உனக்கு தெரியுமா
இன்று என் நீண்ட கால நண்பன்
கவிஞர். பொத்துவில் அஸ்மினுடன் உங்களுக்காக ஒரு நேர்காணல்.
தமிழ் பேசும் உலகமெங்கும் நன்கு அறியப்பட்ட இலங்கை படைப்பாளியான பொத்துவில் அஸ்மின்; கவிஞர், திரைப்படபாடலாசிரியர்,தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்,நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர். 1997 ஆம் ஆண்டிலிருந்து எழுத்துலக பயணத்தை ஆரம்பித்த அஸ்மின், விடைதேடும் வினாக்கள்(2001), விடியலின் ராகங்கள்(2002), பாம்புகள் குளிக்கும் நதி(2013), ஆகிய நூல்களை தமிழுக்கு தந்துள்ளார். 2001 ஆண்டு தேசிய மட்டத்தில் நடைபெற்ற அஸ்ரப் ஞாபகார்த்த கவிதைப்போட்டியில் முதலாமிடம் பெற்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கரங்களினால் விருதினை பெற்ற அஸ்மின் இதுவரை தேசிய, சர்வதேச மட்டத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்ற இளம் இலக்கிய சாதனையாளர். தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக 2012 ஆம் ஆண்டில் “நான்” திரைப்படம் மூலம் தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்ட அஸ்மின் 2015 ஆம் ஆண்டு “அமரகாவியம்” திரைப்படத்தில் எழுதிய பாடலுக்காக சிறந்த வெளிநாட்டு பாடலாசிரியருக்கான “எடிசன்” விருது பெற்றவர். வசந்தம் தொலைக்காட்சியில் இவர் தயாரித்த “தூவானம்” கலை, இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சி அரச தொலைக்காட்சி விருது விழாவில் மூன்று முறை தேசிய விருதினை பெற்றுள்ளது. பொத்துவில் அஸ்மினின் இலக்கிய பணியை பாராட்டி 2016 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா விருது வழங்கி கௌரவித்துள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற பாரம்பரிய ,நவீன,அரச கலைஞர் விருது விழா நிகழ்வில் இருபது ஆண்டு கால கலை இலக்கிய பணிக்காக “கலைச்சுடர்” விருது வழங்கி அஸ்மின் கௌரவிக்கப்பட்டார். அண்மையில் கம்போடியாவில் நடைபெற்ற உலக கவிஞர்கள் மாநாட்டில் தமிழ் இலக்கிய பணிக்காக கம்போடிய அரசினால் “சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது” இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இப்படி இவரைப்பற்றி என்னும் எத்தனையோ விடயங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். வாருங்கள் அவருடன் பேசுவோம்.
1)திரைப்பட பாடல்கள் எழுதுவதுதற்கும், கவிதைகள் எழுதுவதற்குமான வேறுபாட்டினை எப்படி அடையாளம் காண்கிறீர்கள்?
பாடலாசிரியர்கள் எல்லோரும் கவிஞர்களல்லர் கவிஞர்களில் பாடலாசிரியர்களும் இருக்கின்றனர்.நல்ல கவிதைகள் பாடலாக பரிணமித்ததுண்டு. உன்னதமான பொருள் நிறைந்த பாடலென்றாலும் கவிதைகளின் உயர்வான இடத்தை ஒருநாளும் அந்தப் பாடலால் அடைய முடியாது.மரபுக் கவிதைகள் சிறகு முளைத்த சிட்டுக்குருவிகள் அதனால் பாடல் என்னும் வானத்தில் இலகுவாக பறக்க முடியும். புதுக்கவிதைகள்,நவீன ,பின்நவீன கவிதைகள் அப்படியல்ல பாடல் வானத்தில் பட்டம் போன்று அதனை பறக்க வைத்து பார்க்க வேண்டுமாயின் செயற்கை சிறகுகள் செய்தே ஆகவேண்டும்.பாடல் எழுதும் கவிஞன் வீடுகட்டும் கொத்தனுக்கு ஒப்பானவன்.யாரோ ஒருவரின் தேவைக்கு யாரோ ஒருவரின் வடிவமைப்புக்கு ஏற்ப யாரோ ஒருவரின் கட்டளைக்கு பணிந்து வீட்டினை அழகுற அவன் கட்டி கொடுத்தல் வேண்டும்.
அந்த வீட்டின் ஒரு செங்கல்லைக்கூட அவன் விருப்பத்துக்கு வைத்து கட்ட முடியாது. ஆனால் அதே கொத்தனார் தனது வீட்டினை தனக்குப்பிடித்தமான வடிவமைப்பில் அவன் நினைத்த நேரத்தில் பிறர் வீடுகளை விட நேர்த்தியாக தனித்துவமாக கட்ட முடியும். அது போலவே இயக்குனரின் கதையினை இசையமைப்பாளர் வழங்கும் இசைக்கு ஏற்ப பாடலாக எழுத பணிக்கப்படும்போது “தப்பெல்லாம் தப்புத்தான்” என்று தெரிந்திருந்தும் “தப்பெல்லாம் தப்பேயில்லை” என்று எழுத வேண்டுமாயின் எழுதித்தான் ஆகவேண்டும். ஆனால் கவிஞன் கவிதை எழுதும் போது சுதந்திரமாக செயற்பட்டு தனக்கு பிடித்த கருத்தினை தனக்கு பிடித்த வடிவத்தில் படைப்பாக தரமுடியும்.அடிப்படையில் நான் மரபுக் கவிஞன் இலக்கணம் பிசகாமல் கவிதை இயற்றும் நுட்பம் தெரிந்ததால் தத்தகாரத்துக்கு பாடல் வரிகளை எழுதுவது எனக்கு கடினமாக இருப்பதில்லை.நான் எழுதும் வரிகளை இசையமைப்பதற்கு இசையமைப்பாளருக்கும் சிரமமாய் இருந்ததில்லை.கவிதைகள் கருவாகி உருவாகி திருவாகி இயற்கையாக பிறக்கின்றன பாடல்களோ செயற்கையாக செய்யப்படுகின்றன.
2) இசைக்கும், கவிதைக்குமான காதல் எப்படிப்பட்டது?
இசைக்கும் கவிதைக்கும் இடையிலான காதல் இன்று நேற்று முளைத்ததல்ல ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முகிழ்த்தது.
வள்ளுவன் திருக்குறளை வரைந்தபோது, கம்பன் இராமாயணத்தை பாடிய போது, ஒளவை தன் அழகிய பாடல்களால் வாழ்க்கை தத்துவத்தை வழங்கியபோது ,அருணகிரிநாதர் திருப்புகழால் எம்மை திண்டாட வைத்தபோது ,பாரதி தன் கவிதைகளால் தீண்டாமைக்கு தீவைத்தபோது கவிதையும் இசையும் கணவன் மனைவியுகமாகவே இருந்தனர். என்று மேலைத்தேய இலக்கியம் தமிழில் இறக்குமதி செய்யப்பட்டதோ அன்றுமுதல் இசையை கவிதை மெல்மெல்ல கைவிடத்தொடங்கி இன்று முற்று முழுதாக விவாகரத்து செய்துவிட்டது. அந்த சோகத்தில் பாவம் தகப்பன் தமிழ் தாடிவைத்துக்கொண்டு அலைகிறது. இருந்தும் இசைக்கும் கவிதைக்குமான காதல் திருமணம் ஆங்காங்கே நடக்கவே செய்கின்றன. ஆனால் இவ்வாறான திருமணங்களை ஏதோ ஓரின சேர்க்கையாளர்களின் திருமணம்போல விசமத்தோடு பார்க்கின்றன இன்றைய இலக்கிய உலகம்.
3 இலங்கை சூழலின் மொழியானது தமிழக சினிமாவின் பாடல் மொழிக்கு எவ்வகையில் பொருந்திப் போகிறது?
கவிஞன் பிறக்கிறான் எழுத்தாளனைப்போல பாடலாசிரியன் உருவாக்கப்படுகின்றான். பாடல் எழுதுவதற்கு பயிற்சி வேண்டும். அதுவும் தமிழக சினிமாவில் எழுதுவதற்கு முயற்சி வேண்டும்.பயிற்சியும் முயற்சியும் இணையும்போது என்றோ ஒருநாள் உயர்ச்சி தோன்றும்.
ஒரு பாடலாசிரியன் பலதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். புத்தகங்களை வாசிக்க வேண்டும், புதுமையாக யோசிக்க வேண்டும். ஒரு பொருளின் எடை பூமியில் இருப்பதைவிட ஆறில் ஒரு பங்கு நிலவில் குறைவடையும் என்பது முதல் டொலரின் பெருமதி அதிகரிக்க பெற்றோலின் விலை மட்டுமல்ல பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என்பது வரை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
கொடுத்த சந்தத்துக்கு வார்த்தைகளை இட்டு நிரப்பாமல் வாழ்க்கையை நிரப்புவனே சிறந்த பாடலாசிரியன். வாழ்நாளில் ஒரு புத்தகத்தையே வாசித்திராத ஒருவரால் எப்படி புத்தகம் எழுத முடியாதோ அதுபோல வாழ்நாளில் பாடல்களை ரசித்திராத ஒருவரால் ஒரு பாடலையும் எழுத முடியாது. சினிமாவில் கதை நிகழும் களத்துக்கேற்ப எவ்வாறு பாத்திரங்களின் உரையாடல் வடிவமைக்கப்படுகிறதோ அவ்வாறே பாடல்களும் எழுதப்படுகின்றன. இலங்கையில் மட்டுமல்ல உலகெங்கும் ஒரே தமிழ்தான் இருக்கிறது.மனிதர்கள்தான் பேசும்போது தமது வசதிக்கேற்ப தமிழை மொழிகின்றனர். இந்த உண்மைய ஆய்ந்துணர்ந்தால் இலங்கை கவிஞனாலும் தமிழ் சினிமாவில் வெற்றிகரமான பாடலை தரலாம் என்பது திண்ணம்.
4.இலங்கையில் இருக்கும் நீங்கள் பாடல் வாய்ப்புகளை எப்படி பெறுகின்றீர்கள்.கதைசூழல் மெட்டுக்களை எப்படி தெரிந்து கொள்கிறீர்கள்.
இசையமைப்பாளர் நடிகர் விஜய் ஆண்டனி அவர்களின் ‘நான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தப்பெல்லாம் தப்பேயில்லை’ என்ற பாடலினூடாகத்தான்
நான் தமிழ் சினிமாவில் நான் அறிமுகமானேன்.அதன் பின்னர் சுமார் 15 திரைப்படங்களில் நான் பணிபுரிந்துள்ளேன்.அமரகாவியம், சும்மாவே ஆடுவோம்,
எந்த நேரத்திலும் ஆகிய படங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.இயக்குனர் ஜீவாசங்கரின் அமரகாவியம் படத்தில் ஜிப்ரானின் இசையில் பத்மலதா பாடிய ‘தாகம் தீர கானல் நீரை காதல் இன்று காட்டுதே’
பாடலுக்கு சிறந்த வெளிநாட்டு பாடலாசிரியருக்கான ‘எடிசன்’ விருது எனக்கு கிடைத்தது. எந்த நேரத்திலும் படத்தின்இயக்குனரையோ ,இசையமைப்பாளரையோ நேரடியாக சந்திக்காமலே இப் படத்தின் பாடல்கள் என்னால் எழுதப்பட்டன. கடல் கடந்து இருந்தாலும் தேவையேற்பட்டால்
அவ்வப்போது சென்னைக்கு சென்று வருகின்றேன். 2020 இல நான் பணிபுரிந்த பல படங்கள் வெளிவர இருக்கின்றன. புதிய படங்களுக்கும்
ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளேன். தூரத்தில் இருப்பதால் பல நல்ல வாய்ப்புகளும் கடைசி நேரத்தில் கைநழுவிப் போயிருக்கின்றன.தேடி வரும் வாய்ப்புகளை
பயன்படுத்துகின்றேன். வாட்சப் தொழில் நுட்பம் என் பாடல் பணியை இலகுவாக்கிறது.
வாட்சப்பில் டியுன் கேட்டு, வாட்சப்பில் கதை கேட்டு வாட்சப்பில் பாட்டெழுதி, வாட்சப்பில் அதை திருத்தும், வாண்மை மிகு பாவலன் நான் வாழ்க்கையிலே கண்டவற்றை வார்த்தைகளில் கொண்டு வந்து வானளந்த தேன் கவியால் வரலாற்றில் பெயர் பதிப்பேன். வருங்காலம் என் காலம், வலியாவும் ஒளியாகும், வழியற்று அலைவோர்க்கும் வழியென்றன் வழியாகும்.
- வெற்றிமணி வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
25 வருட உன்னதமான சேவை ஐரோப்பாவில் செய்வது சாதாரண விடயமல்ல. வெள்ளிவிழா கண்ட வெற்றிமணி பத்திரிகை தொடர்ந்து 25ஃ50 வருடங்களென தொடரவேண்டும். திரு. சிவகுமார் அவர்களுக்கு என் நன்றியும் பாராட்டுகளும். ஈழத்தின் முதல் பெண்ணிசையமைப்பாளர் பிரபாலினி ஒரு பன்முக கலைஞர். பாடுவது இசையசமைப்பது எழுதுவது இயக்குனர் தயாரிபாளர் என்று என்னை பிரமிக்க வைக்கும் ஒரு பெண். அவர் என்னை நேர்கண்டமைக்கு மனமார்ந்த நன்றிகள் தோழி. அன்புடன் உங்கள் பொத்துவில் அஸ்மின்
2,465 total views, 2 views today