அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக சஜித் அமைக்கும் இனவாதப் பாதை
2015 இல் இலங்கை அரசியலில் ஏற்பட்ட அதிரடியான மாற்றம் ராஜபக்ஷக்களின் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியிருந்தது. தேர்தலில் தோல்வியடைந்து, பதவியை இழந்து அலரி மாளிகையிலிருந்து அம்பாந்தோட்டைக்கு ஹெலியில் புறப்பட்ட போது தமது எதிர்கால அரசியல் குறித்து எந்த நம்பிக்கையும் மகிந்தவிடம் இருக்கவில்லை. போரில் தோல்வியடைந்த ஒரு மன்னரின் மனநிலையில்தான் அவர் அப்போதிருந்தார்.
மைத்திரியும், ரணிலும் இணைந்து “நல்லாட்சி” என்ற பெயரில் அதிகாரத்தைப் பங்கு போட்டுக்கொண்டார்கள். ஐந்து வருட முடிவில் – “இதுவும் கடந்து போகும்” என்ற நிலையில், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இப்போது மைத்திரியினதும் ரணிலினதும் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கின்றது. ராஜபக்ஷக்களின் எதிர்காலம் பிரகாசமாகத் தெரிகின்றது. வரப்போகும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டை அவர்கள் இலக்கு வைக்கின்றார்கள்.
2015 தோல்விக்குப் பின்னர் ராஜபக்ஷக்களால் உருவாக்கப்பட்ட பொதுஜன பெரமுன இலங்கை அரசியலில் அசைக்க முடியாத இடத்தை மிகவும் குறுகிய காலத்துக்குள் பெற்றுக்கொண்டுவிட்டது. உருவாக்கப்பட்டு இரண்டு வருடத்திலேயே அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவுக்கு அந்தக் கட்சி வளர்ந்தமைக்கு ராஜபக்ஷ என்ற அந்த ‘பிரான்ட்’ மட்டும்தான் காரணம். ராஜபக்ஷக்களின் அந்த மீளெழுச்சி மைத்திரி தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மூன்றாவது இடத்துத்துக்குத் தள்ளியது. இப்போது, ராஜபக்ஷக்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவை பகிரங்கமாக அறிவிக்கும் பலவீனமான நிலைக்கு சுதந்திரக் கட்சியைக் கொண்டுவந்திருக்கின்றார் மைத்திரி. பொதுத் தேர்தலின் பின் சபாநாயகர் பதவியையாவது ராஜபக்ஷக்கள் தருவார்களா எனக் காத்திருக்கிறார் அவர். ஐந்து வருடத்தில் ஏற்பட்ட மாற்றம் இது!
ரணிலின் நிலையோ அதனைவிட மோசம். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஐ.தே.க.வின் உட்கட்சிப் பூசல் உச்சத்தையடைந்திருக்கின்றது. ரணிலுடனான கடுமையான மோதலில் வெற்றிபெற்றே ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தினால் முடிந்தது. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் கட்சித் தலைவர் யார் என்பதை இலக்காகக்கொண்டு இந்த மோதல் தொடர்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தமை சஜித்தின் நிலையைப் பலவீனப்படுத்தியது உண்மைதான். ஆனால், எதிர்க்கட்சித் தலைமைப் பதவியை அவர் போட்டியிட்டுப் பெற்றுக்கொண்டார். அடுத்ததாக வரப் போகும் பொதுத் தேர்தலில் ஐ.தே.க.வின் பிரதமர் வேட்பாளர் அவர்தான் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.
ஆனால், இந்த இரண்டு வெற்றிகளும் அவருக்குப் போதுமானதல்ல. கட்சித் தலைமைப் பதவியையும் கைப்பற்றினால் மட்டுமே வெற்றிகரமாகப் பரப்புரைகளை முன்னெடுக்க முடியும் என்பது சஜித்துக்குத் தெரியும். கட்சியின் யாப்பைக் காரணம் காட்டி தலைமைப் பதவியை தன்னிடமே வைத்துக்கொள்ள ரணில் முற்படுவதுதான் சஜித்தை மீண்டும் போராளியாக்கியது.
ஐ.தே.க. பாராளுமன்றக் குழுவில் உள்ள 77 பேரில் சுமார் 55 பேர் சஜித்துக்கு ஆதரவாக உள்ளனர். சுமார் 20 பேர் வரையில்தான் ரணிலின் ஆதரவாளர்களாகவுள்ளனர். கட்சியின் பாராளுமன்றக் குழுவின் கூட்டம் கடந்த வாரம் ஶ்ரீகொத்தாவில் நடைபெற்ற போது, தலைமைப் பதவி சஜித்துக்குக் கொடுக்கப்பட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் குழப்பம் விளைவித்தார்கள். ஒரு கட்டத்தில் குளிரூட்டியை நிறுத்துமாறு சொல்லிவிட்டு ரணில் எழுந்து வெளியே சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகின்றறது.
உத்தியோகப்பற்ற வாக்கெடுப்பில் கட்சியின் பாராளுமன்றப் பெரும்பான்மை தமக்குத்தான் இருக்கின்றது என்பதையும் சஜித்தின் ஆதரவாளர்கள் நிரூபித்தார்கள். இதனைவிட சிறுபான்மையினக் கட்சிகளின் ஆதரவும் இவர்களுக்குத்தான் இருக்கின்றது. இந்தப் பலத்தைப் பயன்படுத்தி ரணிலை வெளியேற்றுவதற்காக என்ன செய்ய முடியுமோ அவ்வளவையும் அவர்கள் செய்தார்கள்.
எது எப்படியிருந்தாலும் எதற்கும் அசைந்துகொடுப்பவராக ரணில் இருக்கவில்லை. தனது கட்சியின் பாராளுமன்றக் குழு தனக்கு ஆதரவாக இல்லை என்பதும், சிறுபான்மையினக் கட்சிகள் தம்மை ஆதரிக்கத் தயாராகவில்லை என்பதும் ரணிலுக்குத் தெரியும். கட்சித் தலைமை 2024 வரையில் ரணிலிடம்தான் இருக்கும் என்பதை கட்சியின் யாப்பு உறுதி செய்கின்றது. பாராளுமன்றக் குழுவின் பெரும்பான்மையைப் பயன்படுத்தி இந்த நிலையை மாற்றிவிட முடியாது. கட்சியின் விஷேட மாநாடு ஒன்றின் மூலம் செயற்குழுதான் தலைமைப்பதவியில் 2024 வரை ரணில் இருப்பார் என்பதை ஏற்றுக்கொண்டிருந்தது. இதில் மாற்றததைச் செய்ய வேண்டுமானால், கட்சியின் செயற்குழு அது குறித்த தீர்மானத்தை நிறைவேற்றி, கட்சியின் வருடாந்த அல்லது விஷேட மாநாட்டில் அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். கட்சியின் செயற்குழுவை தனது ஆதரவாளர்களால் நிரப்பியிருக்கின்றார் ரணில். ஆக, அதில் ரணிலுக்கு எதிரான தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படுவதற்கு வாய்ப்பில்லை. இந்த நிலையில் சஜித் எப்படித்தான் காய்களை நகர்த்தினாலும், கட்சித் தலைமையைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பு அவருக்கு தற்போதைய நிலையில் இல்லை.
இந்த யதார்த்தமான கள நிலையை உணர்ந்துகொண்டே, சஜித்தின் ஆதரவாளர்கள், தலைமையைக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் அர்த்தமிருக்கப்போவதில்லை என்பதால், புதிய மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார்கள். மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஜாதிக ஹெல உறுமய ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பவற்றுடன் இணைந்து ‘ஐக்கிய தேசிய முன்னணி’ யைக் கட்டியமைப்பதற்கான முயற்சிகளை அவர்கள் முன்னெடுத்தார்கள். ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாகவே இவ்வாறான ஒரு முன்னணியை அமைப்பதற்கான பேச்சுக்கள் இடம்பெற்றன. ஆனால், ரணில் – சஜித் மோதல் அதற்குத் தடையாக அமைந்தது.
இரு தரப்பிலும் பலங்களும் உள்ளன. பலவீனங்களும் உள்ளன. தனியாகப் பிரிந்து செல்வதற்கு சஜித் அஞ்சுவது தெரிகின்றது. ராஜபக்ஷக்கள் போல தன்னால் ஒரு கட்சியை ஆரம்பித்து அதிகாரத்தைக் கைப்பற்றக் கூடியதாக இருக்குமா என்பதில் அவருக்குச் சந்தேகங்கள் உள்ளன. இந்த இடத்தில்தான் சமாதான முயற்சிகளுக்காக கரு ஜயசூரிய களத்தில் இறங்கினார். அவர் முன்னெடுத்த முயற்சிகளையடுத்து கட்சி மோதல்கள் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளன. ஐ.தே.க.வின் தலைமையை தற்காலிகமாக கரு பொறுப்பெடுப்பார். மெகா கூட்டணியின் தலைவராக சஜித் இருப்பார். இந்த ஏற்பாட்டுக்கு இரு தரப்பினரும் இணங்கியதையடுத்து கட்சியில் “தற்காலிக போர் நிறுத்தம்” நடைமுறைக்கு வந்திருக்கின்றது.
ஆனால், பாராளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு வியூகம் வகுக்கும் சஜித், புதிய பாதை ஒன்றை அதற்காக அமைத்துக்கொள்ள முற்பட்டிருக்கின்றார். ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின்படி சிங்கள – பௌத்த மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள பகுதிகளில் ஐ.தே.க.வின் வாக்கு வங்கி பெருமளவுக்கு அரித்துச் செல்லப்பட்டிருக்கின்றது. அதனால், அந்தப் பகுதிகளில் தன்னுடைய செல்வாக்கை அதிகரிப்பதற்கான திட்டம் ஒன்றை அவர் வகுத்துள்ளார்.
இதற்காக ஒவ்வொரு போயா தினங்களிலும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ‘தம்ம தர்சன’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல புதிய அரசியல் கூட்டணியை அமைப்பதிலும் சில உபாயங்களை அவர் கையாள்கிறார். ரிசாத் பதியுதீனின் கட்சியை தமது கூட்டணியில் இணைப்பதை அவர் தவிர்க்கிறார். உயிர்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் றிசாத்துக்கு சிங்களவர்கள் மத்தியில் காணப்படும் எதிர்ப்புணர்வுதான் இதற்குக் காரணம். இதனால், றிசாத் பொதுத் தேர்தலில் தனியாகவே களமிறங்குவார்.
பௌத்தர்களிடம் செல்வாக்கைக் கொண்டுள்ள சம்பிக்க கூட்டணியின் பிரதித் தலைவராக நியமிக்கப்படவுள்ளார். சரத் பொன்சேகாவுக்கும் புதிய பதவி ஒன்று காத்திருக்கின்றது. சஜித்தின் இந்த யோசனைகள் இன்னும் இறுதிசெய்யப்படவில்லை. ஆனால், இதுதான் அவர் செல்லப்போகும் புதிய இனவாதப் பாதை. இந்தப் பாதை அவரை வெற்றிக்குக் கொண்டு செல்லுமா?
- கொழும்பிலிருந்து ஆர்.பாரதி
2,357 total views, 4 views today