கீழடி – பானை ஓடுகளின் கீறல்கள் தமிழ்த்தாயின் கை ரேகைகள்!
தமிழ் என்பது தமிழர்க்கு வெறும் பேசும் மொழி மட்டுமல்ல அது உயிரில் கலந்த உணர்வு போலே, தமிழ் எங்கள் உயிருக்கு நேரென சொல்லுமளவுக்கு கொண்டாடப்படும் ஒன்று, கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழியென பெருமைப்படும் நமக்கு அதனை தக்க சான்றோடு உலகத்துக்கு எடுத்து இயம்ப வேண்டிய கடமையும் உள்ளது. அப்படி ஒரு பொன்னான நிகழ்வு தற்போது நிகழ்ந்துள்ளது.
தமிழுலகம் மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த மதுரை கீழடி அகழ்வாய்வின் அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் பல உண்மைகளும் வெளிவந்துள்ளன.அதிலொன்று பழந்தமிழ் எழுத்துக்களாம் தமிழி அல்லது தமிழ் பிராமி பொறிக்கப்பட்ட பானை ஓடுகளின் காலம் கி.மு 6 ஆம் நூற்றாண்டென கண்டறியப்பட்டுள்ளது.
எழுத்துக்கள் ஏன் முக்கியம் ?
ஒரு மொழியோ அதனைச்சார்ந்த சமூகமோ தனது பழமையை பறைசாற்ற தக்க ஆதாரங்களை முன்வைக்க வேண்டும், தமிழுக்கு இலக்கிய பெருமை 2000 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளதும் சங்க இலக்கியங்கள் செழித்ததும் நாம் அறிந்ததே ஆனால் வெறும் இலக்கிய ஆதாரங்களை மட்டும் முன் வைத்தால் அவை இன்ன காலகட்டத்தில் தான் எழுதப்பட்டதா அல்லது பிற்சேர்க்கையா என்று ஆயிரம் கேள்விகள் எழும் அதனால் இலக்கிய ஆதாரங்களுடன் எழுதப்பட்ட ஆதாரத்தையும் எடுத்து வைக்க வேண்டும்.
இதற்கு தான் நமக்கு கல்வெட்டுகள் உதவுகின்றன, தமிழகத்தில்ஃஈழத்தில்ஃகடல்கடந்த பல நாடுகளிலும் தமிழ்க் கல்வெட்டுகள் கிடைக்கப்பெறுகின்றன. பொதுவாக தமிழ் எழுத்துக்கள் முதலில் தமிழிஃதமிழ்ப்பிராமியில் எழுதப்பட்டு பின்னர் வட்டெழுத்து, தமிழ் எழுத்தென இன்றைக்கு நாம் எழுதும் வடிவத்திற்கு வந்துள்ளது.
ஈழத்து ஆனைக்கோட்டையில் பழந்தமிழ் எழுத்துக்கள்
யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஆனைக்கோட்டையில் 1980 ஆண்டில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வில் முத்திரை ஒன்று கண்டறியப்பட்டது. கிறிஸ்துவுக்கு முந்திய காலத்தை சேர்ந்த பழங்கால மக்களின் ஈமத்தாழியும் அதோடு முத்திரை கண்டறியப்பட்டது, அதில் சில குறியீடுகளும் தமிழி எழுத்துக்களும் பொறிக்கப்பட்டிருந்தன. அந்த எழுத்துக்கள் கோவேந்த கோவேத என்று அறிஞர்களால் வாசிக்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அந்த முத்திரை பின்னாளில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.
கீழடியின் எழுச்சி
தமிழகத்தில் மதுரையை சுற்றிய மலைகள், ஜம்பை, அரச்சலூர்,கரூர் மற்றும் பலவிடங்களில் பழந்தமிழ் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனாலும் அதன் காலம் கி.மு 300 கீழே இல்லை என்று பல்வேறு கருத்துக்கள் நிலவிவந்தன, அதனால் எழுத்துக்களின் பழமை கி.மு 300 க்கு கீழ் கொண்டு செல்லமுடியவில்லை, இந்நிலையில் தான் பொருந்தல் அகழ்வாய்வு, புலிமான் கொம்பை நடுகல் மற்றும் கீழடி கண்டுபிடிப்புகள் நம்பிக்கையை தந்தன.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு அருகே கீழடியில் அகழ்வாய்வுகள் தொடப்பட்டதும் படிப்படியாக அது தமிழர்களின் கவனத்தை ஈர்த்தது, சங்க கால கட்டிடங்கள், உறைகிணறுகள், மணிகள், பொம்மைகள் மற்றும் பானை ஓடுகள் என பல பொருட்கள் கிடைக்க ஆரம்பித்தன, பின்னால் வைகைக் கரை தமிழர் நாகரீகம் என்று சொல்லுமளவு விஸ்வரூபம் எடுத்தது.
இந்த ஆய்வுகளின் பொது சேகரிக்கப்பட்ட பொருட்களில் இருந்து சேகரிக்கப்பட்ட கரிம மாதிரிகள் அமெரிக்காவின் மியாமி நகரத்தில் இருக்கும் பீட்டா பகுப்பாய்வு சோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டு தமிழக தொல்லியல் துறையினரால் ஆய்வு முடிவுகள் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி தமிழ்ச்சமூகம் கி.மு ஆறாம் நூற்றாண்டு அதாவது இன்றைக்கு 2600 ஆண்டுகட்கு முன்னரே எழுத்தறிவு பெற்றசமூகமாக திகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது. கீழடியில் கிடைத்த பானை ஓடுகளில் ஆட்களின் பெயர்களான ஆதன் குவிரன் ஆதன் பெயர்கள் இடம்பெற்றுள்ளன, அதிசயமே இந்தப் பெயர்கள் சங்கஇலக்கியங்களிலும் காணக்கிடைக்கின்றன.
சிந்து,கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பின்,இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள்,தமிழகத்தில் தோன்றவில்லை என்ற கருத்துக்கு மாறாய்,சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன.
தமிழின் பெருமையை வெளிக்கொணரும் போது அதனை நாமும் அறிந்து நமது பிள்ளைகளுக்கும் சொல்லும் கடமை நமக்கு உள்ளது.
-தனசேகர் பிரபாகரன்
2,258 total views, 2 views today