மௌனத்தின் பேராற்றல்
மோனமே மௌனம் ஆகும். மோனமே தவம் எனப்படும். இது அமைதியாக வாய் மட்டும் பேசாதிருத்தல் மட்டுமல்ல. எண்ணங்கள் அமைதியடைந்து எண்ண நெரிசல்களிலிருந்தும் ஓய்வாக அமைதியாக இருத்தலைக் குறிக்கும். உணர்வு சார்ந்ததே மௌனம் எனக் கூறலாம். பேரண்டத்தின் இயல்பும் மௌனமே. மௌனத்தில் செயல் இல்லாவிடினும் கவனித்தல் மட்டும் அங்கு நிகழும். விழிப்புணர்வு நிலை என்றும் கூறலாம். விழிப்புணர்வற்ற மௌனம் தூக்கமாகிவிடும். எமது முன்னோர்கள் மாதத்தில் ஒரு நாளாவது மௌன விரதத்தை கடைப்பிடித்து வந்ததோடு அதை பின்பற்ற வலியுறித்தியும் உள்ளனர். சுய கட்டுப்பாடு, ஒழுக்கம், சாந்தம், மன்னிப்பு போன்ற உயரிய பண்புகளை மௌனமே இலகுவில் கற்றுத் தந்துவிடும். அதனை சிறிது விரிவாக்கி பார்ப்போம்.
எண்ணங்களுக்கெனவே கரு மையம் ஒன்று உள்ளது. விழிப்பு நிலையில் எத்தனையோ தேவையான தேவையற்ற எண்ணங்களும், மற்றும் தூக்க நிலையில் விரும்பியபடி ஆதிக்கம் செலுத்த முடியாத கனவுகளின் நெரிசல்களாகவும் எண்ணம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. இதன் செறிவை கனவுகளே வெளிப்படுத்தும். ஆனால் அதிகப்படியான கனவுகள் தூக்கத்திலிருந்து விழித்தெழும்போது நினைவில் நிற்பதில்லை. அதே நேரம் மனதில் அடக்கி வைக்கப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் மனதை பாதித்த விடயங்களைக் கனவுகளே காட்டிக் கொடுத்துவிடும்.
அழுக்கடைந்த நீரை பல முயற்சிகளால் சுத்தப்படுத்த முனைவதை விட அதை அப்படியே அமைதியாக விட்டால் நீர் தானே தெளிந்துவிடும். அதுபோல் மனதில் நிறைந்திருக்கும் குப்பைகளை கிளறிக்கொண்டிருந்தால் அவை மீண்டும் மீண்டும் மேலெழுந்து புதிய கிளைகள் விட்டு வளர ஆரம்பிக்கும். மௌனமாக நடப்பதை ஒரு சாட்சியாக கவனித்துக் கொண்டிருந்தாலே போதும். குப்பைகள் காணாமலே போய்விடும்.
பலர் தம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று கூடத் தெரியாமல் எங்கோ வெறித்துப் பார்த்தபடி இருப்பர். அப்போது மனம் அதி தீவிரமாக வேலை செய்கிறது என்று பொருள். எண்ணமற்று இருத்தல் மரணத்திற்கு ஒப்பானது அவற்றை ஒழுங்கு படுத்த முடியும். தேவையான எண்ணங்களுக்கு சக்தியூட்டி வெற்றியை நோக்கி செயற்படுத்துவதற்கு எண்ணங்களை குறைத்தலே முதற்படி.
எண்ண அலைகளில்
பீட்டா,
நொடிக்கு 14 சைக்கிள் அலை சுற்றக்கூடியது. துருதுருப்பான நிலை. ஆழ் மனதோடு தொடர்பு பட முடியாத நிலை.
அல்பா
8 தொடக்கம் 13 சைக்கிள் அலை
அமைதியான ஆழ் மனதோடு தொடர்புபடக்கூடிய நிலை. இதற்காகவே தியானங்கள் மேற்கொள்ளப்படுகிறது.
டெல்ட்டா
மனதை கரைத்த நிலை.
ஆழ்மனதை ஆளும் நிலை. பேரண்டத்தோடு
பேரறிவோடு தொடர்புபடக்கூடிய நிலை. முக்தி நிலை.
சாதாரண நாட்களில் மூளை இருபது அலைகள் வரை பெற்றிருக்கும். மௌனத்தில் தனக்குள் தானே பேசிக் கொண்டிருக்கும் மனமானது நாளடைவில் உள் நோக்கி திரும்பிவிடும் பின் சக்தி உள் நோக்கி செலுத்தப்படும். பேரண்டத்திற்கும் எமக்குமான தொடர்பு ஊடகம் மௌனமாகும். மௌனத்தின் மூலம் ஆழ்மனதோடு தொடர்பு படலாம். மனதை ஒரே அதிர்வலையில் வைத்திருக்கவும் முடியும். மௌனமானது மனது ஆல்பா நிலையில் இருக்க உதவும். இந்த நிலையில் தொடர்ந்து இருந்துவர இலகுவில் பேரண்டத்தோடு நெருங்கிய தனித்துவமான தொடர்பை ஏற்படுத்தி சுய இருப்பை சக்தி வாய்ந்ததாக அமைத்துக்கொள்ள முடியும். அத்தோடு மனம் உள்நோக்கி இருப்பதனால் சக்தி உள்நோக்கி பாய்ந்து பெருகி உடற் சக்தி மையங்கள் என்று சொல்லப்படும் சக்கரங்கள் ஆற்றல் பெற்று உடல் தன்னை தானே சீர்படுத்தும்.
புத்தரின் விபாசானா தியானத்தில் மௌனமே பிரதானமாக கடைப்பிடிக்கப்படுகிறது. விபாசனாவின் அடிப்படை பயிற்சியில் பெரும்பாலும் தொடர்ச்சியாக பத்து நாட்கள் மௌனமாக இருத்தல் அவசியம். அமைதியற்ற மனநிலை ஒரு பாலைவனம் போலவும். பேரண்ட சக்தியானது எப்போதும் உடலில் பாய்ந்து கொண்டிருக்கும்போது பாலைவனத்தில் ஊற்றப்படும் நீர் போலவும் இருக்கும். அந்த சக்தியை அமைதியற்ற மனநிலை உறிஞ்சி வீணடித்துவிடும். அமைதியான நிலையில் அந்த சக்தி உடலில் பாய்ந்து சேமிக்கப்பட்டு மாபெரும் சக்தியாக வெளிப்படும். இதற்காகவே விபாசனா பயிற்சியை புத்தபிரான் உருவாக்கியதாக ஓஷோ விரிவாக கூறியுள்ளார். ஞானம் தேடுபவர்கள் மக்கள் நெரிசல்களிலிருந்து தப்பி ஓடுவது தமது மௌன நிலையை தக்கவைத்து வெற்றி பெறவே. இருப்பினும் எண்ணங்களின் நெரிசல்களில் இருந்து தப்பித்தல் கடினம். அமைதியாக அதை உற்று நோக்கியே அதைக் கடந்துவிட முடியும் என்கிறது யோக நூல்கள்.
மகத்தான குணங்கள் மௌனத்திலிருந்துதான் வெளிப்படுகின்றன. அமைதியின் பின்னர் வெளிப்படும் ஒற்றை வார்த்தைக்கு எவ்வளவோ சக்தி அதிகம். சுவாசமே உடலின் ஆதார சக்தியாகும். அமைதியான ஆழமான சுவாசம் தரும் நன்மைகள் எண்ணிலடங்காதவை. பரபரப்பான மற்றும் கோபமான உணர்ச்சிப் பிளம்புகளில் சுவாசம் வேகமாக நடைபெறுகிறது. ஆனால் மனம் அமைதியடையும் போது ஆழமாகவும் ஒரே சீராகவும் இயல்பான சுவாசம் நடைபெறும். சுவாசமே மனதை செயற்படுத்துவதால் அமைதி நிலையில் நினைத்ததை அடையும் வல்லமை மனதிற்கு உண்டாகும். சுவாசத்தை வெளியில் விட்டவுடன் உள்ளெடுக்காமல் சுவாசிக்காதபடி உள்ள நிலையில் மனதில் எதையுமே நினைக்க முடியாது. சுவாசம் உள்ளெடுக்கும் போதும் மனம் செயற்படும், உள் நிறுத்தும் போதும் மனம் செயற்படும், சுவாசம் வெளியில் விடும் போதும் மனம் செயற்படும். பொதுவாக எதையாவது கூர்ந்து நோக்க வேண்டியிருப்பின் சற்று அமைதியா இருங்கள் என்று கூறுவதை கேட்டிருப்போம். ஒரு நுண்ணுணர்வைப் பெற மௌனம் இன்றியமையாதது. உடலில் உள்ளேயும் வெளியேயும் உள்ள விடயங்கள் கூட புலப்படும். மனதிலிருந்து சுயத்தை நோக்கிய பயணமே இந்த மௌனம். எம் சுயத்தோடு இலகுவில் பொருந்திவிடவும் முடியும்.
மனதுக்கு சமநிலை தன்மையைத் தந்து இன்பம் துன்பமாகிய இருமைத் தன்மையில் இருந்து விடுபட மௌனம் உதவும், கோபம், குரோதம் விலகி எந்நிலையிலும் அமைதியாக இருக்க முடியும். சக்தி சேமிக்கப்படுவதால் அதிக சக்தி வெளியில் இருந்து பெற்றுக்கொள்ள தேவையில்லை. எனவேதான் யோகிகள் ஒரு வேளை உண்கின்றனர். பிரார்த்தனைகள், பரபரப்பான வழிபாடுகள் பல காலம் மேற்கொள்வதைவிட மௌனத்தில் அதி விரைவில் அதிக சக்தி பெற்று விடலாம். மற்றும் சுய கட்டுப்பாடு, ஆழ்ந்து அறிந்து சிந்திக்கும் திறன் என்பன மேம்படும். இந்நிலையானது மிகப்பெரும் போர்கள், எதிர்ப்புகள், வன்மங்களையே தகர்த்தெறிந்துள்ளது.
உலகின் வெற்றியாளர்கள் பலரும் பெருமளவு மௌனமானவர்களாக இருப்பதை அவதானிக்க முடியும்.
— கரிணி
6,084 total views, 3 views today