குற்றம் காண்பதையே தினம் தொழிலாய்க் கொண்டவர்க்கு

பாட்டெழுதிப் பெயர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள்.
குற்றம் கண்டுபிடித்தே பெயர்வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்

எனும் திருவிளையாடல் வசனம் மிகப்பிரபலம். கொஞ்சம் நம் வாழ்க்கையை கலைத்துப் போட்டு அடுக்கிப் பார்த்தால் அப்படிப்பட்ட பல நபர்கள் நம்மைச் சுற்றியும், நம்மோடும், நாமாகவும் பயணித்துக் கொண்டிருப்பதை உணர முடியும்.

சிலர் ரொம்பவே நேர்மறை எண்ணம் (பாசிடிவ் எனர்ஜி) உடையவர்களாக இருப்பார்கள். ‘வாவ்.. சூரியன் எவ்வளவு அழகாக இருக்கிறது” என வெயில் காலத்தின் வியர்வை வீதியில் கூட அவர்கள் சிலாகிப்பார்கள். செடி கொடியெல்லாம் எவ்வளவு ரம்மியமாக இருக்கிறது என இலையுதிர்க்காலத்தில் கூட அவர்கள் குதூகலிப்பர்கள். சிலர் அதற்கு நேர் எதிர்.

‘அண்ணே.. அருமையான ஒரு வீடு வாங்கியிருக்கீங்க.. சூப்பர்’ என பாராட்டினால், “என்னத்த வீடு.. நமக்கெல்லாம் இது தான் முடியும். ராமசாமி வீடைப் பாத்தீங்களா ? ஏழு கோடியாம்” என புலம்புவார்கள். சின்னதாய் ஒரு பறவை வந்து செல்லக் குரலில் விளையாட அழைத்தால், “சூ..சூ.. எப்பப்பாரு கீச்சு கீச்சுன்னு மனுஷனை சல்லியப்படுத்திட்டு” என சலித்துக் கொள்வார்கள்.

சிலருக்கு குறை சொல்தல் ஒரு போதை. அழகான ஒரு வானவில்லைக் காட்டினால் கூட “ஆமா.. இருக்கப் போறது கொஞ்ச நேரம், அதுல மினுக்கப் பாரு” என்பார்கள். நதி அழகாய் இருக்கிறது இல்லையா ? என்றால் “ஆமா உள்ள போனா தான் தெரியும் அழுக்கு எவ்வளவு இருக்குன்னு” என முணுமுணூப்பார்கள். எல்லாவற்றையும் எதிர் பார்வையில் மட்டுமே பார்ப்பார்கள்.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பது போல, இத்தகைய மனிதர்களைக் கண்டால் ஓடி ஒளிய வேண்டும். இவர்களெல்லாம் அட்டைப் பூச்சிகள் போல. நமது கழுத்தில் கடித்து நமக்குள் ஓடிக்கொண்டிருக்கும் அத்தனை நேர்மறை எண்ணங்களையும் (பாசிடிவ் எனர்ஜியையும்) உறிஞ்சி எடுத்து விடுவார்கள். அவர்களோடான உரையாடலுக்குப் பின் நாமும் சோம்பல் முறித்தபடியே, “என்ன எழவு வாழ்க்கைடா இது” என சலித்துக் கொண்டாலும் ஆச்சரியமில்லை.

அரை டம்பர் தண்ணீரைக் கொண்டு வைத்தால், “அட.. பாதி டம்ளரில் நீர் இருக்கிறது” என்பவர்கள் ஒரு ஜாதி. “என்னய்யா பாதி காலியா இருக்கு” என்பவர்கள் இன்னொரு ஜாதி என்பார்கள். ஒரே விஷயத்தை இரண்டு பேர் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை வைத்து அவர்களுடைய இயல்பைப் புரிந்து கொள்ள முடியும்.

தென்றலைப் போல வருடி இலைகளை வாழவைக்கும் காற்றை வரவேற்கவேண்டும். புயலைப் போல அலைக்கழித்து இலைகளை வாடவைக்கும் காற்றை நாம் நிராகரிக்க வேண்டும்.

குறை சொல்லும் இயல்பு இருப்பவர்கள் தன்னம்பிக்கை இல்லாதவர்களாகவே இருப்பார்கள். தங்கள் துறையில் தெளிவாக வலுவாக இருப்பவர்கள் பெரும்பாலும் குறை சொல்வதில்லை. அதே போல தன்மீதும், தனது செயல்களின் மீதும் நம்பிக்கை உடையவர்கள் பிறருடைய பேச்சுகளைக் கண்டு கொள்வதும் இல்லை. தன்மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தான் மகுடிக்கு முன்னால் நின்று தலையாட்டும் பாம்புகளைப் போல மாறிவிடுகிறார்கள்.

“விஷயம் தெரியுமா உனக்கு, ..” என ஆரம்பித்து யாருடைய பெயரையோ சபைபில் இழுத்து குறை சொல்லிக் கறைபடுத்துபவர்கள் உண்மையில் பரிதாபத்துக்குரியவர்கள். அவர்கள் வாழ்க்கையை நேசிக்கத் தெரியாதவர்கள். உறவுகளை அங்கீகரிக்கத் தெரியாதவர்கள்.

கடவுள் உங்கள் கையில் வாழ்க்கை எனும் தூரிகையைக் கொடுக்கிறார். அதைக் கொண்டு உங்கள் எண்ணங்களாகிய வண்ணங்களால் நீங்கள் அழகிய ஓவியங்களை வரையலாம். அல்லது பிறர் வரைகின்ற அழகிய ஓவியங்களைக் கிறுக்கி அழுக்காக்கவும் செய்யலாம். வண்ணம் தீட்டும் தூரிகைகள் வாழ்த்துப் பெறும். அழித்தொழிக்கும் ஓவியங்கள் வெறுக்கப்படும்.

