போட்டியும் பொறாமையும் கூடப்பிறந்தவையா!
“கலைஞர்களுக்குள் போட்டி இருக்கலாம், ஆனால் பொறாமை இருக்கக் கூடாது” என்பது மிகப் பிரபலமான ஒரு சினிமா வசனம். எந்த ஒரு கட்டுரையை வாசித்தாலும் சரி, எந்த ஒரு உரையைக் கேட்டாலும் இந்த இரண்டு வார்த்தைகளையும் பெரும்பாலும் சேர்த்தே தான் பயன்படுத்துவார்கள். போட்டி என்ற வார்த்தையை உச்சரித்தாலே அடுத்து பொறாமை எனும் வார்த்தை மனதில் குதித்து வருமளவுக்கு இந்த இரண்டு வார்த்தைகளும் ஒட்டிப் பிறந்த சயாமிஸ் இரட்டையர்களைப் போல நிலை பெற்றுவிட்டன. ஏன் இந்த இரண்டும் இணைந்தே திரிய வேண்டும் ? கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால் சுவாரஸ்யமான சிந்தனைகள் மனதுக்குள் முகம் காட்டுகின்றன.
ஒரு அழகான இளம் பெண் சாலையில் நடந்து போய்க்கொண்டிருக்கிறாள் என வைத்துக் கொள்ளுங்கள். ஓரமாக நின்று பார்க்கின்ற மற்ற பெண்களின் மனதில் முதலில் ஒரு ரசனையின் வாசம் எழும். “ஆஹா.. செம அழகா இருக்கா !”. அதன்பின் அவளைப் போல நாமும் மாறவேண்டும் எனும் அழகுப் போட்டி இதயத்தில் வந்தமரும். அப்படி மாற முடியாமல் போகும் போது, அவளது வசீகரத்தை நாம் அடைய முடியவில்லையே எனும் ஆதங்கம் முளைவிட்டு, பொறாமையாய் கிளைவிட்டுத் திரியும்.
பிறரோடான ஒப்பீடுகள் தான் போட்டிக்குத் தூண்டுதலாகவும், பொறாமைக்கு தூண்டு கோலாகவும் இருக்கிறது. “ஐஸ்வர்யா ராய் எவ்ளோ அழகு” என பெண்கள் பொறாமைப் படுவதில்லை. பக்கத்து சீட்ல அமர்ந்து வேலை செய்கின்ற பொண் எவ்ளோ அழகா இருக்கா ! என்று தான் பொறாமைப் படுவார்கள். கூடவே இருப்பவர்கள், தொடர்ந்து பயணிப்பவர்கள், மிகவும் பழகியவர்கள் இவர்களெல்லாம் நாம் அடைய முடியாத இடத்தை அடைந்தால் நமக்குள் அந்த பொறாமையின் புலிநகம் பிறாண்டுகிறது.
பொறாமை இல்லாத மனிதர்கள் இல்லை என்றே சொல்லி விடலாம். பெரும்பாலும் மனதின் ஏதோ ஒரு ஓரத்தில் ஒரு பொறாமைக் குட்டிச்சாத்தான் உட்கார்ந்து கொண்டே தான் இருக்கும். பலர் அதை வெளிப்படையாய் காட்டுவார்கள். சிலர் அதை சாதுர்யமாக மறைத்து விடுகிறார்கள். சந்தேகம் இருந்தால் உங்கள் வாழ்க்கையைக் கொஞ்சம் திருப்பிப்பாருங்கள் (ரீவைன்ட் செய்து பாருங்கள்.) உங்களுடைய அலுவலகத்தில் உங்களை விட சிறியவர், அல்லது உங்களுடைய நிலையில் இருப்பவர் உங்களை விட அடுத்த நிலைக்கு பதவி உயர்வு பெற்றுச் செல்லும் போது உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது ? நீங்கள் கைகுலுக்கிப் பாராட்டும் அந்த நிகழ்வில் எத்தனை சதவீதம் உண்மையின் ஈரம் உறைந்திருக்கிறது ?
“அவனுக்கெல்லாம் இந்த புரமோஷன் கிடைச்சிருக்கு. இதுக்குக் காரணம் என்னன்னா…” என நாம் அடுக்குகின்ற கிசு கிசு மட்டம் தட்டுதல்களில் வெளிப்படுபவை அக்மார்க் பொறாமையே ! நாம் அடைய வேண்டும் என நினைக்கின்ற இடத்தை இன்னொருவர் அடைந்து விட்டாரே என நினைப்பது. அடையவேண்டும் எனும் இலக்கை நோக்கி ஓடும்போது போட்டி வலிமையானதாக இருக்கிறது. அடைய முடியாமல் போகும் போது அந்த இயலாமை பொறாமையை விளைவிக்கிறது.
ஓடுவது ஒரு இலக்கை நோக்கி எனும் போது போட்டியாய் இருப்பது, ஒரு நபரை நோக்கி எனும் போது பொறாமையாய் மாறி விடுகிறது. அடுத்தவன் அந்த இடத்தை அடைந்து விடக் கூடாது எனும் சிந்தனை போட்டியின் சுவாரஸ்யத்தையும், ஆரோக்கியத்தையும் குழி தோண்டிப் புதைத்து விடுகிறது. இணைந்தே பயணிக்கின்ற இருவரில் ஒருவர் உயர்ந்த இடத்தை அடைந்தபின், அந்த இருவரின் இயல்புகளிலும் பெரிய அளவில் மாற்றம் உண்டாகி விடுகிறது.
போட்டி ஒரு மனிதனை வெற்றியாளனாய் மாற்றிக் கொண்டே இருக்கிறது. பொறாமை ஒரு மனிதனை நோயாளியாய் மாற்றிக் கொண்டே இருக்கிறது. அதையே அறிவியல் ஆய்வுகள் சொல்கின்றன. பொறாமை படுகின்ற நெஞ்சில் ஏராளமான நோய்கள் வந்து குடியேறுகின்றன. உயர் குருதி அழுத்தம் முதல், கேன்சர் வரையிலான நோய்களுக்கு பொறாமையின் பாசி படிந்து கிடக்கின்ற இதயம் ஒரு காரணம் என்கின்றன ஆய்வுகள்.
எனவே பொறாமை உங்கள் மனதில் பாதம் பதித்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால், அதை உடனே அகற்ற வேண்டிய வழிகளைப் பின்பற்ற வேண்டும். பொறாமை என்பது சீற்றம் கொண்ட சிங்கத்தைப் போல. சிங்கத்தைக் கூடவே வைத்துக் கொண்டு யாரும் குடும்பம் நடத்துவதில்லை. அதை விரட்டி விட்டால் தான் வீடு நிம்மதியாக இருக்கும். எனவே பொறாமையை விரட்ட முயற்சியை எடுக்க வேண்டும்.
பொறாமையானது நம்மை நோக்கி நாமே எய்கின்ற அம்பைப் போன்றது. ஒருவர் மீது பொறாமைப் படும்போது நாம் நம்மையே எய்கிறோம். அடுத்த நபருக்கு அது தெரிவது கூட இல்லை. அவரு பாட்டுக்கு அவரு வேலையை செய்துட்டே இருப்பாரு, நாமோ பொறாமையெனும் கூர் முனையினால் நம்மை நாமே காயப்படுத்திக் கொண்டு கீழே விழுந்து கிடப்போம்.
பல வேளைகளில் இது நம்மை சுய பச்சாதாபத்துக்கும் இட்டுச் செல்கிறது. ‘நம்மால முடியாது’ , நாம இதுக்கெல்லாம் லாயக்கில்லை, நாம அதை யோசிக்கவே வேண்டாம், நமக்கு திறமை இல்லை இப்படிப்பட்ட சிந்தனைகள் நம்மை மூழ்கடிக்க இந்த பொறாமையும் ஒரு காரணம் என்கிறது உளவியல்.
நமது பொறாமைக்குக் காரணம் ஒருவேளை நமக்கே தெரியாமல் இருக்கலாம். ஒருவேளை சின்ன வயதில் நிகழ்ந்த வாழ்க்கை அனுபவங்கள், பொறாமையையும் வெறுப்பையும் மனதுக்குள் பதியமிட்டிருக்கலாம். அது காலப்போக்கில் நமது இயல்பாய் மாறியிருக்கும். அப்படிப்பட்ட சூழலில் அந்த பொறாமையின் ஆணிவேரைக் கண்டறிவது மிகவும் அவசியமானது. அதைக் கண்டடைவதும், புரிந்து கொள்வதும், அதை விட்டு விலக முடிவெடுப்பதும் முதன்மைத் தேவைகள்.
வாழ்க்கையில் நம்மிடம் இருப்பதைப் பாராட்டத் துவங்கினாலே, பொறாமை பெரும்பாலும் விடைபெற்று ஓடிவிடும். நோய் நொடியில்லாமல் ஒருவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்பதே அதிகபட்ச மகிழ்ச்சிச் செய்தி. அடிப்படை வசதிகளோடு வாழ்க்கையை கொண்டாட முடிந்தால் அது மிகப்பெரிய ஆறுதல் செய்தி. இப்படி நம்மிடம் என்னென்ன இருக்கிறது என்பதைப் பட்டியலிட்டுப் பாராட்டத் துவங்கினால், ஏமாற்றங்களின் குரல் அமுங்கி விடும். பொறாமையின் பற்கள் உடைந்து விடும்.
நம்மைத் தாண்டி ஒருவர் ஓடும்போது தான் பெரும்பாலும் பொறாமை வேர்விடும். எல்லாரும் தனித்தனி இயல்புடையவர்கள். ஒவ்வொருவருக்கும் தனித் தனி திறமைகள் உண்டு. அவரவர் பாதையில் அவரவர் பயணிக்கின்றனர். நான் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதை இறைவன் நிர்ணயிக்கிறார். இருக்கின்ற தளத்தில் சிறப்பாய் பணி செய்வது மட்டுமே எனது வேலை, இல்லாத தளத்தை நோக்கி ஏக்கம் கொள்வதல்ல எனும் சிந்தனையை மனதில் வளர்த்துக் கொள்ள வேண்டும். அது பொறாமையை புறக்கணிக்க உதவும்.
தனது மகிழ்ச்சி உறவுகளோடு இருப்பது தான், கரன்சிகளோடு கிடப்பதல்ல என்பது அவரது தேர்வாக இருந்தது.
நமது வாழ்க்கையில் எது நமக்கு முக்கியம் என்கின்ற பிரையாரிட்டி, முதன்மை விஷயங்களை நாமே கட்டமைத்துக் கொள்ள வேண்டும். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு சமீபத்தில் இரண்டு வேலை வாய்ப்புகள் வந்தன. ஒன்று குறைந்த சம்பளம் ஆனால் இடமாற்றம் தேவையில்லை, குடும்பத்தோடு இருக்கலாம் எனும் வசதி. இன்னொரு வேலைவாய்ப்புக்கு பக்கத்து மாநிலத்துக்குச் செல்ல வேண்டும். ஆனால் சம்பளம் மூன்று மடங்கு. ‘செம வாய்ப்பு, பெரிய பதவி, எக்கச்சக்க பணம் கொஞ்ச நாள் குடும்பத்தை விட்டுட்டு வெளியூர் போ” என்று அறிவுரை கூறினார்கள் நண்பர்கள். அவரோ, உள்ளூர் வேலையைத் தேர்ந்தெடுத்தார். தனது மகிழ்ச்சி உறவுகளோடு இருப்பது தான், கரன்சிகளோடு கிடப்பதல்ல என்பது அவரது தேர்வாக இருந்தது.
ஒவ்வொரு விஷயமும் அவரவர் தேர்வு. ஒன்று சரி, ஒன்று தவறு என்பதை நிறுவுவதல்ல நமது நோக்கம். எதை முதன்மையாய் வைக்கிறீர்களோ அதைப் பொறுத்தே உங்கள் பொறாமையும், போட்டியும் இருக்கும் என்பது தான் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
அதே போல போட்டிகள் பொறாமையாக மாறி பல்லிளிப்பதற்கு தன்னம்பிக்கைக் குறைபாடு ஒரு முக்கியமான காரணம். நம்மைப் பற்றிய உயர்வான எண்ணங்கள் நமக்கு இருந்தால் பெரும்பாலும் பொறாமை பின்வாசல் வழியாக ஓடியே போய்விடும். என்னால் சாதிக்க முடியும், எனக்கு அந்தத் திறமை இருக்கிறது, எது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நான் மதிப்பு மிக்கவன் போன்ற சிந்தனைகளை தன்னம்பிக்கையின் பாடசாலையில் தான் பார்க்கமுடியும். அத்தகைய சிந்தனைகள் நம்மிடம் இருந்தால் நாம் பொறாமையெனும் பொறியில் சிக்கிக் கொள்வதில்லை.
போதுமெனும் மனம் பொறாமையை வெல்ல இன்னொரு மிக வலிமையான ஆயுதம். “நீ முன்னாடி போறியா ? போய்க்கோ”, “நீ பின்னாடி வரியா, பரவாயில்ல வா…” என்பது போன்ற சமநிலை மனநிலை இருப்பவர்களிடம் பொறாமை காணப்படுவதில்லை. வாழ்க்கையை எதிர்கொள்ளும் மனநிலையும், தன்னம்பிக்கையும் அவர்களிடம் நிரம்பியிருக்கும். எவ்வளவுதான் சவாலான சூழலாய் இருந்தாலும் இயல்பாய் எடுத்துக் கொள்ளும் மனிதர்கள் புயலடித்தும் சரியாத மரமாய் வளம்பெறுவார்கள்.
நல்ல உடல் ஆரோக்கியம், உடற்பயிற்சி செய்வதெல்லாம் பொறாமை சிந்தனையை மாற்றும் என கூறி வல்லுநர்கள் வியக்க வைக்கின்றனர். மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல இது முதலில் தோன்றுகிறது. ஆரோக்கியமான மனம், நல்ல சிந்தனைகளை கொண்டு வருகிறது. நெகடிவ் சிந்தனைகளை உற்சாகமான மனம் அனுமதிக்க மறுக்கிறது. எனவே, பொறாமை தாண்டிய அழகிய வாழ்க்கைக்கு உடலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது தேவையாகிறது.
இணையாத இரு கோடுகளாய் தான் பயணிக்கும்.
வாழ்க்கை அழகானது. போட்டி என்பது ஆரோக்கியமானது. அந்த போட்டி என்பது நம்மோடு நாமே நடத்துகின்ற போட்டியாய் இருப்பது சிறப்பானது. என்னை நான் மெருகேற்ற அந்த போட்டி உதவும். என்னோடு என்னை நானே ஒப்பிட்டுக் கொள்வேன். எனது திறமைகள் ஒன்றோடொன்று போட்டியிடும். எனது இயல்புகள் ஒன்றை ஒன்று சவால் விடுக்கும். அதில் பொறாமைக்கு இடமில்லை. ஒரு கிளை அதிகம் கனி கொடுக்கிறது என்பதற்காக மறு கிளை பொறாமைப் படாது, மரம் ஒன்றாக இருக்கும்போது. அத்தகைய சூழலில் போட்டியும் பொறாமையும் இரட்டைப் பிறவிகளாய் இருக்காது, இணையாத இரு கோடுகளாய் தான் பயணிக்கும்.
கடைசியாக, வாழ்க்கை என்பது எதை நாம் பெற்றுக் கொண்டோம் என்பதை வைத்து அளவிடப்படுவதில்லை. எதை நாம் விட்டுச் செல்கிறோம் என்பதை வைத்தே அளவிடப்படும். தனக்காய் சேர்த்துக் கொள்வதிலல்ல, பிறருக்காய் செலவழிப்பதில் தான் உண்மையான வாழ்வின் ஆனந்தம் நிரம்பியிருக்கும். அப்படி பிறருக்காய் கொடுப்பதில் போட்டி போடுவோம்.பிறரை வாழவைப்பதில் போட்டி போடுவோம். பிறரை ஆனந்தமாய் வைத்திருக்க போட்டி போடுவோம். அப்போது நமது வாழ்க்கை ஆனந்தமாய் மாறும்.
— Xavier
2,478 total views, 4 views today