வரலாறும், வரலாற்றுச் சான்றுகளின் பெறுமதியும்.

ஒவ்வொரு நாடும் தனக்கென ஒரு வரலாற்றைக் கொண்டிருப்பதை உலக நாடுகளின் வரலாற்றை நோக்கும்போது தெளிவாகும். ஆயினும் சில நாடுகள் நீண்ட வரலாற்றையும், இன்னுஞ் சில நாடுகள் குறுகிய கால வரலாற்றையும் கொண்டிருப்பதை அவதானிக்கலாம். இன்றைய காலகட்டத்தில் வரலாறு என்பது நாட்டினுடைய வரலாற்றை வரன்முறைப்படுத்துவதாக மட்டுமன்றி, அந்நாட்டில் வாழும் இனங்கள் மற்றும் குழுமங்கள், அவற்றின் மொழிகள் பழக்கவழக்கங்கள், மற்றும் பண்பாட்டு மரபுகள் என்பவற்றை அடையாளப்படுத்தவும், அவற்றின் தொடர்ச்சியைப் பேணவும் பயன்படுகின்றது. வரலாறென்பது கடந்த கால நிகழ்வுகளின் தொகுப்பு எனக் கூறப்படுகின்றபோதும், அவற்றினூடாக நிகழ்காலத்தைக் காண்பதையும், எதிர்காலத்தை வளமாக்குவதையும் கண்டுகொள்ளலாம். ஒரு நாட்டினதோ, ஒரு இனத்தினதோ வரலாற்றைக் கூறவேண்டுமானால் சான்றுகள் அவசியமாகும் சான்றுகள் இல்லையெனின் அது வெறும் கதையாகவே கருதப்படும். ‘சான்றுகளே வரலாற்றின் அத்திபாரம்: அதன் மேலேயே வரலாறு என்ற கட்டடம் எழுப்படும்” என்ற கருத்து வரலாற்றை சான்றுகளே நிலைநிறுத்துகின்றன என்பதனை வலியுறுத்துவதாக அமையும்.
.இலங்கை இந்துசமுத்திரத்தின் மத்தியிலே இந்தியாவுக்குமிக அருகாமையிலே மேற்கு கிழக்குக் கடற்போக்குவரத்தின் மையத்திலே காணப்படுவது அதன் வரலாற்று வளர்ச்சிக்கு ஏதுவாக இருந்தது. மேலும் அந்நாடு

கொண்டிருக்கும் புவியியல் அமைப்பும் வரலாற்றில் தாக்கத்தைச் செலுத்தியுள்ளமையை அவதானிக்கலாம். பல்வேறு வளங்களைக் கொண்ட இலங்கையானது, பண்டைக் காலத்திலேயே பிற நாட்டவரோடு வர்த்தக உறவுகளைக் கொண்டிருந்தது. இதனாலேயே பல்வேறு நாட்டவரும் காலத்துக்குக் காலம் இலங்கைக்குப் பல்வேறு பெயர்களை வழங்கியிருந்தனர். இதனால் இலங்கை அதிகமான பெயர்களைக் கொண்ட நாடாகவும் பெருமை பெறுகின்றது. இலங்கை, ஈழம், லங்கா, இலங்கா துவீபம், நாகதீப, தப்பிரபேன், இரத்தின துபீபம், செலான், பழசிமுண்டு, சிங்களத்தீவு, செரண்டிப், சிலோன் என்ற பெயர்கள் இலங்கையைக் குறிப்பதற்குப் பயன்பட்டன. இவற்றிலிருந்து அக்காலத்தில் இலங்கை பெற்றிருந்த சிறப்பை அறிந்து கொள்ளலாம். இலங்கைக்கு வந்து சென்றவர்களும், இலங்கைக்கு வந்து சென்றவர்களிடம் இலங்கை பற்றி அறிந்தவர்களும் தமது குறிப்புக்களில் இலங்கை பற்றிய செய்திகளைக் குறித்துள்ளமை இலங்கையின் வரலாற்றை அறியத் துணை செய்கின்றன. குறிப்பாக தொலமி, பிளினி போன்றவர்களுடைய குறிப்புக்களை உதாரணமாகக் கூறலாம்.
இலங்கையின் வரலாற்றை அறிந்து கொள்வதற்குப் பல சான்றுகள் காணப்படுகின்றன. இவற்றை இலக்கிய ஆதாரங்கள், தொல்லியல் சான்றுகள் எனப் என பாகுபடுத்தி நோக்குவர். வரலாற்றை அறிய உதவும் இலக்கியங்களை உள்நாட்டு இலக்கியங்கள், வெளிநாட்டு இலக்கியங்கள் என்ற பிரிவுகளாக வகைப்படுத்தி நோக்குவதுண்டு. மொழியின் அடிப்படையில் பாளி இலக்கியங்கள், சிங்கள இலக்கியங்கள், வடமொழி இலக்கியங்கள், தமிழிலக்கியங்கள் எனவும், பொருளடிப்படையில் சமயம் சார்ந்த இலக்கியங்கள், சமயம் சாராத இலக்கியங்கள் என்ற வகையீடும் கவனத்திற் கொள்ளப்படுகின்றது. தனித்து இலக்கியங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இலங்கை ஏறக்குறைய 2300 ஆண்டுகள் வரலாற்றைத் தொடர்ச்சியாகக் கொண்டிருக்கும் வகையில் தென்னாசிய நாடுகளில் சிறப்புக்குரியதாக விளங்குவது குறிப்பிடத்தக்கது. தொல்லியற் சான்றுகளைப் பொறுத்தவரை கி.பி.19ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே தொல்லியற்றுறையின் வளர்ச்சியினூடாக அடையாளப்படுத்தப்பட்டதைக் காணலாம். குறிப்பாக ஆங்கிலேயர் ஆட்சியின் போது இலங்கையில் நிர்வாகப் பணியில் ஈடுபட்டவர்கள் அரிதான எழுத்துக்கள், வெ;வேறு வடிவங்கள் மற்றும் சின்னங்களைக் கொண்ட நாணயங்கள், அழிந்தும் அழியாத கட்டடங்கள், பல்வேறு காலகட்டங்களிலும் மனிதர்களால் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என்பவற்றை ஆங்காங்கே அவதானித்துத் தமது குறிப்புக்களில் அவற்றைப் பதிவு செய்தனர். இவற்றின் பின்னணியில் படிப்படியாக இலங்கையில் தொல்லியல் சான்றுகள் அறியப்பட்டு, ஆராயப்பட்டுப் பல்வேறு பிரிவுகளாக வளர்ச்சி கண்டது. இவ்வகையில் தொல்லியற் சான்றுகளுள் கல்வெட்டுகள், செப்பேடுகள், நாணயங்கள், பழைய கட்டடங்கள், எலும்பு எச்சங்கள், பண்டைய பாவனைப் பொருட்கள் என்பன உள்ளடக்கப்பட்டு வரலாற்றுச் சான்றுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுடன் மக்களிடையே வழக்கிலுள்ள நாட்டார் வழக்காறுகளும், வாய்மொழித் தரவுகளும் வரலாற்றை அறியும் சான்றுகளாக இன்று முக்கியத்துவம் பொறுகின்றன.