குறை சொல்லும் பழக்கம் களைகளைப் போல களையப்பட வேண்டிய ஒன்று. அது பிறரைக் காயப்படுத்துவதாக நினைத்து நம்மையே நாம் அவமானப்படுத்தும் செயல் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

குறை சொல்பவர்கள் பெரும்பாலும் தங்களுடைய இயலாமைகளை மறைப்பதற்காகவும், தங்களால் செய்ய முடியவில்லையே எனும் ஆதங்கத்தை ஒளிப்பதற்காகவுமே குறை சொல்கின்றனர். செயல்களுக்கான முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலை உடையவர்கள் குறைசொல்வதை விட்டு விட்டு, தங்களை சீர்படுத்திக் கொள்ள முயல்வார்கள்.

ஊரெல்லாம் முள்ளா கிடக்கு என குறை சொல்லிப் புலம்புவதை விட, காலுக்கு ஒரு நல்ல செருப்பை வாங்கி மாட்டிக் கொள்ளலாம் என்பார்கள். குறை சொல்வதற்கான வாய்ப்புகள் நம் முன்னால் மலை போலக் குவிந்து கிடந்தால் கூட குறைகளைப் பொறுக்கி எடுக்காமல், தீர்வுகளை நோக்கிய பாதையைத் தேர்ந்தெடுப்பதே உசிதமானது.

அதற்காக விமர்சனங்கள் கூறுவதை தவறென சொல்லவில்லை. ஆக்கபூர்வமான முடிவை நோக்கிய விமர்சனங்கள் வணக்கத்துக்குரியவை. விமர்சனங்கள் பெரும்பாலும் செயல்களை மையமாய் வைத்தே இயங்கும். குறைகளோ பெரும்பாலும் மனிதர்களை மையப்படுத்தியே நகர்த்தப்படும். இந்த முக்கியமான வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த துணியை இப்படி தைத்திருக்கலாம் என்பது விமர்சனம். அவனுக்கு துணி தைக்கவே தெரியல என்பது குறை சொல்வது. விமர்சனம், “நன்றாக துணி தைக்கும்” முடிவை நோக்கி நகரும். குறை சொல்தல் வெறுமனே காயப்படுத்தி விட்டு நகரும். கத்தியை எடுத்து காய்கறி நறுக்குவதற்கும், காய்கறித் தோட்டத்தை நறுக்குவதற்கும் இடையேயான வேறுபாடு இதில் உண்டு.

குறை சொல்லும் மனிதர்களைப் பார்த்தால் அவர்கள் முகத்தில் ஒரு இருளின் நிழல் படிந்திருப்பதைப் பார்க்கலாம். அதே நேரம் எல்லாரையும் பாராட்டி, அரவணைத்து உற்சாகமாய் இருக்கும் நபர்களின் முகத்திலோ ஒளியில் நாட்டியத்தை தரிசிக்க முடியும். காரணம், குறை சொல்தல் உள்ளில் எரியும் விளக்கை அணைத்து வைத்து விடுவது தான். பாராட்டுதல் அந்த விளக்கை எரிய விடுகிறது. திரியைத் துண்டிப்பதற்கும், தூண்டுவதற்கும் இடையேயான வேறுபாட்டை இதில் காணலாம்.

குறை சொல்வது என்பது ஒரு வகையில் நின்ற இடத்திலேயே ஓடிக் கொண்டிருக்கும் “திரெட் மில்” போல. திரும்பத் திரும்ப குறைகளையே சொல்லிக் கொண்டிருக்கும் நபர் இலக்கை சென்று சேர்வதில்லை. இலக்கை அடையவேண்டுமெனில் பயணத்தைத் தொடரவேண்டும். வெற்றியை நோக்கி முன்னேறவேண்டுமெனில் நீச்சல் குளத்தில் நீச்சலடிக்க வேண்டும். புதைகுழியில் நீச்சலடிப்பவர்களால் வெற்றிக் கோட்டை எட்டிப் பிடிக்க முடியாது.

குறை சொல்பவர்களுக்கு ஒரு பொதுக் குணம் உண்டு. பொத்தாம் பொதுவாகக் குறை சொல்வார்கள். குறிப்பிட்டு இந்த விஷயம் தான் தப்பு என தெளிவாகச் சொல்ல மாட்டார்கள். “ஆமா.. அவனைப் பற்றி தெரியாதா” எனும் துவக்கமே அவர்களுடைய இயல்பைச் சொல்லிவிடும். அந்த மனநிலையைக் கழற்றி வைக்க வேண்டுமெனில் ஒரு கேள்வியைக் கேட்கவேண்டும். “ஆமா..என்னைப் பற்றி எனக்குத் தெரியுமா ?” அந்த கேள்விக்கான விடையைத் தேடினால் பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம் என்பதில் சந்தேகமில்லை.

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு குறை சொல்லும் பழக்கம் கண்ணி வெடி வைத்து விடும் என்கின்றன உளவியல் ஆய்வுகள். வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நினைக்காத மனிதர்கள் இல்லை. வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க வேண்டும் என நினைக்காத மனிதர்களும் இல்லை.

குறைகளை மட்டும் பார்க்கும் கண்களைக் கழற்றி வைப்போம்.
நிறைகளைக் காணும் இதயத்தை துலக்கி வைப்போம்.
வாழ்க்கை அழகாகும்.

சேவியர்

5,324 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *