திருமந்திரமும் வாழ்வியலும்

(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

இறைவன் ஒருவனே

சைவசித்தாந்த அடிப்படைக் கொள்கையாகிய சகலமும் சிவப்பரம்பொருளாகிய சிவபெருமானே என்னும் தத்துவத்தைப் பதினான்கு சைவசித்தாந்த சாஸ்திரங்களில் இரண்டாவதாகப் போற்றப்படும், சைவசித்தாந்த சாஸ்திரங்களில் மணிமுடியாக, முதலாவதாகப் போற்றப்படும், தட்சணாமூர்த்தியின் திருக்கரத்தில இருக்கும் பாக்கியம் பெற்ற மெய்கண்ட தேவநாயனாரால் எழுதப்பட்ட “சிவஞான போதம்” என்னும் நூலுக்குச் சார்பாக, வழி நூலாக, அருணந்தி சிவாச்சாரியாரால் எழுதப்பட்ட “சிவஞான சித்தியார்” என்னும் நூலில் “சிவம் சக்தி நாதம்… எனத் தொடங்கும் சுபக்கம் பாடல் எண் 164 இல் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்.
இறைவன் ஒருவனே என்னும் இக்கருத்தைத் திருமூல நாயனார் திருமந்திரத்தில் சிறப்புப் பாயிரத்தில் பின் வரும் இறைவணக்கப் பாடல் எண் 1 இல்

“ஒன்றவன்தானே இரண்டவன் இன்அருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழ்உம்பர்ச்
சென்றனன் தான்இருந் தான்உணர்ந்து எட்டே”.

ஒன்றாயிருப்பவன் (சிவம்), அவனே சிவனும் சக்தியுமாக இரண்டாகவும் இருக்கின்றான். சக்தியும் சிவமுமென இரண்டாயிருப்பவன் அவனே பிரமன், திருமால், உருத்திரன் என மூன்றாகவும் உள்ளான். அவன் நான்மறை (நான்கு வேதங்கள்) வடிவானவன். படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தொழிலுக்கும் அவனே தலைவன். சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், சௌரம், கௌமாரம் என்னும் ஆறு சமயப் பிரிவுகளாக இருப்பவன் அவனே. ஏழ் உலகங்களிலும் இருப்பவனும், அவற்றை இயக்குபவனும் அவனே. இப்படி எங்கும் நீக்கமற நிறைந்த பரம்பொருள் தன்வயமாதல், தூய உடலினன் ஆதல், இயற்கை உணர்வடைதல், முற்றும் உணர்தல், பற்றற்றிருத்தல், பேரருள் நோக்கு, முடிவில்லாமை, எல்லையில்லாமை ஆகிய எண்குணத்தவனாக இருக்கின்றான்.

சர்வமும் சதாசிவம் என வலியுறுத்தும் திருமந்திரப் பாடல் எண் 384
“தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய்
ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்
பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும்
சார்வத்துச் சத்திஓர் சாத்துமான் ஆமே”

அறிதற்கு அரியதாகத் தொலைவில் இருக்கிற சிவசோதி, அறிந்துணரக்கூடிய சக்தியாக, இச்சை வசப்பட்டு நாதமாகிய ஒலியைப் பொருந்தி ஒரு விந்து சக்தியாகி படைப்பாகிய சுமையைத் தாங்கும் சதாசிவம், இந்த நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்துக்கும் அவை சார்ந்திருக்கின்ற சக்தியாகவும், தான் ஒரு சக்தி உடையவனாகவும் திகழ்கின்றான்.
ஒன்றானவன் ஒன்றில் மூன்றானவன் எனக்கூறும் திருமந்திரப் பாடல் எண் 403

“நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங் கியங்கி அரன்திரு மாலவன்
மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
என்றிவ ராக இசைந்திருந் தானே”

எங்கும் நிறைந்திருக்கின்ற சதாசிவத்தோடு ஒன்றிக் கலந்திருக்கின்ற மகேஸ்வரன், காக்கும் தொழிலையும், அழிக்கும் தொழிலையும் செய்கின்ற போது திருமாலாகவும், உருத்திர மூர்த்தியாகவும் இருக்கின்றான். மற்றும் படைப்புத் தொழிலைச் செய்யும் தாமரை மேல் உள்ள பிரமனாகவும் அவனே இருக்கின்றான். இப்படிச் சிவன் ஒன்றானவன், செயலால் ஒன்றி மூன்றானவன்.

எகன் அனேகன் சிவனே எனக்கூறும் திருமந்திரப் பாடல் எண் 404
“ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளந்தான்
ஒருவனு மேஉல கேழும் கடந்தான்
ஒருவனு மேஉட லோடுயிர் தானே”
ஏழு உலகங்களையும் படைக்கிறவன் ஒருவனே. படைத்த இந்த ஏழு உலகங்களையும் காப்பாற்றி அருளுபவனும் அவனே. இந்த ஏழு உலகங்களையும் அழிப்பவனும் அவனே. உடலோடு உயிராக இயங்கி வருபவனும் அவனே. அவன் பிரமனாய்ப் படைத்தலையும், திருமாலாய்க் காத்தலையும், உருத்திரமூர்த்தியாய் அழித்தலையும் செய்கின்றான். உலகின் தோற்றம், நிகழ்வு, ஒடுக்கம் என மூன்றிலும் உயிர்ப்புடையவனாக இருப்பவன் சிவபெருமானே.
திசையும் அவனே தேவனும் அவனே எனக்கூறும் திருமந்திரப் பாடல் எண் 412

“தானே திசையொடு தேவரு மாய்நிற்கும்
தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்கும்
தானே கடல்மலை யாதியு மாய்நிற்கும்
தானே உலகில் தலைவனு மாமே”

இச்சிவப் பரம்பொருளே, எல்லாத் திசைகளும் அதனைக் காவல் செய்யும் தேவனுமாய் இருக்கின்றான். இவனே உயிர்களின் உடலாய் உயிராய் உண்மைப் பொருளாய் இருக்கின்றான். கடலும், மலையும் எனக் காணும் பொருள் எல்லாமுமாய் இருந்து, உலகிற்கு ஓர் ஒப்பற்ற தலைவனாகத் திகழ்பவனும் இவனே. சிவனே எல்லாம்.

படைக்கும் பரம்பொருள் சிவனே எனக்கூறும் திருமந்திரப் பாடல் எண் 417
“உற்று வனைவான் அவனே உலகினைப்
பெற்று வனைவான் அவனே பிறவியைச்
சுற்றிய சாலும் குடமுஞ் சிறுதூதை
மற்றும் அவனே வனையவல் லானே”

உலகத்தைப் படைக்க விரும்பி, அதனைத் தோற்றுவிப்பவன் சிவபெருமானே. உயிர்களுக்குப் பிறவியைக் கொடுத்து உதவுபவனும் அச்சிவபெருமானே. குயவர்கள் சுற்றிச் செய்கின்ற தாழியும் (பேரண்டம்), குடமும் (உலகம்), சிறிய கலயங்களும் (உயிர்கள்) ஆகிய இவற்றை எல்லாம் படைக்கின்றவன் பரம்பொருளாகிய சிவபெருமானே.

1,879 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *