அகவன் மகளே ! அகவன் மகளே !

இன்றைக்கும் யேர்மனி, நெதர்லாந்து நகரப் புறங்களில் “ளழழவாளயலநசள எனும் குறிசொல்பவர்கள் உண்டு, காலத்திற்கேற்ப கணினியிலோ, படங்கள் வரையப்பட்ட அட்டைகள் மூலமோ அதிர்ஷ்டத்தை கணித்துச்சொல்வார்கள், காற்பந்தாட்டத்தில் யார் வெற்றி பெறுவார் என்று கூடு சிலசமயம் ஆருடம் கூறுவதுண்டு, இந்த குறி சொல்லும்ஃகேட்க்கும் பழக்கம் பண்டைய உலகத்திலிருந்தே தொடர்ந்து வரும் ஒரு பழக்கம். தமிழகஃஈழ வாழ்வியலில் குறிசொல்பவர்கள் குறிஞ்சிநிலத்து குறவர்கள்.

தமிழரின் ஐவகை நிலங்களில் முதலாவதும் இயற்கை எழில் கொஞ்சுமிடமாகவும் விளங்குவது “குறிஞ்சி”, கல் தோன்றி மண் தோன்றா காலத்தே என்னுஞ் சொற்றொடரில் கல்லென்பது உலகில் முதலில் தோன்றிய மலைப்பகுதியே என்று கூறுவர், ஆறுகளுக்கு பிறப்பிடமாகவும் எண்ணற்ற உயிரினங்களுக்கு வாழ்விடமாகவும் விளங்குவது இந்த குறிஞ்சி நிலம், இங்கு வாழ்வோர் குறவர் குறத்தியர்.

இன்று இவர்களைப் பற்றிய பார்வை தமிழரிடையே எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை ஆனால் தமிழக வரலாற்றில் முக்கிய இடமும் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையும் இவர்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது.

முக்காலம் உணர்ந்து திறமுரைக்கும் ஆற்றல் பெற்றவர்களாய் இவர்கள் இருந்துள்ளனர்.
சங்க காலம் முதல் தற்காலம் வரை இந்த குறிஞ்சி நில மக்களாம் குறவர் குறத்தியர் பற்றியும் அவர்களை சார்ந்து தமிழில் வளர்ந்த இலக்கியங்களை பற்றியும் காண்போம்.

பண்டு முதலே தமிழரிடம் குறிகேட்கும் பழக்கம் இருந்துள்ளது, இந்த குறி சொல்வதில் மலைநாட்டை சேர்ந்த பெண்களாம் குறத்தியர்கள் வல்லவர்கள், இந்த நிகழ்வு சங்க இலக்கியங்களில் பலவிடங்களில் காணப்படுகிறது.
குறி சொல்லும் பெண்ணை அகவன்மகள் என்றும் கட்டுவிச்சி என்றும் இலக்கியங்கள் விளிக்கின்றன, முறத்தில் நெல்லைப்பரப்பி அதை எண்ணிப் பார்த்து குறி சொல்லுவது அவளுடைய வழக்கம். குறுந்தொகையில் ஒளவையார் பாடிய பாடல் ஒன்றில் இந்த நிகழ்வு வருகிறது.

தலைவன் மேல் கொண்ட காதல் நோயால் வாடியிருக்கிறாள் தலைவி, இப்படி வாடி இருக்குங்காலத்து தாய் இவளுக்கு ஏதோ நேர்ந்துவிட்டது என பயந்து கட்டுவிச்சியை அழைத்து குறிகேட்கிறாள், அந்த நேரத்தில் தலைவியின் தோழி கட்டுவிச்சியிடம் தலைவன் இருக்கும் மலையைப்பற்றி பாடுவாயாக என்று கூறுவதாய் அமைந்த பாடல், தலைவன் மலையைப் பற்றி கேட்டால் தலைவி துயரம் தீரும் என்று தோழி நினைத்தாள்.

அகவன் மகளே அகவன் மகளே
மனவு கோப்பு அன்ன நன் நெடும் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே அவர்
நன் நெடும் குன்றம் பாடிய பாட்டே (ஒளவையார் சூ23)

இப்படி குறி சொல்லும் கட்டுவிச்சி சிலசமயம் பெண் மீது முருகன் அணங்கினான் போலும் எனவே வேலனை அழைத்து வெறியாட்டம் நிகழ்த்துக என்று சொல்வதும் உண்டு. இப்படி பழங்காலத்தே இருந்த மரபு பக்தி இலக்கிய காலத்திலும் பிற்காலத்திலும் குறமாகவும் பின்பு குறவஞ்சி நாடகமாகவும் விரிந்தது. குறவஞ்சி மற்ற இலக்கியங்களை காட்டிலும் தனித் தன்மை வாய்ந்தது, பாமரரும் கேட்டு இன்புறும் சந்தங்களையும் ஓசை நயங்களையும் எளிய சொற்களில் உரைப்பது. காதல், நகர்வளம், நாட்டுவளம் என்று ஊர்ப்பெருமை பேசி இயற்கை வருணனையும் கொண்டு விளங்குவது. இந்த குறிகேட்கும் பழக்கம் தமிழில் நல்ல நூல்களையும் தந்தது. குற்றாலக் குறவஞ்சி குழந்தைகளும் பாடி மகிழும்படி எளிமையானது, ஈழத்தில் எழுந்த மாத்தளைக் குறவஞ்சி குறவஞ்சி இலக்கியங்களிலேயே புதுமையானது. ஈழத்தில் மாத்தளைக் குறவஞ்சி போலே கதிரைமலைக் குறவஞ்சி, கீரிமலைக் குறவஞ்சி போன்ற நூல்களும் எழுந்தன. நாமும் இந்த இலக்கியங்களை வாசித்து நமது குழந்தைகளுக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடுப்போமே !

2,778 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *