வயலின் ஏன் அழுகிறது?
“சுருதி மாதா லயம் பிதா” என்று சொல்லும் போது தொடங்கி இருக்கலாம். நடனம் ஆடும் சலங்கைகளை சாமித்தட்டருகேயே வைத்திருக்கவேண்டும் என்று சொல்லும் போது தொடங்கியிருக்கலாம். நான் உன் முதுகில் ஏறி ஆடப்போகிறேனென பூமிமாதாவிடம் மன்னிப்பு வேண்டும் போதோ, அல்லது தன்மேல் ஆடவிட்டதற்காக அவளிடம் நன்றி கூறும்போதோ தொடங்கி இருக்கலாம். எனது நண்பன் தனது வீட்டு அலுமாரி எட்டாததனால், புத்தகங்களை அடுக்கி அதன்மேல் ஏறி, தான் நினைத்ததை எடுப்பதைக்கண்டு மேனி சிலிர்த்த நொடியில் தொடங்கி இருக்கலாம். கோயில் பெரியார் எனக்கு அடுத்து, எனது வயலினிற்கு திருநீறு, குங்குமம், சந்தனம் வைத்த நொடியில் தொடங்கி இருக்கலாம். விஜயதசமி அன்று, புத்தகங்களை வைத்து, வழிபடும்போது தொடங்கியிருக்கலாம். விளையாட்டுவீரன் Neymar ஜேர்மனியை penalty அடிக்கமுன், கால்ப்பந்தை முத்தமிட்டு உதைத்த நொடியில் தொடங்கி இருக்கலாம்.
தாளின் மேல் எழுத்து ஊர்ந்து செல்லும் வேளையில் தொடங்கியிருக்கலாம்.
பொருள் ஒன்றிற்கு ஆத்மா இருப்பதாக நான் கண்டது எப்போதெனச் சொல்ல முடியாது. முட்டையா கோழியா முதல் தோன்றியது என்ற கேள்வி போல் ஆகிடும். ஆனால் பொருட்களிடையே ஆத்மா இருக்கலாம் என்ற நம்பிக்கை எம்மவரிடயே இருக்கிறது என்பது நிச்சயம்.
வயலின் பயிற்சி செய்யும் போது சுருதி விலகுவதைக்கேட்டு எனது அம்மா, “ஏன் வயலின் அழுகிறது?” என்று கேட்பார். வீணாக அழும் வயலினை நினைத்து அதன்மேல் சிறுவயதில் நான் சினம் கொள்வேன். இருந்தும் புனிதமான வயலின் மேல் சினம் காட்ட பயம் கொள்வேன். வாத்தியத்தின் நுண்ணியமான, மென்மையான தொழில்நுட்பம், தவறானதொரு பாவனையாலேயே முழுதும் அழிந்திடும், அதுபோல அதன் மனமும் தொட்டாச்சிணுங்கி போல் துன்புறுமோ என்று எண்ணுவதாலா இந்தத் தயக்கம்?
இன்று என் சோகங்களையும், இன்பங்களையும், பயங்களையும் கரை சேர்க்க அவற்றை நான் என் வயலின் இசையில் கப்பல் ஏற்றுவேன். வித்துவானாக நான் இல்லாவிடினும் சிறு வயதில் இருந்து எனக்காக அழும் வயலின் எனக்குப் பணி புரிவதற்காக தலைவணங்குவதாக நினைத்துக்கொள்வேன். பூசை அறையை விட அந்த வயலின் வேறு எங்கு இருந்தாலும் அதற்கு அசௌகரியம் ஆகிடும், என எனக்குள் மன அழுத்தம். அதனுடைய தூய்மையான தகுதிக்கு அதுவே சரியான இடமென எண்ணிக்கொள்வேன். கலைக்கும் பக்திக்கும் இடையே ஆன்மீகமான உறவு இருக்கிறதென நினைத்ததனாலா இந்த மனப்பாங்கு?
