திருமந்திரத்தில் உள்ள சமூக அறிவியல்
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ள சமூக அறிவியலைப் பார்ப்போமானால் உலகில் உள்ள மக்கள் அனைவரும் சாதி, சமய வேறுபாடற்ற ஒரு சமுதாயமாக வாழவேண்டும் என்று மனித குலத்திற்கு நல்வழி காட்டிய திருமூலநாயனாரின் உயர்ந்த சிந்தனையான, திருமந்திரத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றான ஒன்றே குலம் ஒருவனேதேவன் என்னும் தத்துவத்தைக் கூறும் பாடல் எண் 2104
“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன்இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும்சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்மினே.”
இப்பாடலின் பொருள் “மனித குலம் முழுமையும் ஒன்றுதான், இறைவனும் ஒருவன்தான். எப்பொழுதும் நல்லதையே நினையுங்கள், எவருக்கும் நல்லதையே செய்யுங்கள் இப்படி வாழ்பவர்கள் இறவாப் புகழுடன் வாழ்வார்கள். வெட்கப்படாமல் துணிந்து நீங்கள் செல்லத்தக்க வழி வேறு இல்லை. எனவே மனத்துள்ளே சிவனை நினைத்து அவனருளுணர்வோடு பொருந்தி, தடுமாற்றம் இன்றி அவன் திருவடி நினைந்து நற்கதி அடையுங்கள்.” என்பதாகும்.
இக்கருத்திற்கு பொருத்தமாக கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கணித மேதையும், சங்க காலப் புலவருமான கணியன் பூங்குன்றனார் புறநானூற்றில் 192 ஆம் பாடலில் யாதும் ஊரே யாவரும் கேளிர் ( எல்லா ஊரும் எம் ஊர், எல்லா மக்களும் எம் உறவினர் ) என பாடியுள்ளார்.
மானிடராய்ப் பிறந்த அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய நாம் பெற்ற இன்பம் அனைவரும் பெறவேண்டும் என்பதைக் கூறும் பாடல் 85 இல்
“நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான் பற்றப்பற்றத் தலைப்படும் தானே.”
இப்பாடலின் பொருள் “நான் பெற்றதான இறையருள் கருணையால் உணர்ந்தறிந்த, பேரின்ப ஞானப் பேற்றை, இவ்வுலக மக்களெல்லாம் பெற்றுய்ய வேண்டும். வானம் அளந்து நின்ற வேதவிழுப்பொருளைக் கூற நான் பெற்ற ஞானம் ஊனோடு கலந்து உணர்வோடு ஒன்றி உயிர்ப்படையச் செய்யும் வேத மந்திரம் இதுவாகும். இதை உள்ளம் பற்றி நினைந்து நினைந்து துதிக்க இறைவன் திருவருள் தானே தேடி வந்தடையும்.” என்பதாகும்.
மனிதர்கள் யாவரும் நடுவு நிலைமை உடைய வாழ்க்கையை வாழவேண்டும் எனக் கூறும் பாடல் எண் 320
“நடுவு நின்றார்க்குஅன்றி ஞானமும் இல்லை
நடுவு நின்றார்க்கு நரகமும் இல்லை
நடுவு நின்றார்நல்ல தேவரும் ஆவார்
நடுவு நின்றார்வழி நானும்நின் றேனே”.
இப்பாடலின் பொருள் “நடுவு நிலைமை தவறாது அறவழியில் நிற்பவர்களுக்கே ஞானம் கிட்டுமே அல்லாமல் மற்றவர்க்கு ஞானம் பெற வழியில்லை. நடுவு நிலையில் நின்றவர்களுக்கு நரகத் துன்பமும் இல்லை. நடுநிலையாளர்கள் உயர்ந்த தேவ நிலையும் அடையப் பெறுவர். எனவே நடுநிலையாளர்கள் மேற்கொண்ட வழியையே நானும் கடைப்பிடிக்கின்றேன்” என்பதாகும்.
நடுவுநிலையே நல்ல ஞானநிலை எனக் கூறும் பாடல் எண் 321
“நடுவு நின்றான்நல்ல கார்முகில் வண்ணன்
நடுவு நின்றான்நல்ல நான்மறை ஓதி
நடுவு நின்றார்சிலர் ஞானிக ளாவோர்
நடுவு நின்றார்நல்ல நம்பனும் ஆமே”
கரிய மேகம் போன்ற மேனி அழகுடைய திருமாலும் நடுவுநிலை தவறாது நின்றே தனது காக்கும் தொழிலைச் செய்து வருகிறான். நான்கு வேதங்களையும் ஓதித் தனது படைப்புத் தொழிலைத் தொடங்குகின்ற பிரமனும் நடுவுநிலை தவறாமலே செயல்படுகின்றான். ஞானிகளும் இந்த நடுவுநிலமை தவறாதவர்களே. நடுவுநிலை தவறாதவர்கள் சிவ சொரூபமாகவே விளங்குவர்.
நடுவுநிலை தவறாதவன் ஞானி எனக் கூறி உலகம் நடுவுநிலை தவறாது ஒழுக வேண்டும் என்பதை கூறும் பாடல் எண் 322
“நடுவு நின்றார்சிலர் ஞானிக ளாவார்
நடுவு நின்றார்சிலர் தேவரு மாவார்
நடுவு நின்றார்சிலர் நம்பனு மாவார்
நடுவு நின்றாரொடு நானும்நின் றேனே”
நடுவுநிலை தவறாதிருப்பவர்கள் சிலர் ஞானிகளாவார். நடுவுநிலையில் நிற்பவர்களில் சிலர் தேவர்களும் ஆவர். நடுவுநிலை பிறழாது நடப்பவர் சிவசொரூபமே ஆவர். எனவே நானும் நடுவுநிலை தவறாதவர்களோடு சேர்ந்தவன் ஆனேன்.
ஞானத்தவம் நடுவுநிலமை எனக் கூறும் பாடல் எண் 323
“தோன்றிய எல்லாம் துடைப்பன் அவனன்றி
ஏன்று நின்றார்என்றும் ஈசன் இணையடி
மூன்று நின்றார்முதல் வன்திரு நாமத்தை
நான்று நின்றார்நடு வாகிநின் றாரே”
உலகில் தோன்றியுள்ள எல்லாவற்றையும் அழிக்க வல்லவனும் ஈசனே ஆவான். எனவே இறைவன் திருவடிகளே தமக்குத் துணை என்று ஏற்றுக் கொண்டவர்கள் இறைவன் திருப்பெயரைத் தியானித்து, அவனருளைப் பெற முயன்று நின்றார்கள். தவயோகத்தைப் பற்றியும் நின்றவர்கள் நடுவுநிலை நின்றவர்களே. (சிலர் நடுவுநிலை என்பதற்கு நாசிக்கு மேலே இரு புருவ நடுவில்-சுழுமுனையில் நிற்றல் எனவும் பொருள் கூறுவர்)
2,832 total views, 3 views today