கண்ணே கண்வளராய்

அம்மாவிடம் முதல் கேட்ட பாடல் ஆராரோ.. ஆரிரரோ… , முதலில் எடுத்த ஓய்வு, புலன்களின் நிம்மதி, அடுத்த தருணங்களுக்கான சக்தி சேமிப்பு, களைப்பு நீக்கும் அருமருந்து, தேவையற்ற விடயங்களை மறப்பதற்கு தேடும் புகலிடம், தனக்கு தானே ஏற்படுத்திய தாய் மடி, உடலுறுப்புக்களின் தளர்வு இப்படி எத்தனையோ நேர்மறையான வார்த்தைகளுக்கெல்லாம் சொந்தமானது உறக்கம். இந்த உறக்கத்தில் வரும் பாதிப்புக்கள் உடலில் மட்டுமல்லாது மனநிலையிலும் தீவிர தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

உடலானது பஞ்ச பூதக் கலவை எனப்படுகிறது. அதன் இயக்கத்திற்கும் வெளியில் இருந்து அதே பஞ்ச பூத ஆற்றல் தேவைப்படுகிறது. நிலம், நீர் என்பன உணவிலும், காற்று சுவாசத்திலும், நெருப்பு தட்பவெட்ப சூழ்நிலையிலும் கிடைத்து விடும். ஆனால் ஆகாய ஆற்றல் மட்டும் உறக்கம் மற்றும் தியானத்தில் தான் கிடைக்கிறது. தியானத்தை விழிப்புணர்வு உள்ள தூக்கம் என்றும், தூக்கத்தை விழிப்புணர்வு அற்ற தியானம் என்றும் கூறுவார்கள். ஆகாய ஆற்றல் உயிர் இருப்பின் ஆதார சக்தியாகும். அதுவே மூளையின் செயற்பாட்டின் மூலமாகும்.
சுருங்க சொன்னால், தூக்கம் மூளையின் செயல்பாட்டை ஒழுங்கு படுத்துகிறது. எனவே, இயற்கையாகவே, தூக்கம் என்பது உயிரினத்தில் ஒரு வாழ்வியல் செயலாக இருக்கிறது. இதற்கு காரணம், உடலில் சுரக்கும் (ஹார்மோன்) உயிர் வேதிபொருள். அது ‘மெலடோனின்’ என்று அழைக்கப்படுகிறது. மெலடோனின் எல்லா விலங்குகளின் மூளையில் இருக்கும் பீனியல் சுரப்பியில் (pineal gland) சுரக்கும்.

தூக்கம் தவிர்த்தலின் அபாயத்தை ஆய்வுகள் பல எடுத்துரைக்கின்றன. அவற்றில் எத்தனையோ ஆய்வுகள் சட்ட விரோதமான முறையிலும் மனித கைதிகளை வைத்து நிகழ்த்தப்பட்டமையால் வெகுவாக வெளிவரவில்லை எனக் கூறப்படுகிறது. சிலரை தேர்வு செய்து அவர்களுக்கு உறக்கம் வராதபடி மருந்துகளை கொடுத்து ஒரு அறையில் அடைத்து வைத்து இந்தவகை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆய்வில் இரண்டு நாட்களின் பின்னர் அவர்கள் நடத்தையில் ஏற்பட்ட அதிர்ச்சியான மாற்றங்களை பதிவு செய்துள்ளனர். ஐந்து நாட்களின் பின்னர் சிறிது நிமிடங்கள் கூட தூங்கமுடியாமல் இருந்தவர்கள் மனநலன் பாதிக்கப்பட்டு தம் கூட இருந்தவர்களை தாக்க தொடங்கி பின் சில நாட்கள் கழிய தம்மை தாமே தாக்கியும், வினோத ஒலியை எழுப்பி மனித இனம் அற்ற ஏதோ ஒரு நிலைக்கு சென்றதாகவும் அவர்கள் மூளையில் ஏற்பட்ட மாற்றத்தின் கோரத்தன்மை தம்மை தாமே பிய்த்து உண்ணுமளவுக்கு மிக கொடூரமான முறையில் அவர்களை மாற்றிவிட்டதாகவும் கூறுகின்றனர். இருப்பினும் மனிதாபிமானமற்ற இந்த ஆய்வு சட்டப்படி தவறு என்பதால் பதிவு செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இப்படி பல வகையான ஆய்வுகளில் கூறப்பட்டிருப்பினும் நாம் தூக்கத்தின் முக்கியத்துவத்தை மட்டும் இங்கு எடுத்துக் கொள்வோம்.

எங்கள் மரபில் சித்தர்கள் தூக்கம் என்ற விடயத்தை பிரதானப்படுத்தி கூறியுள்ளனர். தூக்கக் குறைவால் வரும் ஆபத்தை
“சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக் கமைந்த மென்பவை
களித்தமுற வண்டுஞ் சிலரை நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை நம்பிக் காண்” என்று கூறியுள்ளனர்.

இதன் விளக்கம்: இரவில் நன்றாக
உறங்காதவர்களுக்கு புத்தி மயக்கம்,
தெளிவின்மை, ஐம்புலன்களில் சோர்வு,
பயம், படபடப்பு, அக்னிமந்தம், செரியாமை,
மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.
வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல் இரவில் நித்திரையில்லாதவரை பற்பல நோய்கள் கவ்விக் கொள்ளும் என்றும்,
மேலும் உறங்குவதற்கு தலை வைக்க ஏற்ற திசைகள் எப்படி அமைய வேண்டும் என்பதையும் இலகுவாக புரிந்து கொள்ளும்படி சுருக்கமாக கூறியுள்ளனர்.

“உத்தமம் கிழக்கு, ஓங்குயிர் தெற்கு
மத்திமம் மேற்கு, மரணம் வடக்கு”
கிழக்கு திசையில் தலை வைத்து படுத்தல் நலம். மூளை பலம் பெறும், நினைவாற்றல் பெருகும். கனவு கலக்கம் இன்றி உறங்கலாம். தெற்கே தலை வைத்து படுப்பதனால் சுவாசம் நன்கு இயங்கி நீண்ட ஆயுள் பெறலாம். மேற்கே தலை வைத்து படுத்தால் அதிக கனவுகள் தொல்லை கொடுக்கும், தூக்கத்தில் அடிக்கடி விழிப்பு ஏற்படும் எனவே அந்த திசை அவ்வளவு நல்லதல்ல . வடக்கு திசையில் தலை வைத்து படுத்தால் மரணம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனெனில் வட திசை காந்தப்புல திசையாகும். இது பிராண சக்தியோடு எதிர்த் தாக்கம் புரிகிறது எனவேதான் இத்திசையில் தலை வைத்துப் படுத்தல் தூக்கத்திற்கு உகந்ததல்ல.

உடலின் செயல்களை சீராக்கும் ‘Circadian clock’ என்ற ஒரு கடிகாரம் மூளையில் செயல்படுகிறது. அந்த அகச்சுழற்சி சரியாக இயங்குவதற்கு ஆரோக்கியமான ஆழமான உறக்கம் மிக முக்கியம். அப்போது நம் உடலில் உள்ள பல்வேறு ஹார்மோன்கள் சரியாக சுரப்பதற்கு இலகுவாக இருக்கிறது. முறையாகத் தூங்காத நாட்களில் உடலின் செயல்திறன் குறைவதை உணர முடியும்.
தூக்கத்தை கட்டுப்படுத்தும் வழக்கத்தை கொண்டவர்களுக்கு கீழ்காணும் உபாதைகள் ஏற்படும் என சித்தர்கள் மட்டுமல்லாது நவீன மருத்துவமும் எச்சரித்துள்ளது.
மயக்கம், தலை – கண்களில் பாரம், சோம்பேறித்தனம், கொட்டாவி, உடல்வலி, மூளைச்சோர்வு, உடற்சூடு, பித்த ஏற்றம், கண்பார்வை புகைத்தல், கண்மடல்கள் வீக்கம், கண் சிறு நரம்புகளில் வெடிப்பு, மன அழுத்தம் போன்றவை முதற்கட்டமாக ஏற்படும். இந்நிலை தொடருமாயின் பெரும் விளைவுகள் ஏற்படும்.

அதிக கொழுப்பு சக்தி உள்ளவர்கள், கபச்சீற்றம் உள்ளவர்களும், எண்ணெய் குளியல் செய்பவர்கள் குளியல் நாளிலும் பகலில் தூங்கக்கூடாது. கர்ப்பிணிகளும் பகலில் அதிகம் தூங்க கூடாது, நஞ்சு தீண்டப் பெற்றவனும், தொண்டை, நோய் உள்ளவனும் இரவிலும் உறங்கக்கூடாது.

