ஊருக்கு தான் உபதேசம் எனக்கல்ல

“நேற்று ஆபீஸ் போயிட்டிருந்தப்போ எனக்கு படபடப்பா வந்துச்சு, வியர்த்துக் கொட்டிச்சு, காலியாயிடுவேன்னு நினைச்சேன். ஒருவழியா ஆபீஸ் போய் சேர்ந்தேன்.நல்ல வேளை மெடிக்கல் டெஸ்ட்ல பிரச்சினை ஒண்ணும் இல்லேன்னு சொல்லிட்டாங்க” என்றான் நண்பன்.

“உடம்பு போட்டுச்சுப்பா.. தொப்பை வேற பெருசாயிட்டே போவுது. டெய்லி காலைல வாக்கிங் போ.. ” என்றேன் கரிசனையுடன். அருகில் நின்றிருந்த என் மனைவி என்னைப் பார்த்த பார்வையில் நக்கலும், கிண்டலும் நாலு கால்ப் பாய்ச்சலில் ஓடித் திரிந்தன. நாலு வருஷமாய் எப்படியாவது என்னை வாக்கிங் போக வைக்கலாம் என கற்ற வித்தை அத்தனையும் மொத்தமாய் இறக்கியும் தோற்றுப் போய் நின்றவள் அவள்.

திரும்பும் வழியில் மனைவி சொன்னார், “ஊருக்கு தான் உபதேசம். சொல்றது ஒண்ணையும் செய்றதில்லை ” ! கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அது அக்மார்க் உண்மை என என்னுடைய வாழ்க்கை அனுபவமே கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்கிறது. ஏன்னா சொல்றது ஈசி. அதுல எந்த கஷ்டமும் இல்லை. அட்வைஸ் பார்ட்டிகளை ‘வாய்ச்சொல்லில் வீரரடி’ எனும் பிரிவின் கீழ் அடுக்கி வைக்கலாம்.

சீக்கிரம் படுத்து தூங்குங்க என பிள்ளைகளை விரட்டும் நாம் தூங்குவதென்னவோ நள்ளிரவை நெருங்கும் போது தான். ராக்கெட் விடுகின்ற வேலை ஏதும் இல்லை, வெட்டியாக தொலைக்காட்சியையோ, ஸ்மார்ட்போனையோ நோண்டிக்கொண்டிருக்கும் வேலை தான். அட்வைஸை விட பயனுள்ளது ஒரு முன்மாதிரி வாழ்க்கை என்பதை நாம் உணர்வதில்லை.

எனக்கு அவ்வப்போது தோன்றும், கடந்த தலைமுறை ஆட்கள் நம்மை அட்வைஸ் செய்து கடுப்படித்ததால் தான் இப்போது நாம் அட்வைஸ் கூடைகளுடன் அலைகிறோமோ என்று. “அதிகாலையில எழும்பி படிடா… மனசுல நல்லா பதியும்” என அப்பா சொன்னதுண்டு. நான் கேட்டதில்லை. ஆனால் இப்போது அந்த அட்வைஸை பிள்ளைகளுக்குக் கொடுக்கத் தவறுவதில்லை.

ஹெல்தியா சாப்பிடுடா. எதுக்கு இந்த ஜங்க் ஃபுட் எல்லாம் சாப்பிடறே ? காய்கறி, பழம் எல்லாம் தான் உடம்புக்கு நல்லது தெரியுமா ? அதுல என்னென்ன சத்து இருக்கு தெரியுமா ? என நான் அடுக்கிக் கொண்டே போகும் அட்வைஸின் போது அம்மாவின் குரல் மனதில் கேட்கும். “டேய், இதையெல்லாம் நான் சொன்னப்போ கேட்டியா ?”

ஊருக்கு தான் உபதேசம். நாம் அதில் எதையும் கண்டுகொள்வதில்லை. அல்லது பெரும்பாலானவற்றைக் கண்டு கொள்வதில்லை.

ஒரு காரணம், அட்வைஸ் எளிது. ஒருவர் உதவி நாடி நம்மிடம் வருகிறார் என வைத்துக் கொள்வோம், அவர்களுடைய தேவைக்கு கொஞ்சம் பணம் கொடுப்பதை விட எளிது நாலு அட்வைஸை கொடுப்பது. அந்த அட்வைஸை வைத்து அவர் என்ன வீடா கட்ட முடியும் ?

இரந்து திரிபவரிடம், “வேலைக்கு போலாம்ல” என்பதில் தொடங்கி, அலுவலகத்தில், “இதை அப்படி செய்திருக்கலாம்ல” என்பது வரை அட்வைஸ்கள் நம்மிடமிருந்து புறப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. நாம் எப்படி பிறருடைய அட்வைஸ்களை கிழித்துக் காற்றில் பறக்கவிடுகிறோமோ அதே போல தான் நம்முடைய அட்வைஸ்களையும் பிறர் கிழித்துக் கால்வாயில் மிதக்க விடுவார்கள். கடலில் பெய்யும் மழையினால் வேருக்கென்ன லாபம் ?

நம்மிடம் ஒருவர் வந்து எனக்கு இந்த விஷயத்துல கொஞ்சம் அட்வைஸ் கொடுங்க என கேட்டால், காது கொடுத்துக் கேளுங்கள். “உன் பிரச்சனை உன் பாடு. இதுல எல்லாம் என்னோட அட்வைஸ் கேக்காதே’ என உதாசீனப்படுத்தாதீர்கள். சக மனிதனின் கவலை நமது கவலை எனும் சிந்தனை கொள்ளுங்கள்.

ஒருவேளை ஒருவர் நம்மிடம் அட்வைஸ் கேட்கவில்லையேல், தேவையில்லாமல் மூக்கை நுழைத்து அட்வைஸை எறியாதீர்.

சரி, அதுவும் எப்படிப்பட்ட சூழல்களில் அட்வைஸ் செய்யலாம் ?

ஒருவர் வந்து, ‘மட்டன் பிரியாணி பண்ணலாமா, சிக்கன் பிரியாணி பண்ணலாமான்னு யோசிக்கிறேன். என்ன சொல்றீங்க ?” என கேட்டால் நீங்கள் ஆச்சார சைவமாய் இருந்தால் அமைதியாய் இருப்பதே நல்லது. அதை விட்டு விட்டு பத்து நிமிடம் அவரிடம் மட்டன் பிரியாணி புராணத்தைச் சொல்ல ஆரம்பிக்காதீர்கள். இல்லையே, “நான் தயிர்சாதம் மட்டும் தான் சாப்பிடுவேன். ஆனா என் பிரண்ட்ஸ் எல்லாருக்கும் மட்டன் பிரியாணி தான் பிடிக்கும்” என சொல்லலாம்.

சுருக்கமாக, எது நமக்குத் தெரியுமோ, எதில் நமக்கு அனுபவம் இருக்கிறதோ, அதைப்பற்றிய ஆலோசனைகளை மட்டுமே சொல்லவேண்டும் என்பதை ஒரு அடிப்படை விதியாகக் கொள்ளலாம்.

அதேபோல என்னோட ஹெல்த்துக்கு நான் ஏதாச்சும் பண்ணனும். என்ன பண்ணலாம் என ஒருவர் கேட்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். “டெய்லி காலைல சிரசாசனம் பண்ணுங்க. அப்படியே சர்வாங்காசனமும் முடிச்சுட்டு, சைக்ளிங் போங்க” என உங்களுடைய பட்டியலை ஒப்புவிக்காதீர்கள். வந்து கேட்பவருடைய நிலமை என்ன ? அவருடைய வயது என்ன ? அவருடைய உடல்நிலைக்கு எது தாக்குபிடிக்கும் என பல விஷயங்களை அறிந்து சொல்லுங்கள். அல்லது வேறு ஒரு பயிற்சியாளரை அணுகச் சொல்லுங்கள்.

சுருக்கமாக, உங்களுக்கு ஒத்து வருகிறது என்பதற்காக எல்லோருக்கும் அது ஒத்து வரும் என நினைப்பது தவறு. அனுபவம் இருக்கும் எதையும் அட்வைசாக எல்லோருக்கும் சொல்லவும் கூடாது. அடுத்தவர் பார்வையில் அதை அலசிய பிறகே சொல்லவேண்டும்.

உங்களிடம் ஒருவர் அட்வைஸ் கேட்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அது அவர்களுடைய தேவை சார்ந்த விஷயம் தானே தவிர, உங்களுடைய அறிவு சார்ந்த விஷயம் அல்ல. எந்த நோக்கத்துக்காகக் கேட்கிறாரோ அந்த விஷயத்தைப் பற்றிய அறிவுரைகளை மட்டும் நல்குங்கள். “ஒரு நாய்க்குட்டி வாங்கலாம்ன்னு இருக்கேன். என்ன பிரீட் வாங்கலாம்” என ஒருவர் கேட்டால் உடனே உற்சாகமாகி நாய்ங்கறது என்ன தெரியுமா ? என கிமு கதைகளை ஆரம்பிக்காதீர்கள். எது தேவையோ அதைச் சொல்லுங்கள்.

சுருக்கமாக, எனக்கு இதெல்லாம் தெரியும் என்பதை வெளிப்படுத்துவதல்ல அட்வைஸ். உனக்கு எது தேவை என்பதைப் பரிமாறுவது மட்டுமே.

ஒருவர் உங்களிடம் ஒரு அட்வைஸ் கேட்டால், முழுமையாய் புரிந்து கொள்ளும் முன் அறிவுரை சொல்ல ஆரம்பிக்காதீர்கள். ஏன் இந்த அறிவுரை ? எதை நிறைவேற்றப் போகிறீர்கள் ? உங்களுடைய இலட்சியம் என்ன ? எதை நோக்கிய பயணம் உனது ? என பல விஷயங்களைக் கேட்டு பின்னர் அதற்குத் தக்கபடி ஒரு பதிலை சொல்லுங்கள். உதாரணமாக “என்ன படிக்கலாம் ?” என கேட்பவனிடம் “விமானியாகறதுக்குப் படி” என சொல்வதை விட, “உன் விருப்பம் என்ன ? உனக்குப் பிடித்தது என்ன ?” என்பதையெல்லாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். உயரத்தைப் பார்த்தாலே பயப்படுபவனுக்கு மாலுமி ஆவது சரியான தேர்வாய் இருக்காது.

சுருக்கமாக, துப்பாக்கிக்கு உள்ளே நுழைந்து சுடுவதை நிறுத்த வேண்டும். ஒரு அறிவுரை சொல்லும் முன் அறிவுரை கேட்பவரின் நோக்கத்தை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் சில இடங்களில் தோல்வியடைந்திருப்போம். அந்த இடங்களில் எல்லோரும் தோல்வியடைவார்கள் என முடிவு செய்து விடக்கூடாது. சிலருக்கு சில விஷயங்கள் இயல்பாகவே வரும். சிலருக்கு சில விஷயங்கள் சுட்டுப் போட்டாலும் வராது. எனவே நமது தோல்வியின் சுவடை அடுத்தவரின் தலையில் ஆலோசனையாய்ச் சுற்றி வைக்கக் கூடாது.

சுருக்கமாக, அட்வைஸ் என்பது பிறரை உற்சாகமூட்டுவதாய் இருக்க வேண்டும். நமது தோல்வியின் பயத்தையோ, எதிர்சிந்தனையையோ பிறர் மனதில் விதைப்பதாய் இருக்கக் கூடாது.

நம்முடைய உணர்வு நிலையும், பிறருடைய உணர்வு நிலையும் ஒன்றாக இருக்க வேண்டியதில்லை. சிலர் ரொம்பவே சென்சிட்டிவ் ஆக இருப்பார்கள். சிலர் எருமை மாடு கணக்கா இருப்பார்கள். இருவருக்கும் ஒரே மாதிரி அட்வைஸ் ஒத்து வராது. உதாரணமாக “என் மாமியாருக்கு நான் ஒரு பதில் சொல்லணும், அட்வைஸ் பண்ணு” என தோழி கேட்டால் என்ன சொல்வீர்கள் என யோசித்துப் பாருங்கள்.

சுருக்கமாக, கேட்கும் நபருடைய இயல்பு, குணாதிசயம் போன்றவற்றைப் புரிந்தபின் அதற்கான பதிலைச் சொல்வது மிகச் சிறப்பு.

நீங்கள் ஒரு சிறந்த நண்பராகவோ, சமூக ஆர்வலராகவோ, வயது முதிர்ந்தவராகவோ, நிறைய அனுபவம் உடையவராகவோ இருக்கலாம். அதற்காக எல்லாம் தெரியும் எனும் எண்ணம் இருக்கவே கூடாது. சில அட்வைஸ்களுக்கு சிலரை நாடும்படி வைக்க வேண்டும். “நான் தற்கொலை பண்ணலாம்ன்னு இருக்கேன். எப்படி பண்ணலாம்” என ஒருவர் கேட்டால், அவரை கையோடு கூட்டிக்கொண்டு போய் கவுன்சிலிங்கில் உட்கார வைக்க வேண்டும்.
சுருக்கமாக, எல்லா விஷயத்துக்கும் நாமே அட்வைஸ் சொல்ல வேண்டும் என்பதில்லை. சரியான நபர்களிடம் நாம் அவர்களை அனுப்பி வைப்பது மிகச்சிறந்த செயலாக இருக்கும்.

அதே போல எந்த ஒரு விஷயத்திலும் நாம் சொல்கின்ற அட்வைஸ் மனித மாண்புக்கும், மனித நேயத்துக்கும், அழகான உறவுகளுக்கும் எதிரான ஒன்றாய் இருக்கவே கூடாது. அதன் பெயர் அட்வைஸ் அல்ல. விஷம். அட்வைஸ் ஒருவரை வாழவைக்கும். அவர் சார்ந்த சமூகத்தையும் வாழ வைக்கும். ஆனால் விஷம் ஒருவரை அழிக்கும் விஷமத்தனமானது.

சுருக்கமாக, நமது அட்வைஸ் எதிர்மறை விளைவை எங்கும் உருவாக்கவே கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
கடைசியாக ஒன்று. நான் இதுவரை எழுதிய எதுவுமே உங்களுக்கான அட்வைஸ் அல்ல. கண்ணாடி முன்னால் நின்று எனக்கு நானே சொல்லிக் கொண்டவை. எனவே தயவு செய்து அட்வைஸ் பிரம்புடன் அடிக்க வராதீர்கள் .

— Xavier

1,967 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *