வீட்டுக்கு தூரமாகுமா பெண்மை?
சங்க இலக்கிய காலத்தில் தொடங்கி பெண்
எப்படி நிலவோடு உவமைப்பட்டாள் என்பது அதிசயமே. பெண் என்ன நிலவு போன்று குன்றும் குழியுமாக கறையோடா காணப்படுகிறாள் என நகைக்கும் மேதாவிகள் பலரால் அதன் உள்ளார்ந்த பொருள் ஆராயப்படுவது குறைவே.
நிலவுக்கான மாதச்சுழற்சியே பெண்ணிற்கான மாதச்சுழற்சி. மாதாமாதம் மூன்று நாட்கள் நிலவும் பெண்ணும் ஒதுங்கியே போகிறார்கள். அமாவாசை காலத்தில் சூரியனுக்கும் பூமிக்குமிடையே நிலவு மறைந்தாலும் தகிக்கிறது. நிலவைப் போன்ற குளிர்ச்சியான பெண்ணும் மாதவிடாய் காலத்தில் உடலில் வெப்பம் அதிகரித்து உணர்வுகள் கொந்தளித்துக் காணப்படுவாள். இக்காலத்தில் எரிச்சல், கோபம், சோர்வு போன்ற உணர்வுகள் இயல்பாகவே ஏற்படும். பௌர்ணமி காலத்தில் நிலவு பிரகாசிக்கிறது. அது போன்று பெண்ணும் மாதவிடாய் சக்கரத்தின் இரு வாரங்களில் மிகவும் பிரகாசிக்கிறாள். இப்படி பல விடயங்களில் பெண் நிலவோடு ஒத்துப்போகிறாள்.
பெண்மை ஏன் இன்றுவரை போற்றப்படுகிறது எனில் அன்போடும், அக்கறையோடும் மிகப் பொறுமையோடு படைப்பிற்கு துணை போய் அடுத்த சந்ததிகளை உருவாக்கி உறுதியாக்கி கொடுக்கிறது என்பதனால்த்தான். அதற்கான அடிப்படையே பெண்ணிடமுள்ள பெண்மையே. பெண் என்ற உரு பெண்மை உள்ளதால் முழுமை பெறுகிறது.
மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணைப் பார்த்து துடக்கு ஒரு இடத்தில் அமர்ந்திரு, அங்கு தொடாதே, இங்கு தொடாதே, பூமரங்களையோ பயிர்களையோ தொடாதே, அடுப்பங்கரைக்கு வராதே என பெரியவர்கள் கூறுவதை கேட்டிருக்கிறோம். அதனை பலர் மூட நம்பிக்கை என்றும் இக்காலத்தில் பெண்கள் விமானம் ஓட்டுகிறார்கள் என்றும் விசனப்படுவார்கள். உண்மையில் கடைப்பிடிக்கப்படவேண்டிய மரபோடு மூட நம்பிக்கைகள் மிக சில விடயங்கள் சேர்ந்தமையால் அவை முற்றிலும் பின்பற்றப்படாமல் போகின்றன. பொதுவாக மாதவிடாய் காலத்தில் பெண்ணின் உடலில் சூடு அதிகரித்து அடிவயிற்றில் அந்த வெப்பம் மையம் கொண்டு அந்த வெப்பத்தினை அடிப்படையாகக் கொண்டே உடற் சுத்திகரிப்பு நிகழ்கிறது. இக்காலத்தில் வலது பக்க மூக்கு துவாரமாகிய சூரியகலையே அதிகமாக வேலை செய்யும். அது உடலை வெப்பமாக்கும். அப்போது தான் உடல் அதிக வெப்பத்தை தன்னகத்தே தக்க வைக்க முடியும். இந்த காலத்தில் குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்வதையோ, உடலை நன்கு குளிர்விக்கும் விடயங்களையோ தவிர்க்க வேண்டும். உடலின் சூட்டை விட அதிக சூடு தரும் வகையில் நெருப்பை பயன்படுத்தாது சற்று விலகியிருத்தல் வேண்டும். மாதவிடாயின் முதல் நாள் தொடக்கம் மூன்று நாட்களுக்கு இந்த சூடு வெகுவாக இருக்கும். சூடு இழக்கப்படும் போது குறையும் போது உடல் மேலும் சூட்டினை உருவாக்கப் பாடுபடும் அப்போது அதிக வலி, களைப்பு, சோர்வு என்பன ஏற்படும். எனவேதான் அதிக காற்றுப்படாமல் அமைதியாக ஒரு இடத்தில் ஓய்வாக அமரச் சொன்னார்கள். முக்கிய விடயமாக வெப்பத்தின் தன்மை தொடுகை மூலமாக கடத்தப்படும். மனிதர்களையோ, தாவரங்களையோ, உலோகங்களையோ தொடும்போதும், வெறும் தரையில் அமர்ந்திருக்கும் போதும் வெப்பம் கடத்தப்பட்டுவிடும். இந்த வெப்பம் சாதாரண நிலையில் இருக்கும் பிறரை தாக்குவதுடன் மென்மையான மலர்கள், செடிகளைக் கூட சோபை இழந்து சோர்ந்து போகச் செய்துவிடும். இதனால் வெப்ப இழப்பு ஏற்பட்டு மாதவிடாய் ஆன பெண் பாதிக்கப்பட்டு சோர்ந்து போவாள். அது தவிர உடலினுள் நடக்க வேண்டிய வேலைகளிலும் இடையூறு ஏற்படும். வேறு வேலைகள் செய்யும் போது அந்த வேலைகளுக்கான சக்தி இழப்பு மற்றும் பிற அங்கங்களுக்கான இரத்த ஓட்டம் அதிகளவு இடம்பெற வேண்டியதால் செய்யப்பட வேண்டிய சுத்திகரிப்பு சரிவர இடம்பெறாமலே போய்விடும். எனவேதான் ஓரிடத்தில் ஓய்வாக இருந்து உடலில் கவனத்தை செலுத்தி ஆரோக்கியமாக வாழச் செய்தனர்.
ஆலயங்கள் அமைக்கப் படும் போது அதிக கதிர்வீச்சுக்களை பெற்று பயன் பெறுவதற்கான முறையிலேயே அடித்தளம், கூரை போன்றன அமைக்கப்படுகின்றன. அதிகப்படியான எண்ணங்கள் ஒன்று குவியும் புள்ளியும் ஆற்றல் பெற்று தெறிப்படைந்து விரிவடைகின்றன. பொதுவாக சாதாரண நாட்களை விட மாதவிடாய் காலங்களில் பெண் அதீத சக்தியோடு விளங்குவாள். அவளது வெப்ப அலைகள் அவளது சூழலில் ஆதிக்கம் புரியும். மேலதிக கதிர்வீச்சுக்களை அவளது உடல் தாங்காது எதிர்வினை புரியும். இக்காலத்தில் சாதாரண வழிபாடு தியானங்களை அமைதியாக மேற்கொள்ள முடியும். இவை தவிர பெண் இந்நிலையில் தீண்டத்தகாத கீழானவளில்லை.
இன்று ஓய்வின்றி உழைக்கும் பெண்களை உதாரணம் காட்டுவோர் அப்பெண்கள் மருந்தும் ஊசியும் என தம் பெண்மையை காத்துக்கொள்ள போராடுவதை அறிவதில்லை. கருப்பை நீர்க் கட்டிகள், முறையற்ற மாதவிடாய், கருமுட்டை உருவாகுவதில் சிக்கல், கருப்பை கீழிறக்கம் மற்றும் பலவீனம், கருக்குழாய் அடைப்பு அல்லது சுருங்கிப்போதல், கரு கலைந்து போதல், குறைப்பிரசவம், வயிற்றை வெட்டி குழந்தையை வெளியெடுத்தல், இளமைப் பருவத்திலேயே மாதவிடாய் சுழற்சி நின்று போதல் என இவற்றில் ஒன்றேனும் இன்று வீட்டிற்கு வீடு நிகழ்கிறது. இவற்றிற்கான ஒரே அடிப்படை பெண்மை சரியாக இயற்கை முறையில் பராமரிக்கப்படவில்லை என்பதே.
பூப்புனித சடங்கின் அடிப்படையே பெண்மை பாதுகாக்கப்பட வேண்டியதை சொல்லிக் கொடுக்கும் முறையே அன்றி வெறும் ஆடம்பரமல்ல.
ஆதி காலத்தில் இந்தமாதிரியான தருணங்களில் பெண்களை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்க ஓரிடத்தில் பத்திரப்படுத்தி ஓரிரு ஆயுதங்களை தற்பாதுகாப்பிற்காகவும் அருகில் வைப்பார்கள். ஒரு உலக்கையினை குறுக்கே போட்டு வெளியில் உலாவாதே என கூறுவர். இரத்த வாடைக்கு பல தொலைவிலிருந்தே கொடிய மிருகங்கள் கவரப்பட்டு வந்துவிடலாம் என்ற முன் எச்சரிக்கை மரபுவழி கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. நவீன மருத்துவம் ஒத்துழைத்தாலும் தன் துணையோடு கூடுதலும் உடலில் பல்வேறு எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். அது தவிர அதிக மகிழ்வு, துக்கம் போன்றவற்றால் அதிக குருதி இழப்பு ஏற்படும் எனக் கருதி மங்கல நிகழ்வு மற்றும் இறப்பு வீடு போன்றவற்றிற்கும் அழைத்து செல்லப்படாமல் உணர்வில் அமைதியை கடைப்பிடிக்கும் சூழலில் சுகமாக பராமரிக்கப்பட்டாள் பெண். மாதத்தில் மூன்று நாட்கள் இந்த அமைதி அவளின் மொத்த பெண்மையையும் பாதுகாக்கக் கூடியது. உடல் தன்னைத்தானே சரிப்படுத்திக் கொள்ளும் ஆற்றலோடுதான் படைக்கப்பட்டிருக்கிறது. அதற்குத் தேவை அதன் வேலையில் குறுக்கிடாமல் இருப்பதே.
இக்காலத்தில் சிறு பெண் பிள்ளைகள் கூட அனாவசியமாக மாதவிடாய் பிந்தி வருவதற்காகவோ முந்தி வருவதற்காகவோ மருந்துகள் எடுத்துக் கொள்கின்றனர். அதனை பெற்றோரே வாங்கிக் கொடுக்கும் பரிதாபம் என்னவென்பது? உடல் இதற்காகவே பல நாட்கள் தயாராக வேண்டியுள்ளது. அதன் இயக்கத்தில் விளையாடி அதன் எதிர் விளைவுகளை காத்திருந்து அனுபவித்து கதறுவதை விட தடுக்காது இயற்கையோடு ஒன்றிக்கப் பழக வேண்டும். இப்படி கொள்வனவு இருக்கும்வரை புதிது புதிதாக பல விதமாக மருந்துகள் பக்க விளைவுகளை இலவச இணைப்பாகக் கொண்டு வணிக நிறுவனங்களில் வந்துவிடும்.
விளையாத நிலம் என்று ஏது? அந்தந்த நிலத்தின் தன்மைக்கு ஏற்ப அங்கு ஏதோ விளையத்தான் செய்கிறது. நிலம் பண்பட்டு இருந்தாலே அங்கு வளரும் பயிர் தரமானதாக வளரும். சித்தர்கள் பாடலில் சொல்லியுள்ளார்கள் மலடு என்பது பெண்ணுக்கு இல்லை. எந்த நிலமும் பொய்ப்பது இல்லை. அது பண்படுத்தப்பட்டால் போதும். அதற்கு மேற்குறிப்பிட்ட விடயங்களைவிட அடிப்படையாக விளங்குவது உணவுப்பழக்கவழக்கம். இன்று உணவே வணிகமயமாக்கப்பட்டு பெரு விழைச்சலுக்காக மரபணு மாற்றம் பெற்றுவிட்டது. பார்வைக்கு அழகாகவும், பெரியதாகவும், விதைகள் அற்றதாகவும் இருப்பதனால் கையாள்வதற்கும், உண்பதற்கும் இலகுவாக இருப்பதனால் அதனையே விரும்பி வாங்கும் நடுத்தர , உயர் வர்க்கத்தினரையே மேற்சொன்ன பாதிப்புக்கள் அதிகம் ஆக்கிரமிக்கின்றன. இயற்கையோடு ஒன்றித்து வாழ்பவர்கள்தான் தம் இயற்கைத்தன்மையினை பாதுகாத்துக் கொள்கின்றனர். விதைகளற்ற காய்கறி, பழங்கள் என்பன மூலம் புதிய தாவரத்தையே உருவாக்க முடியாத போது தவரங்களிலிருந்து சத்தாகி, இரத்தமாகி, வித்தாகும் இவ்வகையான உணவுக்கு எப்படி படைப்பாற்றல் இருக்கும்? எனவே சிரமம் இருந்தாலும் உண்பதற்கு நுணுக்கமாக முக்கியத்துவம் கொடுத்து இயற்கையோடு முரணாகாத விளைச்சல்களை உட்கொள்ள வேண்டும். விதை உள்ள பழங்கள், காய்கறிகளை இனியேனும் தவிர்க்காது பயன்படுத்தப் பழக வேண்டும்.
பெண்ணின் உடல் மட்டும்தான் மாதாந்தம் சுத்திகரிக்கப்பட வேண்டுமா? அவளுக்கு மட்டுமே அத்தகைய நாட்களில் ஓய்வு வேண்டுமா? எனத் தோன்றினால்.. ஆம்! அது இயற்கையின் கட்டளை. பெண்ணின் வயிற்றிலேயே மற்றுமொரு உயிர் உருவாக்கம் பெறுகிறது. அடுத்த தலைமுறையினை சரிவர உருவாக்குவதற்கு இயற்கை உருவாக்கிய விடயங்கள் இவை. இவற்றில் அந்தப் பெண்ணே இடையூறு ஏற்படுத்தியோ, ஒத்துழையாமல் போவாளோ ஆயினும் அதற்கான எதிர் விளைவுகளை சகிக்க வேண்டியதுதான்.
(மலரினும் மெலியது, புயலினும் வலியது பெண்மை.)
— கரிணி
2,237 total views, 2 views today