கர்ப்பம் சுமக்கும் தாயவள் கவனத்திற்கு.
தாய்மை என்பது இன்னொரு உயிரின் படைப்புக்கு துணை போதல்.இப்பூமியில் பல்லுயிர்களும் பல்கி பெருக தாய்மையின் பங்கு மிக முக்கியமானது. சாதாரணமாக பார்க்கின்ற போது அதன் பெறுமதி, ஆழங்கள், நுணுக்கங்கள் இயல்பாக கணிக்கப்பட்டு விடுவதில்லை. மிகச் சாதாரண இயல்பான நிகழ்வாகவே நடந்தேறி விடுகிறது. எனினும் இத் தாய்மை தான் அடுத்தடுத்த பரிணாமங்களுக்கு உருவாக்கம் கொடுக்கிறது. கோயிலின் கருவறையே தாயின் கருவறைக்குமான பெயர். அவ்வளவு புனிதத் தன்மை வாய்ந்த இடத்தில் பதியும் கருவை பேராற்றல் மிக்கதாக உருவாக்க முடியும்.
கர்ப்பிணிகள் தம் தாய்மையின் தார்ப்பணியத்தையும், அதன் பொறுப்புணர்வையும் உணர்ந்து செயற்படுதல் மிக முக்கியம். மனிதன் தன் சுயத்தின்படி நடந்து கொள்வதற்கான சுதந்திரம் வெகுவாகவே இருக்கின்றது. ஆகவேதான் பல துறைகளில் வளர்ந்தும், விரிவடைந்தும் இருக்கின்றான். அவ்வாறான மனிதன் இன்னுமொரு உயிரை உருவாக்கும் போது அதனை மேலும் வலுவாகவும், ஆளுமை மிக்கதாகவும் உருவாக்கும் விழிப்புணர்வை பெற்றிருக்க வேண்டும்.
தற்கால சமூகம் அறிவியலில் மேம்பட்டு இருக்கின்ற போது பற்பல விடயங்கள் தேடி வரும். அப்படியான பொழுதுகளில் சரிபிழை எது என்று பகுத்து உணரும் பக்குவம் வேண்டும். ஆரோக்கியம், நுண்ணுணர்வு சார்ந்த பழமைகளை உணர்ந்தறிந்து பயன் பெற வேண்டும். காலா காலமும் பொருத்தமாக அமையக்கூடிய எத்தனையோ வழி முறைகளை முன்னோர்கள் தந்து சென்றுள்ளனர். மரபு சார் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் சீராக உடல் உள சமநிலையை பேணி வந்தன.
ஒரு குழந்தை கருவில் உருவாகும் போதே அதற்கான சூழலை உள்வாங்கத் தொடங்குகிறது. புராண கதைகளில் அபிமன்யுவையும், பிரகலாதனையும் உதாரணமாக எடுத்துக்கொள்ள முடியும். இன்றைய விஞ்ஞான உலகமும் கருவில் உள்ள குழந்தையின் கிரகிக்கும் தன்மையினை ஏற்கத் தொடங்கியுள்ளது. எனவே நல்லதொரு சூழலை உருவாக்கி உணர்வின் மூலம் உள்வாங்கச் செய்தல் என்பதை இலகுவில் நடைமுறைப் படுத்த முடியும். தாயின் உணர்வு மூலம் குழந்தை அதிக உணர்திறனைப் பெறுகிறது. எனவே தாயின் உணர்வு நிலை முக்கியமானது. அவற்றில் உதாரணமாக நேர்மறையான அதிர்வுகள் உள்ள இசையைக் கேட்டல், நல்ல புத்தகங்களை வாசித்தல், மன அமைதி, சாந்தி தரும் விடயங்களில் ஈடுபடுதல், புதிர்கள் போன்ற மூளைக்கு வேலை தரும் விளையாட்டுக்கள், மனதிற்கு இனிய உரையாடல்கள், நல்லெண்ணம் என்பன அவசியமானவை. மற்றும் எதிர்மறையான திரைப்படங்கள், சின்னத்திரைகள் பார்த்தல், மனதை நடுங்கவைக்கும், பாதிக்கும் விடயங்களை கேட்டல், பார்த்தல் என்பனவற்றையும், துக்க வீட்டில் பங்கெடுத்தல், பழியுணர்ச்சி, பகை, கோபம், வெறுப்பு, தாழ்வு மனப்பான்மை, விரக்தி, சோம்பல் போன்றவற்றையும் அறவே தவிர்த்தல் வேண்டும்.
எதிர்மறையான உணர்வுகள் தரக்கூடிய இடங்களை மட்டுமல்லாது அப்பேற்பட்ட நபர்களைக் கூட தவிர்த்திருத்தல் வேண்டும். இது குழந்தையின் அற்புதமான உருவாக்கத்திற்கு மிக முக்கியமானதாக இருக்கும். முதலில் மனித குல மேம்பாட்டிற்கு எது சிறந்தது, அதிக நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்ற சுய பரிசீலனை இருக்க வேண்டும். அதே வேளை எவ்வாறான தன்மைகளோடு தன் குழந்தை இருக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதோ அதற்கேற்றாற் போல் உள்ளுணர்வோடு கருவிலிருந்தே பேணிப் பாதுகாக்க வேண்டும்.
மனக்கழிவுகளை நீக்குவதோடு, உடற்கழிவுகளையும் தேங்காது வெளியேற்ற வேண்டும். எனவே மலச்சிக்கல் ஏற்படாது பார்த்துக் கொள்வதோடு மரபணு மாற்றமல்லாத இயற்கையான பாரம்பரிய உணவுகள் உட்கொள்ள வேண்டும். அகச்சுத்தம், புறச்சுத்தம் அன்றாடம் பேணப்பட வேண்டும். தானியங்கள் விழைநிலத்தில் போட்டதும் முளைக்கும் உயிர்த் தன்மை உடையது. நல்ல தானியங்கள் மிகுதியாக பலம் தரும். முக்கியமாக ஒரு கர்ப்பிணிக்கு ஒட்டு மொத்த குடும்பமும் ஆதரவும், அன்பும் கொடுக்கும் போது மிகுதியான பேராற்றலோடு குழந்தை வளர்ச்சியுறும் என்ற பொறுப்புணர்வையும் குடும்பத்தவர்கள் கருத்திற் கொள்ள வேண்டும். அதற்காகவே சீமந்தம் என்று சொல்லப்படுகின்ற வளைகாப்பு நிகழ்த்தி பிரசவத்திற்கு அருகாமையில் இருக்கும் பெண்ணின் பதற்றத்தைப் போக்கி உற்சாகம், தைரியம், சந்தோசம் போன்றவற்றை ஏற்படுத்துகின்றனர். இந்த நிகழ்வு கருவின் ஏழாவது மாதத்தில் நிகழ்கிறது. அந்த குழந்தை மிக நுட்பமாக சூழலை கிரகிக்க தொடங்கும் காலம் இது. எனவேதான் இந்த நிகழ்வு தொடக்கம் பெண் அதிக கண்ணாடி வளையல்களை கையில் அணிந்து அந்த இசையின் மூலம் குழந்தைக்கு இனியதொரு உணர்வை சீராக இருக்கும்படி பேணுகிறார்கள்.
வீட்டில் உள்ள மூத்தோர்கள் கருவில் குழந்தை உருவாகும் போதே அதற்கேற்ற உணவுகள், கர்ப்பிணிக்கான ஆலோசனைகளாக எந்தெந்த நாட்களில், நேரங்களில் தலையில் குளிப்பது, எண்ணெய் தேய்ப்பது, எப்படி அமர்வது, எவ்வாறான விடயங்கள் செய்யலாம் அல்லது செய்யக் கூடாது போன்ற பல விடயங்களைச் சொல்லிக் கொடுக்கும் போது அவை அந்த தாய்க்கும் சேய்க்கும் பெரும் பாதுகாப்பு அரணாக விளங்கியது. பல குழந்தைகளை பெற்ற சமுதாயத்தில் இன்று ஒரு குழந்தை பெற்றுக் கொள்வதில் கூட பல போராட்டங்களை சந்திக்கின்றனர். இவ்வாறான விடயங்களில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள வயதானவர்கள் அல்லது மரபறிந்த மூத்தோர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும். பட்டறிவு என்பது பாட்டன் பாட்டியின் பெரும் சொத்து.
குழந்தை கருவில் உருவாக முன்பே அதற்கான வரவு இனிதாக இருக்க வேண்டும் என்று மணமகள், மணமகனின் உடல், உள மேம்பாடு மற்றும் நாட்களின் சீதோஷ்ண நிலை, கிரக கதிர்வீச்சு நிலை, நிலவுக்கும் பூமிக்குமான விசை என இவைகள் நல்ல முறையில் இருக்கவே சாந்தி முகூர்த்தம் என சக்தி மிகுந்த நாளில் தம்பதியினரை ஒன்று சேர்க்கின்றனர். அந்த நாளில் அகமும் புறமும் பரிசுத்தமாகவும், சாந்தியோடும் விளங்கும் போது சாத்வீகமானதொரு ஆன்மாவை வரவழைக்க முடியும்.
தமிழ் வேதமாகிய திருமந்திரத்தில் திருமூலர், கருவின் தோற்றம், வளர்ச்சி, ஆண் பெண் குழந்தைப் பிறப்பு, ஊனத்துடன் குழந்தைப் பிறப்பதற்கான வாய்ப்பு முதலிய செய்திகளையும் கூறியுள்ளார்.
உதாரணமாக, உறவின் போது ஆணின் சுவாசம் வலது மூக்கின் வழியாக நடைபெற்றுக் கொண்டு இருக்குமாயின் குழந்தை ஆணாக இருக்கும். ஆணிடம் சுவாசம் இடது மூக்கின் வழியாக நடைபெற்றுக் கொண்டு இருக்குமாயின் பெண் குழந்தைப் பிறக்கும். ஆண் பெண் இருவருக்கும் நல்ல முறையில் சீரான சுவாசம் நடைபெற்றால் அழகான, சாத்வீகமான, அறிவான குழந்தைப் பிறக்கும் இதுபோன்றக் கருத்தை இப்பாடலில் கூறியுள்ளார்.
“குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்”
அதே போல் தாய் வயிற்றில் மலச்சிக்கல் ஏற்பட்டு மலம் மிகுந்தால், குழந்தை மந்தமாகப் பிறக்கும் எனவும், சிறுநீர் அடக்கி இருந்தால் குழந்தை ஊமையாகும் என்றும், வயிற்றில் மலசலம் இரண்டுமே நிறைந்திருப்பின் குழந்தையின் கண் பார்வை கெடும் எனவும் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
“மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே”
திருமூலர் கூறும் கருத்தில் எத்தகைய உண்மை உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். உடலிலுள்ள பத்து வாயுக்களில் ஒன்றான தனஞ்சயன் என்னும் வாயுவினால் கால்வாதம், கூன், சிரங்கு முதலான நோய்கள் உருவாகும். கூர்மன் என்னும் வாயுவினால் கண்ணில் வீக்கம், பூ விழுதல் போன்ற கண் நோய்கள் வரும். சாதாரண நிலையில் இருக்கும் இவ் வாயுக்கள் மேலுள்ள பாடலில் காணப்படும் காரணிகளால் இப்பேற்பட்ட விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எனவே குழந்தை பெறுதல் எனும் ஒரு பெரும் செயலில் இறங்குவதற்கு முன் அது பற்றிய விழிப்புணர்வு மிக அவசியம்.
ஒரு தாயானவள் மிகப் பெரும் யாகம் நிகழ்த்துவது போலவே ஒரு பிரசவத்தை எதிர் கொள்கிறாள். இன்னொரு உயிரை தருவிக்கப் போகும் அவள் அதன் பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும். சில உணவுகளை, உணர்வுகளை தவிர்த்து எத்தனையோ சிரமங்களை எதிர்கொண்டு இந்த தன்மையினை தாய் அடைகிறாள் என்பதே உண்மை. பிரசவத்தின் பின்பும் தாய்மைக்கான பொறுப்பு, கவனம் அதிகம்.
குழந்தையின் அடிப்படை உணர்வும் உடலும் தாயைச் சார்ந்ததே. ஒரு பெண்ணின் மனோதிடம் என்பது பிரசவத்தில் உயிர் போகும் வலியை அனுபவித்த பின்பும் மற்றுமொரு குழந்தை பெற்றுக்கொள்ள ஆயத்தமாகும் போதே வெளிப்பட்டுவிடும்.
தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை.
— கரிணி
1,982 total views, 3 views today