ராக மாலை

கர்நாடக இசையும்
தமிழர் வாழ்வியலும்”

கடந்த 01.07.2019 அன்று (Hochschule für Musik Mainz) இடத்தில் யேர்மனிய பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து வழங்கிய “ராகமாலை”. இதனை முதன்முறையாக பல்கலைக்கழக வளாகத்தில் ” கர்நாடக இசையும் தமிழர் வாழ்வியலும்” எனும் நிகழ்வு ராம் பரமானந்தன் இயக்கத்தில் இடம்பெற்றது. விழா மண்டபத்தில் பல பெண்கள் புடவையில் தெரிந்தார்கள். நிகழ்ச்சி செய்ய அவர்கள் ஆயத்தமாகி இருந்தவர்கள், ராம் பரமானந்தன் தவிர மற்றவர்கள் எல்லோரும் யேர்மானியர்கள். எமது இளையோர் எமது மொழி, எமது கல்வி, எமது கலாசாரம் என்ன? என்ற கேள்வி எழுப்பும் காலகட்டத்தில், இந்த நாட்டவர் அதற்குள் வருகிறார்கள்.

7-30 நிகழ்வு ஆரம்பமாகின்றது, யேர்மனியர்கள் எங்கள் இந்து தெய்வங்களை எமக்கு அறிமுகப்படுத்துகிறார்கள். ராம் பரமானந்தன் நடுவில் வீற்றிருக்க, வலம் இடமாக யேர்மனிய மாணவ, மாணவிகள். இரு கரையிலும் மிருதங்கம் திவாகரன் துதியானந்தன், வயலின் ஆதவன் விக்கிரமன்.
விநாயகப் பெருமானின் “மகாகணபதி” யுடன். ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு விதமான தாளவாத்தியங்களை, இயக்கி அழகாகத் தொடங்கியமாலை, எம் தாயகத்தின் அவலங்களை, போர்க்களத்தின் கொடிய நிலைகளை , கலை , கலாசார அழிவுகளை, ஒவ்வொன்றாக விளக்கத்துடன் பாடல்களாக்கி, தமிழர்களின் மிகச்சிறந்த யாழ்நூலகத்தை அழிவுக் குள்ளாக்கிய கதையை பாரதிதாசனின் “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா” என்று பாடும்போது, பல வருடங்களாக யேர்மனியில் வாழும் எமக்கு, எமது நாட்டு பழைய நினவுகள் கவலை தந்தபோதும், எமது அடுத்த தலைமுறை இளைஞன் ,நாட்டின் பிரச்சனையை எடுத்து , ஜெர்மனியர்களுடன் கைகோர்த்து முழுமையான ஈடுபாட்டுடன் எல்லோருமாக ஒரு இசைமாலையாக நடத்துவதும், நமக்கு நடந்த இன்னல்களை ஜேர்மனியர்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் அழகான மாலையாகத்தொகுக்கப்பட்டிருந்ததும் மிகச்சிறப்பே.

ஜெர்மனியப் பெண்கள் புடவை உடுத்து நிலத்தில் சம்மணமிட்டு இருந்து ஒவ்வொரு தாள வாத்தியங்களும் இசைத்து சுரம் பாடியபோது, மெய்யான ரசனையுடன், எமது இசையுடன் மனதோடு ஒன்றி, மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன், எமது கலையை எமக்கு உணர்த்தி ரசிக்கவைத் தார்கள்.
இப்படியான ஈடுபாட்டுடன் பயிற்றுவிக்கக் கூடிய ஒருசிறந்த இளைஞனை உருவாக்கிய தாய்,தந்தை, குரு இவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
ராம் இங்கு யேர்மனியில் பிறந்து, அம்மா, அப்பா, தங்கை என்ற உறவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். முடிந்துவிட்ட காலங்களை, தொலைத்துவிட்ட உறவுகளை ஆசைமுகம் மறந்துபோச்சே, என்று யேர்மனியர்களுடன் பகிர்ந்து தேடுகிறான், ராம் உன்போன்ற இளையோர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள். இன்னுமொரு இனத்திற்கு அதுவும் சிறந்த நாகரிகத்திலும் இருக்கும் யேர்மனியர்களுக்கும் எடுத்துச்செல்லும் பணி போற்றத்தக்கது.
-வதனி செல்வகாந்தன்.

2,072 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *