நெருங்கியவர்கள் உங்கள் பெயரை மாற்றி அழைப்பதற்கான அறிவியல் காரணங்கள்
உங்களுக்கு ஒன்று தெரியுமா? எனது அம்மா, என்னை ஒரு அறையில் இருந்துகொண்டு அழைக்கும் போது, ஒரு போதுமே உடனடியாக எனது பெயரைச் சொல்லவே மாட்டார். அதற்குப் பதிலாக எனது தம்பி மார்களின் பெயர்களை அழைத்து, அதாவது மயூரன், மிதூரன் என்று அழைத்த பின் தான் நிரோஷன் என்று என் பெயரை அழைப்பார். அதற்கு என் அம்மாவிடம் காரணத்தை கேட்டால், உங்கள் மூன்று பேரிலும் எனக்கு அதே அளவில் பாசம் இருப்பதால் உங்கள் மூன்று பேர்களின் பெயர்களையும் அழைக்கின்றேன் என்று சொல்லிவிட்டு என் வாயை அடைத்து விடுவார். இந்த விஷயத்தை எனது அம்மாவிடம் மட்டும் இல்லை, உங்கள் குடும்பத்திலும் கூடக் கண்டிப்பாக அனுபவித்து இருப்பீர்கள். ஏன் உங்களுக்கும் கூட இப்படி பெயர்களை மாற்றி அழைக்கும் பழக்கும் இருக்கலாம், அது சரி தானே? எனவே, உங்களுக்கு நெருக்கமானவர்கள் ஏன் இப்படி பெயர்களை மாற்றி மாற்றி அழைக்கின்றார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?
சிலர் நினைப்பது போல், இந்தப் பெயரை மாற்றி அழைப்பது ஒன்றும் வேண்டுமென்றே செய்யும் ஒரு செயலே கிடையாது! இதற்குக் காரணத்தைக் கண்டுபிடிக்கவே, ஆராய்ச்சியாளர்கள் சுமார் 1700 மக்களுடன் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டனர். இந்த ஆராய்ச்சிகளில் முக்கியமான விஷயமே யாராவது நமது பெயரை மாற்றி அழைத்தால் அது குறித்து ஆராய்ச்சியாளர்களிடம் தெரிவிக்க வேண்டியதுதான். அப்படி மாற்றி அழைக்கப்பட்ட பெயர்கள் எந்த சமூகக் குழுவினைச் சேர்ந்தது, செல்லப் பிராணிகளின் பெயர்களா அல்லது குடும்ப உறுப்பினர்களா என பல கோணங்களில் அதை அவர்கள் அறிய முயன்றனர்.
இதில் அவர்கள் கண்டறிந்த முதல் விஷயம் என்னவென்றால், மாற்றி அழைக்கப்படும் பெயர்கள் ஒரே சமூகத்தினைச் சேர்ந்தவை என்பது தான். உதாரணமாக நீங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களின் குழந்தைகளை மாற்றி கூறிய நிகழ்வுகளை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கே இரு குழந்தைகள் இருந்தால், அவர்களின் பெயர்களை நீங்கள் அடிக்கடி மாற்றிக்கூறிய அனுபவம் இருந்திருக்கும். ஒரே குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களை பெயர் மாற்றி அழைப்பது அநேகமாக நடக்கும் நிகழ்வுகளில் ஒன்று என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
எனவே, எஙக்ள் வீட்டிலும் எனது அம்மா எங்கள் மூன்று பேர்களின் பெயர்களை மாற்றி மாற்றி அழைப்பதற்கும் காரணம் புரிந்துவிட்டது. சரி, இது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா? பெயர்களை மாற்றி அழைப்பதற்கு இன்னும் ஒரு காரணமும் இருக்கிறது. அது என்னவென்றால், ஒரே உச்சரிப்பு வகையில் அமையும் பெயர்களையும் மாற்றி அழைக்கவும் வாய்ப்பு அதிகமுள்ளது என்பதை அந்த ஆராய்ச்சி கூறியிருக்கின்றது.
இந்த ஆய்வுகளில் வெளிவந்த இன்னும் ஒரு உண்மை பற்றியும் கூறுகின்றேன், அது என்னவென்றால், குறைந்த வயதுடையவர்கள் தான் அதிகமாக மாற்றுப் பெயர் கூறி அழைக்கின்றனராம். அதிக வயதுடையவர்களை இவர்களுடன் ஒப்பிடும்போது குறைவான அளவே வேறு பெயர்களைக் கூறி அழைக்கின்றனர்.
எனவே அடுத்த முறை யாராவது ஒருவர் உங்களை வேறு ஒரு பெயருடன் அழைத்தால், அதை நினைத்துக் கோபப்படாமல், கொஞ்சம் பொறுமையுடன் இருங்கள்.
சரி நண்பர்களே, இனி நீங்கள் கூறுங்கள்? உங்களுக்குத் தெரிந்தவர்களில் யாரெல்லாம் இப்படிப் பெயர்களை மாற்றி மாற்றி அழைப்பார்கள்? இதற்குரிய பதிலை மட்டுமில்லாமல், எனது சிறு கட்டுரை பற்றிய அபிப்பிராயத்தையும் எனக்குக் கண்டிப்பாக எனது முகநூல் பக்கத்தில் (www.facebook.com/scinirosh)
1,720 total views, 3 views today