ஒரு மெல்லிய கோடு!
பரந்து விரிந்த இந்த அண்டத்தில் ஒரு அழகிய படைப்பு இப்பூவுலகம், இந்த பால்வெளி மண்டலத்தில் அழகிய நீல நிற உருளையான பூமி தன்னுள்ளே இயற்கையாக பல நிலப்பரப்புகளையும் எல்லைகளையும் உருவாக்கி வைத்துள்ளது, எனினும் மனிதர்கள் வளர்ந்து இனக்குழுக்களாக பிரிந்து தமக்கென எல்லைகளை வகுத்துக்கொண்டனர். இன, மொழி அடிப்படையில் நாடுகள் உருவான போது மனிதன் அதற்கென எல்லைக்கோடுகளை வரைந்தான், சிலசமயம் அது சுமூகமாகவும் சிலசமயம் அது பெரும் போராட்டத்தின் விளைவாகவும் இருக்கும். இப்படி வரையப்பட்ட கோடுகள் ஏராளம்.
சரி சில வித்தியாசமான எல்லைகளை பார்ப்போம், உலகிலேயே மிக உயரமான எல்லை சீனாவிற்கும் நேபாளத்திற்கும் இடையே தான், இயற்கையாக அமைந்த இமயமலைத் தொடர் இருநாடுகளையும் பிரிக்கும் கோடாகத் திகழ்கிறது. நேபாளத்திலிருந்து சீனா செல்லவேண்டுமாயின் நீங்கள் உலகின் மிகப்பெரிய மலைத்தொடரை தாண்ட வேண்டும், இந்திய பாகிஸ்தான் எல்லைக்கோடை எடுத்துக்கொள்வோம் இது இரும்பு வலையங்களாலும் ஆயுதம் ஏந்திய இராணுவத்தாலும் நிறைந்திருக்கும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் வாகா எல்லையில் இருநாடுகளின் வீரர்கள் கொடியேற்றி கொடியிறக்கும் நிகழ்ச்சி மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருக்கும். அவ்வளவு சுலபமாக இந்த எல்லையை யாரும் கடந்து விடமுடியாது.
அமெரிக்காவிற்கும் மெக்ஸிகோவிற்கும் இடையே நீண்ட எல்லைக்கோடு உண்டு, அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தின் நாக்கோ நகரையும் மெக்ஸிகோவின் சொனாரா மாநில நாக்கோ நகரையும் எல்லைக்கோடு பிரிக்கிறது. இந்த எல்லைக்கோட்டு கம்பி வேலியை வாலிபால் வலையாக பயன்படுத்தி இருநாட்டு மக்களும் கைப்பந்து விளையாடுவர், பிரிக்கும் வேலியை விளையாட்டுக்கு பயன்படுத்தி நட்புடன் மக்கள் விளையாடுவதைப் பார்ப்பதற்கே அதிசயமான விடயம் தான்.
சரி தாண்ட முடியாத மலை, கட்டுப்பாடான கம்பி வேலிகள் இவை எதுவுமே இல்லாமல் உங்களது இரண்டு கால்களை ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளில் வைக்கமுடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா ?
அதை நேரில் காண நீங்கள் ஹாலந்து தான் வரவேண்டும் ! ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பாக இயங்குவதால் இவற்றின் எல்லைகள் மற்ற நாடுகளைப் போல கெடுபிடிகள் கொண்டதாக இல்லை. ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் இருக்கும், சிலவிடங்களில் வெறுமனே பலகைகள் மட்டும் உண்டு. இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டு உலகத்தின் மிகச்சிக்கலான, குறுக்கும் நெடுக்கும் எல்லைகள் ஓடும் அழகான இடமாகத் திகழ்கிறது ஹாலாந்தின் பார்லே நாசவ் எனும் இடம்.
ஆம்ஸ்டெர்டாமிலிருந்து தெற்கே ப்ரெடா நகரம் சென்று அங்கிருந்து சுமார் 40 நிமிடங்கள் பயணித்தால் வரும் இடம் பார்லே நாசவ், இது ஒரு சிறிய கிராமம் பெல்ஜியம் நாட்டின் ஒரு பகுதி ஹாலந்தின் எல்லைக்குள் இருப்பதால் இருநாடு களுக்கிடையே அமைந்துள்ளது இந்த கிராமம். 1995 ஆண்டு தான் இந்த எல்லைக்கோடுகள் உறுதி செய்யப்பட்டு குறியீடுகளாக குறிக்கப் பட்டுள்ளன.
ஊரில் இறங்கி தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தால் நீங்கள் ஆங்காங்கே தரையில் குறியீடுகளை காணலாம் Nடு என்றும் டீநு என்றும் எழுதியிருக்கும், இந்தக் கோடுகள் நாட்டின் எல்லைகள், இவை வீடுகளினூடேவும், தெருக்களின் ஓரமாகவும், கடைகள் மற்றும் உணவகங்களையும் கடந்து செல்கின்றன, இரு நாட்டு மக்களும் வாழ்கின்றனர். இரண்டு நாட்டு தொலைபேசி, இணையம், வானொலி மற்றும் பேருந்து சேவைகளும் இயங்குகின்றன. இரண்டு நாட்டின் வீடுகளுக்கும் தனித்தனி எண்கள் உண்டு.
முன்கதவுக் கொள்கை:
வீடுகள், தோட்டங்கள் கடைகளென எல்லைகள் குறுக்கும் நெடுக்குமாய் ஓடுகின்றன ! எனவே வீட்டினுடைய வாசல் எந்த நாட்டில் இருக்கிறதோ அதுவே அந்த வீட்டின் நாடு ! இதற்கு சூலோவெறேன் தெருவிலிருக்கும் ஒரு வீடுமட்டும் விதிவிலக்கு ஏனெனில் எல்லைக்கோடு வாசலை இராண்டாக பிரித்துக்கொண்டு செல்கிறது. அழகிய மரங்களும், செடிகளும் பழைய கட்டிடங்களும் நிறைந்திருக்கிறது இக்கிராமம். நீங்கள் இங்கு சென்றால் ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளில் காலைப் பதித்து மகிழலாம்.
ஒல்லாந்து அப்புறம் ! பெல்ஜியம் இப்புறம் !
மனிதர்களின் மனங்கள் விரிவடையும் போது நாட்டின் எல்லைகள் வெறும் கோடுகளாக சுருங்கி நிற்கின்றன !
— தனசேகர் பிரபாகரன்.
2,168 total views, 3 views today