இனிய வாழ்விற்கு இயற்கையோடு ஒன்றுபடுங்கள்.
சலசலவென சலங்கை கட்டி நடக்கும் நீரோடைகள், உறங்கிக்கொண்டிருந்த மொட்டுக்களை பனித்துளிகள் தெளித்து சூரியனின் கதிர்க்கரங்கள் தட்டியெழுப்ப அதிகநேரம் தூங்கினோமோ என்ற வெட்கச்சிரிப்போடு இதழ் விரியும் பூக்கள், இச்சின்னஞ்சிறு உருவுக்குள் எப்படி இத்தனை பலமான இனிய கீதம் என வியப்பில் ஆழ்த்தும் குருவிகளின் கீச்சிடல்கள், தானுண்ட நீரைத் தலையாலே அமுது கலந்து தரும் தென்னைகளின் காற்றில் சிலிசிலிர்க்கும் ஓசைகள், வண்டுகள் என நம்பி உண்பதற்காக கொத்தி எடுத்து வந்த வண்டைப் போலவே உருவுள்ள தாவர விதைகளை கொத்திப்பார்த்து வளர் நிலங்களில் விட்டுச் செல்லும் பறவைகள், மலைகள், நறுமணங்கள், நண்டு வந்து படம் வரையும் கடற்கரைகள், காடுகள், புல்வெளிகள், துள்ளி ஓடும் முயல்கள், மான் கூட்டங்கள், மகிழும் மழலையர் சிரிப்பொலிகள். தேன் பொழில் சோலைகள், பூக்களில் அமர்ந்து தேனை உண்ணும்போது கால்களில் ஒட்டிவிட்ட மகரந்தங்களை கிளைகளில் அமர்ந்திருந்து துடைத்துக்கொண்டிருக்கும் வர்ண வர்ண வண்டுகள், அடடா இயற்கையின் இத்தனை வனப்பும் ஒவ்வொரு உயிருக்கும் சொந்தமல்லவா?
அன்று மனைகள் அமைத்து வாழப் பழகிய மனிதன் அதனை தகுதி நிறைவோடு அமைக்கக் கற்றுக்கொண்டான். முற்றத்தில் மல்லிகை மணம் வீச, பக்கத்தில் பப்பாளியில் பழங்கள் நிறைந்து பளபளக்கும், கொல்லைப்புறத்தில் கொய்யாமரமேறி பழத்தை கொறித்து அணில்கள் உண்ணும். மா, பலா, வாழை என மண்ணின் செழுமை பொங்கும். மரத்தடியில் ஊஞ்சல் தொங்கும், மட்பாண்டங்களும் மனையருகில் கழுவிக் காய்ந்து கொண்டிருக்கும். வேலிப்பருத்தியோடு பூவரசம் இடுக்குகளில் நொச்சியும், பாவட்டையும், தூதுவளையும், முடக்கத்தானும், வெற்றிலைக் கொடியும் என பச்சிலை மருந்துக்கென பலவகை செடிகொடிகளோடு பக்குவமாய் காவல் காக்கும் கிழுவந்தடியோடு பூவரசும் சேர்ந்த வேலி. கிணற்றடியில் கமுகும், காய்கறித் தோட்டமும் அட அத்தனை வளமும் ஒரு வட்டத்துக்குள் அமைந்துவிடும். அவித்து ஊறிக் காய்ந்து உரலில் குத்திய அரிசி ஊர் சுற்றி வந்தாலும் நெஞ்சில் உரமாக இருக்கும். பாலும் தேனும் பாகும் பருப்பும் உண்டு பாட்டி வைத்தியம், பத்தியம் என பக்குவமாய் பலமான வாழ்வை வாழ்ந்துவிட்டு இன்று பன்னாடை போலே வடிகட்டி நல்லதை இழந்து கழிவுண்டு வாழும் வாழ்கையாகி விட்டதே! மின்சாரம் இல்லாவிடில் என்செய்வோம் என்று முப்பாட்டன் மரபு மறந்து முனகும் நிலை தப்பாக இன்று உருவாகிப் போய்விட்டதே!
அறுகும், கோரையும், கீழ்காய்நெல்லியும், குப்பைமேனியும் என தானே முளைத்த மூலிகை நிறைந்த அழகிய புல்வெளியை அழித்துவிட்டு எங்கோ தொலைவில் வெளிநாட்டில் இருந்து வந்த புற்களை அதிக விலை கொடுத்து வாங்கி வந்து பதிப்பார்கள். அதற்கேற்ற சூழலை வழங்க
இரவுபகல் நீருற்றி, கரையான் தின்றுவிடுமே என கண்டகண்ட இரசாயனங்களைக் கொட்டி மண்ணை மலடாக்குவர். அந்த மண்ணில் கால் வைத்தால் ஒவ்வாமை ஆகுதென்று எப்பவும் பாதணியோடு நடக்கும் பவுசான வாழ்வை பகட்டாக வாழ்ந்திடுவர். உடல் வெளியில் பளிங்காகவும் உள்ளே அத்தனையும் பட்டுப் போனதாகவும் பரபரப்போடு உழலுகின்ற மானிடமே என்று உணர்வீர் இந்த மடமையை.
புதிதாக பிறந்த கன்றுக்குட்டி கூட
சிலவினாடி நிலத்தில் கிடந்து தன்னை
இயற்கையோடு தொடர்புபடுத்தி பலம்பெற்று
உடனே எழுந்து நடக்க ஆரம்பிக்கும். இன்று வெளியில் விளையாடும் பிள்ளைகளை வீட்டிற்குள் விட்டுப் பூட்டி வீடியோ விளையாட்டுக்கள் காட்டும் விசித்திரம் பெருகிவிட்டது. நிலத்தின் காந்த ஆற்றல் உடலோடு தொடர்பு படுகையில் உடலில் பாரிய நல்ல மாற்றங்களை ஏற்படுத்தவல்லது. தேவையற்ற சக்தியின் தேக்கத்தினை சரிசெய்கிறது. பூமியில் பிறந்தவை எல்லாமே பூமியோடு நெருங்கிய தொடர்பில் இருக்கும்போது முழுமையோடு இருக்கிறது.
தாவரங்களை தொட்டிடுதல், முடிந்தவரை வெறும் கால்களால் நடத்தல், இயற்கையில் உருவாகியிருக்கும் நீர் நிலைகளில் குளித்தல், அத்தகைய சுத்தமான நீரை பருகுதல், நீண்டநாட்கள் பதப்படுத்தப்படாத இயற்கையான உடனே பெறப்பட்ட உணவுகளை உட்கொள்ளல். சுத்தமான காற்றை சுவாசித்தல் போன்ற விடயங்களால் இயற்கையோடு மிகவும் நெருங்கி வாழ முடியும். இவற்றில் ஏற்படுகின்ற சிக்கல்கள், தடைகள் பெருமளவு பின்விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
உதாரணமாக உணவு முறையில் அன்றைய காலப்பகுதியில் பசுவின் பால் உணவில் பயன்படுத்தப்படும்போது அந்தப் பாலை பெற்றுக்கொள்ளும் முறை இயற்கையாக இருந்தது.
அதாவது பசு அன்பாக பராமரிக்கப்பட்டு பசுக்கன்றுக்கு முதலில் சிறிதளவு பாலை பருகச்செய்வர். பின்பு கன்றை தாய்ப்பசுவின் அருகில் விட்டு தாய்ப்பசு தன் கன்றை நாவால் நக்கிக் கொடுக்க நன்கு பால் சொரிய கரங்களால் பாலை கறந்து கன்றுக்கும் மீதம் விட்டுவைத்தனர்.
இந்தப் பாலில் பசு நன்கு புற்தரையில் மேய்ந்த புல்லின் நற்சக்தியும், கன்றின்மீது பசு செலுத்திய முழு அன்பும் பொதிந்துள்ளது. இன்றைய நிலையில் பெரும்பாலான பண்ணைகளில் பசுவானது கன்று போட்டதுமே அடுத்தநாள் கன்று இறைச்சிக்காக போகிறது. கன்று இறைச்சி இப்போது உலகெங்கும் மிகப் பிரபலம். பொதுவாக கன்றை இழந்த பசு குறுகிய நாட்களில் பால்சுரப்பதை நிறுத்திக்கொள்ளும்.
ஆனால் இன்று இரசாயனம் செலுத்தப்பட்டு மிகவும் அதிகமாகவும் தொடர்ச்சியாகவும் பாலை பெற்று விநியோகம் செய்கின்றனர். வெறுமை உணர்வோடு இயந்திரத்தில் பாலைக் கொடுக்கும் பசுவின் உணர்வு நிலை அந்த பால் மூலம் கடத்தப்படும் என்பதை நம்ப வேண்டும். பசுவின் பால் அதன் கன்றுக்கே, இருப்பினும் அதனை கவர்ந்து பருகுபவர்கள் அதன் தன்மை குறித்தாவது தெரிந்திருக்க வேண்டாமோ?
உலகில் உள்ள அத்தனை விடயங்களிலும் அதனதன் அதிர்வு நிலைகள் பொதிந்துள்ளன. இங்கு பால் ஒரு சிறு உதாரணம் மட்டுமே. இயற்கைக்கு முரணான எல்லா விடயங்களும் தீய பாதிப்பை ஏற்படுத்தும்.
உடல் உறுதி பெற யோகாசனமும், உள்ளம் அமைதி பெற தியானமும், எண்ணம் களிப்புற கலைகளும் என களிப்புற்று இருந்துவிட்டு காற்று, நீர், வெப்பம் மற்றும் பருமன் குறைக்க உடல் உழைப்பு கூட விலைக்கு வாங்கும் நிலையாகிப் போய்விட்டது இன்றைய வாழ்வியல்.
நிலத்தின் தன்மைக்கேற்ப பயிர்கள் உருவாகும். ஒரேவகைப் பயிராயினும் அந்தந்த நிலத்திற்கேற்ப அங்கு விளையும் கனியில், விளைபொருட்களில் சுவை மாறுபாடு உண்டு. அதுபோலவே பிறந்த மண்ணின் தன்மைக்கேற்ப உடல்நிலையும் உண்டு. பிறக்கும்போதே முதலில் சந்திக்கும் புறச்சூழலுக்கு ஏற்ப உடல் தன்னிச்சையாக தன்னை தயார்ப்படுத்துகிறது. அந்தச் சூழல் என்றுமே அதற்கு ஏற்புடையதாகவும் இருக்கிறது. இன்று பாதுகாப்புக்காக என்று கூறி காற்று, வெளிச்சம் உட்புகாத வீட்டைக் கட்டிவிட்டு வீட்டிற்குள் குளிர்சாதனம், வெளியில் கொழுத்தும் வெயில் என ஒரு நாளிலேயே பல தடவைகள் மாறுபட்ட தட்பவெப்பத்தை சந்திப்பதால் உடல் நேரடியாகவே தாக்கத்திற்குள்ளாகின்றது.
மேகத்தைப் பார்த்து மழை என்று பெய்யும் என சொன்னதும், காலபோகம், சிறுபோகத்தினை பார்த்து விதைகள் விதைத்ததும் என இயற்கையை மாற்றாது இயற்கைக்கேற்ப தான் மாறி வாழ்ந்த நிலை போய் இன்று தனக்கேற்றபடி இயற்கையை மாற்ற முயற்சித்துக்கொண்டு அதன் முரண்பாட்டில் ஏற்படும் பக்கவிளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக் கிறோம். பேராசை, சுயநலம் என எத்தனையோ இயற்கை வளங்களை அழித்து அழகான சிறைகளை அமைத்து அதனுள் வாழ்வதை நாகரிகம் என ஏமாந்து போகின்றோம். தன் பேரனுக்கு பயன்தரும் என மரங்கள் நட்ட பாட்டனின் பரந்த மனதை இன்று எங்கும் காணமுடியவில்லை. தொழிநுட்பம் மூடர்கள் கைகளில் வந்ததனால் அவை சுயநல வளர்ச்சிக்காகவே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. பிளாஸ்டிக்கை கண்டுபிடித்த தொழிநுட்பம் அது உக்கிப்போகாது எனத் தெரிந்தும் அதை முழுதாக நீக்காதது வேதனை. இனிவரும் காலத்தில் உயிரினங்களின் இராட்சத எதிரி இப்போது நாம் உபயோகிக்கும் பிளாஸ்டிக்குகளே. எதிர்கால சந்ததியினரை எண்ணிப் பார்க்காத இழிவான போக்கில் போய்க்கொண்டிருக்கிறது நாகரிகம்.
இயற்கையோடு நெருக்கமாகவும், நுட்பமாகவும் ஒன்றுபடுங்கள். கடினமற்ற மிக இயல்பான வாழ்வை வாழ முடியும். எமக்காகவும், பிறருக்காகவும் வாழவும் நேரம் மீதமிருக்கும். பரபரப்பான மனநிலையில் எதையுமே அடைதல் சாத்தியமில்லை. எத்தனை அறிவியல் வந்தாலும், ஏழேழ் உலகையும் கண்டு பிடித்தாலும் இப்படி ஒரு அற்புத பூமியை கற்பனையிலும் உருவாக்க முடியாது. கால்கள் அகட்டிவைக்கும் இடமெல்லாம் ஆடிப்பாடி ஆரவாரி என அள்ளிக் கொடுத்த இந்த இயற்கை அன்னையை அழவைத்துப் பார்க்காதீர்கள். அவள் மடியில் அத்தனை வளங்களும் உண்டு. அண்மித்துச் செல்லுங்கள். அவள் அரவணைப்பே அத்தனைக்கும் தீர்வாகும்.
— கரிணி
2,618 total views, 3 views today