வாழ்க்கை என்பது என்ன?

பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடைப்பட்ட காலமே வாழ்க்கை. ஆயினும் ஒரு சொல்லில் சொல்லிவிட வேண்டுமாயின் வாழ்க்கை என்றால் “உயிர்வாழ்தல்”. வாழும் முயற்சி என்பது “தப்பிப்பிழைத்தல்” அதாவது “வாழும்போராட்டம்” எனவும் கருதலாம்
எனவே வாழ்க்கை ஒரு சவால். எதிர்கொள்ளப்பட வேண்டிய சவால். சவால் எனப்படுவது வெறுமனே கடுகடுப்பானதல்ல. அதனை கொண்டாட்டமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

உண்மையில் வாழ்க்கை என்பது வரையறுத்துக்கூற முடியாத ஒன்றாகவே இருக்கின்றது. ஏனெனில் நாம் வாழும் இந்த வாழ்க்கை சரிவர யாராலும் புரிந்துகொள்ளப்படவில்லை வாழ்க்கை என்பது மாற்றமடையும் ஒன்றாக, நிச்சயத்தன்மையற்றதாகவே இருக்கின்றது.
உலகில் மில்லியன் கணக்கான உயிரினங்கள் வாழ்ந்தாலும் அவை தமக்கேற்றாற்போல் இந்த உலகினை நுகர்கின்றன. எனவே ஒவ்வொரு உயிரினத்தின் வாழ்க்கைமுறையும் வேறுபடுகின்றது. என்னதான் வாழும் முறையில் வேறுபாடு காணப்பட்டாலும் அவை எல்லாவற்றிற்கும் பொதுவான தன்மை ஒன்றுதான். அது “உயிர்வாழ்தல்” என்னும் அடிப்படைத் தன்மையை பூர்த்திசெய்தல். ஒரு தன்மை உயிர்ப்புடன் இயங்க வேண்டுமானால் உயிரற்ற இன்னோர் தன்மையை சார்ந்தே இயங்கவேண்டும் இது இயற்கையின் அடிப்படை விதி. ஆகவே வாழ்க்கை என்பது உயிருள்ள உயிரற்ற தன்மைகளின் சிக்கல் நிலையாகும். இந்த சிக்கல் நிலையினை சிறப்பாக எந்த உயிரி எதிர்கொள்கின்றதோ அந்த உயிரி இவ்வுலகில் நிலைபெறுவதற்கு இயற்கை சரியான விதிகளை உருவாக்கி வைத்துள்ளது.

உதாரணமாக மனிதன் இவ்வுலகின் ஆதியிலிருந்து இதற்காக பரிணமித்து வந்திருப்பது அசாத்தியமானதாகும். வெவ்வேறு உயிரினங்களும் பரிணமித்து பல பாதைகளை கடந்து வந்திருந்தாலும் மானிட பரிணமிப்பு வித்தியாசமானது. எத்தனையோ சூழ்நிலைகள் நெருக்கடிகள் போராட்டங்கள் என்பவற்றை மில்லியன் கணக்கான ஆண்டுகளாக சுமந்து இந்த பரிணமிப்பு நிகழ்ந்திருக்கின்றது. இதுதான் வாழ்க்கை. போராட்டம், போட்டி, இசைவாக்கம் இன்னும் பல எத்தனையோ தன்மைகளை இந்த இயற்கை மனிதனுக்கு கற்றுக்கொடுத்திருக்கின்றது. வாழ்க்கை என்றால் என்னவென்று உணர்த்துவதற்காக. இவற்றைவிட மனிதனும் நிறைய விடயங்களை கற்றுக்கொண்டிருக்கின்றான் இயற்கை உணர்தியதை விடவஞ்சனை, பொறாமை, கோபம், குரோதம், பழிஉணர்ச்சி இவ்வாறாக பல எதிர்மறையான விடயங்களும் கூட. ஆனாலும் இவையெல்லாம் மேம்பட்ட மனித வாழ்க்கையின் அடிப்படை தன்மைகளினை பூர்த்தி செய்யுமா என்பது சந்தேகம்தான்.
இயற்கையானது மனிதனை ஆரோக்கியமான சூழ்நிலைகளிலேயே வைத்திருக்கின்றது. ஆனால் மனிதன் இன்று இயற்கையையும் பிற உயிரினங்களினையும் நோய்வாய்ப்பட்ட நிலைக்கு தள்ளிக் கொண்டிருக் கின்றான். தனது சுயநல வாழ்க்கைமுறையால். ஆனால்

பிற ஐந்தறிவு உயிரினங்கள் இன்னும் தூய தன்மையில் இந்த வாழ்வினை எதிர்நோக்கி இயற்கையுடன் ஒன்றித்திருக்கின்றன.

இயற்கையின் நுண்ணறிவு மிகவும் பெற்ற உயிரினமாக மனிதன் பிரகாசிக்கின்றான். ஆகவே தனது வாழ்க்கை முறைகள் மற்றும் தூய நேர்மறையான தன்மைகளின் மூலம் தன்னையும் தன்னைச்சுற்றியுள்ள ஜீவராசி களினையும் பாதுகாக்க வேண்டிய பாரியதொரு கடமையைக் கொண்டிருக்கின்றான்.
இந்த நாகரிகம் மனிதன் தவிர்ந்த ஏனைய உயிரினங்களில் பெருமளவாகவே காணப்படுகின்றது. வாழ்வு முற்றிலும் சரியாக அமையப் பெற்றது அல்ல என்பது பணிவாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. சந்ததிக்கு சந்ததி அதன் தன்மை மாற்றமடைந்தே செல்லும். இதுவரையும் அப்படியே நிகழ்ந்தும் உள்ளது. வாழ்க்கை வாழப்பட வேண்டும். இருப்பினும் வாழ வேண்டுமெனில் அதன் அடித்தளமாக துணிவும் முயற்சியும் தேவை. உயிர்வாழ உணவு உண்பதற்கே முயற்சியும், செயலும் வேண்டும்.

துணிவோடு தனக்கு தானே எழுதும் விதிக்கு உதாரணமாக ஒரு கழுகினை எடுத்துக் கொள்வோம். ஒரு கழுகின் வாழ்க்கை வட்டம் நாற்பது வருடங்களில் முடிவடைந்து விடுகின்றது. உடல் முதிர்ச்சியடைந்த கழுகுகளின் நகங்கள், அலகு போன்றவை பலமிழந்து வழமை போல் வேட்டையாட முடியாமலும், நன்கு பறக்கமுடியாதபடி சிறகுகளும் கனத்துப் போகின்றன. இதன் பிறகு ஏற்படப்போவது பட்டினியும், மரணமுமே. ஆனால் எல்லா கழுகுகளும் இந்த விதிக்கு உட்பட்டுவிடுவதில்லை.

சில கழுகுகள் இந்த அடிப்படை விதிக்கு எதிராகப் போராடுகின்றன. தம் வாழ்நாட்களை நீட்டி தப்பிப் பிழைப்பதற்காக தன் பலவீனமான பாகங்களை கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து எறியத் தொடங்குகிறது. பாதுகாப்பாக தனது கூட்டில் இருந்து கொண்டே முதலில் தன் அலகினை பாறையில் உடைத்து புது அலகு வளரும்வரை காத்திருந்து பின் தன் நகங்களை பிய்த்து எறிகின்றது. பின்னர் பலமிழந்த இறகுகளை ஒன்றொன்றாக பிய்த்து எறியத் தொடங்குகிறது. இப்படியாக மிகப் பெரும் வலியோடு போராடி புதிய இறகுகள், புதிய அலகு, புதிய நகங்கள் என 150 நாட்கள் வலியோடு போராடி புதிய அங்கங்களோடு புத்துணர்வான வாழ்வை மீண்டும் பெற்று மேலும் முப்பது வருடங்கள் தன் வாழ்நாளை நீட்டிக் கொள்கிறது கழுகு.

இந்த வல்லமையினையும், துணிவினையும் பிறப்பிலிருந்தே கற்றுக் கொள்கிறது. பிறக்கும் போதே வலிமையான கழுகின் குஞ்சு வலிமை குறைந்த தன் சக குஞ்சை கொன்று உண்ணும். இதை தாய் கழுகும் தடுக்காது. வலியது வாழும் என்பது இங்கு தொடங்குகிறது. பின் பறக்கத் தொடங்கும் முன்பே தன் குஞ்சை கழுகு உயரத்தில் இருந்து தூக்கி போடுகிறது. நிலத்துக்கு அருகில் குஞ்சு வரும்போது தாய் கழுகு பிடித்துவிடும் இப்படியாக தப்பிப்பிழைக்க வேண்டும் என்ற பயத்தில் கழுகின் குஞ்சு பறக்கப் பழகுகிறது. இது வாழ்வின் தப்பிப் பிழைத்தலுக்கான கடும் போராட்டங்களில் ஒன்று.

அடுத்து திறமை என்பது “வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்தல்” முக்கியமாக எல்லா உயிரினங்களிடையேயும் இதன் தன்மையினைக் காணமுடிகிறது. வாழ்வதற்கான வாய்ப்பினை ஒவ்வொரு நாட்களும் வழங்குகிறது. அதை பயன்படுத்த வேண்டியதே திறமை. ஒரு நாள் என்பது பகலும் இரவும் சேர்ந்தது இரவில் பகலுக்கு வேண்டியோ பகலில் இரவுக்கு வேண்டியோ காத்திருக்க கூடாது. அந்தந்த பருவங்களில் அந்தந்த தன்மைகளை அனுபவிப்பதே மிகச் சிறப்பு, மனிதனை தவிர ஏனைய உயிரிகள் பெரும்பாலும் நிகழ்காலத்திலேயே வாழ்கின்றன. நிகழ்காலத்தை இழக்கும்போது வாழும் காலம் குறைந்தே போகிறது எனலாம். எதிர்காலத்தை நேரடியாக சந்திக்கும் போது அது நிகழ்காலம் ஆகின்றது. ஆக எதிர் காலம் என்பதே இல்லை. இருந்தாலும் அதை சந்திக்கப் போவதில்லை. சந்திக்கும், உணரும், அனுபவிக்கும் எதுவாயினும் அது நிகழ் காலம் மட்டுமே. நிகழ் காலத்தை உணர்ந்து அனுபவிக்காது வீணடிப்பதைவிட காலத்தை உணர்ந்து பயணிப்பதே அதற்கான சிறந்த பலனை வழங்குகின்றது.

காலத்தின் போக்கில் ஒரு கட்டமைப்பு அழகாக உண்டு. அதற்கென ஒரு சுழற்சி உண்டு அதில் சிறிதளவு ஏற்படுத்தப்படும் இடையூறு சிறிது சிறிதாக வளர்ந்து அதன் மொத்த சமநிலையினையும். சீர்குலைக்கும்.

இயற்கையின் நீதிமன்றம் என்ற ஒன்று இருப்பின் அதன் குற்றவாளிக் கூண்டில் மனித இனம் மட்டுமே அடைபட வேண்டியிருக்கும். இன்றைய நிலையில் நாகரிக வளர்ச்சியில் மனிதன் கால்போன போக்கிற்கு சென்று தன் வாழும் காலத்தில் சிக்கல்களை எதிர்கொள்கிறான். அவனுடைய சுய இருப்பு ஆட்டம் காண்கிறது. காலத்திற்கு அவன் விடுக்கும் சவால், இயற்கைக்கு எதிரான முயற்சிகளில் இறுதியில் பல்வேறு பக்கவிளைவுகளை சந்தித்துக் கொள்கிறான். ஏனைய விலங்குகளோடு ஒப்பிடுகையில் மனிதனே கொடிய விலங்காக உள்ளான். பல்வேறு உயிரினங்கள் மனித குலத்தின் அட்டூழியங்களைச் சகித்துக் கொண்டு வேதனையோடு தம் வாழ்நாளை கழிக்கின்றன. நிலம், நீர், காற்று, போன்றவற்றை அசுத்தமாக்கும் உரிமை இயற்கைக்கு மிகவும் எதிரான செயலாகும். ஒரு உலகத்தில் பிறந்து தனது மனித இனங்களுக்கு எதிராகவே உருவாக்கப்பட்டிருக்கும் அணுகுண்டுகள் யாவுமே இப் பூமிக்கு எதிராக செய்யும் மாபெரும் குற்றச் செய்கையாகும். தனக்கு பிறகு உருவாகும் உயிரினங்களை பற்றிய கரிசனை அற்ற நிலை உச்சக்கட்ட சுயநலம். இந்த துணிவும், அரக்கத்தன்மையும் மனிதனுக்குள் உருவானது படைப்பின் பெரும் சாபக்கேடு. உணவுத் தேவையினைத் தவிர வாழும் உயிரிகள் மற்றும் இயற்கைக்கு இடைஞ்சலாக இருப்பது மனிதன் இப்பூமியில் வாழும் தகுதியை இழந்து விட்டான் என்றே கூறலாம். இவ்வுலகு மனிதர்களுக்கானது மட்டுமல்ல .

இருப்பினும் இவ்வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து சென்ற மனிதர்களில் மகத்தான வாழ்வியல் முறையினை பொக்கிசமாக தருவித்து சென்றவர்களும் அதனை தேடி அதன்படி வாழ முயல்பவர்களும், இயற்கையோடு ஒன்றி நகர்ப்புறங்களை விட்டு ஒதுங்கி வாழும் ஆதிவாசிகளும் இப்பூமியில் இன்றும் வசித்துக்கொண்டிருக்கின்றார்கள்.வலியது வாழும்.

இருப்பினும் காற்றும், நீரும், வானும், மண்ணும் போல, அன்பும், அரவணைப்பும், அழகும், இனிமையும் போல வாழும் வாழ்வும் பொதுவானது. எல்லைகள் அற்று பரந்து விரிந்து, கலந்து, உணர்ந்து செறிந்து, கரைந்து கலைந்து போவது வாழ்வு.

வாழ்க்கை ஒரு அற்புதமான கொண்டாட்டம்

அறிவியலில் அதிகமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு செல்லும் மனிதன் உணர்வியலில் மழுங்கிப் போகின்றான். இயற்கையுடனான பிணைப்பிலிருந்து சற்று தொலைவில் சென்றுகொண்டிருக்கும் மனிதன் மீண்டும் உணர்வியலோடு ஒன்றித்து இயற்கையோடு ஒன்றுபடுதல் வேண்டும். இது சாத்தியம் தான் ஒவ்வொரு மனிதனும் தனது சுய தன்மையினை உணர்ந்து செயற் படுவானாயின் அதுவே ஒரு பாரிய ஊற்றாக மாறி இந்த உலகினை சொர்க்கமழையில் நனைக்கும்.

இயற்கையினை சார்ந்த வாழ்வே அதன் படைப்புத் தன்மையில் முழுமை பெறும். பிறப்பில் இருந்து இறப்பிற்கு, குழந்தை பருவத்தில் இருந்து முதுமைவரை உள்ள பருவ மாற்றநிலைகள் இயற்கையின் நிர்ணயத்தின் படி நிகழ்கின்றது. ஆனால் அந்தந்தப் பருவங்களில் ஆரோக்கியத்தை, வளர்ச்சியை, முன்னேற்றத்தை, வாழ்வியலை நிர்ணயிப்பது தனக்கு தானே அன்றி வேறில்லை. ஐந்தில் வளைவதுதான் ஐம்பதின் வலுவை நிர்ணயம் செய்கின்றது. அதுபோன்றுதான் யாவும் இன்றைய உழைப்பின் பயனைத்தான் பின்பு அறுவடை செய்ய முடியும். இன்றைய விதை என்ன, எத்தகையது என்பதுதான் அறுவடை காலத்தையும், அதன் பயனையும் பெற்றுத் தரும்.

இயல்பான வாழ்வுக்கென உணவு, உடை, உறையுள் போன்ற அடிப்படை தேவைகளைத் தவிர வாழ்வதற்கு அடிப்படைத் தயார் நிலைகள் சில உண்டு. அவற்றில் பாதுகாப்பு, ஆரோக்கியம், உடல்,உள உறுதி, துணிவு, தெளிவு, தெரிவு செய்தல்(உண்ணக்கூடிய உணவு முதற் கொண்டு தேவையான அனைத்தும்), புரிதல், பங்கெடுத்தல் (இனம், இயற்கை போன்ற விடயங்கள்) , திடமானஇருப்பை உறுதிப்படுத்தல் என்பனவற்றைக் கூறலாம். ஆடை, அடையாளம், சமயம், கலாச்சாரம் என்பன மனித நாகரிகத்தின் வளர்ச்சியேயன்றி அவை வாழ்தலுக்கான அடிப்படையானவை அல்ல. உயரிய நாகரிகம் என்பது இயற்கைக்கு இடைஞ்சல் ஏற்படுத்தாது பிற உயிரியின் வாழும் உரிமையில் இடையூறு அற்று இருந்து தாமும் நலமோடு வாழ்வதே.

— கரிணி

6,918 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *