யாழ்ப்பாணப் பேரரசை ஆண்ட மன்னாதி மன்னர்கள் புடைசூழ, யாழ்மண்ணில் அரும் பொருட் காட்சியகம் திறந்துவைக்கப்பட்டது!

தாய் நாட்டில் எது இல்லையோ இன்றும் சாதி மதம் இவற்றை மிகவும் அற்புதமாகப் பேணிக்காத்து வருகின்றோம்.வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் அவற்றின் வேர்களை தாய்மண்ணில் தேடித்தேடி எடுத்து காத்து வருகின்றோம்.
ஆனால் நம்மினத்தின் வரலாறு நாம் வாழ்ந்த வாழ்க்கை இவற்றை பாதுகாக்க எவரும் எண்ணத இக்காலத்தில் கலாநிதி அறு.திருமுருகன் அவர்களின் அரும்பொருட்காட்சியகம் 25.01.2020 அன்று திறக்கப்பட்டு உள்ளது. 12 பரப்புக் காணியில் யாழ்ப்பாணத்தின் நாவற்குழியில் இக்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பேரரசை ஆண்ட மன்னாதி மன்னர்களின் உருவச்சிலைகள் புடைசூழ, யாழ்மண்ணில் அரும் பொருட் காட்சியகம் திறந்துவைக்கப்பட்டது!
திருவாசக அரண்மணை வளாகத்தில் கோயில் கொண்டுள்ள சிவதெட்சணாமூர்த்தி திருக்கோயிலில் வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து ஆலயத்தில் புதிதாகப் பொருத்தப்பட்டுள்ள காண்டாமணி ஓங்கி ஒலிக்க, நாதஸ்வர, தவில் முழக்கங்களுடன் சைவத்தமிழ்ப் பண்பாட்டு பாரம்பரிய அடையாளங்களான கொடி, குடை, ஆலவட்டம் சகிதமாக சைவசமயப் பிரசாரகர்கள் அணிவகுத்து வர ஆன்மீகப் பெரியார்கள், கல்விமான்கள், சமூகப் பிரதிதிகள் உள்ளிட்ட விருந்தினர்கள் சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருட் காட்சியகம் நுழைவாயிலை நோக்கி அழைத்து வரப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து அரும்பொருட்காட்சியக வாயிலில் கோமாதா பூசையை சிவாச்சாரியார் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து அரும்பொருட் காட்சியக வாயிலில் குடிகொண்டிருக்கும் விநாயகப் பெருமானுக்கு வழிபாடுகள் இடம்பெற்றது.
தொடர்ந்து சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருட் காட்சியகப் பெயர்ப்பலகையை இலங்கை மனித நேய அமைப்பின் தலைவரும், அகில இலங்கை இந்துமாமன்றத்தின் பொருளாளருமான திருமதி- அபிராமி கைலாசபிள்ளை திரைநீக்கம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அரும்பொருட்காட்சியகத்தின் பிரதான நுழைவாயிலை விருந்தினராகக் கலந்து கொண்ட நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார்.
கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களின் இவ்வரிய முயற்சிக்கப்பின்னால் எந்த அரசியல் நோக்கமும் கிடையாது. இழந்தவையை எண்ணி எண்ணி கலங்கும் வேளையில் இருப்பதையும் இழந்துவிடுவோமா என்ற தவிப்பு மட்டுமே அதற்கு மூலகாரணமாக அமைகிறது.
இந்த அற்புதமான அருங்காட்சியகக் கட்டிடவேலைகளை நேரில் சென்று பார்த்து அதிர்ந்துபோனேன்.கடந்த சிலவருடங்களாக சோம்பேறிகளாகப் போனார்கள் நம்மக்கள் என்ற குறையை அங்கு வேலைசெய்யும் மக்களின் சுறுசுறுப்பைப்பார்த்தபோது ஆனந்தமாக இருந்தது.
அந்த சுறு சுறுப்புக்கு காரணம் தாம் செய்யும் பணியின் மகத்துவம் அவர்களுக்கு தெரிந்ததுதான் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.
எங்களுடைய மன்னர்களை எமது குழந்தைகளுக்கு காட்சிப்படுத்தவும் அவர்கள் ஆட்சிக் காலங்களைக் காட்சிப்படுததுவதற்காகவும், தமிழர்களின் பண்பாட்டு அம்சங்களை பிரதிபலிப்பதற்காகவும் இவ் அருங்காடசியகம் அமைந்துள்ளது.
இப்பாரிய பணியை சிவபூமி அறக்கட்டளை என்னும் அமைப்பே செய்கின்றது. தலைவாசலை எல்லாள மன்னனும், சங்கிலிய மன்னனும் அலங்கரிக்கின்றார்கள். உள்ளே யாழ்ப்பாண பேரரசை ஆண்ட 21 மன்னர்கள் உருவச்சிலைகள் காட்சியளிக்கின்றன. இச்சிலைகளை சிதம்பரத்தில் இருந்து வருகைதந்த சிற்பக்கலைஞர்கள் திரு புருஷாத்தமன் தலமையில் சிறப்பாகச் செய்து முடித்து உள்ளார்கள்.
அரும்பொருட் காட்சியக வளாகத்தின் இருமருங்கிலும் அமைக்கப்பட்டுள்ள அந்நியர் வருகைக்கு முன்னர் யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழ்வேந்தர்களின் உருவச் சிலைகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 22 பேராசிரியர்கள் தனித்தனியாக மலர்தூவி வணக்கம் செலுத்தி மேற்படி உருவச் சிலைகளை அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து விருந்தினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருமளவானோர் அரும்பொருட் காட்சியகத்தை மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
தொடர்ந்து அரும்பொருட்காட்சியக முன்றலில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருட் காட்சியகத்தின் நிறுவுனருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில் விருந்தினர் உரைகள் மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றது.
மேற்படி விழாவில் வடமாகாண ஆளுநர் திருமதி- பி.எஸ். எம்.சாள்ஸ், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈஸ்வரபாதம் சரவணபவன், தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்மக்கள் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க. அருந்தவபாலன், யாழ். மாநகரசபை முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ச. பாலச்சந்திரன், யாழ்ப்பாணம் சின்மயா மிஷன் தலைவர் சிதாகாசனந்தா சுவாமிகள், யாழ்ப்பாணம் நாகவிகாராதிபதி உள்ளிட்ட சமயத் தலைவர்கள், சிவாச்சாரியார்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் இ. கந்தசாமி, யாழ்ப்பாணத்தமிழ்ச் சங்கத் தலைவர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், வைத்தியநிபுணர்கள், வைத்தியர்கள், பல்துறைசார்ந்தவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நம்முன்னோர்கள் பயன்படுத்திய போக்குவரத்துச் சாதனங்களான சவாரி வண்டில், திருக்கை வண்டில், கூடார வண்டில் போன்றனவும் 1950 ஆண்டுக்கு முன் வந்த வாகனங்கள், 2ஆம் உலகயுத்தத்தின் பின் யாழ்ப்பாணத்தில் பயன்படுத்தப்பட்ட தட்டி வான், பாரம்பரிய பொருட்கள், பித்தளைப் பாத்திரங்கள், ஆரம்பகாலக் கடிகாரங்கள், வானொலிப்பெட்டி, முன்னோர் பயன்படுத்திய அருவி வெட்டும் கத்தி, போத்துக்கீசர், ஒல்லாந்தர், நாணயங்கள், ஒளிப்படங்கள், ஈழத்துப் புலவர்கள், பண்டிதர்கள், பாவலர்கள், கோயில்களின் பழைமையான தோற்றங்கள், 1800 ஆண்டுகளிலிருந்து வெளிவந்த பழைய பத்திரிகைகளின் முன்பக்கங்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் வரையப்பட்ட கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் ஓவியங்கள், ஆலயங்களின் பழைய ஒளிப்படங்கள் போன்றன காணப்படுகின்றன.
கலைஞானியும் ஆணவணஞானியும் கண்ட கனவு நனவாகியது
அருங்காட்சியகத் துறையில் ஆர்வமுள்ள காலஞ்சென்ற கலைஞானி செல்வரெட்ணம் அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று எவ்வளவோ முயற்சிகள் எடுத்தார். அதேபோல் குரும்பசிட்டி கனகரெட்ணம் என்பவரும் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தார். இவர் வீரகேசரி பத்திரிகை தொடக்கம் பலவற்றைச் சேகரித்திருந்தார். ஆனால் போர்ச்சூழலால் அனைத்தும் அழிந்து போயின. அதன் பின் தற்போது இவ் அருங்காட்சியகம் உருவாகியுள்ளது. இதேபோல் எதிர்காலத்தில் வன்னி, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, மலையகம் போன்ற பகுதிகளில் தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் அருங்காட்சியகங்கள் உருவாக வேண்டும் என்று சிவபூமி அறக்கட்டளை அமைப்பினர் விரும்புகின்றார்கள்.
இதனைப் பார்வையிடச் செல்வோருக்கு முதல் மூன்று நாட்களும் இலவச அனுமதி வழங்கப்பட இருக்கின்றது. அதன்பின் பாடசாலை மாணவர்களுக்கு 50 ரூபாய்களும் ஏனையோருக்கு 100 ரூபாய்களும் அனுமதிச் சீட்டாக அறவிடப்படும் என சிவபூமி அறக்கட்டளை தீர்மானித்துள்ளது.