கோத்தபாயாவின் வெற்றி

தமிழர்களை அழித்தொழித்த கோத்தபாயா எட்டாவது அரசுதலைவராக அதிகக்கூடிய பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
இது இலங்கைக்கு இதுவரையில்லாத வரலாற்று வெற்றிதான்.அரசியல் பேசாத ஒருவரின் வெற்றி.
இராணுவத்தில் பணியாற்றி பாதுகாப்புச் செயலாளராக இருந்த ஒருவரை இலஙகையின் அரசுத் தலைவராக தெரிவு செய்ததன் மூலம் சிங்கள மக்கள் முழு இலங்கைக்கும் ஒரு செய்தியைச் சொல்லியுள்ளனர்.
அது இனிவருங்காலங்களில் இலங்கை அரசுதலைவரை தெரிவு செய்வதில் தமிழமக்களினதோ தமிழ் அரசியல் கட்சிகளினதோ ஆதரவு எதுவும் தேவையில்லை சிங்கள மக்களாகிய நாங்களே போதும் அரசுத்தலைவரை தேர்வு செய்வதற்கு என்பதை அறுதியிட்டுச் சொல்லியுள்ளார்கள்.
கோத்தபாயாவிற்கு வாக்களித்தமமைக்கு கோதபாயாவின் ஒற்றைச் சொல்லே காரணம். அந்த ஒற்றைச் சொல்லு இதுதான்”பயங்கரவாதிகளை அழித்து உங்களை அச்சமின்றி வாழச் செய்திருக்கிறேன் ” என்பதே.இதுதான் கோத்தபாயாவிற்கு வாக்குகளை அள்ளிக் குவித்திருக்கின்றது.
பெருபான்மை இனத்தின் அரசியல் அணுகுமுறை நிலைநிறத்தப்பட்டது பௌத்த தளத்தின் மீதுதான்.அதே வேளை இலங்கையின் எப்பாகத்திலும் வாழும் சிங்கள மக்களின் தனிஒருவனின் பாதுகாப்பும் அச்சமில்லாத வாழ்வுக்காண உத்தரவாதமுமே கோத்தபாயாவின் வெற்றியைத் தீர்மானித்துள்ளது.
ஒரு சனநாயகத் தோற்றமுள்ள இராணுவ ஆட்சிக்கும் ராசபக்ச மன்னர் குடும்ப ஆட்சிக்கும் கடந்தகால தமிழர்களின் அனைத்து வடிவிலான அரசியல் அணுகுமுறையும் வழிவகுத்திருக்கின்றது.
இந்தத் தேர்தல் தமிழத் தேசியக்கூட்டமைப்பை இருதலைக் கொள்ளி எறும்பு நிலைக்கும் திரிசங்கு சொர்க்க நிலைக்கும் கொண்டு சென்றிருக்கிறது.
கோத்தபாயவில் வெறுப்புக் கொண்டுள்ள தமிழ் இனத்தின் உணர்வினையே பிரதிபலித்து நின்றவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்.
தமிழர்கள் இத்தேர்தலை ஆதரிக்காது (டீழலஉழவவ) விட வேண்டும் என்று கருத்தும்கூட நிலவியது.ஆனால் அது தவறு.
யார் வென்றாலும் பரவாயில்லை இலங்கையில் தமிழர்கள் தமக்குரிய உரிமையை நிலைநாட்ட இத்தேர்தலில் வாக்களித்தமை சரியானதுதான்.
தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முற்றுமுழுதாக தோல்வியடைந்ததன் பின் தமிழ் அரசியல்வாதிகளின் பலம் பலவீனம் யாவும் பரிசோதிக்கப்பட்டு தமிழ் அரசியல்வாதிகளையும் தமிழரையும் இனி எப்படிக் கையாளலாம் என்பதை சிங்கள அரசியல் உலகம் தெளிவாகவே எடை போட்டுள்ளது.
தமிழர்களின் அரசியலுக்காவும் உரிமைக்காகவும் போராடியவர்களின் விவேகம் கேள்விக்குறியாகி நிற்கின்றது.
பெருபான்மையினம் சிறபான்மையினம் என்ற இரண்டிற்குமான வேலையில்லாப் பிரச்சினைகள் பொருளாதாரக் கட்டைமைப்புகள் யாவும் சிங்கள மக்கள் சார்ந்தும் தமிழர்கள் சிந்திக்காமல் விட்டதும் பெருந்தவறு என்பதை இத்தேர்தல் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளது.
புத்திசீவிகளின் அறிவுரைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் தீவிரப் போக்காளர்களால் நிராகரிக்பபட்டு நீர்த்துப் போவதையே தமிழரின் அரசியல் வரலாறு கண்டுள்ளது.
கோத்தபாயா அரசுத்தலைவராகவும் மகிந்த ராசபக்சா பிரதமராகவும் நாட்டை ஆள்வது என்பதும் நாடாளுமன்ற ஆட்சியமைவுக்கு அப்பால் ராசபக்ச குடும்ப ஆட்சி நிலவுவதற்கு இவ்வெற்றி வழிசமைக்கலாம்..
எதிர்காலத்தில் சிங்கள மக்களுக்கு ஏற்படும் பொருளாதர வீழ்ச்சி வேலையில்லப் பிரச்சினை விலை ஏற்றங்கள் பஞ்சம் பசி இலஞ்சம் ஊழல் போன்றவையே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமேயன்றி ஆட்சி மாற்றததை வேறு காரணங்களால் இராசபக்ச குடும்பத்தின் கையிலிருந்து ஆட்சி மாற வாய்பில்லை.
அடுத்த அரசத்தலைவராக நாமல் ராசபக்ச வரக்கூடிய நிலை தோன்றின் வடக்குக் கிழக்கு தமிழ்மக்களின் ஏகோபித்த ஆதரவுடனேயே தெரிவு செய்யக்கூடிய சூழ்நிலை தோன்றலாம்.அடுத்த ஐந்தாண்டுக்குள் தமிழர்கள் சிங்களத்தலைமைகளை நோக்கி நகர்த்தப்படுவதற்கான அனுகூலங்கள் ஏற்படலாம்.
ஆட்சியாளர்களின் அரசியல் அணுகுமுறைக்கமையவே தமிழர்தம் அரசியலைச் செய்ய வேண்டும்.
தாயகத்தில் உள்ள மக்களுக்குத்தான் அரசியலும் அரசியல்வாதிகளும் என்பதை புலம்பெயர் தமிழ் குழுக்கள் உணர்தல் வேண்டும்.தமது எல்லை எதுவரை என்பது இன்னமும் அவர்களுக்குத் தெரியவில்லை.
கோதபாயவை அரசுத்தலைவராக்கியவர்கள் தமிழர்களே என்பது சீரணிக்க முடியாத உண்மை.
ஏலையா.க.முருகதாசன்