கோத்தாபய வகுக்கும் வியூகங்கள் தமிழர் தரப்பு எப்படி எதிர்கொள்ளும்?
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று முடிவடைந்திருக்கும் நிலையில், பொதுத் தேர்தலை நோக்கி நாடு செல்லப்போகின்றது. பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளும் இலக்குடன் ராஜபக்ஷ தரப்பினர் காய் நகர்த்தத் தொடங்கியுள்ளார்கள். ஜனாதிபதிப் பதவி கையில் கிடைத்திருக்கும் நிலையில், பாராளுமன்றத்திலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டால், தம்மை யாராலும் ஐந்து வருடங்களுக்கு அசைக்க முடியாது என்ற நம்பிக்கையுடன் தமது வியூகங்களை அவர்கள் வகுத்துச் செயற்படத் தொடங்கியுள்ளார்கள்.
ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனையின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றுள்ள அதேவேளையில், தெளிவான சில செய்திகள் இதன்மூலமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. என்னதான் சொன்னாலும், இலங்கைத் தீவு துருவமயப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. சிங்கள – பௌத்த தேசிய வாதத்தை அடிப்படையாக வைத்து சிங்கள மக்கள் கோத்தாபயவுக்கு வாக்களித்திருக்கின்றார்கள். அதற்கு எதிராக கோத்தாபயவை ஏற்கமுடியாது என்ற அடிப்படையிலேயே தமிழ் மக்கள் சஜித்துக்கு வாக்களித்திருக்கின்றார்கள்.
2015 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடும் போது, வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் வாக்களிப்பு விகிதம் அதிகரித்திருக்கின்றது. தங்களுடைய வாக்குப் பலத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருந்துள்ளார்கள். தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தவர்களின் கருத்தை தமிழ் மக்கள் கருத்தில் எடுக்கவில்லை. ஜனநாயக ரீதியாக தமக்கு இருக்கக்கூடிய ஒரே உரிமையையும் கைவிட்டுவிட அவர்கள் தயாராகவில்லை. தமது உணர்வுகளை வெளிப்படுத்த தமக்குக் கிடைத்த ஒரு சந்தர்ப்பமாகவே இதனை அவர்கள் கருதியிருக்கின்றார்கள்.
வடக்கு கிழக்கில் சஜித் பிரேமதாச 80 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார். தமிழ் மக்கள் இவ்விதம் அபாரமாக சஜித்துக்கு வாக்களித்திருப்பது, சஜித் மீது அவர்களுக்குள்ள அபிமானத்தினால் அல்ல. யார் பதவிக்கு வரக்கூடாது என்பதில் அவர்கள் தெளிவாக இருந்துள்ளார்கள். போரை முன்னெடுத்து இன அழிப்புக்குக் காரணமான ஒருவரை அதிகாரத்துக்குக் கொண்டுவரவோ, அதனை வரவேற்கவோ தாம் தயாராக இல்லை என்பதை தமது வாக்குகளின் மூலம் உறுதியாகத் தெரிவித்திருக்கின்றார்கள் தமிழ் மக்கள். 2009 க்குப் பின்னர் இடம்பெற்ற ஒவ்வொரு தேர்தல்களின் போதும் இதே உணர்வைத்தான் தமிழ் மக்கள் வெளிப்படுத்தியிருந்தார்கள்.
அதேவேளை, தென்பகுதியில் சிங்கள மக்கள் இராணுவப் பின்னணியைக் கொண்ட சிங்கள – பௌத்த கடும்போக்காளர் ஒருவரைத்தான் தமது தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். ராஜபக்ஷ குடும்பத்தினர் மீது பாரதூரமான அதிகார துஷ்பிரயோகம், ஊழல், அச்சுறுத்தல் என பெருமளவு குற்றச்சாட்டுக்கள் இருப்பது சிங்கள மக்களுக்கும் தெரியும். ஆனால், போரை வெற்றிகொண்டவர்கள் என்பதற்கு முன்னால், அவற்றைப் பெரியதொரு விடயமாகவோ குற்றமாகவோ கருதுவதற்கு சிங்களவர்கள் தயாராகவில்லை என்பதையும் தென்பகுதி சிங்கள மக்கள் வாக்களித்திருக்கும் முறை உறுதிப்படுத்தியிருக்கின்றது.
சஜித் பிரேமதாசவை ஆதரிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், கோத்தாவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக சஜித்துக்கு வாக்களிப்பது என்ற முடிவை தமிழ் மக்கள் முதலிலேயே எடுத்திருந்தார்கள். கூட்டமைப்பு சொன்னதால்தான் தமிழ் மக்கள் சஜித்தை ஆதரித்தார்கள் என்று சொல்லமுடியாது. கூட்டமைப்பு அதற்காகச் சொன்ன காரணங்களைத் தமிழ் மக்கள் கணக்கில் எடுக்கவும் இல்லை. அதில் நம்பிக்கை வைக்கவும் இல்லை. அதேவேளையில், சஜித் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தருவசார் என்ற நம்பிக்கையில் இவ்வாறு வாக்களிக்கவும் இல்லை. கோத்தாவை ஏற்க முடியாது என்பதே தமிழ் மக்களின் ஒட்டுமொத்த கருத்தாக இருந்துள்ளது.
தென்னிலங்கையில் சிங்கள மக்கள் பெருமளவுக்கு வாக்களித்து கோத்தாபயவை தமது ஜனாதிபதியாகத் தெரிவு செய்திருக்கின்றார்கள். சிறுபான்மையின வாக்குகள் அவசியமில்லை, தனிச் சிங்கள வாக்குகளே ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்குப் போதும் என்பது மீண்டும் ஒரு தடவை தடவையாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. சிறுபான்மையினரின் வாக்குகள்தான் நிர்ணயிக்கும் வாக்குகள்தான் என்ற வகையில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் அர்த்தமற்றவையாக்கப்பட்டுவிட்டன. வடக்கு கிழக்குத் தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் என அனைத்து சிறுபான்மையின மக்களும் ஒன்றிணைந்து சஜித்துக்கு ஆதரவளித்த போதிலும், கோத்தாவைத் தோற்கடிக்க முடியவில்லை.
கோத்ததபயவின் நிகழ்ச்சி நிரல் எவ்வாறானதாக இருக்கும் என்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். சிங்கள – பௌத்த தேசியவாதத்தை மேலும் வலுப்படுத்தும் வகையிலேயே அவருடைய செயற்பாடுகள் அமைந்திருக்கும். ஜனநாயக ரீதியாக தீர்வு ஒன்றை தமிழ் மக்கள் நிச்சயமாக எதிர்பார்க்க முடியாது.
சிங்களத் தேசியவாதத்தின் தலைநகராகக் கருதப்படும் அநுராதபுரத்தில் ஜனாதிபதிப் பதவியை 18 ஆம் திகதி ஏற்றுக்கொண்ட பின்னர் கோததாபய நிகழ்த்திய உரையில் இந்தத் தொனியை அவதானிக்க முடிந்தது. “இந்த வெற்றியைத் தரப்போகிறவர்கள் இந்தநாட்டின் பெரும்பான்மை சிங்களவர்களே என்பதை ஆரம்பத்திலேயே நாங்கள் அறிந்து வைத்திருந்தோம்” என்று பதவிப் பிரமாணத்தில் கோத்தா தெரிவித்திருந்தார். எல்லாளனைக் கொன்று யுத்தத்தை முடித்துவைத்ததாக கூறிய துட்டகைமுனு கட்டிய அனுராதபுர “ருவன்வெளிசேய”வை தனது பதவிப் பிரமாணத்துக்கு கோத்தா தெரிவு செய்ததன் பின்னால் உள்ள தேசியவாத அரசியலையும் புரிந்துகொள்ள வேண்டும். துட்டகைமுனுவின் இடத்தில் இருந்து இதைச் செய்வதில் பெருமைகொள்வதாக பேச்சின் ஆரம்பத்தில் கோத்தா இறுமாப்புடன் தெரிவித்திருந்தார்.
அவரது உரையில் சிறுபான்மையினருக்கான தீர்வு குறித்து எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. “இனப்பிரச்சினை தீர்வு என்கிற பேரில் புதிய அரசியலமைப்பை ஆதரிப்பவர்கள் தேசத்துரோகிகள். அவர்களுக்கு மரணதண்டனை அளிக்கவேண்டும்” எனப் பகிரங்கமாக அறிவித்த கமால் குணரட்ணவைத்தான் அவர் தன்னுடைய பாதுகாப்புச் செயலாளராக நியமித்திருக்கின்றார். கமால் குணரட்ண இறுதிப்போரில் முக்கியமான படை அணியான 53 ஆவது படை அணிக்கு தலைமை தாங்கியவர். வன்னியில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் பலவற்றில் அந்தப் படை அணியே சம்பந்தப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
புதிய தளத்திலிருந்து பிரச்சினைகளை அணுக வேண்டிய அவசியம் தமிழர் தரப்புக்கு இப்போது ஏற்பட்டுள்ளது. தென்னிலங்கையில், சிங்கள பேரினவாதம் வலுவடையும் நிலையில், ஜனநாயக ரீதியான – அரசியல் ரீதியான தீர்வு ஒன்றை எம்மால் எதிர்பார்க்க முடியாது. நிலைமைகளை எதிர்கொள்ள புதிய உபாயங்களைத் தமிழர் தரப்பு வகுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக சர்வதேச சமூகத்தின் – இந்தியாவின் பங்களிப்பு இதற்கு அவசியம். இதில் தமிழர் தப்பு ஒன்றுபட்டுச் செயற்படுவதும் அவசியம். அதனை அவர்கள் செய்வார்களா?
— கொழும்பிலிருந்து ஆர்.பாரதி
1,770 total views, 3 views today