புன்னை மரம் உன் தங்கை !
பொன்னுருகக் காய்ந்து மண்ணுருகப் பெய்யும் மாயப் புரட்டாசியின் இறுதி நாட்கள் அவை, யேர்மனியிலும் ஒல்லாந்திலும் இலையுதிர்காலம் தொடங்கிவிட்டது, பச்சை இலைகள் நீக்கி மஞ்சள் அணிந்து மெல்லே மரங்கள் தங்கள் பனிக்கால தவத்தை ஆரம்பிக்கப் போகின்றன இனி வரும் நாட்களில்.
புலம்பெயர்ந்து யேர்மனியில் வாழும் பல தமிழ்க் குடும்பங்கள் பேசும் தமிழால் மட்டும் தங்கள் அடையாளத்தைப் பேணவில்லை, சுற்றுப்புறத்தையும் தங்களுக்கென தனித்தன்மையுள்ளதாக மாற்றிவைத்துள்ளனர். 30 ஆண்டுகளாக யாழ்ப்பாணத்திலிருந்து யேர்மனியில் குடியேறி வசித்துவரும் அன்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்த போது சற்றே வியந்து தான் போனேன். வீட்டின் உள்ளேயும் வெளியேயும் அழகான செடிகொடிகள். அதிலென்ன ஆச்சர்யம் என்றால் அவையெல்லாம் தமிழகத்திலேயும் ஈழத்திலேயும் வளரும் செடிகள்.
குறிப்பாக குண்டுமல்லி, துளசியென வீடே அமர்க்களப்பட்டிருக்கிறது. அந்த இல்லத்து அம்மா சொன்னார்கள் அவருக்கு வெகு நாட்களாக இம்மாதிரி ஊரில் கிடைக்கும் செடிகளை வளர்க்க வேண்டுமென்ற ஆசையாம், எப்படியோ செடிகளை வீட்டிற்குள்ளும் வெளியேயும் காலநிலைக்கு ஏற்றவாறு வைத்து கடும்பனி, காற்று இவைகளுக்கிடையே காப்பாற்றி வந்திருக்கிறார். சில செடிகளை ஊருக்குப் போனபோது எடுத்து வந்திருக்கிறார், சில செடிகள் திருவிழாக் காலங்களில் யேர்மனியிலேயே கிடைத்திருக்கிறது.
அவரை பொறுத்தவரை மல்லியும், முல்லையும், துளசியும் சொந்த ஊரின் நினைவுகளை அசைபோடவும், அப்பால் இருக்கும் நாட்டை அருகே காண்பிக்கும் கண்ணாடி போன்றவை.
தமிழருக்கு இவையெல்லாம் மரபு வழி பல ஆண்டுகளாக வந்தவை, தமிழ்ச்சமூகம் இயற்கையோடு இயைந்த வாழ்வை மேற்கொண்ட சமூகம், எப்போதுமே மரங்கள் மீதும் செடிகொடிகள் மீதும் அன்பு பாராட்டும் தன்மையினர் நாம். வீட்டிற்கொரு வாழையும், பலாவும் இருக்கும், பனைமரங்கள் நூற்றாண்டுகள் வாழ்ந்தும் பயன் விளைக்கும். கோவில்களில் மரங்களே தெய்வங்களாகவும், தெய்வங்கள் வசிக்கும் இடங்களாகவும் பார்த்த சமூகம் தமிழ்ச்சமூகம். சங்க இலக்கியமான பரிபாடல் மாயோன் உறையும் இடங்களை பட்டியலிடுகிறது.
ஆலமரத்திலும், கடம்ப மரத்திலும், ஆற்றிடை அமைந்த துருத்தியிலும், குன்றத்திலும் இன்ன பிறவிடங்களிலும் அந்த இடத்திற்கேற்ற பெயரோடு விளங்கும் மாயோனே
“ஆலமும், கடம்பும், நல் யாற்று நடுவும்,
கால் வழக்கு அறு நிலைக் குன்றமும், பிறவும்,
அவ்வவை மேவிய வேறு வேறு பெயரோய்.. “
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே உலகில் வேறு எந்த இலக்கியமும் சொல்லாத மரங்களுக்கும் மக்களுக்கும் இருக்கும் ஓர் அழகான உறவை நற்றிணை சொல்கிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
பகல் வேளையில் காதலியை சந்திக்க காதலன் ஓர் புன்னை மரத்தடிக்கு வருகிறான் காதலியோ வெட்கப்பட்டு விலகுகிறாள். காதலனுக்கு புரியவில்லை ஏன் இப்படி அவள் வெட்கப்பட்டு ஓடுகிறாளென்று. அப்போது காதலியின் தோழி அவனிடம் வந்து சொல்கிறாள். தலைவனே சிறுவயதில் நாங்கள் எல்லாம் ஒன்றாக விளையாடிக்கொண்டிருப்போம் அப்போது உன் காதலி விளையாட்டாக புன்னங்கொட்டையை மணலில் புதைக்க சிலநாட்கள் கழித்து அது முளைத்து வந்தது. அப்போது அவளின் தாய் அவளிடம் இந்த புன்னைமரம் உனக்கு தங்கைப் போன்றவள் என்று கூற அதனை நம்பி அவளும் தான் உண்ணும் பாலையும் நெய்யையும் அதற்கும் கொடுத்து பாசத்தோடு வளர்த்து வந்தாள். அந்த மரம் அவளுக்கு தங்கை போன்றது அதன் அடியில் தான் நீ இப்போது நிற்கிறாய், தங்கையை அருகில் வைத்துக்கொண்டு அவள் எப்படி உன்னோடு நெருங்கிப் பேசுவாள் என்றாள். அதன் வரிகள்
“நும்மினும் சிறந்தது சூநுவ்வை ஆகுமென்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே” (நற்றிணை 172)
இன்றைக்கும் வயலில் பயிர்களோடு பேசும் விவசாயியையும், புழக்கடை துளசியிடம் பேசும் தாய்மார்களையும் பார்க்க முடியும். இந்த உலகமானது நமக்கு மட்டுமானது அன்று, செடி,கொடி,பறவைகள் மற்றும் விலங்குகளென அனைவருக்குமானது. வாடிய பயிரை கண்ட போது வாடிய பெரியவர்கள் வாழ்ந்த நம் சமூகத்தின் பெருமையை அறிந்து போற்றுவோம்..
-தனசேகரன்.பிரபாகரன்
4,737 total views, 3 views today