“நான்” என்பது அகம்பாவமல்ல தன்னம்பிக்கையின் வெளிப்பாடு.
வெளிப்பாடு என்று சமூகத்தில் ஒரு கருத்து நிலவி வருகின்றது.ஆனால் அது தவறு.நாங்கள்,எங்கள், எங்களுடையது, என்ற குழுத்திரட்சிக்குள் ஒன்றிணைந்து நிற்பது பல நான்கள், பல எனதுகள் ஆகும்.
எமது உடல் தொடங்கி பூமியில் காணும் பொருட்கள் அனைத்தும் மட்டுமல்ல பூமிகூட அணுக்களின் ஒன்றினைவே ஆகும்.ஒவ்வொரு அணுவும் ஒவ்வொரு நானுக்குச் சமனாகும்.
தனிமனித ஆளுமையே இன்றைய உலக வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பவை.ஒவ்வொரு தனிமனிதனின் எண்ணம் சிந்தனை தேடல் என்பன திரட்சி பெற்று சமூகத்தின் ஆளுமையாக வெளிப்பட்டு நிற்கின்றது.
நான் எனும் ஒருவன் தன்மீது கொண்ட நம்பிக்கையினால்தான் அவனால் பலவற்றைச் சாதிக்க முடிகிறது. நான் எனும் நம்பிக்கையே என்னால் இது முடியும் என்று ஒரு விஞ்ஞானி அயராது உழைத்து ஒரு புதிய கருவி ஒன்றை உருவாக்குகிறான்.
ஒரு உதைபந்தாட்டக் குழுவிலிருக்கும் அனைத்து வீரர்களும், தனித்தனி வீரனாக முன்னலைப்படுத்தல் மூலமே குழு என்ற தன்மைக்குள் தம்மை ஒருங்கிணைந்துக் கொள்கிறார்கள்.அவர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் எனது அணி என்பது எங்களுடைய அணி என்ற அக்கறையை ஏற்படுத்துகின்றது.ஒவ்வொரு விளையாட்டு வீரனினதும் தனித்தனி ஆளுமையும் திறமையுமே ஒருமித்த செயலாற்றலுக்கு துணையாக நிற்கின்றது.
நான் என்பது தன்னம்பிக்கையின் உறுதி.நான் இதனைச் செய்து முடிப்பேன் என்ற திண்மமான எண்ணமே ஒருவன் எடுக்கும் செயலை முடித்து வைக்க ஊக்கசக்தியாக இருக்கின்றது.என்னால் இது முடியும் என்ற நம்பிக்கைதான் வெற்றிக்கு வழிவகுக்கின்றது.
ஓட்டப் பந்தயத்தில் பலருடன் சேர்ந்து ஒடம் ஓட்டப்பந்தய வீரன் தன்னுடன் போட்டியாக ஓடும் வீரர்களை இணைத்து அவன் வெற்றி பெறுவதில்லை.தனி ஆளாக தனது சக்தி மூலம் தன்னோடு ஓடும் பலரையும் முந்திக் கொண்டு வெற்றி வாகை சூடுகிறான்.
பரீட்சைக்கு படிக்கும் மாணவன் நான் சித்தியடைவேன் என்னால் சித்தியடைய முடியும் என்ற நானும் எனதுமே அவனை சித்தியடைய வைக்கின்றது. அங்கே பல மாணவருடன் இணைந்த சித்தியாக அது இருப்பதில்லை.
ஒரு நாட்டின் தலைவனைத் தெரிவு செய்யும் மக்கள் இவரால் நாட்டை நிர்வாகிக்க முடியும் என்ற நம்பிக்கையிலேதான் தெரிவு செய்கிறார்கள்.தெரிவு செய்யப்படும் தலைவனும் தன்மீது நம்பிக்கையில்லாமல் அவனால்
தலைவன் பதவியை ஏற்க முடியாது.என்னால் நாட்டை நிர்வாகிக்க முடியும் என்றங நம்பிக்கையே அவனுக்கு உறுதுணையாக நிற்கின்றது.
