அதிக மேக்கப் போடுவது, தன்னம்பிக்கை இன்மையின் வெளிப்பாடு.
ஆறே வாரத்தில் சிவப்பழகு ! சிவப்பாய் இருப்பதே அழகு !! என்பதெல்லாம் பெண்களுக்கு எதிராய் வியாபாரிகள் விரிக்கின்ற வசீகர வலைகள். இந்த வஞ்சக வலைகளில் அறிந்தும், அறியாமலும் விழுந்து தத்தளிப்பவர்கள் ஏராளமானோர். ஒரு விதத்தில் சிலந்தி வலையில் சிக்கிக் கொள்ளும் சின்ன ஈயாய் அவர்களுடைய வாழ்க்கை பிடிக்கப்பட்டு விடுகிறது.
அழகின் இலக்கணம் பெண்கள் தான். அவர்களுடைய அழகு அவர்களுடைய செயல்களில், அவர்களுடைய அன்பின், அவர்களுடைய நடவடிக்கைகளில் வெளிப்படுகிறது. அதனால் தான் உலக அளவில் பெண்மையைப் போற்றுவது போல யாரும் ஆண்மையைப் போற்றுவதில்லை !
இயல்பிலேயே அழகாய் இருப்பதால் அவர்களுக்கு அழகுணர்ச்சியும் ரொம்ப அதிகம். எதையும் அழகாய்ச் செய்ய ஆசைப்படுவார்கள். ஒரு மொபைல் கவர் வாங்கினால் கூட ஓரத்தில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டி ஸ்டைலாக்க முயல்வார்கள். இது பெண்கள் சிறுமியராய் இருக்கும்போதே தொடங்கிவிடுகிறது.
ஒரு இளம்பெண்ணின் பையை திறந்து பார்த்தால் அதில் ஒரு மினி அழகுசாதன நிலையமே இருக்கும். ஐபுரோ, ஐ ஷேடோ, ஐ லேஷல், ஐ லைனிங் இப்படி கண்ணுக்கு மட்டுமே ஏகப்பட்ட பொருட்களை வைத்திருப்பார்கள். பெரும்பாலும் விளம்பர உலகின் மாயாஜால பேச்சுகளிலோ, உடன் பழகும் மற்ற பெண்களின் தாக்கத்திலோ விளைந்தவையாய் இருக்கும்.
உளவியல் சொல்லும் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். “அதிக மேக்கப் போடுவது, தன்னம்பிக்கை இன்மையின் வெளிப்பாடு” என்கிறது அது ! தாழ்வு மனப்பான்மையில் இருந்து வெளியே வர பெண்கள் கையிலெடுக்கும் ஆயுதங்களில் ஒன்றே மேக்கப் என்கின்றது உளவியல். சரி, உளவியல் எதையோ சொல்கிறது என விட்டு விடலாம், ஆனால் உடலியல் என்ன சொல்கிறது தெரியுமா ? அழகுப் பொருட்கள் ஆபத்தானவை !! மிக மிக ஆபத்தானவை !!
இந்த மேக்கப் பொருட்களில் இருக்கும் வேதியல் பொருட்களையும் அமிலப் பொருட்களையும் பட்டியலிட்டுப் பார்த்தால் ஏதோ ஒரு கெமிஸ்ட்ரி லேபில் நுழைந்த ஒரு உணர்வு வருகிறது. அந்த அளவுக்கு எதிலும் அமிலங்கள், அமிலங்கள். இந்த அமிலங்கள் அலர்ஜி முதல் கேன்சர் வரை உருவாக்கும் என்பது தான் பலருக்கும் தெரியாத அதிர்ச்சிச் செய்தி. எல்லாவற்றுக்கும் மேலே, மேக்கப் பொருட்களில் இருக்கும் சில கெமிக்கல்ஸ் பெண்களோட பெண்மைத் தன்மைக்கே கேடு விளைவிக்கும் என்கின்றன ஆய்வுகள்.