தகாத காலத்தில் உறங்குவதால் காமாலைநோய், மயக்கம், உடல் அசைக்க முடியாமற் போதல், உடல்பளு, காய்ச்சல், தலைசுற்றல், அறிவிழத்தல், வியர்வை வெளியேறாதிருத்தல், பசிகுறைதல், வீக்கம், சுவையின்மை, மனப்பிரட்டல், நாட்பட்ட ஜலதோஷம், ஒற்றைத் தலைவலி, குடல்வலி, குஷ்டம், சிறுகட்டிகள், இருமல், சோம்பல், தொண்டைநோய் போன்றவை ஏற்படும். விஷம் தீண்டப்பட்டவர் தூங்க கூடாது. விஷம் இறங்கும் வரை அமைதியாக விழித்திருக்க வேண்டும். தூங்கிவிட்டால் விஷத்தின் செயல் அதிகரித்தல். தலைவரை விஷம் ஏறி உடலெங்கும் பரவுதல் போன்ற தீமைகள் ஏற்படும்.

தூக்கமின்மைக்கான காரணங்களாக பலவற்றைக் கூற முடியும். மனத்தாங்கல்கள், பழியுணர்ச்சி, விரக்தி, வேலைப்பளு, குடும்பத்தில் சிக்கல்கள், மதுப்பழக்கம், புகைப்பிடித்தல், உடல் ரீதியான கோளாறுகள் இரத்தக்கொதிப்பு, மனதுக்கு பிடிக்காத வாழ்க்கை முறை அல்லது இருப்பிடம், சுவாசம் சம்பந்தமான கோளாறுகள் என பல காரணங்களினால் ஒருவரின் தூக்கம் பாதிப்படையலாம். உறங்கும் இடத்தில் வெளிச்சம், சத்தம், அதிக உஷ்ணம், துர்நாற்றம் போன்ற சில புறக்காரணங்களும் ஒருவரின் தூக்கத்தை பாதிக்கும். இரவு நேரம் தாமதமாக உண்பது, மிக கடினமான உணவுகள் உண்பது, அதிகமாக உண்பது, உண்டவுடன் உறங்குவது, இரவு நேரங்களில் காபி, டீ அருந்துவது போன்ற பழக்கங்கள் தூக்கத்தை பாதிக்கும்
எட்டு மணிநேர தூக்கம் அவசியம் என்பார்கள். ஆனால் எல்லோருக்கும் ஒரே மாதிரி இல்லை! தனிப்பட்ட நபர்களுக்கு தக்கபடி தூக்கத்தின் நேரம் அதிகரிக்கவோ, குறையவோ செய்யும். உடல் உழைப்பு அதிகம் கொண்டவர்களைவிட, மனதிற்கு, மூளைக்கு அதிகம் வேலை கொடுப்பவர்கள் அதிக நேரம் தூங்க வேண்டும். நோயாளிகளும், குழந்தைகளும் அதிக நேரம் தூங்கவேண்டியிருக்கும். முறையாக தூங்காவிடினும் மூளைச் சோர்வை ஏற்படுத்தும். இரவு தூங்காமல் இருப்பது நினைவாற்றலைக் குறைக்கிறது. இரவில் நேரம் கடந்த தூக்கம் என்பது மன அழுத்தம், பதற்றம், கண் குறைபாடுகள், முக வாட்டம் போன்றவை ஏற்படுகிறது. இங்கு கூறப்பட்ட பக்க விளைவுகளே அதிகம் போல் இருக்கையில் இதைவிட அதிக தாக்கம் உறக்கமின்மையால் ஏற்படும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தூக்கத்திற்கு ஏற்ற சூழல் மிக அவசியம் அதிக பொருட்கள் அற்ற காற்றோட்டமான அறையில் இதமான தலையணையுடன், நன்கு பரப்பப்பட்டு, மேடுபள்ளமில்லாத சமதரையில் பாய் போட்டு அல்லது மெத்தையில் படுக்கவேண்டும். முன்னதாக குளித்தல், இதமான காற்றோட்டமான ஆடை அணிதல், வெதுவெதுப்பான பால் அருந்துதல் தூக்கத்தை இலகுபடுத்தும். தூங்கச் செல்லும் போது எந்தவிதமான மனக்குழப்பங்களும், மறுநாள் வேலை பற்றிய சிந்தனையும் இன்றி ஓய்வெடுப்பதற்காகவே உடலை தளர்வாக்கி உறங்க வேண்டும். படுத்திருந்து தியான நிலையில் அமைதியாக சுவாசித்து தூங்கிவிட வேண்டும். அந்த நாளுக்கான நன்றியுணர்வோடு தூங்குதலும், நன்றியுணர்வோடு விழித்தெழுதலும் புத்துணர்வோடு இருக்க வழிவகுக்கும்.

மனச்சிக்கல் இன்றி தூங்கச் சென்று, மலச்சிக்கல் இன்றி விழித்தெழ வேண்டும் அப்போது உடலும், உளமும் ஆரோக்கியமாகும்.

-கரணி

2,009 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *