தமிழன் தமிழனை வாழவைப்பதில்லை
பொய் அகல, நாளும் புகழ்விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் – கையகலக்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி!
வரலாற்றுச் சிறப்புக்கும், இலக்கியச் செழுமைக்கும் தமிழை விட்டால் உலகிலேயே வேறெதுவும் இல்லை. தமிழுக்கு இணையாக என்றில்லை. தமிழுக்கு பின்னாக அருகில் வரக் கூடிய தகுதி கூட வேறெந்த மொழிக்கும் இல்லை. அந்த அளவுக்கு இலக்கியச் செழுமைக்கும் , இலக்கண வளமைக்கும், வரலாற்று வியப்புக்கும் தமிழே அரியாசனம்.
தமிழர்களின் வரலாறும் அப்படியே. தொல்காப்பியர் காலம் தொட்டு, தற்காலக் காலம் வரை தமிழிலக்கியப் பங்களிப்புகளில் தமிழர்கள் வியக்க வைத்துக் கொண்டே இருக்கின்றனர். வீரத்தின் விளை நிலமாக தமிழர்களின் இல்லங்களே இருந்திருக்கின்றன. புறம் மட்டுமல்ல, முறம் கூட வீரத்தைப் பேசிய வரலாறு நமது.
வந்தாரை வாழவைக்கும் இனம் எனும் பெயர் தமிழினத்துக்கு உண்டு. அதற்காகவே வீடுகளின் முன்னால் திண்ணைகள் வைத்தும், ஊர்களின் முன்னால் சத்திரங்கள் வைத்தும் உயரிய வாழ்வியல் முறையை நிலைநாட்டியவன் தமிழன்.
தமிழனின் விருந்தோம்பல் கதைகள் சிலிர்க்க வைப்பவை. இரவில் வீட்டுக்கு வந்தவருக்கு உணவு சமைக்க ஒன்றுமில்லையென, முந்தின நாள் வயலில் விதைத்த விதை நெல்லைப் பொறுக்கி வந்து சமைத்துக் கொடுத்த இனம் தமிழ் இனம். யாரையும் பசியோடு அனுப்பிய பழக்கம் இருந்ததில்லை.
இன்னொரு கதையில், வீட்டுக்கு வந்தவரை உபசரிக்க வாழை இலை வெட்டப் போனான் மகன். பாம்பு கடித்து இறந்து போகிறான். இறந்த மகனின் உடலை ஓரமாய் பாயில் சுருட்டி வைத்து விட்டு, வந்தவருக்கு உணவளிக்க அமர்கிறார்கள் தாயும் தந்தையும். இந்த விருந்தோம்பல் குணம் தமிழனுக்கே உரியது. தன் குடும்பத்தின் அதிகபட்ச துயரத்தைக் கூட ஓரமாய் வைத்து விட்டு, விருந்தோம்பிய இனம் தமிழினம்.
வந்தவருக்கு இல்லையென சொன்னதும் இல்லை, சொன்ன சொல்லைக் காக்க எப்போதும் தவறியதும் இல்லை. வறியவருக்கு உதவத் தயங்கியதும் இல்லை. அறத்தினைப் பேண வழுவியதும் இல்லை.
மொத்தத்தில் தமிழர் என்னும் இனம் மட்டும் ஆதியில் தோன்றவில்லை. மனித இனத்தின் மாண்பும் அப்போதே தோன்றி விட்டது. உலகின் உன்னத வாழ்வியல் முறையும் அப்போதே தோன்றியது. இன்று நாம் ஏக்கத்தோடு பார்க்கும் உயரிய சிந்தனைகளும், கோட்பாடுகளும், வாழ்வும் அன்று தமிழரிடம் இயல்பாகவே இருந்திருக்கிறது.
தமிழரின் வரலாறையும், தன்மையையும், குணாதிசயங்களையும் திரும்பிப் பார்த்து வியக்கும் நாம் கேட்க வேண்டிய ஒரு கேள்வி, “இன்று நாம் எங்கே நிற்கிறோம் ?”. அந்த உன்னத அடையாளங்களை முழுமையாய் அழித்து விட்டு அவமானத்தின் அம்மணமாய் நிற்கிறோமா ? அல்லது இழந்து போன உணர்வு கூட இல்லாமல் திரிகிறோமா ?
கூண்டுக்குள் அடைக்கப்பட்ட சிங்கம் நாளாவட்டத்தில் தான் ஒரு சிங்கம் என்பதையே மறந்து விடும். அதன் பின்னர் எதிரே நிற்கும் வெள்ளாடு கூட அதை விரட்டி விரட்டி வேட்டையாடி விட முடியும். அப்படி கூண்டுக்குள் அடைக்கப்பட்ட சிங்கமாக சிக்கிக் கிடக்கிறது தமிழ் இனம். அதனிடம் முதலில் “நீ ஒரு சிங்கம்” எனும் உண்மையை உரைக்க வேண்டும். பின்னர், “இந்தக் கானகம் உனது ஆளுகைக்கு உட்பட்டது எனும் உண்மையைச் சொல்ல வேண்டும்”.
அப்போது தான், தன் முன்னால் வீசப்படுகின்ற உணவுப் பருக்கைகள் உண்மையில் நமது உணர்வுப் பருக்கைகளை உலர வைக்கும் சூத்திரம் என்பது புரியும். நம்மைத் தனிமைப்படுத்தித் தனிமைப்படுத்தி வலுவிழக்க வைக்க முயலும் வல்லூறுகளின் வஞ்சக நெஞ்சம் புரியும்.
இந்தச் சூழலில் நாம் கேட்க வேண்டிய கேள்வி. “தமிழனே… நீ என்ன செய்தாய் என்பதல்ல”. அப்படித் தான் கேள்வி கேட்டுக் கேட்டு நாம் நமது முகத்தில் கரியைப் பூசிக் கொண்டோம். கேட்க வேண்டிய கேள்வி, “தமிழனே நீ என்ன செய்தாய் என்பதல்ல”.. “தமிழனாய் நான் என்ன செய்தேன்” என்பது தான்.
காதலியின் விழிகளில் கூட வேலைக் கண்டு வீரம் வளர்த்த தமிழா, காதலியின் புருவத்தில் வில்லினைக் கண்டு தீரம் வளர்த்த தமிழா, இன்று ஏன் கோழைகளின் கூடாரத்தில் குடியிருக்கிறாய் ? என நம்மைப் பார்த்து நாமே கேட்க வேண்டும்.
களம் கண்டு மார்பிலே வீரப்புண் விழட்டுமடா என நெஞ்சுரம் காட்டியவன் தமிழன். களத்திலே மகன் வீழ்ந்து விட்டான் என்பதை அறிந்து ஓடிவரும் தாய், அவனது மார்பிலே ஈட்டி பாய்ந்து இறந்ததைக் கண்டு வீரப் பெருமிதம் அடைந்தாள். என் மகன் புறமுதுகிடவில்லை, விழுப்புண் வாங்கி வீழ்ந்தான் என மண்ணுக்காய் உயிரீந்த மகனுக்காய் மகிழ்ந்தவள் தமிழச்சி.
அந்த வீரத்தின் ஈரத்தை நமது வேர்களிலிருந்து மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு சூழலிலும் நாம் என்ன பங்களிப்பு செய்தோம் என்பதையே நாம் கேட்கவேண்டும். தமிழினத்தின் ஒவ்வோர் வீழ்ச்சிக்கும் நாமும் ஒரு காரணம் என்பதை உணரவேண்டும்.
ஒரு தமிழனை நம்பிப் போனால் அவன் கைவிடமாட்டான் எனும் நம்பிக்கையை நாம் முதலில் தமிழ் சமூகத்துக்கு விதைக்க வேண்டும். தமிழனின் வாக்கு மாறா குணம் என்றுமே மாறாது எனும் நம்பிக்கையை நாம் முதலில் மெய்ப்பிக்க வேண்டும். தமிழனின் இரக்க குணம் அரக்க குணமாவதில்லை என்பதை நாம் புரிய வைக்க வேண்டும். இவையெல்லாம் அடுத்தவனின் வாழ்க்கையிலல்ல, நமது வாழ்க்கையில் நடக்க வேண்டும்.
நமது பாதங்கள் நகரும் போது தான் நமது பயணம் உருவாகிறது. நமது பயணத்தை இன்னொருவர் நிறைவேற்றுவார் என நினைப்பது முட்டாள்தனம். நமது பாதங்களை வலுவூட்டுவதும், வரலாறுகளிலிருந்து நமது இயல்புகளை மீண்டெடுப்பதும் அவசியம்.
ஒரு தமிழனின் கஷ்டத்தை இன்னொரு தமிழன் தான் உணர்வான் எனும் உறுதியை நாம் விதைக்கத் துவங்குவோம். தமிழன் என்பவன் நிலம் தாண்டி வருவானே தவிர, அறம் தாண்டி வரமாட்டான் என்பதை இந்த அவனிக்கு உணர்த்துவோம். அது நம்மிடமிருந்து தான் துவங்க வேண்டும். நமது விரல்களே நமது வாழ்க்கையை வலுவூட்ட முடியும். நமது குரல்களே நமது வாழ்க்கைக்கு ஒலியூட்ட முடியும்.
தமிழன் எடுப்பார் கைப்பிள்ளையல்ல. அவன் சோம்பலின் பள்ளத்தாக்கில் புதையுண்டு கிடப்பவனும் அல்ல. அவன் பனிமலை மூடிய எரிமலை. அவனால் குளிராய் சிரிக்கவும் முடியும், அனலாய்க் கொதிக்கவும் முடியும் என்பதை உலகம் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு நாம் துணிந்து செல்ல வேண்டும்.
தமிழன் தமிழனை வாழவைப்பதில்லை எனும் வார்த்தை இனி எங்கும் எழவேண்டாம். அந்த இழிசொல்லுக்கு நான் காரணமாக மாட்டேன் எனும் உறுதியை நாம் எடுப்போம். உலகத்தை ஆளப் பிறந்தவன், பிறரை வாழ வைக்கத் தயங்கலாமா ? இந்தக் கேள்வியை நாம் நம்மைப் பார்த்துக் கேட்போம்.
போதும். புதைகுழியில் சிக்கிக் கொண்டால் யானையின் அருகில் தெருநாய் கூட சிறுநீர் கழிக்கும். அது நிலப்பரப்புக்கு வந்து நிமிரவேண்டும். நம்மை ஏமாற்றும் தந்திரங்களை நாம் வீழ்த்த வேண்டும். நாம் விதைகுழிகளில் விதைக்கப்பட வேண்டியவர்கள், புதைகுழிகளுக்குள் புதைக்கப்பட வேண்டியவர்களல்ல.
தமிழினம் என்பது இனிமேல் சர்வதேச இனம். எந்த நிலத்தில் நட்டாலும் ரோஜா கருப்பாவதில்லை. எந்த நிலத்தில் திரிந்தாலும் தமிழன் நிறம் மாறுவதில்லை. இந்த சிந்தனையை மனதில் வைப்போம்.
நான் யார் எனும் கேள்வி, எனக்குள்ளிருந்து எழுந்து, என்னிடமே கேட்டு, என்னை வலுவாக்கவேண்டும். அதுவே தமிழ்சமூகத்தின் இன்றைய தேவை.
கேட்போம்,
மீட்போம் !
அலாதீனும் அற்புதப் பெண்ணும்
ராம் பரமானந்தன்
தமிழன் தமிழனை வாழவைப்பதில்லை
-சேவியர்
2,767 total views, 3 views today