மனிதருக்கு எத்தனை முகங்கள்
“யப்பா…. சரியான பச்சோந்தியா தான் இருப்பான் போல. அவன் வாயால சொன்னதையே இப்போ மாத்தி சொல்றான். அன்னிக்கு ஒரு மாதிரி பேசறான் இன்னிக்கு ஒரு மாதிரி பேசறான்”.
“யப்பப்பா என்னா நடிப்பு…. என்கிட்டே நல்லவ மாதிரி பேசிட்டு, அவ கிட்டே போய் என்னை பற்றி வேற மாதிரி சொல்லியிருக்கா. இவங்களையெல்லாம் நம்பவே கூடாது. புடவை மாதிரி முகத்தை மாத்திகிட்டே இருக்காங்க”
இப்படிப்பட்ட உரையாடல்களை நாம் அடிக்கடி சந்திக்கிறோம். பல வேளைகளில் நாம் இத்தகைய உரையாடல்களை நிகழ்த்தவும் செய்கிறோம். மக்கள் ஹெல்மெட்டை அணிந்து கொள்வது போல முகங்களை அணிந்து கொள்கிறார்கள் என்பது தான் நமது ஆதங்கம்.
உங்க வீட்ல முகம் பார்க்கும் கண்ணாடி இருக்கா ? அப்படின்னா முதல்ல அந்த கண்ணாடி முன்னாடி போய் நில்லுங்க. அந்த கண்ணாடியில் தெரியும் முகம் ஒரு நாளைக்கு எத்தனை தடவை எப்படியெல்லாம் தன்னோட முகத்தை மாற்றியிருக்கு என்பதை யோசிச்சு பாருங்க. அப்போ புரியும் ! முகங்களை மாற்றுவது என்பது பிறருடைய பழக்கம் மட்டுமல்ல, நம்முடைய பழக்கமும் அது தான் எனும் விஷயம்.
காலையில் எழும்பி சுடச்சுட ஒரு கப் தேனீர் குடிக்கும் போது இருக்கின்ற முகம் கொஞ்ச நேரத்தில் காணாமல் போய்விடும். அலுவலக பரபரப்புகளில் இன்னொரு முகம் வந்து அமர்ந்து கொள்ளும். கோபமும் எரிச்சலும் அந்த முகத்தில் படரும். அதே நேரத்தில் ஏதோ ஒரு நண்பனின் தொலைபேசி அழைப்பு வருகிறது என வைத்துக் கொள்ளுங்கள், சட்டென இன்னொரு முகம் வந்து தற்காலிகமாய் அமர்ந்து, அந்த கால் முடிந்தவுடன் காலார நடந்து போய்விடும்.
வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது பொதுவெளியில் இன்னொரு முகத்தை எடுத்து அணிந்து கொள்கிறோம். அந்த முகம் நமக்கே பிடிக்காத முகமாய் பல நேரங்களில் அமைந்து விடுகிறது. வெறுப்பின் வார்த்தைகளை அது வழிநெடுக உமிழ்ந்து கொண்டே வருகிறது.
அப்படியே வண்டியை அலுவலக பார்க்கிங் லாட்டில் நிறுத்தி விட்டு அலுவலகத்துக்குள் நுழையும் போது அணிவோம் பாருங்கள் ஒரு முகம் ! அந்த முகம் ஒரு சிறப்பான பணியாளனைப் போல ஜொலிக்கும். அதிலும் குறிப்பாக மேலதிகாரியைச் சந்திக்கும் போது முக்கனியின் சுவையைப் பிழிந்தெடுத்த ஒரு புன்னகையும் மரியாதையும் நம்மிடமிருந்து புறப்படும்.
அலுவகலத்தில் அணிவதற்கென நமக்கு பல பிரத்யேக முகங்கள் உண்டு. ரிசப்சனில் இருப்பவர்கள், செக்யூடிரி பணியாளர்கள், கேன்டீன் ஊழியர்கள், துப்புரவாளர்கள், நமக்குக் கீழே வேலை செய்பவர்கள், நமது உயரதிகாரிகள் என ஒவ்வொருவருக்கும் ஏற்ற வகையில் பல முகங்களைக் கொண்டு திரிகிறோம்.
நிமிடத்துக்கு நிமிடம், சூழலுக்கு ஏற்ப அந்த முகத்தை எடுத்து அணிந்து கொள்கிறோம். சில வேளைகளில் நாம் அணிந்திருக்கின்ற முகம் என்ன என்பதில் நாமே குழம்பிப் போவதும் உண்டு. அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் போது பிள்ளைகளின் முன்னால் புதிய ஒரு முகம். மனைவியின் முன்னால் இன்னொரு முகம் என குரங்குகளை விட வேகமாய்த் தாவுகிறோம்.
அத்துடன் நமது முகங்களின் சதுரங்கம் முடிவடைவதில்லை. ஆலயத்துக்குள் நுழையும் போது நமக்குள் இருக்கின்ற முகங்களில், புனிதத்தின் அதிகபட்ச சாயலுடைய ஒரு முகத்தை அணிந்து கொள்கிறோம். அந்த முகத்தில் பிழையின் சுருக்கங்கள் கூட இருக்காது. கழுவி வைத்த கடவுளைப் போல அந்த முகங்கள் பளிச்சிடும். கடவுளே கண்களைக் கசக்கிக் கொண்டு குழம்பிப் போய் பார்ப்பார். ஆலயம் முடிந்தபின் கழற்றி வீசப்படும் அந்த முகத்தின் வேலை அடுத்த ஆலய பிரவேசம் வரை தேவைப்படாது.
இப்படி நண்பர்களுடன் பேசுவதற்கு, தோழிகளிடம் பேசுவதற்கு, ரகசிய உரையாடல்களுக்கு, பொதுவெளி உரையாடல்களுக்கு, மேடைப் பேச்சுகளுக்கு, ஆடைப் பேச்சுகளுக்கு என ஒவ்வோர் தளத்துக்கும் தயாராக நாம் அவதாரங்களை அணிந்து கொள்கிறோம்.
இத்தனை முகங்களோடு முட்டி மோதி, முட்டியுடைந்து கிடக்கும் நாம் தான், இன்னொருவர் மீது மிக எளிதாக குற்றம் சுமத்தி விடுகிறோம். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. “நாம் நம்மைப் பற்றிய குறைகளை எளிதில் கண்டுகொள்வதில்லை. பிறருடைய குறைகளையே காண்கிறோம். இதற்குக் காரணம் நாம் நம்மைப் பற்றி உள்ளுக்குள் எழுதி வைக்கின்ற சமாதானங்களே” என்கிறது உளவியல்.
நமது வாழ்க்கையைப் பொறுத்தவரை நாம் செய்கின்ற தவறுகளைக் கூட சரியென்றே மனம் பதிவு செய்கிறது. பளிச் எனத் தெரியும் தவறுகளுக்கு “காரண காரியங்களை” துணைக்கு அழைத்துக் கொள்கிறது. அதே தவறை இன்னொருவர் செய்யும் போது “அவன் ஒரு பச்சோந்தி” என பளிச் என சொல்லி விடுகிறோம் , எந்த வித தயக்கமும் இல்லாமல்.
அலுவலகத்தில் இரண்டு வேலைகள் இருக்கின்றன என வைத்துக் கொள்ளுங்கள். ஒருவரை அழைத்து ஏதாவது ஒரு வேலையைச் செய்யச் சொன்னால் இருப்பதில் எளிதான வேலையைத் தான் அவர் செய்வார். ” ரெண்டுமே ஒரே மாதிரி வேலை தான்.. ஒண்ணு கஷ்டம் ஒண்ணு ஈசி என்றெல்லாம் கிடையாது” என தனது தேர்வை நியாயப்படுத்துவார். அதே நேரம், கடினமான வேலை அவருக்குத் தரப்பட்டால், “எனக்கு மட்டும் கஷ்டமான வேலை, அடுத்தவனுக்கு ஈசியான வேலை” என்பார். இது யதார்த்தம். இதை ஆய்வு முடிவுகளும் நிரூபித்திருக்கின்றன. நாம் போலித்தனத்தின் இயல்பில் வளர்கிறோம் என்பதையே இது ஊர்ஜிதப்படுத்துகிறது.
