மிலான் நகரில் ஒரு இராப்போசனம்!
இன்றைக்கும் நினைவிருக்கிறது சிறுவயதில் எங்கள் பள்ளிக் கட்டிடத்தின் உள்ளே செல்லும்போது மேலே ஓர் ஓவியம் வரையப்பட்டிருக்கும், இயேசு நடுவில் இருக்க இருபுறமும் சீடர்கள் அமர்ந்து இரவு உணவு உண்ணும் ஓவியம், இது போலே பல ஓவியங்கள்ஃபடங்களை உலகெங்கும் காணலாம். ஆனால் இதற்கெல்லாம் அடிப்படையாக அமைந்தது மறுமலர்ச்சி காலத்தில் டாவின்சி வரைந்த “தி லாஸ்ட் சப்பர்” (வுhந டுயளவ ளுரிpநச).
ஐரோப்பாவில் மறுமலர்ச்சி: ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் சுமார் கி.பி 5 முதல் கி.பி. 1500 வரை ஐரோப்பா மத்திய காலமென்னும் இருண்ட காலத்தில் மூழ்கி இருந்தது, பின்னர் அறிவுசார் மாற்றங்களையும், கலை வளர்ச்சியையும் இத்தாலி தொடங்கி வைக்க உலகத்தியே திரும்பிப் பார்க்கவைத்த மறுமலர்ச்சிக் காலம் தொடங்கியது. இக்காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற ஓவியர் லியானார்டோ டாவின்சி வரைந்த ஓவியங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை அவற்றுள் ஒன்று தான் கடைசி இராப்போஜனமென்னும் “தி லாஸ்ட் சப்பர்”
மோனலிசா போன்ற டாவின்சி வரைந்த ஓவியங்களைப் பார்க்க நீங்கள் லூவர் போன்ற அருங்காட்சியங்களுக்கு செல்லவேண்டும் ஆனால் அவற்றிலிருந்து மாறுபட்டது இந்த ஓவியம். இதனைக்காண நீங்கள் மிலான் நகரம் செல்ல வேண்டும், சென்றாலும் அத்துணை எளிதில் பார்க்கமுடியாது.
மிலான் நகரம்: இத்தாலியின் செல்வங்கொழிக்கும் நகரங்களுள் ஒன்று, பிளாரன்ஸ் நகருக்கு அருகே பிறந்து பலவிடங்களில் பணியாற்றிய டாவின்சி, மிலானின் ஸ்ஃபோர்சா குடும்பத்தின் வேண்டுகோளுக்காக மிலான் வரவழைக்கப்பட்டார், மிலான் நகரின் வெளிப்புறத்தில் புனித டொமினிக் சபை துறவியர் இல்லத்தை அழகுபடுத்தும் விதமாக அதன் உணவுக் கூடத்தில் ஓவியம் வரைய பணிக்கப்பட்டார் டாவின்சி.
விவிலியத்தில் குறிப்பிடுவதை கருப்பொருளாய்க் கொண்டு அந்த அழகிய ஓவியத்தை 1495இல் வரையத் தொடங்கி, 1498இல் நிறைவுக்குக் கொணர்ந்தார். அவர் அதிகாலையில் எழுந்து ஓவிய வேலையைத் தொடங்கினால் மாலை வரையும், பசி தாகம் என்று பாராமல் ஓவியம் வரைவதிலேயே கண்ணாயிருந்தார் என்று சம கால எழுத்தாளர் மத்தேயோ பண்டேல்லோ (ஆயவவநழ டீயனெநடடழ) என்பவர் குறிப்பிடுகிறார்.
பிரெஸ்கோ முறையை கையாளாமல் உலர்முறையை கையாண்டதால் அப்போதே ஓவியத்தின் நிறங்கள் மங்கத்தொடங்கின, பின்னாளில் பல காலகட்டங்களில் ஓவியம் சீரமைக்கப் பட்டது. இரண்டாம் உலகப் போர் 1943, ஆகஸ்டு 15ஆம் நாள் ஓவியம் இருந்த கட்டடத்தின் அருகே விழுந்த குண்டு ஓவியத்தை அழித்திருந்திருக்கும். ஆனால் அதிசயமாக ஓவியம் இருந்த சுவர் மட்டும் தப்பியது. அதனால் இன்று வரை ஓவியத்தை நமக்கு வாய்ப்பாக அமைந்தது.
இன்றைக்கு இத்தாலியின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக விளங்குகிறது மிலான், பழமையும் புதுமையும் கைகோர்த்து நிற்கும் இந்த நகரின் மத்தியிலிருந்து சற்றே வெளியே நிற்கிறது சாண்டா மரியா டெல்லா க்ராஸியா எனும் அந்த குருமார் மடம். ஓவியம் இருக்கும் சுவர் இதற்குள் தான் இருக்கிறது. ஓவியத்தின் தன்மையைக் கருதி ஒரே நேரத்தில் 25 மட்டும் வெறும் 15 நிமிடங்கள் மட்டும் பார்வையிட அனுமதி அளிக்கப்படுகிறது. அதற்கு பலமாதங்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்கிவிடுகிறது. அதனால் இதனை பார்க்க பல நாட்கள் முன்பே திட்டமிட வேண்டும்.
செந்நிற கட்டிடத்தில் அந்த பிரம்மாண்டம் கண்முன்னே காட்சியளித்தது, இயேசு நடுவே அமர்ந்திருக்க இருபுறமும் முறையே திருத்தூதர்கள் பன்னிருவரும் மூன்று பேர் மூன்று பேராக நான்கு குழுவாக உள்ளனர். ஒவ்வொருவரும் வெவ்வேறு உடல்நிலை கொண்டிருந்தாலும், மொத்தத்தில் சமனாகச் சீரமைத்த விதத்தில் பன்னிருவரும் தோற்றமளிக்கினறனர். பர்த்தலமேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, அந்திரேயா.யூதாசு இஸ்காரியோத்து, சீமோன் பேதுரு, யோவான் ஒருபுறம், மற்றோருபுறம் பிலிப்பு, செபதேயுவின் மகன் யாக்கோபு, தோமா,சீமோன், ததேயு மற்றும் மத்தேயு.
ஓவியத்தில் வருகின்ற ஒவ்வொரு நபரும் எத்தகைய உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை அவர்களுடைய உடல்நிலை, கை அசைவு, முகம், உதடு, வாய், கண் ஆகியவற்றின் வழியாக ஓவியர் எடுத்துரைக்கிறார்.
லியொனார்டோவின் ஓவியம் “சொற்களின்றிப் பேசுகின்ற கவிதை” என்று இன்றைக்கும் கலையுலகம் பேசிக்கொண்டிருக்கிறது, அந்த அளவு பெருமைவாய்ந்த ஓவியத்தைக் காண கண்டிப்பாக ஒருமுறையாவது இத்தாலி சுற்றிவாருங்கள்.
— தனசேகர்.பிரபாகரன்
2,033 total views, 3 views today