இத்தனை ஆபத்தான பொருட்கள் எப்படி சந்தைக்கு வருகின்றன ? எப்படி மக்களை ஏமாற்றுகின்றன ? அரசியல் ரீதியாகச் சொல்லவேண்டுமெனில் ஊழல் எனலாம். சட்ட ரீதியாகச் சொல்ல வேண்டுமெனில் மேக்கப் பொருட்களுக்கு கடுமையான தரக் கட்டுப்பாடு விதிகள், அமைப்புகள் ஏதும் இல்லை என சொல்லலாம்.
உணவுப் பொருளுக்கு இருப்பது போல சரியான தர நிர்ணய அமைப்பு இருந்தால் நிறைய சிக்கல்கள் தீர்ந்து போய் விடும். ஒரு சின்ன உதாரணம் சொல்ல வேண்டுமெனில்,” ஐரோப்பிய யூனியன்ஸ் காஸ்மெடிக் டைரக்டிவ்” அமைப்பு ஆரம்பித்த பின், யூ.கே யில் தரமான மேக்கப் பொருட்கள் மட்டுமே விற்பனைக்கு வருகின்றன என்பதைச் சொல்லலாம்! விஷத் தன்மை எவ்வளவு இருக்கிறது என்பதைப் பார்த்த பிறகே அங்கு அனுமதி வழங்கப்படுகிறது.
அமெரிக்காவில் லிப்ஸ்டிக்கை சோதனை செய்து பார்த்தார்கள். சொன்னர் நம்ப மாட்டீர்கள் 61 சதவீதம் லிப்ஸ்டிக் விஷத்தன்மையோடு இருந்தது. அதிலும் 30 சதவீதம் உதட்டுச் சாயங்களில் மிக அதிக அளவு விஷத்தன்மை இருந்தது. அவையெல்லாம் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டன.
தினமும் லிப்ஸ்டிக் போடும் பழக்கமுடைய ஒரு பெண் தன்னோட வாழ்நாளில் தன்னை அறியாமலேயே சுமார் நாலரை கிலோ அளவுக்கு லிப்ஸ்டிக்கை சாப்பிடுகிறாராம். இது மனச் சிதைவு, கருச் சிதைவு, சிறுநீரகக் கோளாறு, பெண்மைத் தன்மை இழப்பு இப்படி ஏகப்பட்ட சிக்கல்களை உருவாக்கலாம் என்று எச்சரிக்கிறார் அமெரிக்க ஆராய்ச்சியாளர் பீட்டர் டிங்கில்.
மேலை நாடுகளில் இப்படி. நம்ம ஊரில் ? திருவிழா பொட்டிக் கடை முதல், ரங்கநாதன் தட்டு கடை வரை எங்கும் மலிவு விலை பொருட்கள். பவுடர், பாடி ஸ்ப்ரே, லிப்ஸ்டிக், ஐ புரோ, ஹெயர் ஸ்ப்ரே, டியோடரண்ட், ஷாம்பூ, ஷவர் ஜெல், ஹேண்ட் வாஷ் என எல்லாமே ரொம்ப மலிவான விலைல கிடைக்கும். அந்த மலிவு விலைக்குக் காரணம் அதில் இருக்கும் பொருட்கள் தரமற்ற ஆபத்தான பொருட்கள் என்பது தான். ! இங்கேயெல்லாம் ரொம்ப கட்டுப்பாடான தர நிர்ணயத்தை எதிர்பாக்க முடியாது. சோ, நாம தான் விழிப்பா இருக்கணும்.
மேலை நாடுகளிலெல்லாம் நிராகரிக்கப்படும் விஷத்தன்மையுடைய அழகுசாதனப் பொருட்கள் குறிவைப்பது வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா போன்ற பெரிய வர்த்தகத் தளங்களைத் தான். சட்டத்தை வளைப்பதோ, புழக்கடை வழியாக வியாபார ஒப்பந்தங்கள் நடப்பதோ இத்தகைய வளரும் அல்லது பிந்தந்திங்கிய நாடுகளில் மிக எளிது. உதாரணமாக, ஸ்வீடன் நாட்டில் தடைசெய்யப்பட்ட பார்மால்டிஹைட் நம்ம ஊர் ஷாம்பூ, ஹேண்ட் வாஷ் எல்லாவற்றிலும் சர்வ சுதந்திரமாய் உலவுவதைச் சொல்லலாம். இது தலைவலிக்கும், அலர்ஜிக்கும் கேரண்டி தரக் கூடிய பொருள்.
பாரபீன்ஸ் மற்றும் பாத்தலேட்ஸ் என்பவை விஷத்தன்மையுடைய இரண்டு பொருட்கள். இவை நமது வாசனைப் பொருட்கள், டியூட்ரன்ட் போன்றவற்றில் அதிகம் உண்டு. இதைத் தொடர்ந்து சுவாசிப்பது உயிருக்கே ஆபத்தானது. இந்தப் பொருட்களை பயன்படுத்தும் மக்களுடைய உடலில் இந்த விஷத் தன்மை இருக்கும். 20 க்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களின் உடலில் பாரபீன்ஸ் நிறைய இருக்குமாம். இவை ஹார்மோன்களையே சேதப்படுத்திவிடும். அப்படியே மார்பகப் புற்று நோய்க்கும் இதற்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு என்பது திகில் செய்தி.
இன்றைக்கு சந்தையில் கிடைக்கும் அனைத்து பிரபல டியோடரண்ட்களிலும் புரோப்பலீன் கிளைகோள் எனும் கெமிகல் உண்டு. இது தோலை நாசமாக்கி, இரத்ததில விஷத் தன்மையைக் கலக்கும். கூடவே மூளை, லிவர், சிறுநீரகம் போன்றவற்றுக்கெல்லாம் பாதிப்புகளை உருவாக்கும்.இது மவுத்வாஷ், மற்றும் பற்பசைகளில் கூட உண்டு என்பது பயமுறுத்தும் உண்மை.
சோடியம் லாரில் சல்பேட், சோடியம் லாரத் சல்பேட் இப்படி இரண்டு கெமிகல்ஸ் நுரை தரும் பல மேக்கப் பொருட்கள்ல உண்டு. உதாரணமா ஷாம்பூ, சோப்பு, ஷவர் ஜெல். இது கண்பார்வைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ! இதே மாதிரி எத்தனோலமின் எனும் வேதியல் பொருளும் இந்த மாதிரி பொருட்களில் உண்டு. இது கிட்னி, லிவர் இரண்டுக்கும் எதிரி. ஐசோபுரோபைல் ஆல்கஹால் ங்கர ஒரு கெமிகல் மன அழுத்தத்தைக் கூட கொண்டு வரும்.
இப்போது ஆயுர்வேதிக், இயற்கை மூலிகைத் தயாரிப்பு, ஆர்கானிக் என்றெல்லாம் முகமூடி போட்டுக்கொண்டு வருகின்ற பொருட்களை கண்ணை மூடிக்கொண்டு நம்பாதீர்கள். எல்லாவற்றிலும் விஷத்தன்மை உண்டு.
வெயில் காலம் வந்தால் உடனே மாயிஸ்ட்ரைஸர் வாங்கிக் கொள்கிறோம். உடலில் அதைத் தேய்த்தால் புற ஊதாக்கதிர்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கலாம் என்றும், உடல் எப்போதும் ஈரப்பதத்துடன் வறட்சியடையாமல் இளமையாய் இருக்கும் எனவும் நம்புகிறோம். உண்மை என்னவெனில் இத்தகைய மாயிஸ்ட்ரைசர்களில் பாரஃபீன்ஸ், மினரல் ஆயில், டிட்டர்ஜன்ட் போன்றவை உண்டு. இவை தோலுக்குள் சென்று தோலை சேதப்படுத்தும் அபாயம் உண்டு. சும்மா வெயிலில் போனால் வைட்டமின் டி ஆவது கிடைக்கும். அது உடலுக்கு ரொம்ப நல்லதும் கூட !
இறைவன் படைப்பில் அனைத்துமே அழகு தான். ரோஜாவுக்கு ஒரு அழகு என்றால், முல்லைக்கு இன்னொரு அழகு, சாமந்திக்கு வேறொரு அழகு. ஒவ்வொரு அழகுமே இறைவனின் படைப்பின் மகத்துவம் தான். இறைவன் தருகின்ற உடலை அப்படியே ஏற்றுக் கொள்வதில் இருக்கிறது பெண்மையின் பலமும், பெண்மையின் தன்னம்பிக்கையும். அப்படி ஏற்றுக் கொள்ளாமல் செய்யும் ஒவ்வொரு செயலுமே ஆபத்து தான். முடியை நேராக்குவோம் என ஹெயர் ஸ்ட்ரெயிட்டனிங் பண்ணுவது கூட பார்மால்டிஹைட் உடலில் நுழையக் காரணமாகி கேன்சரைக் கூட கொண்டு வரும்.
இத்தகைய ஆபத்துகள் குழந்தைப் பொருட்களைக் கூட விட்டு வைப்பதில்லை. குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் எண்ணை பெரும்பாலும் மினரல் ஆயில் என்கின்றது புள்ளி விவரம் ஒன்று. இந்த மினரல் எண்ணை உடலின் மேல் ஒரு மெல்லிய மெழுகுப் படலத்தை ஏற்படுத்தி தோலின் இயல்புத் தன்மையைப் பாதிக்கிறது. இதை அதிக அளவு பயன்படுத்தும் போது உடல் தனது இயல்பான பணிகளைச் செய்ய முடியாமலும், உடலின் நச்சுத் தன்மையை வியர்வை மூலம் வெளியேற்ற முடியாமலும் சோர்வுறுகிறது. முகப்பூச்சு பயன்படுத்துவது கூட கெடுதலானது எனவும், குறிப்பாக குழந்தைகள் முகப்பூச்சுத் துகள்களை சுவாசிக்க நேர்வதனால் ஆஸ்த்மா போன்ற பல பிரச்சனைகள் வர காரணமாகிறது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பதின் வயதுப் பிள்ளைகள், பள்ளிப் பிள்ளைகளுக்கு நகங்களில் கலர் கலராக டிசைன் வரைவது ஃபேஷன். முன்பெல்லாம் ஒரே நிறத்தைப் பூசுவார்கள். இப்போது ஒரே நகத்தில் நான்கைந்து நிறங்களைப் பூசிக் கொள்வது வழக்கம். இந்த நகப்பூச்சுகளில் அசிடோன் இருந்தால் நகத்தை வலுவிழக்கச் செய்யும். தொடர்ந்து அடிக்கும் நிறத்தில் நகப்பூச்சுகள் பூசுவது நகத்தின் வசீகரத்தையும், வலிமையையும் அழித்து விடும் என்பது அதிர்ச்சிகரமான உண்மை.
விளம்பரம் சொல்கின்ற வரையறைகள் தான் அழகு என நம்பும் போது நாம் ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறோம். நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஏன் அவர்கள் நிர்ணயிக்க வேண்டும் ? நாம் கருப்பாய் இருப்பது அழகல்ல என ஏன் அவர்கள் நம்மை கிண்டலடிக்க வேண்டும் ? அதை ஏன் பெண்கள் அப்படியே ஏற்றுக் கொண்டு அவர்களுடைய கல்லாவில் பணத்தைக் கொண்டு கொட்ட வேண்டும் ? சிந்திக்க வேண்டிய விஷயமல்லவா ?
இப்படி அழகு சாதனப் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துவது ஒரு வித அடிமை மனநிலைக்குள் நம்மைத் தள்ளி விடுகிறது. பின்னர் அந்த அழகு சாதனப் பொருள் இல்லாமல் ஒரு முழுமை தோன்றுவதேயில்லை. எந்த அழகு சாதன ஷாம்பூக்களும் இல்லாத காலத்தில் நமது பாட்டிமார் நூறு வயதிலும் கருகரு கூந்தலோடு வலம் வந்தனர். இன்றைக்கு பதின் வயது தாண்டியதும் வெண்நரையுடன் தானே உலவுகின்றனர் ? அப்புறம் அதை மாற்ற கூந்தலுக்கு கலர் அடிக்கிறோம். அந்த டையில் பி.பெனிலைன்டையாமின் இருக்கிறது. அது எக்கச்சக்க பிரச்சினைகளை உடலுக்குக் கொண்டு வருகிறது.
அழகு என்பது என்பது வெளியில் இல்லை ! மனதில் இருக்கிறது. என்னைக் கேட்டால் உலகிலேயே அழகான பெண் அன்னை தெரசா என்பேன். சுருக்கம் நிறைந்த உடல். கூனல் விழுந்த தோற்றம். ஆனால் அவருடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அன்பில் வார்த்தெடுத்தவை. அவருடைய செயல்கள் ஒவ்வொன்றும் கருணையில் குளிப்பாட்டியவை. அவை அன்னையை அழகாக்கிக் காட்டுகின்றன.
“என் அம்மா அழகாயில்லை” என சொல்கின்ற ஏதேனும் ஒரு குழந்தையைக் காட்ட முடியுமா ? அம்மா காட்டுகின்ற அன்பில் தான் குழந்தை அழகின் அர்த்தத்தை அறிந்து கொள்கிறது. அம்மா பூசும் முகப்பூச்சில் அல்ல. அதனால் தான் உலகிலேயே ரொம்ப அழகு என் அம்மா தான் என குழந்தைகள் குதூகலித்துச் சொல்லும்.
தாய்மைக்காலத்தில் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தவே பயன்படுத்தாதீர்கள் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். டாக்டர் என்ஜெல்மேன் எழுதிய கட்டுரையொன்றில் ஏகப்பட்ட அழகுசாதனப் பொருட்களை பட்டியலிட்டு அவற்றைத் தவிர்க்க வேண்டுமென தாய்மை நிலையிலுள்ள பெண்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். இது கடந்த ஆண்டு உலகின் பிரபல பத்திரிகையான வோக் இதழில் வந்து பரபரப்பைக் கிளப்பியது.
நாம் என்ன நிறத்தில் இருக்க வேண்டும், எந்த எடையில் இருக்க வேண்டும், எந்த உயரத்தில் இருக்க வேண்டும் என்பதை அடுத்த வீட்டு நபர் சொன்னால் எரிச்சலடைகிறோம். அதே விஷயத்தை வரவேற்பறையில் இருக்கும் தொலைக்காட்சி சொன்னால் ஒத்துக் கொள்கிறோம். அதுவும், பிடித்த நடிகரோ நடிகையோ சொன்னால் அவ்வளவு தான். அமெரிக்காவில், லண்டனில் என்று பீலா விட்டால் போயே போச்சு. இதெல்லாம் தேவையா என ஒரு சுய பரிசோதனை செய்து கொள்வோம்.
அமெரிக்காவில் பெண்கள் ஆண்டுக்கு சுமார் 35 மில்லியன் டாலர்களை செலவிட்டு உடலைக் குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். கடைசியில் பலர் அனரோக்ஸா எனும் நோய்க்குள் விழுந்து உயிரையும் இழக்கின்றனர். நம்மை நாமே ஏற்றுக் கொள்ள வேண்டும். நம்மை நாமே ஏற்றுக் கொள்ளாவிட்டால் பிறகு எப்படி அடுத்தவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் ?
பெண்கள் வெறும் போகப் பொருட்கள். அவர்கள் பிறருடைய கண்களுக்கு வனப்பான உடலோடு வலம் வரவேண்டும் எனும் மனநிலையை விளம்பர உலகம் வலிந்து திணிக்கிறது. அதை பெண்கள் நிராகரிக்க வேண்டும். பெண்கள் இன்று சமூகத்தின் அத்தனை உயரிய இருக்கைகளிலும் கம்பீரமாய் அமர்ந்திருக்கின்றனர். தொழில் நுட்ப உலகம் பெண்களை வியந்து பார்க்கிறது. அழகைக் காட்டி வசீகரிக்க வேண்டிய அவசியம் இன்று இல்லை, அறிவை நீட்டி உலகை வியக்க வைக்கலாம்.
எனவே புற அழகை புறந்தள்ளி, அக அழகை அணிந்து கொள்வோம். அந்த அகத்தின் அழகு முகத்தை அழகாக்கும். அகத்தின் அன்பு முகத்தை எழிலாக்கும். அகத்தின் குணம் முகத்தை வசீகரமாக்கும். அந்த அழகே நிரந்தரம். அதுவே உயர் தரம்.
— வெற்றி மைந்தன்
3,084 total views, 3 views today