சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் 95 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நிதியுதவிகளும் சிவத்தமிழ் விருதும்
தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயப் பெருந்தலைவர் சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் 95 ஆவது பிறந்தநாள் அறக்கொடைவிழா 07.01.2020 அன்று செவ்வாய்க்கிழமை ஆலய அன்னபூரணி மண்டபத்தில் சிறப்புற அமைந்தது.
சிவத்தமிழ்ச்செல்வி நினைவாலய வழிபாடுகளைத் தொடர்ந்து சிவத்தமிழ்ச் செல்வியின் உருவச்சிலை முன்பாக பிரார்த்தனை இடம்பெற்றது. இவ்விழாவிற்கு யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் தூதுவர் ச.பாலச்சந்திரன் கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்விற்கு சிவபூமி ஆலயத் தலைவரும்;, சிவபூமி அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமை வகித்தார்.
அன்னையின் பிறந்தநாளை முன்னிட்டு யாழ்.போதனா மருத்துவமனையின் சிகிச்சைப் பிரிவிற்கு ஒரு இலட்சம் ரூபாயும், தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனைக்கு 50 ஆயிரம் ரூபாயும், மன்னார் மாவட்டப் பாடசாலைகளில் க.பொ.த. சாதாரணதரம் 2020 இல் கற்கும் உயர்தகைமையுடைய உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு சிவத்தமிழ்ச்செல்வி கல்வி நிதியத்தால் இரண்டு இலட்சம் ரூபாயும் என நிதியுதவிகள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து கல்வி, தமிழ் இலக்கியம், கலை மற்றும் பன்முகப்பணிகள் ஆற்றிவரும் ஐவர் சிவத்தமிழ் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். கல்விப்பணிக்காக கொழும்பு பல்கலைக்கழக கல்வியியற்பீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் சோமசுந்தரம் சந்திரசேகரம் அவர்களும், தமிழ் இலக்கியத்திற்காக பலாலி ஆசிரிய கலாசாலையின் முன்னாள் அதிபரான கலாபூஷணம் சோ.பத்மநாதன் அவர்களும், பன்முகப்பணிக்காக மூத்த எழுத்தாளரும் முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான திருமதி கோகிலா மகேந்திரன் அவர்களும், கலை, இலக்கியப் பணிக்காக வெற்றிமணி பத்திரிகை, சிவத்தமிழ் சஞ்சிகையின் ஆசிரியரும் ஓவியருமான மு.கசு.சிவகுமாரன் அவர்களும், இசைப்பணிக்காக மூத்த நாதஸ்வர வித்துவான் கலாபூஷணம் வி.கே.பஞ்சமூர்த்தி அவர்களும், சிவத்தமிழ் வருது வழங்கி கைளரவிக்கபட்டனர்.
துர்க்காபுரம் மகளிர் இல்லச்சிறார்கள், ஆலய நிர்வாகிகள், பல துறைகளைச் சார்ந்த பலரும்; கலந்து இந்நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.
2,162 total views, 2 views today