இலங்கையில் வாழ்ந்த மக்கள் நீண்டகால வரலாற்றைக் கொண்டிருந்ததை சான்றுகள் எடுத்துக்காட்டுகின்றன என்பதை மேலே கண்டோம். முன்னோர் அரும்பாடுபட்டு நிலைநாட்டிய பல்வேறு அம்சங்களையும் சான்றுகளே அறியத் தருவதால் அவற்றினைப் பேணிப்பாதுகாப்பது இலங்கை நாட்டவரது தலையாய கடனாகும். இதனாலேயே தொல்பொருட்களை வரலாற்றுச் சான்றுகளைச் சேதப்படுத்துபவர்களுக்குத் தண்டனைகள் வழங்கப்படுவதைக் அவதானிக்கலாம். சிகிரியாவில் வரலாற்றுச் சின்னமான பாறையில் எழுதியமைக்காகவும், பழைய தூபி ஒன்றின் மேல் ஏறி நின்று படம் பிடித்து முகநூலில் பதிவிட்டமைக்காகவும் தண்டனைகள் வழங்கப்பட்டதை அண்மையில் ஊடகங்கள் பிரசுரித்திருந்தன. வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கென பல்வேறு செயற்படுகள் மேற்கொள்ளப்படுவதோடு, சட்டங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆயினும் நாட்டின் எல்லாப்பாகங்களிலும் இத்தகைய நடைமுறை இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்ற நிலைமையும் காணப்படுகின்றது. தொல்பொருட்களைப் பாதுகாப்பதற்கென அரும் காட்சியகங்களும் நாட்டின் பல பாகங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. ஆயினும் நம்மவரிடையே வரலாற்றுச் சான்றுகள், அவற்றின் பெறுமதி என்பன பற்றிய அறிவு இன்மையால் அறிந்தும் அறியாமலும் அவற்றைக் கைநெகிழ விடும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. பழைய கட்டடங்களின் மதிப்புத் தெரியாமலே அவற்றை அழித்துப் புதிய கட்டடங்களுக்குப் பயன்படுத்தப்படும் நிலை காணப்படுகின்றது. அரிதான பொருட்களை முன்னோரின் சொத்து என்பது புரியாமலே வியாபாரிகளுக்கு விற்றுப் பணமாக்கும் செயற்பாடும் நடைபெறுகின்றது. அண்மையில் பொலநறுவைக்குச் கல்விச் சுற்றுலாவுக்காக சென்றபோது ஒரு வியாபாரி பழைய செப்புப் பாத்திரங்கள், விளக்குகள், பல்வேறு வகையான கத்திகள் என்பவற்றை விற்பனைக்கு வைத்திருந்தார்.

எங்கிருந்து அவற்றைப் பெற்றீர்கள் எனக் கேட்போது, அவர் யாழ்ப்பாணத்தில் இருந்து அவற்றைப் பெற்றதாகக் கூறினார். நாமே நமக்குரிய அரிய சான்றுகளை கைநெகிழ விட்டால் எமது வரலாற்று இருப்பை எவ்வாறு நிலைநாட்டுவது?. சான்றுகள் இல்லையெனில் எமது வரலாறு கட்டுக்கதையாகி விடுமல்லவா? எனவே எமது நாட்டுக்குரிய வரலாற்றுச் சான்றுகளைப் பேணிப்பாதுப்பது ஒவ்வொருவரினதும் கடமையாகும் என்பதை விளங்கிக் கொள்வது அவசியமானதாகும். கோயில்கள், பாடசாலைகள், பிரதேச செயலகங்கள், சனசமூகநிலையங்கள் என்வற்றினூடாக இளைய தலைமுறையினரிடையே வரலாற்று உணர்வினை வளர்ப்பதும், அதனூடாக நமது வரலாற்றினை நிலைநிறுத்துவதும் தற்காலத்தில் மிகத் தேவைப்பாடுடைய விடயமாக அமைந்துள்ளது.

பெருங்கற்கால ஈமச்சின்னம்
பாவனைப்பொருட்கள்
பிராமிக் கல்வெட்டு.

— திருமதி. சாந்தினி அருளானந்தம்
முதுநிலை விரிவுரையாளர் வரலாற்றுத்துறை
யாழ் பல்கலைக்கழகம்

3,005 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *