நான் வில்லனாக இருந்த சில கணங்கள்
முன்பு படிக்கும் காலத்தில் பஸ்சில் பயணம் செய்யும்போது எமது ஆசனத்தில் இடம் இருந்தால் அடுத்த பஸ்தரிப்பில் யாரும் வந்து ஏறுவார்கள். அப்படி ஏறும்போது எமது மனம் அட யார் வந்து ஏறி! பக்கத்தில் அமருகிறார்களோ என ஒரு கணம் சிந்திக்கும்.
எங்கும் தனிக்காட்டு ராஜாவாக செல்வேண்டும் என்பது மனித இயல்பாகிவிட்டது.
ஆனால் அருகில் வந்து ஒரு கிழவியோ, கிழவனோ, அன்றி ஓர் அழகிய பெண் அமர்ந்தால் தனிக்காட்டு ராஜா என்ற எண்ணம் தவிடுபொடியாகி, அருகே அமர்பவள் இளவரசியாகிவிடுவாள்.
எங்கோ ஒருத்தி எமக்கென்று பிறந்து இருக்கிறாள். ஆனால் அது யார் என்று தெரியாமல் அலைந்த காலம் அது. அதனால் அது இவளா! அவளா!! என்ற ஏக்கம் கலந்த தேடல் அன்று அதுவாக இருந்திருக்கலாம்.
இன்று யார் அவள் என்று தெரிந்தாகிவிட்டது. அதனால் அந்த தேடல் அற்றுப்போய்விட்டது. ஆனால் தனிக்காட்டு ராஜா என்ற எண்ணம் இன்றும் அற்றுப்போய்விடவில்லை.
ஆம் கனடாவில் இருந்து விமானத்தில் லண்டனுக்கு பயணமானேன். எல்லா ஆசனங்களும் நிரம்பியிருந்தன, ஆனால் நான்கு பேர் இருக்கும் நடு வரிசையில் எனக்கு இடது புறத்தில் மட்டும் ஒரு இடம் இருந்தது. எனக்கு முன் வரிசைகளிலும் இடம் உண்டா என்பது என் கண்ணுக்குத் தெரியவில்லை.
விமானம் புறப்பட இன்னும் 10 நிமிடங்கள்தான் இருந்தநிலையில் இனியார் வரப்போகிறார்கள் என்ற நினைவோடு நான் தனிக்காட்டு ராஜாவானேன்.
சிறுதலையணையை முதுகுப்பக்கம் வைத்து, படம் பார்ப்பதற்கு இயபோனை பொருத்தி எனது பயணத்தை தொடருவதற்கான சொகுசு ஒழுங்குளில் மும்மரமாக இருந்தேன்.
அப்போதுதான் தூரத்தில் ஒருவர் வருவது தெரிந்தது.
அட கடவுளே அவர் எனது பக்கத்தில் இருக்கும் சீட்டில்மட்டும் அமரப்படாது என கடவுளை வேண்டிக்கொண்டேன். எதற்கு எதற்கு எல்லாம் கடவுளை வேண்டுவது என்ற விவஸ்தையே இன்றிப்போச்சு.
அன்று பேருந்தில் அருகில் யாராவது அமர வந்துவிடுவார்களோ என்ற நினைப்பில் கூட இளம்பெண் என்றால் விதிவிலக்கு இருந்தது. ஆனால் இப்போ விதிவிலக்கு மருந்துக்கும் இல்லை. எவரும் அமரப்படாது என்பதில் மனம் படு உறுதியாகவே இருந்தது.
என் உறுதியைத் தகர்ப்பதுபோல் அந்த மனிதர் என்னை நோக்கியே வந்து கொண்டு இருந்தார். தூரத்தில் சிறிய உருவமாகத் தெரிந்தவர் கிட்ட கிட்ட நெருங்கும்போது அவர் விமான ஆசனத்தையே நொருக்குவார்போல் குண்டாக இருந்தார்.
என் கடவுள் நம்பிகை தவிடுபொடியாக, அவர் எனது பக்கத்து சீட்டில் அமர்ந்;தார். அமரும்போது ஒரு லொறி ஒன்று புஸ் என்று மூச்சுவிடுவது போல் காற்று சத்தம் கேட்டது.
எனது இடது பக்க இருக்கையின் கைபிடியைத்தாண்டி அவரது வயிறின் சிலபகுதி மேவிநின்றது. திரும்பிப்பார்த்தேன் அவர் எழுந்து நிற்பதுபோல் இருந்தார், ஆனால் அவர் நிற்கவில்லை இருக்கின்றார்.
பாதுகாப்பு பெல்ட் அணியமுடியாது தவிக்க நான் நல்லவன்போல் அவருக்கு அதனை எடுத்துக்கொடுக்கின்றேன். அவரால் அந்த பெல்ட்டை கொழுவமுடியவில்லை. சரி அவரால் கொழுவ முடியாது என்றால் பணிப்பெண் நிச்சயமாக அவருக்கு வேறு இடம் கொடுப்பார் என என் உள்மனம் மகிழ்ந்தது.
பணிப்பெண் நெருங்கிவரவும், அவர் பெரும் சிரமத்தின் மத்தியில் தனது அடிவயிற்றில் அந்த பெல்டைமாட்டிக்கொள்ளவும் நேரம் சரியாக இருந்தது. அடிக்கடி அவரது வாயுக்குள்ளால் மூச்சுக்காற்று வெளியேறிபடி இருந்தது.
சரி இனி நிச்சயம் லண்டன் வரை அவருடன்தான் பயணம் என்பது அது உறுதி. பஸ் என்றால் அடுத்த தரிப்பில் இறங்கச்சொல்லி மீண்டும் ஒரு விண்ணப்பத்தை ஆண்டவனுக்கு கொடுக்கலாம். ஆனால் இங்கு முடிந்த முடிவு.
விமானம் மேல் எழுந்தது. நான் கோழிக்குள் பதுங்கும் குஞ்சானேன். யூஸ்தந்தார்கள் அதனை அவர் வேண்டவில்லை. எப்படியோ எங்கோ ஒரு இடத்தில் இருந்து பயணிக்கவேண்டியவர் என்னருகில் அமர்ந்து விட்டார். என்வாழ்வில் இப்படி ஒருவர் எனக்கருகில் அமர்ந்ததது இதுவே முதல் முறை.
விமானம் மேல் ஏறி ஆடி ஆடி தன்னை நிலை நிறுத்தி சுமூகமாகப்பறக்கத் தொடங்கியது. எனது அருகில் இருந்த அந்த மாமலை மெல்ல மெல்ல தன்னை சுருக்க ஆரம்பித்தார். எனது இடதுபுறத்தோள் இப்போ மெல்ல வெளியே தெரிந்தது.
பயணம் தொடரந்தது. அவர்பின் எனக்கு எந்த அசௌகரியத்தையும் தரவில்லை. சும்மா மெல்லியவர்களுடன் இருந்தாலே பத்து தடவை கதிரையை பின்சரிப்பதும் முன்சரிப்பதும், சிறுநீர்கழிக்க பல தடவை எழும்புவதுமாக உயிரை வாங்குவார்கள். ஆனால் இன்று பக்கத்தில் இருக்கும் அந்த பெருமலையின் பெருமனம் அப்படி எந்த தொந்தரவும் தரவில்லை.
உணவு உண்ணும்போதும் மிகவும் அவதானமாக ஒரு துளியும் என்மீது சிந்தாமல் உண்டார். அவரது கவனம் முழுக்க முழுக்க அருகில் இருப்பவர்களுக்கு முடிந்தவரை இடைஞ்சல் தராமல் இருக்கவேண்டும், என்பதனை தனது முதல் 10 நிமிடத்திலேயே உணரவைத்துவிட்டார்.
விமானம் தரையிறங்க இன்னும் 10 நிடங்கள் உண்டு, எல்லோரையும் பெல்ட்டைபோடும்படி சமிக்கை வந்தது, நான் உடன் போட்டுக்கொண்டேன். ஆனால் அவர் போடவில்லை. அவர் விமானம் ஏறியதற்கு பெல்ட் கழட்டவே இல்லை.
நான் அவர்மீது கொண்ட தப்பான எண்ணத்திற்காக என் மனம் அவர்முன் மண்டியிட்டுநின்றது. வண்டி பெரிது அதனைவிடவும் அவர் மனம்; பெரிது. என்மீது எனக்கே வெறுப்பு வந்தது.
முதல் தடவையாக அவர் என்னைப்பார்த்து உங்களுக்கு கஸ்டத்தை கொடுத்திருந்தால் மன்னிக்கவும். பொதுவாக விமானப்பயணம் நான் செல்வது குறைவு. ஆனால் எனது அன்னையின் மரணத்திற்கு அஞ்சலிக்காக செல்கின்றேன். திரும்பும் போதும் என்னைப்போல் ஒருவர் வாய்த்;தால் கடவுளுக்கு நன்றி என்றார்.
எனக்கு பக் என்றது. அட கடவுளே நான் வேண்டியதை மட்டும் அவருக்கு சொல்லிவிடாதே.
தண்ணீர்கூட குடிக்காமல்;. குடித்தால் சிறுநீர்கழிக்கப்போகவேண்டும், அது எனக்கு சிரமம்தரும் என்று எண்ணி பயணித்த அந்த மனிதன் முகம் என் கண்ணைவிட்டு விலகவில்லை.
நான் வில்லன்போல் இருந்த அந்தக் கணப்பொழுதுகள்,என் கண்ணைவிட்டு விலகவில்லை..
எந்த மனிதரும்; கணப்பொழுதேனும் வாழ்வில் வில்லனாக வாழ்ந்திருப்போம். அந்தக்கணம் மீண்டும் வராமல் காப்போம்.
-மாதவி (சிவகுமாரன்)
1,781 total views, 3 views today