பிறர்மனை நாடுவோர்
‘என்னைப் பார்ப்பவர் யார்? இருள் என்னைச் சூழ்ந்துள்ளது. சுவர்கள் என்னை
மறைத்துக் கொள்கின்றன. யாரும் என்னைக் காண்பதில்லை. நான் ஏன் கவலைப்படவேண்டும்?
உன்னத இறைவன் என்பாவங்களை நினைத்துப்பாரார்’
எனத் தங்களுக்குள் சொல்லிக்கொள்வர்.
மனிதரின் கண்கள் கண்டுவிடுமோ என
அவர்கள் அஞ்சுகிறார்கள்.
ஆண்டவரின் கண்கள் கதிரவனைவிடப் பத்தாயிரம் மடங்கு ஒளி படைத்தவை;
அவை மாந்தரின் வழிகளையெல்லாம் காண்கின்றன்
மறைந்திருப்பவற்றை அறிகின்றன
என்பதை அவர்கள் அறியார்கள்
சீராக் : 23 : 18-19
சமீபத்தில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் வெளிநாடு ஒன்றில் தீக்கோழிப் பண்ணையில் பணிபுரிகிறார். தீக்கோழி தலையை மண்ணுக்குள் புதைத்து வைக்கும் என சின்ன வயதில் படித்திருக்கிறேன். ஆர்வம் உந்தித் தள்ள அவரிடம் அதைப்பற்றிக் கேட்டேன். மிகச் சத்தமாகச் சிரித்தவர் சொன்னார், “அதே மாதிரி ஒரு முட்டாள் பறவையைப் பாக்க முடியாது”
“ஏன் அப்படி சொல்றீங்க ?”
“அதுக்கு மணிக்கு சுமார் 95 கிலோ மீட்டர் வேகத்துல ஓடக்கூடிய அளவுக்கு பலமான கால்கள் உண்டு. அதே போல வலிமையான உடலும் உண்டு. அதனால் எந்த ஆபத்திலிருந்தும் அதனால் தப்ப முடியும். ஆனா அது அப்படிச் செய்யாது”
“என்ன செய்யும் ?”
“இறைச்சிக்காக அதை கொல்வது என்னோட வேலையில ஒன்று. எக்காரணம் கொண்டும் விரட்டிப் போய் அதைப் புடிக்கவோ, அடிக்கவோ முடியாது. ஆனல் கார்லயோ பைக்கிலையோ அதைத் துரத்தினால், வேகமா ஓடி சட்டென்று ஒரு இடத்தில் நின்று தலையை மண்ணுக்குள்ள புதைக்கும். அப்போ கையில் வைத்திருக்கும் தடியால் கழுத்தில ஒரே அடி, கோழி காலி” என்றார்.
ஆச்சரியமாக இருந்தது. தன்னிடம் வலிமை இருக்கிறது என்பது தெரிந்திருந்தும் தன் கால்களின் மீது நம்பிக்கை வைக்காமல் மண்ணுக்குள் தலையைப் புதைத்துக் கொள்ளும் அதன் முட்டாள் தனம் சிரிப்பாக இருந்தது. மண்ணுக்குள் தலையை மூடிக்கொண்டால் யாரும் தன்னைப் பார்க்க மாட்டார்கள் என்பது தான் அதன் நம்பிக்கை.
தீக் கோழியை முட்டாள் என முத்திரை குத்தி ஒதுக்கி விடும்போது, நாமும் அப்படித் தானே இருக்கிறோம் எனும் சிந்தனை மனதை அலைக்கழித்தது. மனிதருடைய கண்களுக்கு மறைவாக ஒரு செயலைச் செய்யும் போது, இறைவனுடைய கண்களுக்கும் அது மறைவாக இருக்கிறது என தவறாக புரிந்து கொள்கிறோம்.
பூனை கண்ணை மூடினா உலகமே இருண்டு போனதா நினைக்கும் என சொல்வார்கள். அப்படித் தான் மனித வாழ்க்கையும். மரத்துக்குப் பின்னால் ஒளிந்து கொண்டால் தன்னை கடவுளால் காண முடியாது எனும் முட்டாள்தனம் ஆதாமிடம் இருந்தது. அன்று மரம், இன்று வேறு ஏதோ ஒரு பொருள் அவ்வளவு தான் வித்தியாசம். தர்சீசுக்கு ஓடிப் போனால் கடவுளின் கண்களுக்கு மறையலாம் எனும் முட்டாள்தனம் யோனாவிடம் இருந்தது. அன்று கப்பல் இன்று வேறு ஒன்று அவ்வளவு தான் வித்தியாசம்.
கடந்த சில ஆண்டுகளாக பத்திரிகைகளில் தவறாமல் இடம்பெறும் ‘தகாத உறவு பலிகள்’ மிகப்பெரிய எச்சரிக்கை மணியை அடிக்கின்றன. கணவனுக்குத் தெரியாமல் மனைவியும், மனைவிக்குத் தெரியாமல்
கணவனும் செய்கின்ற பாலியல் பிழைகள் பல கொலைகளுக்கும், பல குடும்பங்களின் சிதைவுக்கும் காரணமாகிவிடுகின்றன. வெளியே தெரியாமல் இன்னும் பல்லாயிரம் பாலியல் பிழைகள் சமூகத்தில் வெள்ளை ஆடை போர்த்தி உலவிக்கொண்டிருக்கக் கூடும்.
மனிதர்களின் கண்களுக்கு அந்தத் தவறுகள் வெளிப்படும் போது அவை கொலையிலோ, உறவு முறிவிலோ முடிகின்றன. மனிதர்களின் கண்களுக்குத் தெரியாமல் இருக்கும் போது “தப்பி விட்டோம்” என மக்கள் நிம்மதி கொள்கின்றனர். ஆனால் ஆண்டவரின் கண்கள் வினாடி நேரமும் விடாமல் நம்மைக் கவனித்துக் கொண்டே இருக்கின்றன என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள்.
சீராக்கின் இந்த வசனம் நமக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை. பாவம் செய்தாலும் இறைவன் கண்டுகொள்ளமாட்டார் எனும் மனநிலை பாவத்தின் மீதான வேட்கையை அதிகரிக்கிறது. பாவத்தையும், பாவ சுபாவத்தையும் விட்டு விலகாமல், சுவர்களுக்குப் பின்னால் என்னை மறைத்துக் கொள்வேன் என்றோ, இருளில் நுழைந்து தப்புவேன் என்றோ தான் சொல்லிக் கொள்கிறோம். தீக்கோழியைப் போல. பிறன் மனை நோக்குதல் என்பது பிழைகளில் பெரிய பிழை. காரணங்கள் எதுவாக இருந்தாலும் அடிப்படையில் அது இறைவனின் விருப்பத்துக்கு எதிரான செயல். மனிதரின் கண்களை மறைப்பதல்ல முக்கியம், இறைவனின் கண்களில் மகிழ்ச்சியை நிறைப்பதே முக்கியம். இந்திரன் கெட்டதும் இதனாலே! பெண்ணாசை பொன்னாசையை விட கொடியது. தீக்கோழியாய் மண்ணில் தலையைப் புதைக்கும் தீய வாழ்க்கை நம்மிடம் இருந்தால் விலக்குவோம். நல்வழியை நோக்கிய பயணத்தை துவங்குவோம்.
— வெற்றி மைந்தன்
1,719 total views, 3 views today