கனடா தமிழர் தகவல் ஆசிரியருக்கு தமிழ் இலக்கியத் தோட்ட விருது
கனடாவைத் தளமாகக் கொண்டு சர்வதேச ரீதியாக இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் பதினெட்டாவது ஆண்டு விருது விழா கடந்த மாதம் ஒன்பதாம் திகதி ரொறன்ரோ நகரில் இடம்பெற்றது
அமெரிக்காவின் மருத்துவப் பேராசிரியர் ஜானகி ராமன் மற்றும் நியுயோர்க் கொலம்பியா பல்கலைக்கழக தமிழ் மொழி விரிவுரையாளர் ரைலர் றிச்சார்ட் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக இவ்விழாவில் பங்குபற்றினர். இலக்கியத் தோட்ட காப்பாளர் பேராசிரியர் அமுது ஜோசப் சந்திரகாந்தன், தலைவர் சட்டவாளர் மனுவல் ஜேசுதாசன், செயலாளர் அ. முத்துலிங்கம் ஆகியோரின் உரைகளைத் தொடர்ந்து விருதுகள் வழங்கப்பட்டன.
தமிழிலக்கியத்துக்கும் சமூகத்துக்கும் பன்முக ஆளுமையுடன் ஐம்பதாண்டு களுக்கு மேலாக ஆற்றிவரும் பணிகளுக்காக தமிழ் இலக்கிய சாதனை சிறப்பு விருதுடன் ஆயிரம் கனடிய டாலர்கள் பரிசுத்தொகை கனடா தமிழர் தகவல் முதன்மை ஆசிரியரான திரு எஸ். திருச்செல்வம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. விருது விழா தொடர்பாக வெளியிடப்பட்ட சிறப்பு இதழில் இவ்விருது தொடர்பாக திருச்செல்வம் அவர்கள் பின்வருமாறு அறிமுகம் செய்யப்பட்டிருந்தார்.
‘எஸ்தி என்ற பெயரில் ஊடக – இலக்கியப் பரப்பில் நன்கு அறியப்பட்டவரான திரு எஸ். திருச்செல்வம் அவர்கள் யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மாணவப் பராயத்திலேயே எழுத்துலகில் புகுந்த இவர், பத்திரிகைத்துறையில் பாதம் பதித்து முழுநேர ஊடக வியலாளரா னார். யாழ்ப்பாணம் ஈழநாடு, கொழும்பு தினகரன் பத்திரிகைகளின் ஆசிரிய பீடத்தில் பணியாற்றிய பின்னர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆங்கில செய்திப் பிரிவில் பணிபுரிந்தார். தினகரனில் 14 வருடங்களுக்கு மேலாக இவர் எழுதிவந்த “அறுவடை“ என்ற இலக்கியப் பத்தி மிகப்பிரபலமானது.
1983க்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் ஈழமுரசு, முரசொலி ஆகிய இரண்டு தினசரிப் பத்திரிகைகளை ஆரம்பித்து அவற்றின் நிறுவன ஆசிரியராக
பணியாற்றிய இவருக்கு மட்டுமே, இலங்கையில் இரண்டு தினசரிகளை ஆரம்பித்து அதன் ஆசிரியராக விளங்கிய பெருமையுண்டு.
கனடாவில் 1991ஆம் ஆண்டு ஷதமிழர் தகவல்| சஞ்சிகை வெளியிட ஆரம்பித்து, இப்போது 29வது ஆண்டாக மாதா மாதம் வெளியிட்டு வருவது தனிச்சாதனை. இதன் ஆசிரியராக விளங்கி வருடந்தோறும் வெளியிட்டு வரும் ஆண்டு மலர் தமிழர் சமூக வரலாற்று ஆவணமாகத் திகழ்ந்து வருகிறது.
பல புனைபெயர்களில் இலக்கிய விமர்சனம், அரசியல் ஆய்வு என்பவற்றை எழுதி வருவதோடு சமூக செயற் பாட்டாளராகவும் அரசியல் விமர்சகராகவும் பணியாற்றி வருகிறார்.
கனடியத் தமிழ் சமூகத்தில் கடந்து 28 ஆண்டுகளாகத் தொடர்ந்து தகுந்த ஆளுமைகளுக்கு விருது வழங்குவதை ஆரம்பித்து செயற்படுத்தி வருகிறார். ஊடகத்துறையில் ஐம்பது ஆண்டுகளைப் பூர்த்தி செய்த இவர் ஒன்ராறியோ மாகாண அரசின் முதலாவது குடிவரவாளர் சாம்பியன் விருது, கனடிய பிரபல எழுத்தாளரும் ஊடகவியலாளருமான ஜூன் கால்வூட் ஞாபகார்த்த பிரஜாவுரிமை அமைச்சின் அதியுயர் சேவை விருது ஆகியவற்றைப் பெற்றவர்” என்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விழாவில் தமிழகத்தின் பிரபல எழுத்தாளரான இமையனுக்கு இயல் விருது வழங்கப்பட்டது. மேலும் எண்மர் வெவ்வேறு இலக்கியத் துறைகளுக்கு விருதுகள் பெற்றனர்.
2,417 total views, 2 views today