கடவுச்சொல் – குறும்கதை
சுரேந்தருக்கு 15 வயதாகிவிட்டது. கடந்த மாதம் தான் அவன் தனது பதினைந்தாவது பிறந்தநாளைக் கொண்டாடினான். நீண்ட நாட்களாகத் தனக்கொரு ஐ – போன் வாங்கவேண்டுமென்று விருப்பம் கொண்டிருந்தான். அவனது தாயார் அதற்கெனவே சிறுகச் சிறுகப் பணம் சேமித்திருந்தார். அவனது பிறந்தநாள் அன்று, சுரேந்தர் ஆச்சரியப்படும் விதத்தில் அவனது பரிசுப்பொருள், ஐ – போன் கிடைத்தது. அது முதல் கொண்டு, உறங்கும் நேரம் தவிர்ந்த ஏனைய பொழுதுகளில் எல்லாம் அவனது கைகளில் ஐ-போன் தவழ்ந்து விளையாடியது.
நேற்று, சனிக்கிழமை அவனது பள்ளி நண்பன் சுதேஷின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அவனது வீட்டிற்குச் சென்றிருந்தான். சுதேஷ் பிஜி தேசத்தைச் சேர்ந்தவன். அவனின் வீட்டிற்கு, முன்பும் பல தடவைகள் சென்றிருக்கின்றான். பிறந்தநாள் கொண்டாட்டம் தடல்புடலாக நடந்து கொண்டிருந்தது. ஆண்களும் பெண்களுமாக அவனது வயதையொத்த நண்பர்கள் கூச்சலும் கும்மாளமுமிட்டவாறே இருந்தார்கள். கேக் வெட்டியாயிற்று.
அதன்பின்னர் டிஸ்க்கோ நடனம் ஆடுவதற்காக கராஜ் சென்றார்கள். வெளியே இருட்டு மெல்ல ஆக்கிரமித்திருந்தது. சுதேஷ் கராஜ் கதவை றிமோற் கொன்ரோலரினால் திறந்து வைத்தான். கீச்சாமாச்சா என்று சத்தமிட்டவாறே நண்பர்கள் உள்ளே சென்றார்கள். அங்கே டிஸ்க்கோ ஆட்டத்திற்கான மின்விளக்குகள் ஏற்கனவே அலங்கரிக்கப்பட்டிருந்தன. பல வர்ணங்கள் கொண்ட – அதற்கென வடிவமைக்கப்பட்ட, வட்ட வடிவமான பெரிய மின்குமிழ்கள் கூரையின் மேலே தொங்கிக் கொண்டிருந்தன. பட்டை தீட்டப்பட்ட இரத்தினக்கற்கள் போல ஒளிர்வதற்காக அவை காத்திருந்தன. அவற்றை ஒளிரவிடுவதற்காக ஏற்கனவே ஒளிர்ந்துகொண்டிருந்த மின்விளக்கை அணைத்தான் சுதேஷ். ‘டிஸ்க்கோ லைற்’றின் ஆளியை அழுத்துவதற்குள் இடைப்பட்ட நொடி நேரத்தில், ஏழெட்டு அந்நிய இளைஞர்கள் சரசரவென உள்ளே நுழைந்தார்கள். இருளோடு இருளாகக் கலந்தார்கள். அவர்களின் நிறமும் இருளை ஒத்திருந்தது. சூடான் எதியோப்பியா சோமாலியா இவற்றுள் ஏதாவதொரு நாட்டைச் சேர்ந்தவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். டிஸ்க்கோ வெளிச்சத்தில் சிவப்பு பச்சை நீலம் மஞ்சள் என்று கடும்கலரில் அவர்களின் ஆடைகள் இருந்தன.
கராஜ்ஜின் உள்ளேயிருந்தவர்கள் திகைப்பில் இருந்து விடுபட முன்னர், வந்தவர்கள் அன்பாக அவர்களின் முதுகை அணைத்துத் வருடியபடி அவர்களின் ஜீன்ஸ் பொக்கற்றுக்குள் கையை நுழைத்துத் தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள். சலசலப்பு ஆரம்பிக்கத் தொடங்குகையில் சிலரின் ஐ – போன்கள் மாயமாய் மறைந்தன. சுதேஷ் சத்தமிட்டவாறு வீட்டிற்குள் ஓடினான். பொலிஷிற்கு போன் செய்வதற்குள் அவர்கள் நழுவி விட்டார்கள். நிராயுதபாணியாக வந்தவர்கள், போகும்போது ரொக்கத்துக்கு அதிபதியாகப் போய்விட்டார்கள்.
சுரேந்தருக்கு எங்கிருந்தோ துணிவு பிறந்தது. நாலாபக்கமும் சிதறி ஓடியவர்களின் பின்னால் துரத்தியபடி ஓடிச் சென்றான். சுரேந்தருக்கு தனது பொக்கற்றுக்குள் கையை நுழைத்தவனை நன்றாக ஞாபகம் இருந்தது. அவனின் திசை நோக்கி மன்றாடிக் கெஞ்சியபடி ஓடினான்.
“அண்ணா! எத்தனையோ வருஷமாகச் காசைச் சேர்த்து வாங்கின போன். தயவு செய்து தா அண்ணா!” ஆங்கிலத்தில் அழுதழுது துரத்தினான் சுரேந்தர். கல்லையும் கரைக்கும் அவனது குரல் கேட்டு ஓடியவன் நின்றான். ஆடவில்லை, அசையவில்லை. சுரேந்தர் கிட்ட வரும் வரைக்கும் பொறுமையாக நின்றான் அவன். கிட்ட வந்ததும் கன்னத்தைப் பொத்தி ஒரு அறை போட்டான். சுரேந்தர் நிலை குலைந்து கீழே விழுந்தான். அவனைத் தூக்கி நிறுத்தியவன்,
“பாஸ்வேர்ட்டைச் சொல்லு” என்றான்.
கடவுச்சொல் என்பது கடவுள் மாதிரி. அதை எப்படிச் சொல்ல முடியும்? அங்குமிங்கும் பார்த்தான் சுரேந்தர். “முடிஞ்சால் தேடிப்பிடி” சொல்லிவிட்டு, அவனை ஒரு தள்ளுத் தள்ளிவிட்டு சுதேஷின் வீடு நோக்கி திரும்பி ஓடினான்.
ஹஇந்நேரம் சுதேஷ் பொலிஸை வரவழைத்திருப்பான்’.
இருளிற்குள் ஒரு மரத்தின்கீழே முனகல் சத்தமொன்று கேட்டது. குனிந்து பார்த்தான். சுதேஷ் தலையைப் பிடித்தபடி இருந்தான். அவனது காதிற்குள்ளால் இரத்தம் வடிந்தபடி இருந்தது.
“ஓடி வாருங்கோ…. எல்லாரும் ஓடி வாருங்கோ” சத்தமிட்டான் சுரேந்தர்.
“என்ன நடந்தது?” சுரேந்தர் அவனைக் கேட்டான்.
“ஐ – போனின்ரை பாஸ்வேர்ட் கேட்டான். சொல்லேல்லை. அதுதான் அடிச்சுப்போட்டு ஓடிவிட்டான்” என்றான் சுதேஷ். சுரேந்தர் தன் காதுகளைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான்.
— சுருதி- அவுஸ்ரேலியா
3,427 total views, 2 views today