கயிறு என்பது தனித்தனி இழைகளால் ஆனது.ஒவ்வொரு தனித்தனி இழைகளும் இன்னும் சிறிய இழைகளால் ஆனது.ஒவ்வொரு சிறிய இழைகளும் மிகச் சிறிய இழைகளால் ஆனது.ஒவ்வொரு மிகச் சிறிய இழைகளும் மிகமிகச் சிறிய இழைகளால் ஆனது.
எனவே மிக மிகச் சிறிய இழைகள் என்பன ஒவ்வொரு நானாக காணப்படுகின்றன.மிகமிகச் சிறிய இழைகளை ஒவ்வொரு உறுதியான நானாக கொள்ள முடியும்.
ஒவ்வொரு தனிமனிதனும் பெரும் சக்தி வாய்ந்தவன்.அந்த சக்திக்கு காரணமாக இருப்பது எனக்காக மற்றவர்கள் சிந்திப்பார்கள் என்பதோ, எனக்காக மற்றவர்கள் சுவாசிப்பார்கள் என்பதோ, எனக்காக மற்றவர்கள் உணவு உண்பார்கள் என்பதோ, எனக்காக மற்றவர்கள் தண்ணீர் குடிப்பார்கள் என்பதோ என இவையெல்லாம் அல்ல.
எனக்காக நான் எனது உயிர்வாழ்வுக்கான சுவாசத்தை நானே மேற்கொள்ள வேண்டும்,உடலின் தேவையாக இருக்கின்ற உணவு உண்ணுதல் தண்ணீர் குடித்தல் போன்றவற்றை நானே மேற்கொள்ள வேண்டும் என்ற இயற்கை விதிதான் நான் என்பதும், எனக்கானது என்பதுமாகும்.
ஒரு மனிதன் தனது அறிவை வளர்த்துக் கொள்ள பல நூல்களை வாசிக்கலாம், பலரிடம் பல கருத்துக்களை கேட்டு அறிந்து கொள்ளலாம், ஆனால் அவற்றை அவனே முன்னிலைப்படுத்த வேண்டும்.அவனே என்பதில் தன்னை குறியீட்டுக் கொள்கின்ற நான் என்பதே தலைதூக்கி நிற்கின்றது.
நாயன்மார்களில் ஒருவரான இறைப் போராளி அப்பர் என்னும் திருநாவுக்கரசு நாயனார் இறைவன் மீது தான் வைத்திருக்கும் அசைக்கமுடியாத பக்தி என்ற கர்வம் காரணமாகவும், தன்மீதான நான் என்ற நம்பிக்கை காரணமாகவும் “யார்க்கும் குடியல்லோம் எமனையும் அஞ்சோம்”என்றார்.
இந்திய சுதந்திரத்தை எழுச்சிபெறச் செய்த, கூர்மையடையச் செய்த மகாகவி பாரதியார் நான் எனும் மிகையான கர்வம் கொண்டவர் அதனால் அவர் இப்படி எழுதுகிறார்:-
“தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிகவுழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக்கிரையெனப் பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போல – “நான்”
வீழ்வேன் என்று “நினைத்தாயோ”
நான் என்ற தன்னம்பிக்கையின் வெளிப்பாடு மகாவி பாரதியாரின் திமிர்.”நினைத்தாயோ” என்று சொல்வதில் “என்னை அவ்வாறு நினைத்தாயோ” கோபாக்கினியோடு மாந்தரைக் கேட்கிறார்.
எனவே “நான்” என்ற தன்னைத்தானே தன்னம்பிக்கையின் வெளிப்பாடே உல வளர்ச்சிக்கு காரணமாகும்.
ஏலையா க.முருகதாசன்;
2,553 total views, 3 views today