எனது கணனியும், என் பக்கம் விட்டு நகராமல், நாள்தோறும் எனது சிந்தனைகளை எனது மடியில் இருந்து நான் குத்தக்குத்த வாங்கிக்கொண்டு இருக்கும். பல ஆயிரம் யூரோக்கள் செலவு செய்து அதை வாங்கினாலும், அதன் அயராத உழைப்புக்கு ஏனோ எனது நன்றிக்கடன் அவசியமென எனது மனம் சொன்னபடி.
ஏழு வருடம் நான் பாவிக்கும் கணணி இன்றுவரை ஒருமுறை கூட என்னை கைவிட்டதில்லை. அதற்கு எதுவும் ஆகக்கூடாது என, கோயிலில் தொடங்கி, பலகையில் தட்டுவது வரை நான் செய்யாத வழிபாடுகள் இல்லை. அது தனது வேலையைச் செய்துகொண்டு இருக்க, ஏன் இந்த பிரத்தியேக மரியாதை? நான் உண்ணும் சோற்றை அடையப் பாலம் அது என்பதனாலா? அது இல்லாவிடில் நாம் என்ன செய்வோம் என்ற அவஸ்தையா? எந்த அலுவலுக்கும் கணினி இன்றி எதுவுமே முடியாத காலத்தில், அது இல்லாவிடின் உள்ள சிரமம் நினைத்துப் பார்க்க முடியாது. சென்ற வருடம் விடுமுறை செல்லும் போது, எனது கைத்தொலைபேசியை வீட்டில் வைத்துவிட்டுச் சென்றேன். எனது ஒரு கையை விட்டுச்சென்றது போன்று இருந்தது. உதவுவதாலா? என்றும் உடனிருந்ததனாலா இந்த ஆத்மார்த்தம் ஏற்படுகிறது?
மதம், சம்பிரதாயம் ஆகியவை பொருட்களுக்கு மிகச் சுலபாமாக ஆத்மாக்களை வழங்கி விடும். ஒரு இடத்தில் கல்லாக இருக்ககூடியது, இன்னொரு இடத்தில் கடவுள் ஆகிறது. வெளிச்சத்திற்கு ஏற்றும் விளக்கு, இன்னொரு இடத்தில் ஒளியேற்றி வணங்கத்திற்குரியதாகிறது. விளக்கு சுடர்விடும்போது, மனதில் சாந்தமும், பிரகாசமும் ஏற்படுகிறது. இதனால் இங்கே விளக்கிற்கு அமைதியான குணம் ஏற்படுகிறது. ஆத்மாவுடன் குணங்களும் வர, பொருட்களுக்கு உயிர்ப்பிக்கும் பரிமாணங்கள் மேலும் தோன்றுகின்றன.
இதைவிட மொழி கூட பொருட்களுக்கு ஆத்மாவை வழங்குகிறது. நான் எனது அம்மா செய்து வைக்கும் இனிப்புப்பண்டங்களை வீடு சென்றால் எடுக்க, குளிர்சாதனப் பெட்டியை நாளுக்கு 60 முறை திறந்து பார்ப்பேன். “இந்த Fridgeக்கு வாயிருந்தால் அழும்” என்று அம்மா சொன்னதும், ஆத்மா என்ற பரிமாணத்தைப் பெறுகிறது குளிர்சாதனப்பெட்டி. யாராவது பேசுவதை செவிமடுக்காவிடின், சுவருடன் பேசுகிறேனா?“ எனக் கேட்கும்போது அங்கே ஆத்மாவைக் கொள்கிறது சுவர். உயர்வு நவிற்சிகளும், உவமான உவமேயங்களும், ஒரு வேளை நாம் பேசுவதை சுவர்கள் கேட்டுக்கொண்டு இருக்குமோ? அல்லது எனது பசியால் Fridgeக்கு உண்மையில் வலி ஏற்படுமோ? என நினைக்கத் தோன்றுகிறது.
ஆத்மாவை வழங்குவது உயிர் இல்லாத ஒன்றிடம் உயிரை கொடுப்பதற்கு சமனாக விளங்குகிறது. எனது நண்பன் தொலைத்ததாக நினைத்த ஒன்றை, தேடிப்பிடித்தால், அதற்கு முத்தமிடுவார். அது திறப்பாக இருக்கட்டும், அலுவலகத்தில் தனக்கு பிடித்த கோப்பிக்கப்பாக இருக்கட்டும், அனைத்திற்கும் நெஞ்சார மூன்று முத்தம் வழங்கிக்கொள்வார். உயிரில்லாத ஒன்றிற்கு உயிரை வழங்குவது மட்டுமல்லாமல், அதனுடன் உறவும் கொண்டாடுகிறோம்.
பொருட்களுக்கு ஆத்மா இருக்கலாம் என்ற தத்துவம், எம்மவர் வாழ்க்கையில் மிகப் பெரிய பங்கை எடுக்கிறது. ஒரு மேடையில் ஏறும்போது, அதைத் தொட்டுக் கும்பிடாமல் என்னால் ஏற முடிவதில்லை, இதை நான் சக கலைஞர்களிடமும் கண்டு ரசித்துள்ளேன். எங்கள் பழக்கவழக்கங்களை நாம் இந்த தத்துவத்திற்கு ஏற்ப அமைத்துக் கொள்வதுடன், ஏனையவருடைய பழக்கவழக்கங்களையும் இதன் அடிப்படையில் அளந்துகொள்வோம். கலையின்மேல் இவரது மதிப்பு எந்த விதம்? பொருட்களுக்கு உரிய மரியாதை வழங்குகிறாரா?
ஆத்மா என்பது உயிர் உள்ளனவற்றிற்கு மட்டும் என்ற எண்ணம், நான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால் என நினைக்கும் ஐரோப்பிய விஞ்ஞானத்தின் வழக்கு. இதனால் தான் வெள்ளையர்கள் கூச்சமின்றி புத்தகங்களை ஏணியாக பாவிக்கிறார்கள். ஆத்மா என்பது, கணக்கியல் யுகங்களில் பிடித்துக் கணக்கிட முடியாததனால் இப்படி இவர்கள் நினைக்கலாம். 19, 20. நூற்றாண்டுகளின் வெள்ளை மேலாதிக்க அறிஞர்கள், உயிரில்லாதவைக்கு ஆத்மா வழங்குவதை யுniஅளைஅரள என்றார்கள். யுniஅளைஅரள என்பதை மிருகமாக்குதல் என விளங்கிக்கொள்ளலாம். இந்த மிருகமாக்கும் செயல் குழந்தைகளும், உளவியல் ஆரோக்கியம் இல்லாதவர்களும், பின் நோக்கிய கலாசாரங்களிற்கு உரியவர்களும் செய்வதென எம்மவர்களை ஐரோப்பியரைவிட முன்னேற்றத்தில் குறைந்தவர்களாக நிர்ணயிக்கிறார்கள். (Edward B. Tylor Primitive Culture 1871; Piaget Jean: Das Weltbild des Kindes 1913) இன்றுவரை நான் புத்தக்கங்களை தொட்டுக்கும்பிட்டால், வெள்ளையர்கள் என்னை விசேடமாக பார்க்க இந்த பிழையான விஞ்ஞான அறிக்கை, அன்றாட வாழ்விலும் இடம்பெறுகிறது. ஆனால் பொருட்களிற்கு உயிரை வழங்குவது வாழ்வியலில் எத்தனை புதிய பரிமாணங்களை திறக்கிறது? எத்தனை கற்பனை அலைகளை பாயவைக்கிறது?
ஒரு பொருளை பாவித்து, அது பழுதடையமுன் அதைவிட நவீனமான பொருள் வெளியீடு பெறும் இக்காலத்தில் கழிவுகள் எக்கச்சக்கம். பிளாஸ்டிக் பாவனையை குறைக்க ஐரோப்பிய நாடுகள் சர்ச்சைகள் பலவிற்கு ஆளாகின்றன. வருடார்ந்தம் புது Iphone வாங்கும் காலத்தில், ஒரு பொருளுக்கு ஆத்மா இருந்தால், அது முழுதாக உயிரை விடுமுன், புதிய பொருளை கொள்வனவு செய்வோமா?
1,771 total views, 2 views today