நாலுபேர் அப்படிக் கதைக்கினம்
என்ன ஊரில பெரி வீடு கட்டுப்படுதாம். இஞ்ச வேலை வேட்டி ஒன்றும் இல்லை எப்படி உன்னாலை கட்டமுடியுது? சோசல் காசில் மிச்சம்பிடித்து அதை பிறகு வட்டிக்குகொடுத்து, சீட்டுகளும்போட்டு அதிலும் ஏதோபுரளிபண்ணி, உன்னு டைய அப்பா அம்மாவிற்கு இங்க கொடுகிற காசிலும் சுத்தித்தான் ஊரிலை பெரிய வீடு ஒன்று எழும்புது என்று நாலுபேர் கதைக்கினம் தம்பி.
இந்த தம்பி கொஞ்சம் அந்த இடத்தில் அழுத்தமாக வரும். அதன் அர்த்தம் நான் அப்படி ஒன்றும் நினைக்கவில்லை என்பதை சொல்வதற்கான அழுத்தம்தான் அது.
உண்மையில் இந்தபேச்சில் நாலுபேர் கதைகிறார்கள் அவர்கள் யார் என்று தேடினால் அவர்கள் யாவரும்; சொல்பவருக்குள் வசிப்பவர்களாகவே இருப்பார்கள்.
அந்த நாலுபேரும் இவரேயன்றி வேறு எவரும் கிடையவே கிடையாது.
தனது கருத்தை நாலுபேருக்குபின்னால் மறைந்து நின்று சொல்லும் ஆசாமிகள் இவர்கள்;. இவர்களுக்காக நீங்கள் உங்கள் நடையை ஏன் உடையைத்தன்னும் மாற்றவேண்டியதில்லை. நீங்கள் ஒரு முறை மாறினால் போதும், அவர்கள் இலவச அலோசகர்களாக உங்கள் வாழ்நாள் முழுவதும் வருவார்கள். நீங்கள் நீங்களாகவே வாழமுடியாது.
இந்த நாலுபேர் சங்கதியை எமக்கு வெளியில் இருந்து வந்து எவரும் சொல்லித்தரவில்லை. எங்கள் வீட்டில் அம்மா அப்பா அன்று சொல்லித் தந்ததுதான் இந்த நாலுபேர் சொல்லுகினம் என்ற கதை..
பிள்ளை நீ சோதனை பெயில்விட்டால் நான் தெருவில் தலைகாட்டமுடியாது. நாலுபேர் நாக்கை பிடுங்கிங்கிற மாதிரி ‘வாத்தியாற்றை பிள்ளை நாலுபாடம் பெயிலாம்” என்று சொல்லுவினம்.
ஆனால் இந்தக்கத்தலுக்கு பின்னால் பிள்ளை படிக்காமல் விட்டுவிட்டால் என்ற பயம் மறைந்து இருக்கும். ஆனாலும் அப்பா அம்மாவை இழுக்காது நாலுபேரை இழுத்து அவர்கள் கேள்விகேட்பார்கள் அது தனக்கு கேவலமாக இருக்கும் என்று முடிப்பார்கள்.
மேல் சொன்ன ஊரில்; பெரிய வீட்டு கட்டும் கதை கதைக்கும், பிள்ளை படிக்காவிட்டால் நாக்கைப்பிடுங்கிற மாதிரி கேள்வி கேட்பினம் என்றதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்த நாலுபோர் மட்டும் எங்கும் வருவினம்.
இப்படித்தான் வெளிநாட்டில் நடந்த திருமணம் ஒன்று. தாய் தந்தையர் பேசி திருமணம் செய்த காலம் இல்லை. இப்போது அவர்கள் பேசி முடித்து தாய் தந்தையருக்கு சொல்லும் காலம். அது சரியும்கூடத்தான். அவர்கள்தானே வாழப் போகிறார்கள்.
முன்பு எங்கவீட்டுக்கல்யாணம். எல்லோரும் தங்கள் வீட்டுக்; கல்யாணம்மாதிரி பறந்து கட்டி வேலை செய்வார்கள். ஊரிலை கல்யாணம் என்றால் கொழும்பு கண்டி எல்லாம் வெறிச்சோடிப் போய்க்கிடக்கும். எல்லாரும் ஊரில் வந்து நிற்பார்கள். வீடு நிறைய சொந்தங்கள்.
திருமண வீடு என்றால் விழுந்து விழுந்து கவனிப்பார்கள். பருப்பு என்று குரல் கொடுத்தால் பத்துபேர் தூக்குசட்டியுடன் வருவார்கள். பருப்பு போடும்போது என்னதம்பி அப்பா இப்ப எப்படி இருகிறார். நாம் ஒன்றாக படித்த நாங்கள். அப்பாவைக் கேட்டதாகச் சொல்லுங்கள். என்று பருப்போடு பாசமும் கலந்து அவர் மகனின் முகத்தில் அவரின் தந்தையைத் தரிசித்து விருந்தோம் புவார்கள்.
இப்ப அதெல்லாம் அற்றுப்போச்சு. நான்காம் நம்பரில் நாலுபேர் வந்திருக்கினம் அவர்களுக்கு வடை கொடுங்கோ என்று சொன்னால் வடைவரும். சொந்த பந்தத்தின் வாடையே அங்கு கிடையாது.
ஒரு திருமணத்தில் என்ன உங்கள் மகனின் திருமணத்திற்கு வந்தேன் உங்களைக் காணவே இல்லை. அவ்வளவு கூட்டம் என்றேன். குறை நினைக்காதையுங்கோ நானும்தான் என்ர மகனின் கல்யாணத்தில் மகனைக் காணவே இல்லை என்று நகைச்சுவைப்படச் சொன்னார்.
இது நகைச்சுவையாகச் சொல்லப்பட்டாலும் அது தான் இன்று நடைமுறை என்பதும் உண்மையே. இப்போதும் பேச்சு திருமணங்கள் என்றால் சாதி பார்த்துதான் செய்யப்படுகிறது என்பது வருந்ததக்க உண்மையே. ஆனால் இனம் பார்ப்பது கிடையவே கிடையாது.
யேர்மன் போலந்து ஆங்கிலேயர் பிரஞ்சு ஸ்பானியர் என்று (நமக்கு எல்லாம் அவர்கள் ஒரே இனம் அதாவது வெள்ளையர் இனம் அவ்வளவுதான்) யாரை வேண்டும் என்றாலும், திருமணம் செய்யலாம். அங்கே எந்த வித ஏற்றத் தாழ்வும் கிடையாது.
ஒரு நல்ல சகுனம் என்னவென்றால் இந்த ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் நம்மோடு முடிந்துவிடும். இளையவர்கள் மனதில் இந்த ஏற்றத்தாழ்வுகள் அற்றுப் போயக்கொண்டு இருக்கின்றன.
எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை ஏற்றத்தாழ்வு கடுகேனும் இல்லை. இனம் மதம் சாதி கீதி கத்தரிக்காய் என்று ஒன்றுமே கிடையாது என்று சொல்பவர்களும், ஆனால் நாலுபேர் என சொல்வார்கள் அதைத்தான் யோசிக்கிறேன் என்பார்கள். அந்த நாலுபேர் யார் என்று இப்ப உங்களுக்கு புரிஞ்சிருக்கும். அந்த நாலுபேரும் யாருமல்ல அவரேதான்!
— மாதவி
1,464 total views, 6 views today