சர்வதேசத்தை சீண்டிவிட்டுள்ள இராணுவத் தளபதி நியமனம்.

இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இடையிலான உறவுகளில் மீண்டும் ஒரு நெருடல் ஏற்பட்டிருக்கின்றது. போர்க் குற்றவாளி என இனங் காணப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வாவை இராணுவத் தளபதியாக ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன நியமித்திருப்பதையடுத்தே இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது. இந்த நியமனத்துக்கு எதிராக சர்வதேசம் குரல் கொடுக்க, “நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள். இராணுவத் தளபதியாக யாரை நியமிக்க வேண்டும் என்பது எமக்குத் தெரியும்” என்ற வகையில் இலங்கை பதிலளிக்க விவகாரம் இப்போது சூடுபிடித்திருக்கின்றது. இலங்கைக்கும் மேற்கு நாடுகளுக்குமிடையிலான அறிக்கைப் போர் ஒன்றுக்கு இது வழிவகுத்துள்ளது.

போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்ற சர்வதேசத்தின் குரலை தொடர்ந்தும் அலட்சியப் படுத்தும் இலங்கை, போர்க் குற்றவாளி என அடையாளம் காணப்பட்டுள்ள ஒருவரை புதிய இராணுவத் தளபதியாக நியமித்திருப்பது நிச்சயமாக சர்ச்சையைக் கிளப்பும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். இதன் மூலம் சர்வதேச சமூகத்துக்கு இலங்கை சொல்லும் செய்தி முக்கியமானது. “போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறப்படாது” என்ற செய்தியை இதன் மூலம், மைத்திரி உரத்துக்குறியிருக்கின்றார் என்றே கொள்ள வேண்டும். போர்க் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தப்படாது என்பதுடன், அவர்களுக்கு உயர் பதவிகள் வழங்கி கௌரவிக்க தயாராகவுள்ளோம் என்ற செய்தியுமே இதன் மூலம் சொல்லப்பட்டுள்ளது. இது சர்வதேசத்துக்கு விடுக்கப்படும் ஒரு மிகப் பெரிய சவால்.

கடுமையான எதிர்ப்புக்கள் உருவாகும் என்பதையும் தெரிந்துகொண்டே மைத்திரி இந்த நியமனத்தை வழங்கியிருக்கின்றார். இன்னும் நான்கு மாதங்களே ஜனாதிபதியாகப் பதவியிலிருக்கப்போகும் அவர், பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தாபாய ராஜபக்ஷவைத் திருப்திப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த நியமனத்தை வழங்கியிருக்கலாம். சவேந்திர சில்வா, கோத்தாபாய ராஜபக்ஷவின் நம்பிக்கைக்குரிய ஒருவர். எது எப்படியிருந்தாலும், போர்க்குற்ற விசாரணை, பொறுப்புக் கூறல் என்பன தொடர்பாக இலங்கை அரசாங்கம் ஏற்கனவே சர்வதேச சமூகத்தின் முன்பாக வழங்கிய உறுதிமொழிகளை முற்றாக நலிவடையச் செய்யும் ஒரு செயற்பாடாகவே இதனைக் கருதமுடியும்.

இலங்கையின் அரச படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதிப்போரில் பாரிய அளவி லான மனித உரிமை மீறல்களும், மனிதாபிமானத்துக்கு விரோதமான செயற்பாடுகளும் இடம்பெற்றிருப்பதை ஐ.நா. கூட உறுதிப்படுத்தியிருக்கின்றது. இவ்வாறான செயற் பாடுகளில் அதிகளவுக்குச் சம்பந்தப்பட்டது இலங்கை யின் 58 ஆவது படையணியாகும். இந்தப் படையணிக்குத் தளபதியாக இருந்தவர்தான் சவேந்திரா சில்வா. போரின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக, அவருக்கு எதிராக நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் இருப்பதை உலக நாடுகளும், ஐ.நா. உட்பட மனித உரிமை அமைப்புக்கள்

பலவும் ஏற்றுக்கொண்டிருக்கின்றன. பலருடைய சாட்சியங்கள் மூலமாகவும் இவை உறுதிப்படுத்தப் பட்டுள்ளன.
இந்தளவுக்குப் பாரியளவில் மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்களுக்குள்ளான ஒருவரை மிகவும் உயர்ந்த பதவிக்கு நியமித்திருப்பதன் மூலம், சர்வதேசத் துக்கு இலங்கை சவால் விட்டுள்ளது. இந்த நியமனம் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அளித்த வாக்குறுதியை கேள்விக்குட்படுத்துகிறது.
மனித உரிமைகள் தொடர்பில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டிய ஒருவரை, எந்த விசா ரணைக்கும் உள்ளாக்க முடியாதளவுக்கு உயர்ந்த பதவி யைக் கொடுத்து கௌரவித்திருக்கின்றது அரசாங்கம்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட தீவிரமான கவலைகளை புறந்தள்ளும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை, மேற்கு நாடுகள், மனித உரிமை அமைப்புக்கள் என அனைத்துத் தரப்புக்களிடமிருந்தும் இந்தம் இந்த நியமனத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கடுமையான எச்சரிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. “சவேந்திர சில்வாவின் நியமனம், 2009 இல் முடிவுற்ற மிருகத்தனமான மோதலின் பின்னரான, நிலையான நல்லிணக்கத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். இது மிக உயர்மட்ட அரசியல் சூழலாகும், சில அரசியல் சக்திகள் தேசியவாதத்தை வைத்து விளையாடுவதன் மூலம், அதிக பயன் அடையலாம் என்று கருதுகின்றன” என இந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
“தெளிவான, நன்கு ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் பதிவுகளில் உள்ள ஒரு ஜெனரல் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதுகுறித்து நாங்கள் மிகவும் கலக்கமடைந்துள்ளோம். இராணுவத் தளபதி, மனித உரிமை மீறல்களைப் புரிந்தவர் என அறியப்பட்டவர் என்றால், இலங்கையுடன் வலுவான இராணுவ ஒத்துழைப்பை ஏற்படுத்தும் போது, நாம் என்ன செய்ய முடியும் என்பதற்கு வரம்புகள் இருக்கும்” என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் எச்சரித்திருக்கின்றது.

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவரும் இந்த நியமனத்தை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.; அமெரிக்காவைவிட, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் என்பனவும் தமது அதிருப்தியைப் பதிவு செய்திருக்கின்றன.
இந்த நியமனத்தின் மூலம் சர்வதேச அரங்கில் இலங்கை புதிய நெருக்கடியை எதிர்கொள்கின்றது. ஆனால், சர்வதேச ரீதியாக உருவாகியிருக்கும் விமர் சனங்களை நிராகரித்திருக்கும் இலங்கை, அரசாங்கம், உள்நாட்டு நியமனங் களில் வெளித்தரப்பின் தலையீடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதது என, அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இலங்கையின் கடும்போக்கு சிங்கள அரசியல்வாதிகளும் சர்வதேச சமூகத்தின் கருத்துக்களுக்கு எதிராக கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றார்கள். இதன்மூலம் சர்வதேச சமூகத்துக்கும் இலங்கைக்கும் இடையில் மோதல் போக்கு ஒன்று உருவாகிவருகின்றது.
“இலங்கையின் பாதுகாப்பிலும் இறைமையிலும் தலையிட அமெரிக்க தூது வருக்கு எந்த அதிகாரமும் இல்லை. இராணுவத் தளபதி நியமனத்தில் அமெரிக்க தூதுவரின் கருத்தை கண்டித்து ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக தமது நிலைப்பாட்டை நாட்டு மக்களுக்கு முன்வைக்க வேண்டும் என விஜயதாச ராஜபக்ஷஎம்.பி பாராளுமன்றத்தில் கர்ஜித்திருக்கிறார். சிங்களக் கடும்போக்குவாதிகளான விமல் வீரவன்ச, உதய கம்பன்பில போன்றவர்களும் அவர்களுடன் இணைந்திருக்கின்றார்கள். ஆனால், அமைச்சர் மங்கள சமரவீர இந்த நிலைப்பாட்டிலிருந்து சற்று முரண்பட்டு யதார்த்த நிலைமையை வெளிப்படுத்தியிருக்கின்றார். “எமது நாட்டின் வெளிவிவகார கொள்கையானது மீண்டும் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் மோதல் போக்கு கொண்ட யுகத்திற்கு திரும்ப கூடாது” என்று எச்சரிக்கை விடுத்திருக்கும் அவர், “எதிலும் யாரும் தலையிட முடியாது என்று கூறும் மனநிலையானது கடந்த நான்குவருட காலசாதனைகளை இல்லாமல் செய்வதாகவே அமைந்துவிடும்” சுட்டிக்காட்டியிருக்கின்றார். சர்வதேசத்துடன் பனைமைப்போக்கில் செல்லக்கூடாது என்பதே அவரது எச்சரிக்கையாக இருக்கின்றது.

அண்மைக்காலமாக இலங்கை விவகாரத்தில் மென்போக்கை கடைப்பிடித்த சர்வதேச நாடுகள், தமது போக்கில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற தேவையை இந்தச் சம்பவம் ஏற்படுத்தியிருக்கின்றது. பொறுப்புக் கூறல் விடயத்தில் இலங்கை நேர்மையாகச் செயற்படும் எனக் கருதிய சர்வதேச சமூகம், அதற்காகத்தான் இரண்டு வ”ருட கால நீடிப்பையும் ஜெனீவாவில் வழங்கியது. பொறுப்புக் கூறல் விடயத்தில் இலங்கை மீது அழுத்தம் கொடுப்பதற்கு புதிய உபாயங்களையிட்டு சர்வதேசம் ஆராயவேண்டிய அவசரம் இதனால் ஏற்பட்டிருப்பதையும் காணமுடிகின்றது.

இந்த இடத்தில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை முக்கியமானது. “சவேந்திர சில்வாவின் 58 ஆவது படையணியால் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிகோரி போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில், அவர் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் கட்டமைப்பு மறுசீரமைப்பு என்பன தொடர்பான அரசாங்கத்தின் வாக்குறுதி களை நலிவடையச் செய்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் சர்வதேசத்தின் பங்களிப்புடன் உடனடியாக நீதி வழங்கலுக்கான தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அரசாங்கம் அதனைச் செய்யாதவிடத்து ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியிருக்கிறது.
செப்டம்பர் மாதத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஜெனீவாவில் நடைபெறவிருக்கின்றது. சவேந்திர சில்வா விவகாரம் இதன் போது கிளப்பப்படும். இலங்கை தொடர்பில் மாற்றமடையும் சர்வதேசத்தின் போக்கையும் இதில் காணக்கூடியதாக இருக்கும் என்கின்றார்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள். குறிப்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டிருப்பதைப்போல மாற்று வழி ஒன்றையிட்டுச் சிந்திப்பதாகவும் இந்தக் கூட்டத் தொடர் அமையலாம்.

-கொழும்பில் இருந்து பாரதி

2,341 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *