மோனாலிசா – உலகத்தியே திரும்பிப் பார்க்கவைக்கும் அழகி!
காதல் இருக்கும் இடத்தில் தான் கலைகள் செழிக்கும், காதலிக்காமல் கவி பாடவும், தூரிகை எடுத்து தீட்டவும் முடியுமோ? காதலித்துப்பாருங்கள் அன்றாடம் நாம் பேசும் பேச்சு கூட அழகாகும், ஒரு கவிஞனோ எழுத்தாளனோ அவன் வாழ்க்கையை க.மு க.பி என்று பிரிக்கலாம், காதலிப்பதற்கு முன் காதலிப்பதற்கு பின்…!
உலகத்தின் காதல் நகரம், ஆனால் காதலியில்லாமல் பாரிஸ் நகரில் சுற்றுவது ஒரு துரதிஷ்டவசமான ஒன்று தான்.
பாரிஸ் நகருக்கு வந்தால் ஈபிள் கோபுரத்தை பார்ப்பது எவ்வளவு முக்கியமோ அதே போன்று முக்கியமானது அந்த உலக அழகியை பார்ப்பது !
கைகளில் ஓடும் ரேகைகையை விட அந்த இரண்டு நாட்கள் பாரிஸ் ரேகை தான் முக்கியமாக தெரிந்தது, தேடித் தேடி பார்ப்பதிலும் ஒரு அலாதியான இன்பம் இருக்கதான் செய்கிறது.
பாரிஸில் லூவ்ர் அருங்காட்சியகம் நோக்கி, ஆம் நான் முன்னம் சொன்ன அழகி அங்குதான் குடியிருக்கிறாள். இவளது சிரிப்பின் ரகசியத்தை உலகமே அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறது, மந்திர புன்னகை புரியும் மாது டாவின்சியின் கைவண்ணம் “மோனா லிசா”.
இவளை பார்க்காதவர் கூட அழகிற்கும் ஓவியத்திற்கும் எடுத்துக்காட்டாய் இவளை கூறுவது வழக்கம் !
லூவ்ர் அருங்காட்சியகம் – உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்று, ஓடி ஓடி பார்த்தாலும் ஒரு வாரம் போதாது, கூட்டமும் அதிகம் அதனால் பாரிஸ் வரும் முன்பே முன்பதிவு இணையத்தில் செய்துவிட்டு நுழைவுசீட்டு பெற்றாகிவிட்டது, இதனால் சுமார் இரண்டு மணிநேரம் வரிசையில் நிற்பதை தவிர்க்கலாம் !
பெரிய நுழைவாயிலில் எட்டி வைத்து நடந்து உள்சென்றால் திறந்த வழியில் கண்ணாடி பிரமிடும், பதினாறாம் லூயி மன்னரின் சிலையும் தூரத்தில் சிறிதாக ஈபிள் கோபுரமும் கண்ணில் படுகின்றன. அந்த பிரமிடின் கீழே தான் அருங்காட்சியகத்தின் நுழைவு வாயில், கீழ்தளமும் மேல்தளமுமாக பிரமாண்டமாய் விரிந்து நிற்கிறது லூவ்ர்.
ஐரோப்பிய மறுமலர்ச்சி காலத்தில் முக்கியமானவராக கருதப்பெறும் டாவின்சி,அவரது கைவண்ணமே இந்த மோனா லிசா, கியோர்கியோ வசாரி என்பார் எழுதிய குறிப்பிலிருந்து பிரான்சிஸ்கோ டெல் கியோகாண்டோவின் மனைவியை ஓவியமாக டாவின்சி வரைந்தார் என்று கருதப்பெறுகிறது, மோனா என்பது மடோனா அல்லது மேடம் என்ற சொல்லுக்கு இணையாக கருதப்பெறுகிறது.
இந்த ஓவியம் பிரெஞ்சு தேசத்தில் இருந்தது, ஒரு காலத்து அந்த அருங்காட்சிய காவலராலேயே திருடப்பட்டு இத்தாலிக்கு கொன்று செல்லப்பட்டது. இந்த ஓவியம் ஆறு பிரதிகள் எடுத்து விற்கப்பட்ட செய்தியும் உண்டு, முடிவில் 1931 இல் மறுபடியும் இந்த ஓவியம் பாரிஸின் லூவ்ர் அருங்காட்சியகத்திற்கு மறுபடியும் கொண்டுவரப்பட்டடது.
இன்று கண்ணாடிக்கூண்டில் மிகவும் பாதுகாக்கப்பட்ட இடத்தில் மந்திரப்புன்னகையால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஆறு மில்லியன் மக்களை தம்பால் இழுக்கிறாள் இந்த மோனா லிசா. 2005ம் ஆண்டு வரை, ஒளி உமிழும் விளக்கு மூலம் காட்சிப்படுத்தப்பட்ட சித்திரம், அதற்கு பின்னர் வந்த காலங்களில், அதிக திறன் கொண்ட ஒளி உமிழும் விளக்கு மூலம் காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் அகச்சிவப்பு மற்றும் புற ஊதாக் கதிர்கள் தாக்கப்படா வண்ணம் வடிவமைத்தருந்தனர்
அருங்காட்சியத்தில் உள்நுழைந்தவுடன் முதலில் தேடியது இந்த மோனாலிசாவின் இடத்தை தான், ஏன் அங்கு வந்த பாதிக்கூட்டம் அந்த ஓவியத்தை நோக்கித்தான் படையெடுத்தது, ஆங்காங்கே வழிகாட்டி மோனலிசா இருக்குமிடத்திற்கு நம்மை அழைத்து செல்கின்றன, மைக்கலாஞ்சிலோ சிற்பங்கள் தாண்டி, கிரேக்க சிலைகள் தாண்டி மாடியேறி சென்றால் விரிந்து பரந்த க்ராண்ட் காலரியில் மக்கள் ஆர்ப்பரித்து பார்த்து நிற்கும் மோனா லிசா.
கூட்டம் அலைமோதுகிறது ஒவ்வொருவரும் அருகே சென்று அவளை தம்முடைய கைப்பேசிகளில் படமெடுத்து கொண்டு செல்ல முந்துகின்றனர், சிலர் செல்பிக்கள் எடுத்துக்கொள்கின்றனர், பலத்த பாதுகாப்பு, எப்போதுமே இரண்டு காவலர்கள் கையில் துப்பாக்கியுடன் நிற்க, ஒளிக்கதிர்கள் கூட பாதிக்காத கண்ணாடிக்கூண்டில் மந்திரப்புன்னகை அழகி மெல்ல சிரித்துக்கொண்டிருக்கிறாள் !
படத்திற்கும் நேரில் பார்ப்பதற்கும் சிறிது வித்தியாசம் இருக்கதான் செய்கிறது லூவரில், ஆனால் அதே பிரம்மாண்டம் சற்றும் குறையாமல், நாவலின் வரிகளும் திரைப்படத்தின் காட்சிகளும் கண்முன்னே வந்து செல்கின்றன, வரிசையில் நின்று கடைசியில் அந்த அழகுத் திருமுகத்தை நானும் கண்டுவிட்டேன். காதல் நகரம் பாரிஸ் செல்பவர்கள் கட்டாயம் இவளையும் பார்த்து வாருங்களேன் !
2,933 total views, 3 views today