நடுவில பல பக்கங்களை காணோம் …
அம்மையையும் அப்பனையும் ஆறுதலாகச் சுற்றி வந்து அந்த அரிய ஞானப்பழத்தை விநாயகர் தனதாக்கிக் கொண்டதும், மயில்மேல் அவசரமாக உலகெல்லாம் வலம்வந்தும் அப் ‘பழம்’ கிடைக்காததால் கோபமடைந்து, எம்பெருமான் முருகன் கோவணத்துடன் பழநியாண்டவரானதும் அனைவருக்கும் தெரிந்த ‘பழக் கதை’, பழங்கதையும் கூட !
இதற்கும் நான் எழுத வந்த விடயத்திற்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் நினைக்கலாம்? மேல் கூறிய கதையில் ஒருவரின் பயணம் அவ்வளவு சுவாரஸ்யமானதாக இருந்ததாகத் தெரியவில்லை ஆனால் முடிவு அவருக்கு நிறைவைத் தருவதாக இருக்கின்றது. மற்றவரது பயணம், உலக்கைச் சுற்றி வந்ததால் சுவாரசியமாக இருந்திருந்தாலும், அவர் முடிவில் கிடைத்த ஏமாற்றத்தில் முற்றாக மூழ்கி, தன் பயணத்தின் போது நடந்த களிப்பான நிகழ்வுகளையும் இரசிக்கத் தவறிவிட்டார். எங்களில் அநேகமானோரின் வாழ்க்கையை இந்த இரண்டு வகைக்குள்ளும் அடக்கி விடலாம், பயணத்தையும்முடிவையும் இரசிக்கும் இன்னொரு வகையினருள் நீங்கள் அடங்குவீர்களெனில் சிறப்பு!
இன்று, நல்ல முடிவினால் மட்டும் திருப்தி அடைபவர்களே அதிகம், உதாரணத்திற்கு, முக்கியாமான கால்பந்தாட்டப் போட்டிகளை எடுத்துகொள்வோம், இப் போட்டிகளின் முக்கிய நோக்கமே ஒன்றரை மணித்தியாலத்திற்கு இரசிகர்களை சந்தோசமாக வைத்திருப்பது, ஆனால் முப்பது வினாடிகளிலேயே தாம் ஆதரவளிக்கும் அணி கோல் அடித்துவிட்டால் ‘இந்தப் போட்டி இப்போதே, என் அணி வெற்றிநிலையில் இருக்கும்போதே, முடியக்கூடாதா’ என்று எண்ணுபவர்கள், ஏங்குபவர்கள் பலர்! நல்ல முடிவிற்காக நல்ல பயணத்தை இரசிக்காமல் விட்டுக்கொடுக்க அவர்கள் தயார்.
பக்கத்து வீட்டுப் பையன் பத்து மாதத்திலேயே நடக்கத் தொடங்கி விட்டான் எனது பிள்ளை பதினைந்து மாதம் வந்தும் இன்னும் பல்லுக் கொழுக்கட்டை சாப்பிடவில்லையே என்று படபடக்கும் பெற்றோர் எத்தனை பேர் ? பல வருடங்கள் எம் உடலைத் தாங்கி நடக்கப்போகும் கால்கள் சற்று ஓய்வெடுக்கட்டுமே…பற்களும் தான்! பிள்ளை கருவில் இருக்கும் போதே ரியூசன் வகுப்பிற்கு அனுமதி எடுத்து வைத்தவர்கள் எத்தனை பேர்? வாழ்வின் ஒவ்வொரு நிலைகளிலும், முடிவை எனது பிள்ளை மற்றோரை விட முந்தி அடைந்து விட வேண்டும் என்ற ஆதங்கம் பிள்ளை கருவில் உள்ள போதே பலருக்கு உருப்பெற்று விடுகின்றது. அருவரியில் ஆரம்பிக்கும் ஓட்டம், தொழில், திருமணம் என்று இடைவெளியின்றி இப்படித் தொடர்கின்றது, பலர் வாழ்க்கையை கடமையாகத்தான் வாழ்கின்றார்கள். அப்பாடா எப்படியோ பிள்ளைக்கு திருமணம் செய்துவிட்டோம் கடமை முடிந்ததென பெற்றோர் பெருமூச்சு விட்டு முடியும் முன் பேரப்பிள்ளைகள் வந்து அவர்கள் மடிகளில் விழுகின்றன…ஓய்வு ?
பல அழுத்தங்களால், அவசர அவசரமாக எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டு, பலர் இப்போது சமூக வலயத்தளங்களில் தான் எம் கடந்த காலங்களை பகிர்ந்து கொன்றிருக்கின்றோம், பின் பக்கமாக பிரயாணம் செய்கின்றோம், வெற்றுப் பக்கங்களை நிரப்ப எத்தனிக்கின்றோம். ஐந்தில் எழுதிய ‘அ’ வை ஏழில் எழுதினால் என்ன குடியா மூழ்கி விடப்போகின்றது? டபுள் புரொமோசன் எடுத்து, உற்ற நண்பர்களையெல்லாம் விட்டுவிட்டு, வகுப்புத் தாவியவர்கள் எல்லாம் இப்போது எவ்வளவு தூரம்…? கொஞ்சம் ஆறுதலாகத்தான் எல்லாவற்றையும் செய்திருக்கலாமே, வாழ்க்கையின் ஒவ்வொரு படியையும் இன்னும் கொஞ்சம் அதிகமாக தடவிச் சென்றிருக்கலாமே …?
யாழ் இந்துக் கல்லூரியில் என்னுடன் படித்த நண்பனொருவன், சில வருடங்களுக்கு முன் பாடசாலைக்குச் சென்று, தான் படித்த வகுப்பறையில், நாற்காலியில் இருந்து பலத்தையும் இரைமீட்டு, களிப்படைந்து ஒரு புகைப்படத்தை முகநூலில் பதிவு செய்திருந்தான். அந்த நண்பன், தான் அன்று பள்ளிக்காலங்களில் நிரப்பாத சில பக்கங்களை நிரப்பச் சென்றிருக்கலாம். படிக்கும் காலத்தில் வகுப்புகளுக்கு நாம் அவ்வளவு விருப்பத்துடன் செல்வதில்லை, எப்போதும் அங்கும் இங்குமாக எங்கயோ ஓடிக் கொண்டிருப்போம், ஒரு இடத்தில நிற்பது குறைவு – மனதில் பல விடயங்கள், அழுத்தங்கள் – மதில்களில் மாத்திரந்தான் எமக்கு நிரந்தர அமைதி!
ஒருவன் ஒரு பந்தை கையில் வைத்திருந்தால் அதை கெட்டியாக விழாமல் வைத்திருப்பான், இரண்டு பந்துகள் வந்தால் இரு கரங்களையும் உபயோகிக்கலாம், நூறு பந்துகள் வந்தால் என்ன செய்வது ? மிகுதி தொண்ணூற்றெட்டு பந்துகளையும் நிலத்தில் தான் வீழ்த்தியாக வேண்டும். எம்மில் பலர் எந்தப் பந்தையும் விழவிட விருப்பமின்றி அலைந்து திரிகின்றோம் – இறுதியில் முக்கியாமான இரு பந்துகளையும் சேர்த்து விழுத்தி விடுகின்றோம். எனவே உங்களுக்கு மிக முக்கியமான அந்த இரு பந்துகளையும் ஆரம்பத்திலேயே தெரிந்தெடுத்துக் கொள்ளுங்கள், மிகுதியை நீங்களாகவே விழுத்திவிடுங்கள், உங்கள் மனமும் இலகுவாக இருக்கும் வாழ்க்கைப் பயணமும் திருப்தியாக அமையும்.
ஒரே நேரத்தில் ஆலாய்ப் பறந்து பல இடங்களில் நிற்க வேண்டுமென பலர் எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பார்கள், இன்னும் சிலர் இவர்களைப் பார்த்து, புகழ்ச்சியடையத் தாமும் ஓடுவர். பல இடங்களில் ஒரே நேரத்தில் தரிசனம் தருபவர் கடவுள் ஒருவரே, நீ கடவுள் அல்ல, அவரின் ஒரு சாதாரண படைப்பு, நீ சாதாரண வாழக்கை வாழ்வதில் தப்பேதும் இல்லை, நீ இறக்கும்போது உன்னை எவரும் அறிந்திராவிட்டாலும் தப்பில்லை ஆனால்…முடிவில் நீ உன்னைக் கட்டாயம் முழுமையாக அறிந்திருக்க வேண்டும், உன் வாழ்க்கைப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் ஆறுதலாக திருப்பிப் பார்த்துச்சென்றிருக்க வேண்டும், சரியாக அப்பக்கங்களை நிரப்பியிருக்க வேண்டும், அப்படிச் செய்தாயெனில் அதனால் நீ அடையும் திருப்திக்கு ஈடேதுமிருக்காது!
முடிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமூகமாகவே இன்றைய சமூகம் இருக்கின்றது, எமது மூதாதையர்கள் இப்படி வாழவில்லை, ஆடிப்பாடி வேலை செய்தார்கள் , அலுப்பின்றி வாழ்ந்தார்கள், பயணத்தையும் முடிவையும் வெகுவாக இரசித்தார்கள். அந்த மன நிலைக்கு இனிவரும் இளம் சமுதாயத்தையும் நாம் திரும்பக் கொண்டு செல்ல வேண்டும். வாழ்க்கைப் பயணத்தின் சுவாரஸ்யத்தையும், முக்கியதையும் எம் பிள்ளைகளுக்கு எடுத்துக்கூறவேண்டும், முடிவே முழுதுமென்று கூறி அவர்களை வழிநடத்தக்கூடாது ! நாமும் அரக்கப்பறக்க அந்தரத்தில் ஓடி எம்மை பின் தொடர்பவர்களையும் எம் வழியில் ஓட வைக்கக்கூடாது !
வுhநசந ளை அழசந வழ டகைந வாயn inஉசநயளiபெ வைள ளிநநன ~ ஆயாயவஅய புயனொi
நன்றி
— கனகசபை அகிலன்
1,917 total views, 2 views today