சமூகப் பற்றும் சமூக மாற்றமும்

0
131

Passengers on the airplane.; Shutterstock ID 377727421; Purchase Order: -

பூமிப்பந்தில் பிறந்த நாம் அனைவரும் பூமியில் அனைத்திற்கும், எப்படியும் கடமைப்பட்டிருக்கின்றோம். ஆனால், பூமியில் எமக்கென்று எதுவுமே சொந்தமில்லை என்பதே உண்மை. இதுபற்றி பகவத்கீதையிலே அழகாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. ~~நாம் எதைக் கொண்டு வந்தோம். எதை இழப்பதற்கு, இன்று எமக்குச் சொந்தமானது. நாளை வேறு ஒருவருக்குச் சொந்தமாகும். எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை நீ கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ, அது நாளை வேறு ஒருவருடையதாகிறது|| வேறு ஒருவருக்குச் சொந்தமாகும் போது அதனை மற்றவர்க்குப் பொருத்தமானதாக விட்டுச் செல்;ல வேண்டிய கடமை ஒவ்வொரு மனிதர்களுக்கும் இருக்கின்றது. எமக்காகவே வாழ வந்த நாம் சூழல், சுற்றம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு ஒரு தனியிடத்தைப் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அந்தச் சூழல் சுற்றத்தை எப்படி நாம் அமைத்துக் கொள்ளுகின்றோம். அந்தச் சூழலை எவ்வாறு மாற்றியமைக்கின்றோம் என்பதும் சிந்திக்க வைக்கும் விடயமாகவே கொள்ளவேண்டும்.

இந்த வாழ்க்கையில் நாம் வாழுகின்ற சமூகத்திற்கு எதனை விட்டுச் செல்கின்றோம். எதனை வழங்குகின்றோம் என்பதுவே நாம் அலச வேண்டிய முக்கிய விடயமாகும்.

நான் என்பதைச் சுற்றியேதான் அனைத்தும் அடங்கியிருக்கின்றன. நான் என்னுடைய குடும்பம், என்னுடைய நண்பர்கள், அயலவர்கள் என என்னைச் சுற்றி அமைகின்ற வாழ்க்கை பிறருக்குப் பயன்படும், பயன்படுத்தும் பட்சத்தில் சமூக நோக்கு புலப்படுகின்றது. யாரால் அதிக உதவிகள் கிடைக்கின்றதோ. அவர்களிடம் அக்கறையும், பிணைப்பும் இருக்கும் அல்லவா! கிடைக்கின்ற உதவிகளுக்கு ஏற்பக் கொடுக்கும் போதே சமூகஅக்கறை வெளிப்படும். உதாரணமாக ஒரு நாட்டிடம் இருந்து உதவிகள் பெறுகின்ற நாம், நாம் வாழுகின்ற நாட்டிற்கு எந்தவித உதவிகளும் செய்யாது, ஏனோதானோ என்னும் போக்கில் இருப்பது எந்தவிதத்தில் நியாயம்? அது நாம் வாழும் எமது சமூக சிந்தனையாக முடியுமா என்பது கேள்விக்குறி. ~~நாடென்ன செய்தது உனக்கு என்று கேள்விகள் கேட்பது எதற்கு? நீ என்ன செய்தாய் அதற்கு என்று நினைத்தால் நன்மை உனக்கு|| என்று கண்ணதாசன் வரிகளில் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் பாடியிருக்கின்றார். வாழுகின்ற வாழ்க்கையில் வளங்களை நாம் பெறுவதை பெற்ற இடத்திலேயே வழங்குவதே நியாயம். உதவி செய்வது என்றால், பணம் கொடுப்பது மட்டுமல்ல. உபத்திரவம் செய்யாமல் இருப்பதும் உதவியேதான்.

வீதியைச் சுத்தம் செய்யும் கடமை அரசாங்கத்திற்குரியது என்றால் அதனை அசுத்தமாக்காது வைத்திருக்கும் கடமை வாழுகின்ற பிரஜைகளுக்கு உரியது. பிரயாணம் செய்கின்ற வாகனத்தில் கீறுவது, சப்பாத்துக் காலைத் தூக்கி முன் இருக்கையில் நீட்டி வைத்துக் கொண்டு அமர்வது வீதிக்கு வீதி குப்பைத் தொட்டிகளைக் கண்டு அதற்குள் குப்பைகளைப் போடாது, அருகே நிலத்தில் போட்டுவிட்டுப் போவது போன்ற காரிய்களைச் செய்யும் பலரைப் பார்;த்திருக்கின்றேன். இவ்வாறான சின்னச்சின்னக் காரியங்களை நாம் அசட்டையீனமாகச் செய்வதும் நாம் வாழும் நாட்டிற்கு செய்கின்ற தீமையாகவே அமைகின்றன.

யார் சொன்னார் எவர் சொன்னார் என்பதை விட்டுவிட்டு எவர் சொன்ன சொல்லையும் எமது சொந்த அறிவால் எண்ணிப் பார்க்கச் சொன்ன சொக்கிரட்டீஸ் வார்த்தைகள் போல் வாழ்ந்ததனாலேயே விஞ்ஞானிகளின் வியத்தகு சாதனைகள் வெளிப்பட்டது. பெண்ணடிமையைப் புரிய வைக்க பாரதிக்கு ஒரு நிவேதிதா அம்மையார் தேவைப்பட்டது. கடவுள் தான் உயிரினங்களைப் படைத்தார் என்ற கோட்பாடு டார்வின் பரிணாமக் கோட்பாட்டினால் உடைக்கப்பட்டது. பூமியை மற்றைய கோள்கள் சுற்றுகின்றன என்ற பூமி மையக்கோட்பாடு கலிலியோ மூலம் சூரியனையே மற்றைய கோள்கள் சுற்றுகின்றன என்னும் சூரிய மையக்கோட்பாட்டின் மூலம் மறுக்கப்பட்து. இவ்வாறு சமூகத்தில் மாற்றம் கொண்டு வந்தவர்கள் கூட சமூகப் பற்றாளர்களே.

வாழ்க்கையின்; வசதிகள் பெருகுவதற்குக் கண்டுபிடிப்புக்கள் காரணமாகின்றன. அறிவியல் மனிதர்களைச் சிந்திக்க செய்து மூடக் கொள்கையில் இருந்து அவர்களை முழுமனிதர்களாக மாற்றுகின்றன. தத்துவங்கள் மனதார மனிதன் சிந்தித்துச் செயல்படுவதற்கான உந்துதலை ஏற்படுத்துகின்றன. திருவள்ளுவரின் சமூக அக்கறையே திருக்குறளை எழுதத் தூண்டியது, சுவாமி விபுலானந்த அடிகளார், சுவமி விவேகானதர் போன்றோரின் சமூக அக்கறையே அனைத்து மக்களுக்காகவும் அவர்களை வாழத் தூண்டியது,

.

முல்லைக்குத் தேர் தந்த பாரி,
தன்னுடைய குறும்பொறை நாடு முழுவதையும் பாணருக்கு வழங்கிய ஓரி
மயிலுக்குப் போர்வை தந்த பேகன்,
நீலநாகம் தந்த கலிங்கத்தை குற்றாலநாதருக்கு வழங்கிய ஆய்
அதிகநாள்கள் வாழும் நெல்லிக்கனியை அவ்வைக்கு வழங்கிய அதியமான்
நண்பர்கள் வாழ்க்கை நடத்துவதற்காக வசதிகள் அனைத்தையும் வழங்கிய
நள்ளி
ஈர நன்மொழி கூறிய தேர் வழங்கும் பெருவள்ளல் காரி

இவ்வாறு கடையெழு வள்ளல்கள் கொடை தந்து குலம் காத்தார்கள். பாரி நினைத்திருந்தால், அரண்மனை சென்று முல்லைக்கு பந்தல் போட ஆவன செய்திருக்கலாம். ஆனால், செய்ய நினைப்பதை நினைத்த மாத்திரத்தில் செய்வதே சிறப்பு. நாளை என்று நினைத்தால், ~~ஆறிய கஞ்சு பழங்கஞ்சு|| என்னும் பழமொழி போலவே அமையும்.

சமூக மாற்றத்திற்கு பத்திரிகையின் பங்கும் பத்திரிகை சுதந்திரமும் அவசியம்.
நடந்த உண்மை விடயங்கள் எமது வரலாற்றுக்கு பங்கம் விளைவிக்கும் என்று மறைக்கப்படுமானால் உண்மைச் சரித்திரம் உறங்கிப் போகும் வரலாற்றுப் பாடம் புகழாரப் பாடமாகவே முடியும். எழுதுவது ஒன்று செய்வது ஒன்றாக அமையுமானால், எதிர்காலச் சமூகத்திற்கு பொய்மையே தரவாகக் கிடைக்கும். எழுதுவதும் செய்கையும் வேறானால்,

~~அன்புடைமை அதிகாரத்தை
ஆசிரியர் கற்பிக்கின்றார்
கையில் பிரம்புடன்||

என்னும் கழனியூரான் கவிதையைப் போன்றே எழுத்து சுதந்திரம் அமையும்.

எனவே நாம் ஒவ்வொருவரும் சமூகத்தை மனதில் கொண்டு வாழ்க்கைப் பாதையைக் கொண்டு செல்லல் அவசியம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *