர் என்றே கூற வேண்டும்.
சில பெரியவர்கள் இளையோர்களின் உணர்திறன், விருப்பு வெறுப்புகளை ஆராயாமல் தமது விருப்பங்களை வில்லங்கமாகத் திணித்து இளையோர்களின் அதிருப்திக்கு ஆளாகுவார்கள். இதில் பெரியவர்கள் கவனம் செலுத்த வேண்டும். காலத்தால் மாறுபடாத நல்ல விடயங்களிற்கு முதன்மை கொடுத்து பழக்கப்படுத்துதல் வேண்டும்.
மூத்தோர்கள் சொல்லும் முதிர்ந்த நெல்லிக் கனியும் முன்பு கசக்குமாம், பின்னர் மிகவும் இனிக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்?
— கரிணி
5,097 total views, 3 views today