நண்பர்கள் காரசாரமாக வியர்க்க விறுவிறுக்க, கண்கள் சிவக்க, நரம்புகள் புடைக்க அரசியல் விவாதம் செய்வதைக் கண்டிருப்போம். அதே நண்பர் இன்னொரு கட்சி மாறி இன்னொருவரை ஆதரிக்கும் போது, சட்டென முகமூடியை மாற்றி நேர் எதிராக தனது கருத்துகளை அள்ளி வீசுவதையும் புன்னகையோடு எதிர்கொள்கிறோம்.
“நானெல்லாம் மதவாதியில்லை. மத நல்லிணக்கம் தான் தேவை. எல்லா மதமும் ஒரே விஷயத்தைத் தான் போதிக்குது.” என்றெல்லாம் பொதுவெளியில் பேசுகின்ற ஒருவர், தான் சார்ந்த மத நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போது முற்றிலும் வித்தியாசமான ஒரு மனிதராகப் பரிமளிப்பதை நாம் பார்க்கலாம்.
அமெரிக்க வீதியில் “நான் இந்தியன்” என மார்தட்டிக் கொள்ளும் நாம் அப்படியே மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கியதும் நான் இந்தியன் அல்ல, நான் தமிழன் என சட்டென ஒரு முகமூடியை அணிந்து கொள்கிறோம். அல்லது குறைந்தபட்சம் சென்னை வந்திறங்கும்போதாவது அதை அணிந்து கொள்கிறோம்.
சூழலுக்கும், ஆட்களுக்கும் தக்கபடி முகத்தை மாற்றுவது போல, பிறருடைய முகத்துக்கு ஏற்றபடி நாம் முகமூடி அணிந்து கொள்வதும் சர்வ சாதாரணமாய் நடக்கும். அதிலும் குறிப்பாக நமது மேலதிகாரிகள், நமது பிரியத்துக்குரியவர்கள் என்ன முகமூடி அணிந்திருக்கிறார்களோ அதன் அடிப்படையிலான முகமூடிகளை நாம் அணிந்து கொள்கிறோம். அதிகாரியின் முடிவுகளை ஆதரிக்கும் முகமூடிகள் நமக்கு பல நேரங்களில் அவசியமாகின்றன. மனைவியின் முடிவுகளுக்கு ஆமோதிக்கும் முகமூடிகள் நமக்கு எப்போதுமே தேவைப்படுகின்றன.
முகமூடிகள் சில நேரங்களில் அழகானவை. காதலியின் விரல்கோர்த்து கடற்கரை மணலில் புரளும் காதலன் சொல்கின்ற கவிதைப் பொய்கள் முகமூடியின் முல்லைப் பூக்கள். எனக்குப் பிடித்தது உன் கண்களும், உன் புன்னகையும் தான் என அவன் சொல்வதில் அக்மார்க் பொய் ஒளிந்திருக்கும். உன் அழகுக்காக நான் உன்னை விரும்பவில்லை, உன்னுடைய குணம் என்னை வசீகரித்துவிட்டது எனும் உரையாடலில் பொய்யின் ஆட்டுக்குட்டிகள் ஓடித் திரியும். அவையெல்லாம் அழகியலின் இழைகள். சிலிர்ப்பு மழையின் முகமூடிகள்.
முகமூடிகள் சில நேரங்களில் அவை அவசியமானவை. வீட்டில் பிஸியாக இருக்கும் நேரத்தில் வந்து நுழைகின்ற பக்கத்து தெரு அங்கிளை விரட்ட முடியாது. “வாங்க அங்கிள் வந்து ரொம்ப நாளாச்சு, நேற்று கூட பேசிட்டிருந்தோம், என்னடா அங்கிளை இன்னும் காணோமேன்னு” என சொல்லும் முகமூடிப் பதிலில் நிச்சயம் உண்மையில்லை. ஆனால் விருந்தோம்பலின் வழிப்பாதையில் அது அவசியம். காயப்படுத்தாத கனிவுப் பயணத்தில் அது அத்தியாவசியம்.
முகமூடிகள் சில நேரங்களில் அருவருப்பானவை. உறவுகளின் இடையே அவை போலியாய் நுழையும் போதும், நம்பிக்கையின் போர்வைகளில் அவை கொடும் நாகங்களாய் நகரும் போதும், அன்பின் அருவிகளில் அவை விஷத்துளிகளாய் கரையும் போதும் முகமூடிகள் அருவருப்பானவை. “சர்வம் மனைவி மயம்” என நடித்து விட்டு இன்னொரு காதலை வளர்ப்பவனின் முகமூடிகள் அவலட்சணமானவை. “கணவனே கண்கண்ட தெய்வம்” என போற்றி விட்டு இன்னொரு ரகசியக் காதலனைக் கொண்டிருக்கும் பெண்ணின் முகமூடிகள் வெறுப்புக்குரியவை. அவை சமூகத்தின் வேர்களிலிருந்து விலக்கப்பட வேண்டியவை.
நமது தேவை, பிறருடைய முகத்தில் இரண்டாம் தோலாக ஒட்டிக் கொண்டிருக்கும் முகமூடியை அடையாளம் காண்பதோ, அறுத்தெறிவதோ அல்ல. நமது மனதில் அலமாரிகளில் நாம் அடுக்கி வைத்திருக்கும் முகமூடிகளில் தேவையற்ற அத்தனை முகமூடிகளையும் ஆழக் கடலில் அமிழ்த்தி விடுவது தான். அதற்கு, நமது பார்வை பிறரைப் பார்க்கும் புறப்பார்வையாய் இல்லாமல், நம்மைப் பார்க்கும் அகப்பார்வையாய் மாற வேண்டும்.
இயேசுவின் வாழ்க்கையில் ஒரு நிகழ்வு உண்டு. இயேசு ஆலய முற்றத்தில் அமர்ந்து மணலில் எதையோ வரைந்து கொண்டிருக்கிறார். அப்போது பாலியல் குற்றத்தில் கையும் களவுமாகப் பிடிபட்டதாய் ஒரு பெண்ணை இயேசுவின் முன்னால் வீசுகிறார்கள் சதிகரர்கள். கூடியிருந்த மக்களின் கையில் கொலைவெறியுடன் மூச்சிரைக்கும் கற்கள். மோசேயின் சட்டப்படி பாலியல் குற்றம் செய்த பெண் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும். குற்றம் செய்த பெண் தரையில் கிடக்கிறார். இப்போது இயேசுவைப் பார்த்துக் கேட்கிறது கூட்டம். சட்டத்தைப் பின்பற்றி கல்லால் எறியவா ? எறியாமல் விட்டு விடவா ? என்ன சொல்கிறீர் ?
அந்தக் கேள்வி இரு புறமும் கூர்மையான வாள். ‘சரி..எறியுங்கள்’ என்றால் – இயேசு அன்பானவர், ஏழைத் தோழன், எளியவர்களின் பாதுகாவலர் எனும் பிம்பம் உடையும். ‘வேண்டாம் விட்டு விடுங்கள்’ என்றால் சட்டத்தை மீறியவர் எனும் தண்டனைக்குரிய குற்றம் வரும். இயேசு அந்தக் கேள்வியைச் சீண்டவில்லை. ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஒரே ஒரு வாக்கியம் சொன்னார்.
“உங்களில் பாவம் இல்லாதவன், முதல் கல்லை எறியட்டும்”
அவ்வளவு தான். திகைத்துப் போனது கூட்டம். எடுத்த கல்லைக் கொண்டு தங்களைத் தாங்களே எறியும் அவஸ்தை அவர்களுக்கு. எல்லோர் மனக்கண்ணிலும் அவர்களுடைய பாவத்தின் பட்டியல் வந்து நீண்டிருக்கும். அவர்கள் அணிந்திருந்த ‘மதக் காவலர்’ முகமூடி கிழிந்து தொங்கியது. வேறு வழியில்லை. கற்களைப் போட்டு விட்டு விலகிச் சென்றனர்.
இது தான் நம்மை நோக்கி நீட்டப்படும் கேள்வியும். நம்முடைய முகமூடிகள் எத்தனை ? அது யாரையெல்லாம் காயப்படுத்தியிருக்கிறது ? எந்தப் போலித்தனங்களெல்லாம் நம்மை விட்டு அகற்றப்பட வேண்டும் ? சிந்திப்போம். முகமூடிகளற்ற முகங்களோடு உறவுகளை நேசிப்போம். வாழ்க்கை அர்த்தப்படும்.
*
சேவியர்
2,963 total views, 2 views today